கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஈழத்திலிருந்து சில கவிதைகள்

Sunday, February 27, 2005

பாம்பு நரம்பு மனிதன்
-சோலைக்கிளி

வலி தாங்கமுடியவில்லை.
எனது கண்களை யாரோ ஒரு கல்லில் வைத்து
இன்னுமொரு கல்லால்
தட்டுகின்றனர்.

என் கண்
ஒவ்வொரு நாளுமே கெடுகிறது.
அது இருந்த இடத்தில்
பாம்புகள் நுழைகின்றன
எனக்குள்.

ஆம், என் நரம்புகளெல்லாம் இப்போது பாம்புகளா!
ஒவ்வொரு நரம்பும்
ஊர்வதைப் போலவும்,
நெஞ்சைக்
கொத்துதல் மாதிரியும்,
உணர்கிறேன்.

ஊரே
நான் பார்க்கும் உலகே
என் கண் தட்டும் மனிதரை
விழுங்கு!
கையிலொரு பூவோடு
பிறர் நெஞ்சை
தடவிச் சுகம் கொடுக்கும் மானிடராய்
மண்ணில் பிறக்க
தவம் செய்!

ஒரு நரம்பு
இப்போது
என் மூளையைக் கொத்துகிறது!
இன்று காலையில்தான் இந்தப் பாம்பு
எனக்குள்ளே வந்தது.
நேற்று முன்தினம்
இரு தரப்பிலும்
சுமார் நூறுபேர்வரை மரணம் என்ற
பத்திரிகைச் செய்தியைப் பார்க்கையில்,
யாரோ என் கண்ணை
கல்லால் தட்ட
நுழைந்தது.


உயர்ந்து
-சோலைக்கிளி

நான் அள்ளி எறிந்த மொழி நீ
அதுவும் தமிழ்
செத்தாலும் சோர்ந்தாலும் மென்மேலும் துளிர்ப்பது
மழை தேவையில்லை கோடையிலும் பூப்பது
எட்டி
ஒரு றப்பர் கட்டியாய் துள்ளி
என் தோளில் கூத்தாட முனைந்து
தோற்றாய்
நான் உயரம்
பிணம் புதைத்துப் புதைத்து
திடலான பூமியிலே நிற்கின்றவன்

அதனால்-
உன் போன்ற கட்டைகள் றப்பர் கட்டிகள்
புருஷனது தோள் ஏறி பழம் ஆய்ந்து கனி ருசித்து
கொட்டை பிதுங்கி எறிவதற்கு

தடைதான் - அங்கே ஒரு அவிந்த தலை
தலைமுடியில் சாம்பல் பூத்ததைப் போல வெள்ளை

பூமி திடலாகி ஆகாயம் தட்டியதில்
இரவில்
என் பழைய சித்திர ஆசிரியை
செத்துப்போனாலும் என் கலையை விடமாட்டேன்
என்று சொல்லி வந்து
நசிகின்ற அந்த நீலத் தகரத்தில்
பூக் கீறும்போது
கை தடுக்கி மை உதிர்ந்தும் சித்திரத்தை விட்டாவோ
அம்மா


உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல்
-பா.அகிலன்

எனக்குத் தெரியாது
ஒரு ஆர்ப்பரிக்கும் கடலோரமோ
அல்லது
வனத்தின் புறமொன்றிலோ
உன் கிராமம் இருந்திருக்கும்.
பெரிய கூழாமரங்கள் நிற்கிற
செம்மண் தெருக்களை
வசந்தத்தில் வந்தமர்ந்து பாடும்
உன் கிராமத்துக் குருவிகளை
எனக்குத் தெரியாது.

மாரிகளில்
தெருவோரம் கண்மலரும் சின்னஞ்சிறிய பூக்களை
நீள இரவுகளில்
உடுக்கொலித்து நீ பாடிய கதைகளை
நிலவு கண்ணயரும்
உன் வாவிகளை
நானறியேன்

காற்றும் துயர்ப்படுத்தும்
இவ்விரவில்
நானும், நீயும் ஒன்றறிவோம்.
ஒரு சிறிய
அல்லது பெரிய
சுடுகாட்டு மேடுபோலாயின
எமது கிராமங்கள்.
அலைபாடும் எங்கள் கடலெல்லாம்
குருதிபடர்ந்து மூடியது.
விண்தொட மரமெழுந்த வனமெல்லாம்
மனிதக் குரல்கள் அலைவுற
சதைகள் தொங்கும் நிலையுமாயிற்று.
முற்றுகையிடப்பட்ட இரவுகளில்
தனித்துவிடப்பட்ட நாய்கள் ஊளையிட
'முந்தையர் ஆயிரம்' காலடி பரவிய
தெருவெல்லாம் புல்லெழுந்து மூடியது.
நானும், நீயும் இவையறிவோம்.
இறந்துபோன பூக்களை
கைவிடப்பட்ட பாடலடிகளை
நினைவுகூரப்படாத கணங்களைக் கூட
அறிவோம்.

ஆனால்
கருகிப்போன புற்களிற்கு
இன்னும் வேர்கள் இருப்பதை
கைவிடப்பட்ட பாடல்
சொற்களின் மூலத்துள் அமர்ந்திருப்பதை
நீ அறிவாயா?
குருதி படர்ந்து மூடிய
கடலின் ஆழத்துள்
இன்னும்
எங்கள் தொன்மைச் சுடர்கள் மோனத்திருப்பதை
அவர்களைப் போல
நீ அறியாது விடின்
இன்றறிக
'ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்'
ஒர்நாள் சூரியன் எழுந்து
புலர்ந்ததாம்.


இராத்திரிப்பூச்சியின் போர்ப்பாட்டு
-கருணாகரன்

இராத்திரிப்பூச்சியே
என்னோடு இரு
உன் பாடலை நிறுத்தி
இரகசியமாக உணர்;
காற்றின் சருமம் நடுங்குவதை,
ஒரு கண்ணிழந்த பறவையென
இந்த இரவு திசைகெட்டுப் பரிதவிப்பதை.

இது உயிரை உசுப்பும் துயரமல்லவா?

இந்தக் கணம்
என்னோடு இரு
எந்தச் சத்தமுமின்றி
காலத்தின் சொல்கேட்டு
மிக அவதானமாக
மிக ஆக்ரோசமாகக் காவலிருப்போம்.
எதிரே, வாழைகள் நெரிபடும்
தோட்டத்தின் பின்னே
வெளியில்; புற்கள் மண்டிய வெளியில்
ஏதோ நாலுபறவைகள்
திடுமெனப் பறந்தெங்கோ சிதைய
பாழடைந்த நிழல்களாய்
பகை மூட்டமசையும்.

ஆட்களற்ற வீடுகளிலிருந்து
பரியலங்கள் உலாவுகின்ற
வாடைபடும் எல்லை இது
அழுக்கு மாலை அணிந்து பிணத்தின்
வாடையுடன்
சூரர்கள் வெறிகொண்டு வருவர்.

வாடையின் குறிப்புணர்ந்து
நீமருள்வாய்
காலம் நசுங்கி முனகுவதை
நானறிவேன்
என் பூச்சியே நீயும் உணர்
காலமும் சூழலும் நெருங்கி வர
மூளும் யுத்தம்
வெற்றி வரும் வரை யுத்தம்.

நெஞ்சுகள் கொதித்துக் கொதித்துக்
குமுறும் வெம்மையில்
நூற்றாண்டுகால அடிமைச் சாசனங்கள்
எரியுண்டுபோக
இராத்திரிப் பூச்சியே
அப்போது பாடு
மருளாமல் ஆக்ரோசமாகப் பாடு
நம் நிலத்தில் முளைத்த போர்ப்பாட்டை.


நீள்வழியில் நிழலாகி
-கருணாகரன்

சாம்பலாய் நிழலுருக் காட்டும்
பனைகளும் சிறுபற்றைகளும் தொலைவில் கரைய
படகேறிப் போகிறதென் பயணம்

வள்ளங்களை அலைக்கும் காற்றில்
என்ஜின்கள் இரைய
ஒரு படகின் பின்னால் - இழுவையில்
பிணையுண்டு இழுபடும் படகுகள்...

மெல்லச் சிறுத்து
தொலைவு கொண்டு போகின்றது
கிளாலிக்கரை

கையசைக்கவும்
முகம் திருப்பவும் முடியவில்லை.

என் சிறுகடலே கேளம்மா
உன்னரும் புதல்வரின்
உதிரத்தில் மூழ்கிய தேவி
நீ வேதனையில் விசும்பும்
ஒலியில் திசையடைத்துக் கிடப்பதறிவேன்
எனினும்
என் மனதையும் மடியிருத்திக் கொள்ளம்மா.

