கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சாரு நிவேதிதா....இன்னும் கொஞ்சம்!

Thursday, January 20, 2005

இன்று நண்பர்களுக்கு எழுதிய, நண்பர்களாய் எழுதப்பட்ட பழைய கடிதங்களை எனது கணணியின் பதுங்குகுழியிலிருந்து எடுத்து வாசித்துக்கொண்டிருந்தேன். பழைய கள்ளைப் போல பழைய கடிதங்களும் மிகவும் ருசியானவை என்று புரிந்தது. தற்செயலாய் நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பரொருவருடன் சாரு நிவேதிதாவின் படைப்புக்கள் குறித்து விவாதித்தபோது நண்பர் ஒருவர்(பெயர் குறிப்பிட பிரியமெனினும் அவரது தொடர்பு இப்போது இல்லாததால், அனுமதி வாங்கமுடியவில்லை) எழுதிய கடிதத்தின் பகுதி மிக அருமையாக இருந்தது. அதை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

"...சாருவின் நாவல்பற்றி நீங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்திலிருந்து முற்றிலும் மாறானது என் கருத்து. பாலியல் விடயங்களை இவரல்ல முதலில் தமிழில் சொன்னது. அதற்கு கு.ப.ரா, ரகுநாதன், ஜி.நாகராஜன், ஜானகிராமன் என்று நீண்ட வரலாறு இருக்கின்றது. ஜி.நாகராஜன் வெளிக்கொணர்ந்த இருண்டபகுதிகள் தமிழிலக்கியத்திற்கு முக்கியமானவை. அவரது நாளை மற்றுமொரு நாளே என்ற நாவலில் ஒரு நாளின் பரப்பிற்குள், கசடையும், அன்பையும், கற்பையும், பிறள்வையும் அழகாக சொல்லியிருந்தார். குபராவின் ஆற்றாமை சிறுகதையில் ஒரு பெண்ணினது மனம் கற்பு என்ற கோட்டில் நின்று கொண்டு கடக்க விரும்பியும் கடக்க முடியாமல் ஊசலாடுவதை எடுத்துக்காட்டி, விடியுமா சிறுகதையில் கணவன் இறந்தபின்னர் ஒரு பெண்ணுக்கு விடிந்துபோவதாகக் காட்டி இருந்தார். இந்த விடிவு எதனைக் குறிக்கிறது என்பதே அந்தச் சிறுகதை இன்றும் சிரஞ்சீவியாக இருப்பதற்கான காரணமாக இருக்கிறது.

ஜானகிராமனின் அம்மா வந்தாள், அமிர்தம், மரப்பசு போன்ற நாவல்கள் எல்லாம் இதே உள்ளுடனைக் கொண்ட சிறந்த படைப்புகள்தான். மரப்பசுவில் அம்மணி எல்லோரையும் தொடவிரும்புகிறாள். வைப்பாட்டியாக வாழ்கிறாள். அம்மா வந்தாளில் அலங்காரத்தம்மாள் சின்னவீடு வைத்திருக்கிறாள். கணவனுக்கும், பரபுருசனுக்குமாக ஒவ்வொரு பிள்ளை பெறுகிறாள். பின்னர் பிராயச்சித்தம் செய்ய பரபுருசனின் மூலம் பிறந்த அப்புவை வேதம் படிக்க அனுப்புகிறாள். இவை அந்தக்காலத்து மீறல்களும், அதற்காக கழுவாய் தேடிய நல்ல மனிதர்களின் உதாரணங்களுமாகும். காலத்தோடு ஒட்டிப் பார்க்கும்போது மேற்படி படைப்பாளிகள் சாருவைவிட உயர்ந்த கலைஆளுமை உடையவர்களாகவும், சமூக உய்வையும் விரும்பியவர்களாகவும் தெரிகிறார்கள்.

மேலே குறிப்பிட்டவர்களது காலம், பண்பாடு- வார்த்தைகளில் மிகவும் காப்பாற்றப்பட்ட காலம். இன்று சாருவிற்கு இந்த இறுக்கம் தேவைப்படாத அளவிற்கு சினிமாவும், தொலைக்காட்சிகளும், சர்வதேச வர்த்தக விரிவாக்கம் மூலம் உள்நுழைந்து கொண்ட பிற காலாச்சார அறிமுகங்களும் தளர்த்தி விட்டிருக்கின்றன. வார்த்தைக்கு வார்த்தை இன்று தூசணம் ஆங்கிலத்திலும், தமிழிலும் சர்வ சாதாரணம். ஆகவே தூசணத்தை இலக்கியத்தில் கொண்டு வருவதால் எந்தவிதமான சாதனையும் சாரு செய்துவிடப் போவதில்லை. உள்ளடக்கம் பாலியல் கெடுபிடியை, மரபை மீறுவதாக அமைந்து அதன் பாசையும் வெளிப்படையான பாசையாகி, மீறலை நிகழ்த்துமாகில் சாருவின் சேவையை பாராட்டலாம். ஆனால் புதிது செய்து முகத்தில் வெளிச்சம் விழவேண்டுமென்பதற்காக வலிந்து இழுத்து உள்ளுடனையும் வெளிப்பாட்டையும் புரட்சிகரமானது என்ற பொய்ச் சவடால் விட்டு குரல் காட்டுவது காலத்தின் முன் காணாமல் போய்விடும். இவர் இந்த ரகம். ஒரு பெண்ணின் விரகதாபம் எப்படி இயல்பாகக் கிளம்பி இயல்பான சுய வடிசல்கள் மூலம் நிறைவு காண முடியும் என்ற அறிவே இவரிடம் இல்லை. இதற்கு மேற்படி நாவலில் சில அத்தியாயங்களே சாட்சி. அவற்றை விலாவாரியாக எடுத்துச் சொல்ல நான் விரும்பவில்லை.