பீதியுண்டு அலையும் விழிகளும்
மருளும் மனமுகமாக
ஒரு வாழ்வை இழந்து
ஒரு வாழ்வு தேடிப்போகுமென் விதி

பகல் நேரப் பொழுதொன்றில்
வலசையாய்
நொய்த மனிதரில் ஒருவனாய்
விம்மி அழுதபடி
விழிநீரை உன்மடியில் சிந்திச் செல்கிறேன்.

கரையில் மோதி
மோதிச் மோதிச் சிதறும் உன் விதிபோல
இன்றென் கதையும் ஆயிற்றென்று
காற்றிடம் சொல்வதா
இந்த கடற்பறவைகளிடம் சொல்வதா.

நன்றி: எரிமலை, உயிர்நிழல், பாம்பு நரம்பு மனிதன்

Cold Mountain: திரைப்படம்

Wednesday, February 23, 2005

{பார்த்ததும் பிறகு பதிந்ததும்}

"நமக்கான காலம்
போய்விட்டதைப் போலுள்ளது.
யுத்தம் வந்து
ஊர்களுக்குள் நதிகளையும் சிற்றாறுகளையும் புகவிட்டு
வாரியடித்துக்கொண்டு போயிருக்கிறது..."
-நட்சத்திரன் செவ்விந்தியன்

இந்தக் கவிதை சொல்வதைப் போல அமெரிக்காவில் நடந்தாலென்ன ஈழத்தில் நடந்தாலென்ன போர் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுவிட்டுத்தான் போகின்றது. யுத்தக்காலத்தை விட யுத்தத்தின் பின்பான காலங்கள்தான் இன்னும் கொடூரமாக இருக்கும் போலத் தெரிகிறது. Cold Mountain - இந்த கதையின் பின்னணி அமெரிக்கா உள்நாட்டுப்போரை பின் தளமாகக்கொண்டு போரெழுப்பும் அதிர்வுகளை காட்சிகளினூடாக பார்ப்பவர்களிடையே படியவிடுகின்றது.

நேரடிப்போர் பற்றிய காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே வருவதால், கதாநாயக ஆர்ப்பாட்டங்கள் அதிகமில்லாது படத்தோடு ஒன்ற முடிகிறது. Cold Mountain என்ற ஒரு ஒதுக்குப்புறமான ஊரிலிருந்தே கதை ஆரம்பிக்கிறது. ஒர் ஊரிற்குரிய இயல்போடும் நிம்மதியோடும் அங்கேயிருக்கும் மனிதர்களின் வாழ்வு நகர்கிறது. எனினும் அங்கிருக்கும் ஆண்கள் எப்போது அமெரிக்க உள்நாட்டுப்போரிற்கு தங்களிற்கு அழைப்பு விடப்படும் என்பதைக் கிளர்ச்சியுடன் எதிர்பார்த்தபடி இருக்கின்றார்கள். அதையே அப்படி அழைப்பு வரும்போது ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடிவிட்டு போரிற்கு புறப்படும் காட்சி தெளிவுபடுத்துகிறது. ஆனால் போரின் நிசம் நாம் நினைப்பது போல இல்லைத்தானே. இதற்கிடையில் தனது தந்தையின் உடல்நலம் காரணமாக ஊரில் ஓய்வெடுக்க வரும் பணக்காரப் பெண்ணுக்கு(Ada) அவர்களின் பண்ணையில் வேலை செய்யும் ஆணிடம்(Inman) ஈர்ப்பு வருகிறது. காதலைக் கூட சரியாகச் சொல்லவோ அனுபவிக்கவோ முடியாத வகையில் போரிற்கான அழைப்பு Inmanற்கு வருகிறது. ஊரிலுள்ள ஏனைய ஆண்களைப்போல அவனும் தனது காதலியைப் பிரிந்து போரிற்குச் செல்கின்றான்.

பிறகொருபொழுதில் போரில் காயம்பட்டு, போரின் கொடூரம்கண்டு வெறுத்து, தனது இராணுவத்தை விட்டு தப்பி தனது ஊரிற்கு பயணிக்கின்றான். ஒரு நீண்ட பயணம் என்றாலும் தனக்காய் தனது Ada காத்திருப்பாள் என்ற நினைப்பு அவனை ஊரை நோக்கிச் செல்ல உந்துசக்தியாகிறது. இதற்கிடையில் நாடுமுழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாரடைப்பால் தனது தந்தையுமிறக்க, போரின் நிமிர்த்தத்தால் செல்வச்சீமாட்டியான Ada வறியவளாகிறாள். எவருமேயில்லாத அவளது தனிமையை ஊர்க்காரன் ஒருவன் தனக்குச் சாதகமாக்கப்பார்க்கின்றான். ஒருபொழுதில் உணவெதுமேயில்லாது ஒரு துண்டு பன்றியிறைச்சிக்காய் தனது தந்தையாரின் இறுதி ஞாபகப்பொருளான கடிகாரத்தையே விற்கப்போகின்றாள். எனினும் தன்னோடு சில பொழுதுகள் கழித்தவன் போரிலிருந்து என்றாவது ஒருநாள் தனக்காய் திரும்பிவருவான் என்ற நம்பிக்க்கையுடன் காத்திருக்கிறாள் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டமெல்லாம் பற்றைகளாக மாறுவதைப் பார்த்துக்கொண்டு.

போரில் நேரில் ஈடுபவர்களைவிட அவர்களுக்காய் ஊரில் காத்திருப்பவர்கள்தான் இரட்டைத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லி, காத்திருக்கும் Ada போன்ற பெண்களுக்கு அடுத்த அதிர்ச்சி அவர்களின் இராணுவத்தின் கட்டளை ரூபத்தில் வருகிறது, எந்தக்காரணம் கொண்டு இராணுவத்திலிருந்து தப்பி வருபவர்களுக்கு எவரும் புகலிடம் கொடுக்ககூடாது என்று. எதிர் இராணுவத்தைவிட தங்கள் இராணுவம் மிக மோசமாக இருக்கின்றதே என்று பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிய தாய்மார்கள் திட்டியபடி கலைகின்றனர்.

Cold Mountainற்கு தப்பிவருகின்ற Inmanற்கு பயணம் அவ்வளவு இலகுவாயில்லை. ஒரு ஆற்றைக் கடக்க உதவி செய்வதாய் துடுப்புடன் வருகின்ற பெண்ணுடன் Inmanம் இடையில் சேர்ந்துகொண்ட தோழனும் செல்கின்றனர். ஆற்றின் இடைநடுவில் படகு சென்றுகொண்டிருக்கும்போது அவர்களின் சொந்த இராணுவத்தாலேயே சுடப்படுகின்றார்கள் (தப்பியோடுபவர்கள் ஊர் போகக்கூடாதென்ற கட்டளைக்கேற்ப). உதவி செய்ய வந்த பெண் கொல்லப்பட Inmanம் நண்பனும் தப்புகின்றார்கள். இடையில் பூச்சிகள், காய்ந்த சோளப்பொத்தி என்று கண்டதையெல்லாம் சாப்பிட்டு உயிரைத் தக்கவைத்த்துக்கொண்ட இவர்களை, பசி கொடூரமாய் கொல்கிறது. அதிஷ்டவசமாய், பலநாள்களுக்கு முன் செத்த ஒரு மாட்டை (சாப்பாட்டுக்குப் பஞ்சம்) துண்டாக்குவதற்கு ஒருவனுக்கு உதவி செய்ய அவன் அன்றிரவு தான் உணவு தருவதாகவும் தனக்குத் தெரிந்த வீட்டில் தங்கலாம் என்றும் கூறுகின்றான். அங்கே நாலைந்து பெண்கள் இருக்கின்றனர். நல்ல சாப்பாடும் குடியும் பரிமாறப்படுகிறது. ஆண்கள் எல்லாம் போரிற்குப் போனபின் சாப்பாட்டுப் பஞ்சத்தைப்போலவே பெண்கள் பாலியல் உறவு இல்லாது தவிக்கின்றனர். நான் முந்தி நீ முந்தி என்று Inmanடன் உறவு கொள்ள அழைக்கின்றனர். இப்படி உறவிற்கான ஆயத்தங்களில் இருக்கும்போது இவர்களை விருந்திற்கு அழைத்து வந்தவன் Inmanனின் இராணுவத்திற்கு தகவல் சொல்ல Inmanம் அவனது நண்பர்களும் அவர்களின் கைதியாகின்றனர். பிறகு இவர்களைப் போன்ற பலரைச் சங்கிலியில் பிணைத்தபடி போர் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது எதிரணியினரை(Yankees) சந்திக்கின்றனர். கைதிகளை ஒளித்துவைத்துக்கொண்டு இவர்களது இராணுவம் பதுங்கிக்கொள்ள, இப்படியே போனால் போர்க்களத்தில் எப்படியோ இறக்கத்தான் போகின்றோம், எனவே சத்தம்போட்டு Yankeesன் கவனத்தைக் கலைப்பானாக்கி ambush நடைபெற்று அதிஷ்டவசத்தால் தாங்கள் தப்பக்கூடும் என்று நினைத்து கைதிகள் சங்கிலிப்பிணைப்போடு தப்பியோடத்தொடங்குகின்றனர். இரு தரப்புக்கும் சண்டை தொடங்குகிறது. மாறி மாறி சுடுபட இறுதியில் Yankees வெல்கின்றனர். ஆனால் Inman மட்டும் இறந்த உடல்களில் ஒருவனாய் கிடக்க அனைவரும் இறந்துவிட்டனர் என்று நினைத்து Yankees போகின்றனர். பிறகு ஒரு மூதாட்டியால் காப்பாற்றபட்டு, கழுத்தில் பட்ட காயத்தை ஆற்றி ஓய்வெடுத்துக்கொண்டு, ஊரிற்கான தனது பயணத்தைத் தொடர்கின்றான்.

இடையில் ஒரு நாள் குளிரும் பசியும் தாங்க முடியாது ஒரு விட்டின் கதவைத் தட்டுகின்றான். அங்கே ஒரு பெண் ஒரு குழந்தையுடன் இருகின்றாள். இருந்த உணவைக் கொடுத்து, தனது கணவன் போரில் இறந்துவிட்டான் என்று அந்தப்பெண் கூறுகின்றாள். இரவில் வெளியே படுத்திருக்கும் Inmanஐ அழைத்து தன்னால் தனியே உறங்கமுடியாது தனக்குப் பக்கத்தில் தயவு செய்து படு, ஆனால் அதற்குமேல் ஒன்றையும் கேட்காதே என்கின்றாள். ஒரு ஆணின் நெருக்கம் அருகில் இருக்க அவளுக்கு கணவனின் நினைவு வந்து உடைந்து அழத்தொடங்குகிறாள். ஒன்றுமே செய்யவியலாது தவிர்க்கும் Inmanஐ பார்த்து தன்னோடு தங்கிவிடச் சொல்கிறாள். இல்லை எனக்காய் என் காதலி காத்திருப்பாள், அவளுக்காய் நானெனது ஊர் போகவேண்டும் என்று அவளை அணைத்தபடி உறங்கிப்போய்விடுகிறான் Inman. விடிகாலையில் எதிரணியினர்(Yankees) இவளது வீடு தேடிவருவதைக்கண்டு பதறியபடி அந்தப்பெண் Inmanஐ தப்பியோடச் சொல்கிறாள்.போரினால் பலதினங்களாய் சாப்பாடில்லாது அலையும் அவர்கள் அந்தப்பெண்ணிடம் இருக்கும் எல்லாவற்றையும் பறிப்பதற்காய் அவளது பச்சிளங்குழந்தையை வெளியே குளிரில் கிடத்திவைத்து அவளையும் கயிற்றால் பிணைத்துவிட்டு அவளது உடமைகளைப் பட்டிலிடச்சொல்கின்றனர். அவள் எல்லாவற்றையும் கொடுத்தபின்னும் குழந்தையை குளிரிலேயே விடுகின்றனர். பிறகு அவளையும் வன்புணர்ச்சியிற்காய் வீட்டிற்குள் இழுத்துச் செல்கின்றான் ஒருத்தன். இதை ஒளித்திருந்து கண்ட Inman வீட்டினுள் பின்புறமாய் சென்று வன்புணர்ச்சியிற்கு வரும் இருவரைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகின்றான். வெளியே கொஞ்சம் வயது குறைந்தவனாய் நிற்கும் எஞ்சியிருந்தவனைக் கண்டு பரிதாபப்பட்டு ஆடைகளை எல்லாம் கழற்றிவிட்டு தப்பியோடு என்று சொல்கின்றான். ஆனால் அவன் தப்பியோடும்போது சடுதியாய் அந்தக்குழந்தையின் தாய் துவக்கெடுத்து அவனைச் சுட்டுவிடுகிறாள். இந்தச் சம்பவத்தை எந்த வார்த்தையுமில்லாது Inman பார்த்துக்கொண்டிருக்கின்றான். இது படத்தின் முக்கிய பகுதியாக பார்க்குபோது எனக்குத் தெரிந்தது. போர் எப்படி எல்லோரையும் வன்முறையாளராக்கி விடுகின்றது என்பதற்கு இதைவிட என்னவொரு காட்சி வேண்டும்?

இதற்கிடையில் Inmanற்காய் காத்திருக்கும் Ada, ஒரு பெண்ணின் உதவியுடன் வீடு தோட்டம் எல்லாம் திருத்தியமைத்து இயல்பு வாழ்க்கையிற்கு வருகின்றாள். கொஞ்சம் சந்தோஷமாய் போய்க்கொண்டிருக்கும் Adaவின் வாழ்வு அயல் வீட்டில் நிகழும் சம்பவத்தோடு பீதியாய் மாறிவிடுகின்றது. போரிற்கு போய் தப்பிவந்த தங்கள் பிள்ளைகளை ஒளித்து வைத்திருக்கும் அந்தக்குடும்பத்து தகப்பனும் இரண்டு பிள்ளைகளும் அவர்கள் போராடப்போன இராணுவத்தாலேயே அநியாயமாய் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அவர்களின் தாயார் குற்றுயிராய் Adaவினால் காப்பாற்றப்பட்டாலும், பேச்சிழந்து போகின்றார்.

இறுதியில் Adaவும் Inmanம் சந்திக்கின்றனர். பிரிவும் காதலும் பெருகிவழிய உடல்கள் கலக்கின்றன் அந்த இரவில். எனினும் ஊரில் பகல்வேளைகளில் தங்குவது ஆபத்து என்பதால் மலையடிவாரத்திலுள்ள ஒரு குடிசையில் Inmanஐ தங்கச் சொல்லிவிட்டு Adaவும் அவளது தோழியும் ஊரிற்கு கிளம்புகின்றனர். இதற்கிடையில் எங்கையோ தகவல் கேள்விப்பட்டு வருகின்ற Inmanனின் இராணுவத்தினர் Ada வையும் அவளது தோழியையும் சுற்றி வளைக்கின்றனர். Inman தனது ஓளிவிடத்தைவிட்டு வர துப்பாக்கிகள் வெடிக்கின்றன. இறுதியில் எல்லோரும் இறக்கின்றனர் Adaவையும் அவளது தோழியையும் தவிர. சொற்பகாலத்தில் காதல் முகிழ்ந்து அதற்காய் நெடுந்தனிமைப்பயணம் செய்து ஒருநாளையும் விடக்குறைவாக காதலியுடன் இருந்தவன் வாழ்க்கை முடிந்துபோகின்றது. I came back for you என்று Inman சொல்லவும் I love you என்று Ada கதறவும் Inmanனின் உயிர் பிரிகின்றது, முடிவில்.

.....
படத்தின் சின்ன இழையாய் காதல் இருக்கின்றது. கிட்டத்தட்ட பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள்தான் Inman, Ada சேர்ந்திருக்கும் காட்சிகள் வரும். மிகுதி முழுவதும் போரே பல்வேறு சம்பவங்களாலும் உரையாடல்களாலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. நேரடியாகப் போரிற்கு எதிரான உரையாடல்கள் இல்லாதபோது காட்சிகள் சொல்லவந்த விடயத்தை நாசூக்காய் சொல்லிவிடுகின்றன. Hollywoodற்கான ஹிரோயிச/ரொமாண்ஸ் அதிகம் கலக்காது ஒரளவு இயல்பாகவும், அதிகம் போரடிக்காமலும் எடுக்கப்பட்டிருந்ததால் படத்தோடு ஒன்ற முடிந்தது.
.........
இறுதிக்காட்சியில் Ada, தனது பிள்ளையுடன் இருந்தபடி, முடிந்தகாலம் இனிப்போகட்டும், அதை எவரும் மீளக்கொண்டு வரமுடியாது, ஆனால் எப்படி சமாதானமாய் வாழ்வது என்பதை பழைய வரலாற்றிலிருந்தாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பது உலகத்து அனைத்து நாடுகளுக்கும், மனிதர்களுக்கும் பொருந்தும் போலத்தான் தோன்றுகிறது.
.........
Stars:
Nicole Kidman (Ada)
Jude Law (Inman)
Renee Zellweger(Ada's friend)
Director:
Anothony Minghella (director of the English Patient)

ரமேஷ்-பிரேம்: சில குறிப்புக்கள்

Monday, February 21, 2005

ரமேஷ்-பிரேமின் படைப்புக்களை சில வருடங்களுக்கு முன் வாசிக்கத்தொடங்கியபோது அவர்களின் எழுத்து நடைக்குள் என்னால் புக முடியாது மூச்சுத்திணறி வெளியில் வந்து விழுந்திருக்கின்றேன். பிறகு அவர்களது கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல் என்று கொஞ்சம் பொறுமையாய் வாசிக்கத்தொடங்கியபோது அவர்களின் பிரதிகளை எப்படி வாசிப்பதென்ற இழை புரிபட வாசித்தல் இலகுவாயிற்று. சிலருக்கு சிலரது எழுத்தைக்கண்டவுடன் வாசிக்கவேண்டும் என்ற ஆவல் இருப்பதுபோல் இன்றையபொழுதில் நானும் ரமேஷ்-பிரேமின் படைப்புக்கள் கண்ணில்பட்டால் முதலிடம் கொடுத்து வாசிக்கத்தொடங்கிவிடுவேன்.