இவரது முதல்நாவல் வெளிவந்தபோது உங்கள் வயதுதான் எனக்கும். அன்று அதை வாசித்தபோது மிகவும் புரட்சிகரமாகவும், இப்படிப் பச்சையாக தமிழ்நாவலில் முன்னெப்போதும் (அப்போது சடங்கு படித்திருக்கவில்லை) காணமுடியாத எழுத்துக்கள் இளவயதிற்கு பிரியமாகவும் இருந்தது. ஆனால் நாவலின் முடிவில் வேறெதாவது காத்திரமான விடயம் மனதில் மிஞ்சியதா என்றால் ஒன்றும் இல்லை. ஆனால் பாருங்கள், ஜானகிராமனையும், குபராவையும், சாருவின் எக்ஸிஸ்டென்சியலிசமும் ·பான்சி பனியனும் படிப்பதற்கு முன்பே படித்திருந்தேன். இன்று இதை ரைப்பண்ணும்போது மீட்டுப்பார்க்கும்போது ·பான்சி பனியனில் சூரியா கண்டடைந்த ஞானங்கள் எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை. மாறாக, குபராவும், திஜாவும் படைத்த பாத்திரங்களும், அவற்றின் விடயங்களும் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே நிலையான பாதிப்புக்களை நல்ல படைப்புக்கள்தானே தோற்றுவிக்கும்.

சாருவின் கலகக்குரல்கள் தமிழிற்கு தேவையான ஒன்றுதான். ஆனால் அதற்கு அவர் (ஜெயமோகன் போல) தனக்குத்தானே சூட்டிக்கொள்ளும் முதன்மந்திரி வேசங்கள்தான் அருவருப்பானவை. மற்றும், இன்றைய தலித் படைப்பாளிகள் நுழைந்து வரும் பகுதிகள் பல, பாலியலின் வன்கதவை உடைக்கின்றனவே? சிவகாமியின் இரண்டு நாவல்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். மற்றுமொரு விசயம்- சாரு பாலியல் விடயங்களை எழுதுகிறார்தான் ஆனாலும் அவரது உள்மனம் சுத்த சுயம்புவான ஆண்மனம். பெண்ணை அவளது யோனியுடன் சேர்த்து சொத்தாக பெரிதுவக்கும் வியாபாரியின் புத்தி இவருடையது. இந்த நாவலைப் படித்து முடியும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்...."
..............
சாரு நிவேதிதாவின் போலித்தனம் பற்றி ரோசாவசந்த் விரிவாக எழுதியுள்ளார். நான் நேரடியாக அறிந்த இரண்டு விடயங்களைப் பதிவு செய்துவிடலாம் என்று நினைக்கின்றேன். முதலாவது சாருநிவேதிதா தனது கோணல்பக்கத்தில் ஜெயமோகனின் கனடாக் கூட்டத்தின்போது கவிஞர் சக்கரவர்த்தி மேளதாளத்துடன் இந்துத்துவா அடையாளங்களுடன் வந்து ஜெயமோகனை கிண்டல் செய்திருந்தார் என்று எழுதியிருந்தார். சக்கரவர்த்தி கூட்டத்திற்கு வரும்போது நானும் இன்னும் சில நண்பர்களும் வாசலில் நின்றிருந்தோம். சக்கரவர்த்தி கைகள், முகம் போன்றவற்றில் சந்தனம் இட்டிருந்ததைத் தவிர அவர் வேறொன்றிடனும் வரவில்லை. இது குறித்த,சாரு நிவேதிதாவின் கோணல்பக்கத்தை வாசித்தபோது எனக்கே வியப்பாயிருந்தது. என்னடாப்பா நானே நேரில் கண்டனான் இந்தாள் இப்படி எழுதுகிறதே என்று. சிலவேளை நான் ரோட்டில் போய்க்கொண்டிருந்த பெண்களை இரசித்துக்கொண்டிருந்ததால் மேளச்சத்தம் கேட்கவில்லையோ என்று நினைத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட இன்னொரு நண்பருக்கும் மெயில் போட்டு இப்படி ஏதாவது நடந்ததா என்று கேட்டேன். நான் பெண்களை இரசித்துக்கொண்டிருந்தாலும் சக்கரவர்த்தியின் வரவையும் அவதானித்திருக்கின்றேன் என்பதற்குச் சாட்சியாக நண்பரும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று உறுதிப்படுத்தியிருந்தார்.