எனக்குத் தெரிந்த அளவில் ரமேஷ்-பிரேம் புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு என்றொரு சொல் என்ற இரு நாவல்களை எழுதியுள்ளனர் என்று நினைக்கின்றேன். சொல் என்றொரு சொல்லை நான் வாசித்திருக்கின்றேன். வித்தியாசமான கதை சொல்லலில் என்னை ஈர்த்த புத்தகம். 'பல்வேறு கதைகள் தொகுப்பட்டாலும் தமிழ் என்ற தொன்மத்தைக் கண்டறியும் முயற்சியானது அடியோட்டமாக உள்ளது' என்று முருகேசபாண்டியன் ஒரு விமர்சனத்தில் சொன்னது சரிபோலத்தான் வாசித்தபின் தோன்றியது. இந்த நாவல் பாண்டிச்சேரி அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் பரிசொன்றுக்கு பிரபஞ்சனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, sex அதிகமாக இருக்கிறது என்று பம்மாத்து காரணம் சொல்லி விருது வழங்கப்படாது தடுக்கப்பட்டதாய் கேள்விப்பட்டிருந்தேன் (எனக்குத் தெரிந்த நண்பர் இதற்குக்காரணம் ரமேஷ்-பிரேமின் சாதியே முக்கிய காரணம் என்று கூறியிருந்தார். தகவல் சரியா தெரியவில்லை). சொல் என்றொரு சொல் நாவல் வாசித்தபின் எனக்குள் நிரம்பியிருந்த பல இடைவெளிகளை பிறகு ந.முருகேசபாண்டியன் பன்முகத்தில் இந்த நாவலுக்கு எழுதியிருந்த விமர்சனம் நிரப்பியிருந்தது. எப்படி ஒரு விமர்சனம் நேர்மையாகவும், பிரதியின் தவறவிடப்பட்ட பக்கங்களைக் காட்டவும் வேண்டும் என்பதை முதல் முதலாய் நான் அறிந்துகொண்டதும் ந.முருகேசபாண்டியனின் விமர்சனத்தின் மூலம்தான்.

முன்பு ஒரு காலத்தில் நூற்றெட்டுக்கிளிகள் இருந்தன ரமேஷ்-பிரேமின் சிறுகதைகளுள் ஒன்று. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தக்கதையும், ஜெயமோகனின் பத்மவியூகமும் பலரால் பாராட்டப்பட்டுக்கொண்டிருந்தன. இந்தக்கதை போபால் சயனைட் வாயுக்கசிவை பின்புலமாககொண்டு எழுதப்பட்ட அற்புதமான கதை. மனிதர்களில் தூசிபடிவதுபோல மரணமும் படிவதை வாசிக்கும்போது கண்முன்னாலே அந்தப்பிரதி கொண்டுவந்திருந்தது. ரமேஷ்-பிரேமின் எந்தக்கட்டுரைத் தொகுப்பையும் நான் வாசிக்கவில்லை. எனினும் சிதைவுகளின் ஒழுங்கமைவு: பின் நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள் முக்கியமான தொகுப்பென்று வாசிந்தவரையில் அறிந்திருக்கின்றேன். இது தவிர இளையராஜா பற்றியும், கி.ராஜநாராயணன் பற்றியும் கட்டுரைத் தொகுப்பு அவர்கள் போட்டிருக்கின்றனர். இன்றையபொழுதில் உயிர்மையில் தொடர்ந்து பத்திகள் எழுதிக்கொண்டு வருவதை ஆர்வத்துடன் வாசித்து வருகின்றேன். அவற்றை வாசிக்கும்போது அவர்களது பரந்த வாசிப்பும், எழுதும் பொருள் பற்றிய ஆழ்ந்த அறிவும் இலகுவில் நம்மால் அடையாளங்காண முடியும். வேதத்தைப்பற்றி கட்டுடைத்து எழுதிய கட்டுரைக்கு வந்த எதிர்வினைக்கு அவர்கள் காட்டிய பொறுமை என்னைக் கவர்ந்திருந்தது. 'வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என சம்ஸ்கிருதத்தில் உள்ள நூல்கள் 'பிரதிகள்' என்ற அளவில் மீண்டும் மீண்டும் வாசிக்கவும் ஆய்வு செய்யவும் உகந்தவை. அவை போதையும் லயிப்பும் கொண்ட மொழிபுகள். இதில் கருத்து மாறுபாடுகள் எஙகளுக்கு இல்லை. ஆனால்...' என்று நிதானமாய் அந்தப் பிரதியைக் கட்டுடைக்கும் அவர்களின் முறைமை பிடித்திருந்தது.

இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் மற்றும் கறுப்பு வெள்ளைக் கவிதை என்று இரண்டு தொகுப்புக்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். அநேகமான இவர்களது கவிதைகள் நீண்டவை (கிட்டத்தட்ட எண்பது தொண்ணூறுகளில் வெளிவந்த ஈழத்துக்கவிதைகளை நினைவுபடுபவை). ஆனாலும் வாசித்தபோது எனக்கு அலுப்புத்தட்டாதிருந்தது. கவிதையில் எதையாவது சொல்லித்தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதை இவர்களது கவிதைகள் எனக்குப் புரிய வைத்திருந்தன. சொல் என்றொரு சொல்லில் இடையிடையே பயன்படுத்தப்பட்ட கவிதைகள் கறுப்பு-வெள்ளைக் கவிதை தொகுப்பிலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. உரைநடைக்கு அண்மையாகவும் ஆனால் கவிதைகளுக்குரிய சாயலோடு மொழியில் இவர்கள் செய்யும் புதுமைத்தனங்கள் அனுபவித்து வாசிக்கக்கூடியவை.
......
புலம்பெயர் சூழலில் அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களையெல்லாம் அழைத்து கெளரவித்து அனுப்பியபடி இருக்கின்றார்கள் (சும்மா இருக்கமுடியாது வாற சனங்களோடு என்னைபோன்றதுகள் கண்டதையும் கேட்டோ எழுதியோ அவர்களைக் 'கஷ்டப்படுத்துவது' வேறொரு புறம் இருக்கட்டும்). நானும், எனக்கு ஒரு 6/49யோ அல்லது super 7 விழுந்தால் சில படைப்பாளிகளை இங்கே அழைப்பதாய் கனவு கண்டு கொண்டிருக்கின்றேன். சோலைக்கிளி, யூமா வாசுகி, அமரதாஸ் என்ற பட்டியலில் ரமேஷ்-பிரேமையும் எப்போதோ சேர்ந்துவிட்டேன். இதை வாசிக்கும் அனைவரையும் எனக்கு மில்லியனில் lotto விழும்படி பிரார்த்திக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
.......
ரமேஷ்-பிரேமின் கறுப்பு வெள்ளைக் கவிதை தொகுப்பிலிருந்து ஒரு கவிதை

செம்பருத்தித் தீவு

சூழலின் கொலை வெளியில்
மொழியின் பதுங்கு குழிக்குள்
நிகழும் பிரசவம்
செவிக்கெட்டும் திசைகளில்
துப்பாக்கிகளின் தொடரோசையும் மீறி
தன்னுள் சுவாசம் இழைய வீறிடும்
ரத்தம் பிசுபிசுப்போடு கவிதை

ஆயுத முனைகளால் சுற்றி வளைக்கப்பட்டன
வார்த்தைகள்
கொல்வதை நேர்த்திமிக்கதாக்குவதில்
தொழில் நுடபப் பாங்கு
ஒரு கண ஒலித் தொடரில்
சரிந்தன சடலங்கள்

மூலையில் சருகுகள் மீது விரிக்கப்பட்ட துணியில்
நெளியும் பசுஞ்சதைப் படைப்பின்
வாயில் விரல் நுழைத்து
அரசிலைத் துளிரென நாவைக் கிள்ளியெடுத்து
குண்டு துளைக்குச் சிதையாத
தாயின் மறு முலையில்
அலறும் வாய் பொருத்தி மீளும்
வேறினத்து மொழி

0

கடல் நடுவில்
இதுவரை நான் தீண்டியறியாத
எனது உடம்பினோர் உறுப்பெனக்
குருதி வழியும் நீ

எனது கரையொதுங்கும்
உனது வலி
உன்னை நோக்கி விழையும்
எனது உணர்த்தல்களின் பாய்மரங்கள்
நடுக்கடலில் எரிகின்றன

வெட்டி வீசப்படும்
உனது கிளை விழுங்கி
எனது வலையில் சிக்கிய
மீன் வயிற்றில்
உனது மோதிர விரல்

0

பாதாள அறையில்
வாய்கள் தைக்கப்பட்டுச்
சுவரோடு பிணைக்கப்பட்ட
உடல்களின் சங்கிலியோசையை
மேற்பரப்பில் செவிபடிந்து கேட்கும்
குழந்தைகளுக்குப்
பூமி சிரிக்கிறது என்று
இனிச் சொல்ல முடியாது

இந்தத் தண்டனை வெளிக்கு அப்பால்
வேறு நிலத்திலிருந்து
மண் குடைந்து வளர்ந்து வரும் வேர்கள்
பாதாளச் சுவரைப் பொத்து
அறையினுள் படர்கின்றன

சுவரில் படரும் வேர்கள் தீண்டிச்
சிலிர்ப்புறும் உயிருள்ள உடல்களில்
பற்றிப்படர்ந்து
உயிர்ச்சாறு வேர்களின் வழியே
மரங்களை நோக்கிப் பாய்கிறது

வலையாய்ப் படர்ந்த வேர்கள்
புதர்ந்து புடைத்த உடல்களினுள்
சுழலும் கண்களைக் கண்டு
பிணந்தின்னும் எலிகள் மருளும்
பிணக்கிடங்கின்
எல்லை தாண்டிய வேர்களின் மரங்களில்
தையல் பிரிந்து வாய் மலரும் பூக்கள்
எனது வெளியில்
உனது விடுதலையைப் பாடுகிறது
எனது மொழியில்
உனது காதலைப் பாடுகிறது

இழக்கப்படாத
மொழி மட்டுமே
அகதிகளின் நாடு-எனச் சொல்லும்
தமிழ்ப்பூவில் அசைகிறது
உனது புலி நாக்கு

0

விழிப்பற்ற உறக்கத்தின்
கொடுங் கனவிலிருந்து மீண்ட
பெருவிழிப்பாய்
மீட்கப்பட்ட எனது மூதாதையர் நிலத்திற்கு
மீண்டும் வருகிறோம்

அரசமரத்தைச் சாட்சி வைத்துத்
திரும்பி வருவேன் என்று
ஆயுதங்களோடு மறைந்தவனின்
ஆண்டுகள் பலகழிய
அம்மரத்திலென் பெயர் செதுக்கி
நிலம் விட்டு நிலம் மாறி
அகதியாய் முற்றி உருமாறி
மீண்டும் ஊர் மீண்டேன்

நிலமும் வயோதிகத்தில் நோயுற்றிருக்கிறது
இருந்தவை எல்லாம் அழிந்துவிட்ட ஊரில்
இன்னும் உயிருடன் இருக்கிறது அரசமரம்
நெளிந்து நீண்டு வடிவம் சிதைந்த
என் பெயருக்குப் பக்கத்தில்
செதுக்கப்பட்டிருக்கிறது அவனது பெயர்
காலத்தில் என்றோ
என்னைத் தேடி வந்து போனதின் நிரூபணமாய்

கால காலமாய்ப்
பூமிக்குள் புதைந்த
உடம்புகளனைத்தையும் திரட்டிப்
பொம்மை செய்து
மரத்தடியில் வைக்கிறேன்
மழையில் உருவம் கரைவதற்குள்
அவன் வரவேண்டும் என்ற
பிரார்த்தனையோடு

0000000

காதல் கவிதைகள்

Monday, February 14, 2005

முடிந்துபோன மாலைப்பொழுது
-பா.அகிலன்

பார்க்கிறோம்,
விழி கொள்ளாத் துயரம்
உதடுகள் துடிக்கின்றன
தடுமாறி உயிராகும் வார்த்தைகளும்
காற்றள்ளப் போய்த் தொலைகிறது...
நேற்று
சணற்காட்டில் மஞ்சள் மெளனம்,
இன்று
கண்களில் நீர்
போகிறாய்
மேற்கில்
வீழ்ந்தணைகிறது சூரியன்.

{பதுங்குகுழி நாட்கள்}


நினைவுள் மீளதல்
-தானா.விஷ்ணு

எப்போதுமே வந்து கொண்டிருக்கிறது
உன்னைப் பற்றிய கனவு
யாருமே வந்து போகாத பெருவெளி
ஒன்றில் இருந்து

தூறல் நின்று போன
மழை இடைவெளி நேரம் ஒன்றில்
மீந்து வந்து கொண்டிருக்கும்
பாடல் ஓசையில்
எப்போதும் இல்லாதது போல்
உந்தன் நினைவு வரிகள்

நானும், நீயும் அடிக்கடி சந்தித்துப் பேசிய
புளிய மரத்தடி வேர்களைப் பற்றியபடி
தொடர்ந்தும் என் இருத்தலை
நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றேன்
என்னில் இருந்து மரணித்துப் போன
காலங்களை அசை போட்டுக் கொண்டு
எதில் இருந்துமே பிரிக்க முடியாத
ஒரு பூச்சிய வளைவுள் அமிழ்ந்து போகின்றேன்.

காரணங்கள் மறந்து போன இந்த காயங்களுக்கு
குறைந்த பட்சம் ஒரு காரணத்தினையேனும்
நினைவுபடுத்தும் முயற்சியோடு

{நினைவுள் மீள்தல்}


துயர்க்காலம்
-அமரதாஸ்

அவசரமாய் அணிவகுத்து
போருக்குப் புறப்படும்போது
ஊரில் இருந்து
சதா என்னை நினைந்து
அழுதிருக்கும் உன் முகம்
இதயத்தில் மினுங்குது மங்கலாய்.

விண்ணில் இறைந்து கிடக்கும்
வெள்ளித்துகள்களில் ஒன்றாய்
எட்டாத் தொலைவில் நீ...

காற்றிடையே
அலைந்து கரையும் தீச்சுவாலையாய்
இனம்புரியாத்துயர் மனசோடு...

என் மனசு
கல்லாகிப் போனதாய் உணராதே
பிரிவுத்துயர்க்கடலில்
அமுங்கி அமுங்கி நிமிருகிறேன்.

காலமிதன் கோலமிது.

வெடித்துச் சிதறும் களத்திலிருந்து
உயிர்கொண்டு திரும்ப நேர்ந்தால்
உனைக்காண வருவேன்
மனஞ்சிலிர்த்து.

{இயல்பினை அவாவுதல்}


அலைகளற்றிருக்கும் உனது கடலும் மூழ்கி தெறிக்கும் எனது அலைகளும்
-சித்தாந்தன்

அலைகளற்றிருக்கும் உனது கடல்.

காடும் நதியும் இல்லாத
அகன்ற வெறும் இரவில்
அலைகளால் வதைபடுகின்றேன் நான்.

ஆயிரம் யுகங்களையும்
தாண்டிவிரியும் நம் காதலை
பிரளயத்தின் தத்தளிப்பில்
கடாசி வீசிவிட்டிருக்கிறது காலம்.

யுகமலையின் முகடுகளில்
மோதித்தெறித்த நம் பாடலை
ஏதேதோ பறவைகளெல்லாம்
தம் மொழியாக்கியதை
எம்மையன்றி யார் அறியக்கூடும்.

நீ போய்விட்டாய்
மலைகள் எரிந்து சாம்பலாகிய
அதிசயம் கண்டு
கண்டவர்கள் மலைத்தார்கள்
உருகியுறைந்த பனியில்
நான் விறைத்துக்கிடந்தேன்

என் மிகப்பெரிய சுவாசவீச்சு
வானில் படர்ந்து கரைந்ததாய்
எல்லோரும் புலம்பினார்கள்
என் அலைகள் சூனியவேரில்
பிணையுண்டு அழிந்துபோனதாய்
எல்லோரும் அழுதார்கள்

அலைகளற்று இருக்கிறதா
உனது கடல்?

இரவுப்பட்சி விழித்துப்பாடும் கணங்களில்
தகர்ந்து பொடியாயினவா உனது மவுனம்

குரல் எழுப்பி அழுதுவிடாதே
உனது குரலில் தீப்பற்றி
எரிந்து சாம்பலாகக்கூடும் பிரபஞ்சம்.