இரண்டாவது சம்பவம். சாரு நிவேதிதா தனது கோணல்பக்கத்தில் குறிப்பிட்டிருந்த கனடாத் தோழி பற்றியது. தற்செயலாய் ஒரு நிகழ்விற்கு (இலக்கியம் சம்பந்தமானது அல்ல) சென்றபோது அறிமுகமாகி அவரது பெயர் ஏதோ என் மூளையில் க்ளிக்காக நீங்கள் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராய் என்று கேட்க, வாசிப்பேன் என்று சொன்னபோது, உங்களையா சாருநிவேதிதா குறிப்பிட்டு எழுதினார் என்று வினாவ, கொஞ்சம் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். பிறகு அவ்வபோதைய தொலைபேசி/நேரடி உரையாடல்களின்போது, சாரு நிவேதிதாவுடனான நட்பு பற்றி தானாகவே கூறத்தொடங்கினார். அண்மையில் கூட ட்சூனாமி நிதிசேகரித்தலின்போது எங்களுடன் வந்திருந்தார். அந்த தோழிபற்றி சாருநிவேதிதா தனது பத்தியில் எழுதியபோது 6-7 மணித்தியாலங்கள் தொலைபேசியில் தொடர்ந்து கதைத்தது என்றெல்லாம் கூறியதாய் ஞாபகம். ஆனால் தோழி சொன்னதோ ஆகக்கூடியது 1 அல்லது 1 1/2 மணித்தியாலங்களே பேசியது என்று.
.....
கதைகளில் நாவல்களில் எதையும் புனைந்துகொள்ளலாம். உண்மை சம்பவங்கள் என வாசகரை நம்பவைத்து தனது பங்கிற்கு கற்பனையை எல்லாம் சாருநிவேதிதா கலந்தடிப்பதை எப்படியென்று சொல்வது?

2 comments:

Anonymous said...

என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள் எப்படி இருக்குமென்று தெரியாதா என்ன! ‘நாங்கள் ஒரு கவிதைக்காக மோனித்திருக்கிறோம்’ என்கிற றேஞ்சில இவர்கள் இன்றையநாள் வரை, (கவிதை தோன்றுவதை) கருத்தரிப்பு என்றார்கள், பின் அதன் பிரசவம் என்றார்கள், அதில் பிறந்த மரபுவழிக் குப்பைகள்தான் மீதி எல்லாம். இவங்கள விலத்தி,‘காணுமடா சாமி’ என்று,என்.டி.ராஜ்குமார்,

ஊளமூக்கன் சிந்திப்போட்ட சளிபோலக் கிடக்கும்
வெண்பொங்கல்
நோய்வந்த பூனையின் கிளுகிளுத்த பீபோல இருக்கும்
சக்கரைப் பொங்கல்
சௌவரியமாயிருந்து வழித்துநக்கி
தீட்டுகாக்கும் நீ
சூண்டிப் பேசாதே
ஆட்டம் வந்தால் அறுத்துத் தள்ளுவேன்
ரணத்தில் முளைத்தவள் ரணதேவதை
அவளுக்கு வேண்டியது குருதிபூசை
பூசணிக்காயை வெட்டி தோலைசெதுக்கியெடுத்து
சின்னச்சின்த் துண்டுகளாக்கி சோப்புத் தண்ணியில் முக்கி
உனது குண்டிக்குள் சொருவிக்கொள்
மலமாவது ஒழுங்காப் பொகும்.
(காட்டாளன், என். டி. ராஜ்குமார்)

என்றால், அதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும், ஒரு சனாதன கனவான் மூளையால், இதயத்தால்? இது எத்தகைய அதிர்ச்சி!

1/20/2005 11:02:00 AM
dondu(#11168674346665545885) said...

"அம்மா வந்தாள்" கதையில் என் நினைவுக்கெட்டிய வரை அப்பு சொந்தப் புருஷனுக்குப் பிறந்த கடைசிப் பிள்ளை. அவனுக்குப் பிறகுதான் பர புருஷனுக்குப் பிறந்த குழந்தைகள். அப்புவே தன் தம்பிக்கும் அந்தப் பர புருஷனுக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையை எதெச்சையாகக் கண்டு திடுக்கிடுகிறான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/21/2005 12:53:00 AM