{மூன்றாம் மனிதன் இதழ்-10}
....................
இந்த நான்கு கவிஞர்களும் ஈழத்தில் இன்றும் போரின் நெருக்கடிக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். பா.அகிலன் 'பதுங்குகுழி நாட்கள்' என்ற தொகுப்பையும், சித்தாந்தன் 'காலத்தின் புன்னகை' என்ற தொகுப்பையும், தானா.விஷ்ணு 'நினைவுள் மீள்தல்' என்ற தொகுப்பையும், அமரதாஸ் 'இயல்பினை அவாவுதல்' என்ற தொகுப்பையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈழத்திலிருந்து முகிழ்ந்த புதிய தலைமுறைப் படைப்பாளிகள். இவர்களது கவிதைகளைத் தொகுப்பாய் வாசிக்கும்போது, போர் சூழ்ந்த, அனைத்து வளங்களும் தடைப்பட்ட இருண்ட வாழ்க்கையிலிருந்தும் பல நல்ல கவிதைகளை (அவனை வெட்டடா இவனைக் கொத்தடா என்று எவரையும் உசுப்பேத்தாமல்) தமக்கான மொழிகளிலும் தனித்துவங்களுடன் புனைந்துள்ளார்கள் என்பது வியப்புத் தரக்கூடியது.

FEBRUARY 14

Sunday, February 13, 2005

*கல்யாண்ஜியின் கவிதை

குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை
இவளுக்கும் இருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.

-கல்யாண்ஜி
{அந்நியமற்ற நதி}

*இந்தக் கவிதைக்கு தலைப்பில்லையெனினும் ஒரு குறிப்புக்காய் பெயரிட்டிருக்கின்றேன் (~டிசே)

நீங்குதலின்றி

இன்றிரவையும் தொலைவிலிருந்தபடி
உறிஞ்சிக்கொண்டிருக்கின்றாய்
வியர்வை ஊறும் உடலில்
மீந்திருக்குமுன் ஸ்பரிசங்களின்
தடயங்களை
நினைவுகளால் சுரண்டியபடி
சந்திப்பின் ஞாபகங்களைத்
தடவிக் கரைகிறேன்

பிசுபிசுக்கின்ற இரவை
உலர்த்தி மடிக்கிறது சுவாசம்
பாதி இரவில் ஒரு மிருகமென
என்னை அடித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது
உனக்கான இந்தக் காமம்
பிறகது
ஒரு புகைச்சித்திரமாய்
இருளின் வர்ணங்களில்
கூடிநிரம்புகிறது

பிறகு நிலவின் ஒளியில்
எரிமலைக் குழம்பாகி வழிந்தோடி
தெருவின் நிசப்பத்திற்குள் ஊடுருவிப்
படர்ந்து அதன் விதிகளை எரிகிறது
நிலவொளி
நனைத்துக்கொண்டிருக்கிறது
பிறகு பெய்த மழையையும்
எனது காதலையும்

-சல்மா
{பச்சை தேவதை}


மெளனப்பாதை

முதல் ரயில் பயணம்
வற்றாத அனுபவம் நிறைந்து
உன்னுடனான முதல் பயணமும்கூட
சக்கரம் வேகம் தூரம் காலம் பிரமிப்பு
என் முகம் ஜன்னலில் வெட்டும் காட்சிகளினூடாக
பால்ய காலத்தைப் பற்றிப் பேசிகொண்டுவருகின்றேன்
நாம் இறங்கும் இடம் வந்தவுடன்
என் மீது கோபமா
பயணம் முழுவதும் என்னிடம் பேசவில்லையே என்கிறாய்
உன்னுடன் தானே பேசிக்கொண்டிருந்தேன்
இதழ் பிரியாத சிரிப்புடன் கனவிலா என்கிறாய்
நீ அருகில் இல்லாச் சமயங்களிலும்
உன்னுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறேன்

காலம் வெளி அற்ற நம் உறவுகள்
சக்கரத்தின் ஓயாத உராய்வுகளோடு கிடக்கும்
நமது உடல்கள்

-மாலதி மைத்ரி
{சங்கராபரணி}


மரப்பாச்சிகள்

இரண்டாம் பருவத்தில்
காதலிக்கும் பெண்
கணவனைச் சுமந்தபடி காதலித்துக்கொண்டிருக்கின்றாள்.
இதுவே காதலிக்க ஏற்ற பருவம்
என்பது வெளிப்படையானது
விடலைப்பருவக் காதலில்
காதலுமில்லை
காமத்தின் ருசியுமில்லை
என்பது தெளிவாயிற்று.

காதலிக்கும் பருவத்தின்
புள்ளிகளை இணைத்து
குழந்தைகள் வரையும் கோலங்கள்
தளர்ந்தாட்டங்களில் சுருக்கங்களை
ஏற்படுத்திவிட்டன.
குழந்தைகளின் பாதியளவுக்கு மண்ணில் புதையுண்ட மரப்பாச்சிகள்
மழை முடிந்த தனிமையில்
உயிர்கொண்டு எழுகின்றன
உடலுக்குள்ளிருந்து முளைப்பது போல

கணவனின், சைக்கிள் பின்னிருக்கையில்
அல்லது இருசக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
அமர்ந்து வெளியடித்துச் செல்கையில்
இரண்டாம் பருவத்தில் கதவுகளைத்
திறந்துவைக்கிறாள்.

முதல் பருவத்து காதலுக்கான
தடைகள் விவாதிக்கப்படுபவை
வெளிப்படையானவை
தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள்
ஒத்துக்கொள்பவை.

இரண்டாம் பருவத்துக் காதலில்
காதலன் காத்திருப்பதில்லை
கடிதம் தருவதில்லை
காற்றில் புழுதிபோல - அவன்
பறந்து கொண்டிருக்கின்றான்.

நிமிர்ந்து முகம்பார்க்க இயலாத
காதலன் யாரென்றும் தெரியவில்லை.

-லக்ஷ்மி மணிவண்ணன்
{வீரலெட்சுமி}


காதல் விதை

சப்தங்களுக்குள் என் மெளனம்
அமுங்கிக் கிடந்தது
சப்தம் அடங்க என் மெளனம்
துருத்திக் கொண்டு நின்றது
நடமாடும் சலங்கைத் தாரை
என் மனவெளியின் அந்தரத்திலிருந்து கொட்டியது
நனைந்து கொண்டிருந்த நான்
முழ்கிக் கொண்டிருக்கின்றேன்
அடுத்த கணம்
எனக்கும் அப்பாலான வெற்றிடத்தில்
சப்தம் மட்டும் சுழித்துக் கொண்டோடும்
கரையில்
கறுப்பாய் படிந்திருக்கும் என் நிழலில்
புதைந்திருக்கும்
முளைப்பதற்கான உக்கிரத்துடன்
உன் முகம்

-ரமேஷ்-பிரேம்
{கறுப்பு-வெள்ளைக் கவிதை}


சின்னக்குறிப்பு:மனுஷ்ய புத்திரனின் கட்டுரைரையும் அவர் பதிந்துவருகின்ற கவிதைகளையும் வாசித்த பாதிப்பில் இவற்றை பதிகின்றேன். வாசிப்பவர்களுக்கு அவரவர்களின் முன்னாள், இன்னாள் ஞாபகங்கள் நினைவில் வரக்கூடும். அப்படிவரும்பட்சத்தில், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு (நல்லதுXநல்லது அல்லாதது) நான் பொறுப்பற்றவன் என்பதையும் (என்னையும் சேர்த்து) இத்தால் குறித்துக்கொள்கின்றேன்.

மரணத்திலும் வாழ்ந்திருந்தோம்

Friday, February 11, 2005

{ஊர்: நினைவின் கருக்கலில்}

என்னோடு படித்த நண்பனொருவனைப் பற்றிய செய்தியொன்றை விகடனில் சிலநாட்களுக்கு முன் வாசித்ததிலிருந்து, ஊர்பற்றிய ஞாபகங்கள் எனக்குள் விதையென ஊன்றி அரும்பி, கிளைத்து பரவத்தொடங்கிவிட்டது. அவனும் நானும், இன்னும் சில நண்பர்களும் ஊரில் செய்த குழப்படிகளும் கும்மாளங்களும் கணக்கிலடங்காதவை.

நான் படித்த பாடசாலை எங்கள் வீட்டுக்கு மிக அருகில்தான் அமைந்திருந்தது. இரண்டு மணிகள் அடித்துத்தான் பாடசாலை ஆரம்பிக்கும். இரண்டுக்குமிடையில் ஜந்து நிமிட இடைவெளி என்றாலும், முதலாவது மணிச்சத்தத்தோடு பாடசாலைக்கு புறப்பட்டேன் என்றால், இரண்டாம் மணி அடிக்கமுன்னர் பாடசாலைக்குள் இருப்பேன். நான் படித்த பாடசாலை mixed (கலவன்?) பாடசாலை என்பதால் சுவாரசியங்களுக்கும், குழப்படிகளுக்கும் குறைவேயில்லாதது.

ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை என்று பாடசாலை கோயிலுக்கு முன் கொண்டுபோய் நிறுத்திவிடுவார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை என்றால் முழு சிவபுராணத்தையும் எல்லோரும் சேர்ந்து பாடி முடிக்கவேண்டும். வெயிலுக்குள் இப்படி நிற்பது கடவுளுக்கு பிடிக்காமலோ என்னவோ பாடல் முடியமுன்னரே பெண்கள் மயங்கி விழுவது அடிக்கடி நிகழும். ஒவ்வொரு நாளும் இரண்டு மாணவர்கள் பிரார்த்தனைக்குப் போகாமல் அவரவர் வகுப்பறையில் நின்று வகுப்பை துப்பரவாக்கவேண்டும். எவரெவர்க்கு எந்த நாள் என்று ஒரு அட்டவணை இருந்தாலும், என்னைப்போன்றவர்களுக்கு இந்த வெள்ளிக்கிழமை விடயம் பெரிய அலுப்புத்தந்ததால், பிறருடைய நாள்களை நாங்கள் அடிக்கடி திருடிக்கொள்வது நிகழும். பெடியங்களிடம் கெஞ்சி மன்றாடிக்கேட்டாலும், பரிதாபப்பட்டு தந்துவிடுவாங்கள், ஆனால் எங்கடை கேர்ல்ஸ்டிடம் இந்தக் கெஞ்சல் எல்லாம் சரிப்படாது. ஆனால் அதற்கு ஒருவழியை என்னைப்போன்றவர்கள் கண்டுபிடித்திருந்தோம். யார் அந்த நாளில் நிற்கின்றார்களோ, அவர் உத்தியோகபூர்வமாக கையில் தும்புக்கட்டையை வைத்திருக்கவேண்டும். தும்புக்கட்டை ஒருவரின் கையில் இருந்தால் அவருக்கு அன்று வகுப்பில் நிற்கும் அதிகாரம் வந்துவிடும் என்பது எங்களிடையே இருந்த எழுதாத விதி. தும்புக்கட்டை சண்டை எங்கள் வகுப்பில் மிகப்பிரல்பல்யமானது. தும்புக்கட்டைக்காய் பல தடவைகள் பெண்களிடம் சண்டைபிடித்திருக்கின்றோம். இரண்டொருமுறை சண்டையின் அதிதீவிரத்தில் தும்புக்கட்டையை இழுபறிச்சண்டையில் நா(ன்)ங்கள் உடைத்துக்கூட இருக்கிறோம் (ம்..முந்தி தும்புக்கட்டையை எல்லாம் உடைக்கிற அளவிற்கு எல்லாம் பலமானவனாய் இருந்திருக்கிறேன் என்பது எவ்வளவு சந்தோசமான விடயம், யாராவது ஏன் இப்படி ஒல்லியாக இப்போது இருக்கின்றேன் என்றால், இந்த விடயத்தை இனி அவர்களுக்கு சொல்லலாம்). சிலவேளைகளில் தும்புக்கட்டை விவகாரம் வகுப்பு வாத்தி வரைபோய் அடியெல்லாம் வாங்கிவிட்டு வகுப்புக்கள் முடியும்வரை வெளியே நிறுத்தப்பட்டிருக்கின்றோம். வெளியே நின்று உறுமிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற பெடியளையும் பொம்பிளைப்பிள்ளைகளையும் கண்டு கீரியும் பாம்பும் கூட வெளியே வரப்பயந்துபோய் புற்றுக்குள் இருந்திருக்கக்கூடும்.

கேர்ல்ஸ்டோடு சண்டை வருகின்ற இன்னொரு விசயம், தவணைப் பரீட்சைகள். மிச்ச எல்லா வகுப்பிலும் பொம்பிளைப்பிள்ளைகள் படிப்பில் கோலோச்சிக்கொண்டிருக்க எங்களின் வகுப்பில் பெடியள் சிலபேர்தான் முதல் மூன்றுக்குள் தொடர்ந்து வந்துகொண்டேயிருப்போம் (முதல் மூன்றுபேருக்கு assembly hallல் வைத்து பாராட்டி தேர்ச்சி அட்டை தருவார்கள்). முக்கியமான core பாடங்கள் இருந்தாலும், சில electives, நடனம்/சங்கீதம்/சித்திரம் போன்ற பாடங்களும் உண்டு. என்னைப்போன்றவர்கள் சித்திரம் போன்ற பாடத்தைத்தான் எடுத்துக்கொண்டிருந்தோம். தென்னை மரம் கீறச்சொன்னால், அதில் இருக்கின்ற தென்னோலை எல்லாம் மீன் முள்ளு மாதிரி வரைகின்றளவிற்கு நான் சிறப்பாக சித்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தேன். வீட்டில் இதைப்பார்த்துவிட்டு யாராவது நக்கலடித்தால், நான் கீறின தென்னை மரத்திலை காகம் மீனைத்தின்றுவிட்டு மீன்முள்ளைப்போட்டபடியால்தான் அப்படித் தெரிகிறது என்று நியாயம் சொல்கின்றனான். சித்திரத்தில் என்னைப்போன்றவர்களின் புள்ளிகளைபார்த்துவிட்டு, எங்களை வீழ்த்த நடனம்/சங்கீதத்தில் கூடிய புள்ளியெடுத்தால் போதும் என்று பெண்கள் திட்டம்போடுவார்கள். அத்தோடு 'ரீச்சர், சித்திரம் எடுக்கின்ற ஆக்கள் முதல் மூன்றுக்குள் வந்தால் உங்களுக்கெல்லோ மரியாதையில்லை' என்று நடன/சங்கீத ரீச்சர்மார்களை உசுப்பேத்தி அளவுக்கதிகமாக மார்க்ஸ் எல்லாம் பெண்கள் வாங்கிவிடுவார்கள். என்னதான் தும்புக்கட்டைக்காகவோ, மார்க்ஸிற்காகவோ சண்டைபிடித்தாலும், எங்களின் வகுப்பு பெண்கள் எங்களை வேறு வகுப்பு மாணவர்களுடனோ அல்லது வேறு பாடசாலை ஆக்களோடு கதைக்கும்போதோ ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை.

பிறகு பிரச்சினைகள் உக்கிரமாக, எங்களைப்போலவே பாடசாலையும் இடம்பெயரத்தொடங்கியது. கிட்டத்தட்ட ஏழெட்டு மைல்கள் சைக்கிள் உழக்கி பாடசாலைக்கு போன காலமது. அதுவும் மத்தியானத்திற்கு பிறகுதான் பாடசாலை தொடங்கும். காலையில் வேறொரு பாடசாலை இயங்கிக்கொண்டிருக்கும். ஏழெட்டு மைல்கள் சைக்கிள் உழக்கினாலும், காலையில் நடக்கும் பாடசாலை ஒரு மகளிர் கல்லூரி என்பதால் என்னைப்போன்ற பெடியளுக்கு நல்ல சந்தோசம். அவையளைப் பார்க்கிறதென்பதற்காகவே அரை மணித்திலாயம் பாடசாலை தொடங்க முன்னர் போய் காத்துக்கொண்டிருப்போம். ஆனால் அந்தப்பெண்களோ முறைத்துக்கொண்டோ உதாசீனப்படுத்திக்கொண்டேதான் செல்வார்கள். பரவாயில்லை எறும்பூரக் கற்குழியும் என்ற பழமொழியை அந்த வயதிலையே கற்றிருந்ததால் முயற்சியைக் கைவிட்டதில்லை. எனினும் ஒருபொழுதில் இதுவெல்லாம் சரிப்படாது என்று ஞானோதயம் வந்தபின், 'எண்டாலும் எங்கடை பள்ளிக்கூட கேர்ல்ஸ் தேவதையள்' என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.

இப்படி ஏழெட்டு மைல் சைக்கில் பிரயாணம் செய்தாலும் எங்கடை வகுப்பு கேர்ல்ஸ்டோடு குழப்படி செய்துகொண்டேயிருப்போம். வேண்டுமென்று கேர்ல்ஸ் சைக்கிள்களில் வரும்போது நாங்கள் நாலைந்து நண்பர்கள் சமாந்தரமாய் சைக்கிளை ஓட்டியபடி வீதி முழுவதையும் மறைத்தபடி போவோம். எங்கடை கேர்ல்ஸ் பின்னுக்கு வருகிறார்கள் என்று கண்டுவிட்டால், சும்மா சைக்கிள் உழக்கிற வேகத்தைவிட இன்னும் மெதுவாக உழக்குவோம். இப்படி தெருவை அடைச்சுக்கொண்டு போவதற்காய் பலமுறை வெளியாக்களிடம் பேச்சு வாங்கியிருக்கின்றோம், ஆனால் எங்கள் பழக்கத்தை ஒருபோதும் இதற்காய் விட்டதில்லை. ஒருமுறை இப்படி தெருவை மறைத்துக்கொண்டு சைக்கிள்களில் செல்கையில், எங்களின் வகுப்பு வாத்தி பின்னாலே வந்துவிட்டார். அந்த வாத்தியிடம் நான் வாங்கிய அடிகளையும் அதற்கான சம்பவங்களையும் நினைத்துப்பார்த்தால் ஒரு குறுநாவலே எழுதிவிடலாம். சரி வாத்தி எங்கடை குழப்படியைக் கண்டுவிட்டார். நிச்சயம் பிடிபட்டால் அந்தாள் நடுரோட்டிலேயே நிற்கவைத்து, வீதியோரத்திலிருக்கும் பூவரசிலிருந்து தடியுருவி அடிக்காமல் விடமாட்டார் என்று புரிந்துவிட்டது. 'ஓடுவமடா' என்று ஒரு நண்பன் சொன்னதுதான் தாமதம் நாங்கள் சைக்கிளில் உருவத்தொடங்கிவிட்டோம். ஆனால் பாருங்கோ, எங்கடை வாத்தியும் sweet 16 மாதிரி இளமை திரும்பி எங்களை விடாமல் துரத்தத்தொடங்கிவிட்டார். எவ்வளவு தூரத்துக்கென்று களைக்காமல் சைக்கிளை உழக்குவது? கடைசியாய் இயலாமல் ஒரு அம்மன் கோயிலடியில் சரணாகதியடைந்தோம். அம்மனின் அருளோ என்னவோ தெரியாது, 'நாளைக்கு வகுப்புக்கு வாங்கோடா அங்கை கவனிக்கின்றேன்' என்று துரத்தி வந்த வாத்தி சொல்லிவிட்டு போய்விட்டார். அதன்பிறகு இப்படி நாங்கள் தெருவை அடைத்துக்கொண்டு பெண்களை முந்தவிடாமல் செய்தால், 'எடியே எங்கடை சேர் பின்னாலை வாறார் போல' என்று சொல்லி கேர்ல்ஸ் எங்களை அடிக்கடி பயமுறுத்துவார்கள். நாங்களும் உண்மைதானோ என்று பதட்டப்பட்டு சைக்கிளை ஒருபக்கமாய் ஒதுக்கினால் அடிக்கடி அவை ஒன்றோடு ஒன்று கொளுவுப்பட்டு அடிப்பட்டு விழுந்துவிடும். சைக்கிள் கீழே கிடந்தாலும், கையிலை காலிலை நோ இருந்தாலும், இரத்தம் வடிந்தாலும் பெரிய வீரர்கள் போல எழும்பி நிற்போம். கேர்ல்ஸ் சிரித்துக்கொண்டும் நக்கலடித்துக்கொண்டும் எங்களைத்தாண்டி போவார்கள். அவர்கள் கொஞ்சம் தூரம் போனாப்பிறகுதான், 'அய்யோ நோகுதே', 'விசரா உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது' என்று மாறி மாறி திட்டுவதும் நடக்கும். இப்படி நாங்கள் கேர்ல்ஸிற்கு குழப்படி செய்வதுபோல அவர்களும் எங்களுக்கு செய்வார்கள். நான் இப்படிப் பலதடவைகள் தனியாய் மாட்டுப்பட்டிருக்கின்றேன். அந்த சமயங்களில் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னை முந்தவிடாமல் ரோட்டை அடைத்தபடி போய்க்கொண்டிருப்பார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கின்றமாதிரி, இந்த நேரத்தில் துணைக்கருகில் இல்லாத பெடியன்களைத்திட்டியபடி காய்ச்சல் கண்ட கோழிமாதிரி தலையைத்தொங்கப்போட்டபடி அவர்கள் பின்னாலே போயிருக்கின்றேன்.

எத்தனைகாலம்தான் கேர்ல்ஸ்லோடு சண்டை போடுவது என்று யோசித்து ஒன்பதாம் வகுப்பில் சமாதானக்கொடியைப் பறக்கவிடுவோம் என்று முடிவுசெய்தோம். இன்னொரு காரணம் ஹோர்மான்களின் சித்து விளையாடும் கூட. நானும் இன்னும் சிலநண்பர்களும் சேர்ந்து யார் யாருக்கு யார் துணை என்று பட்டியலிட்டோம். எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு பெண்ணிடம் ஈர்ப்பிருந்தது. அதற்குக்காரணம் அவர் சரியான வாயாடி மற்றும் தும்புக்கட்டைச் சண்டைகளில் பெண்களின் தரப்பில் அவர்தான் அங்கே முக்கிய தளபதி. ஆனால் இறுதியாய் நண்பனுக்காய் அவரை விட்டுக்கொடுக்கவேண்டியதாயிற்று. அவரவர் அவரவர்க்கு சேர்த்து வைக்கப்பட்டிருந்த பெணகளைத் தவிர மிகுதி அனைவருடனும் கதைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் இப்படி சோடி சேர்த்த அடுத்த நாளிலேயே பெண்கள் இதைக்கண்டுபிடித்துவிட்டதன் இரகசியம் எனக்கு இன்றும் புரியவில்லை. இப்படி சோடி சேர்த்ததில் எனக்கு ஒரு சிக்கல் வந்தது. எனக்குச் சோடி சேர்த்த பெண் நான் போகும் ரியூசனுக்கு வருவதில்லை. எந்த நேரமும் பார்த்துக் கொண்டிருந்தால்தானே காதல் வரும்? ஆனால் எனக்கு வராது போல இருக்கிறதே என்று கவலையுடன் நண்பர்களுக்குச் சொன்னபோது நண்பன் ஒருவன் நல்ல யோசனை சொன்னான். 'டேய் ரியூசனில் வருகின்ற ஒருபெண்ணை அங்கேயிருக்கும் நேரத்தில் சோடிசேர்த்து வைத்திரு, பாடசாலைக்கு இவா உன்ரை சோடி' என்று. ஆகா இதுவும் நல்லாய்த்தானிருக்கிறது என்று, பாடசாலைக்கு ஒருவர், ரீயுசனிக்கு ஒருவர் என்று இரண்டு பேருக்கு துணையாக இருந்தேன் (இதற்கு இன்னொரு காரணம், செருப்பால் அடிவாங்கும்போது ஒரு செருப்பால் அடிவாங்கினால், சோடியாக இருக்கும் மற்றச் செருப்பு கோபிக்கக்கூடும். ஆகவே இரண்டு செருப்பாலும் அடிவாங்குவது உத்தமம் என்ற psychological காரணமாய் இருந்திருக்கக்கூடும் என்று இப்போது யோசிக்கின்றேன்). பகடி என்னவென்றால், ஏதோ நாங்கள்தான் இப்படி பாடசாலைக்கு ஒருவர், ரீயுசனிற்கு ஒருவர் என்று சொல்லிக்கொண்டு திரிந்தோம் என்றால், எங்கடை பெண்களுக்கும் எங்களில் சில பேர் ரீயூசனுக்கு ஒன்று பாடசாலைக்கு ஒன்று என்று இருந்திருக்கின்றோம் என்று பிறகு தெரியவந்தது.

இப்படி சோடி சேர்த்தபின் எங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தது. பாடசாலையில் அடிக்கடி தமிழ்த்தினம், ஆங்கிலதினம் என்று சொல்லி எழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி, சங்கீத/நடனப்போட்டி என்று நடைபெறும். அதில் யாராவது எங்களின் சோடி சேர்த்த பெண்கள் வென்றால், ட்ரீட் அவரிற்கு சோடி சேர்க்கப்பட்ட பெடியன் வாங்கிக்கொடுக்கவேண்டும். ஓசியில் கிடைக்கிற வடையையும் வாய்ப்பனையும், ரீயையும் ருசிகண்டவர்கள் சும்மா சும்மா எல்லாத்துக்கும் ட்ரீட் வையென்று கேட்கத்தொடங்கிவிடுவாங்கள். அதுவும் பெண்கள் கேட்டால் ஒன்றும் சொல்லமுடியாது. 'உங்களுக்கில்லாததா வாங்கித்தாறோம்' என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டு மனதிற்குள் திட்டிக்கொண்டிருப்போம். சில பெண்கள் வேணுமெண்டு எங்களை வெறுபேத்துவதற்கு நடக்காத விழாக்களில் எல்லாம் நமது சோடிப்பெண்களுக்கு பரிசுகள் கிடைத்ததாய் சொல்லி ட்ரீட் கேட்பார்கள்.

இப்படியே போனால் எங்கடை அப்பர்மாற்ரை சம்பளக்காசே அப்படியே வாங்கிக்கொண்டு வந்தால்தான் காணும் என்று ஒருமாதிரி நிலைமை கவலைக்கிடமாகப்போக மீண்டும் ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டினோம். இறுதியில் இரண்டு முடிவுகளுக்கு வந்தோம். முதலாவது, இதுவரை சோடி சேர்க்காது தனிய இருப்பவர்களை சோடிசேர்த்து எங்களின் சுமையைக் கொஞ்சம் குறைப்பது. மற்றது, ஓசியிலை வெட்டுகின்ற ஆக்களுக்கு அவர்களின் சோடிக்கு இதிலை பரிசு அதிலை பரிசு என்று சொல்லி அவர்கள் ஏவின நாகாஸ்திரத்தை திருப்பி அவர்களுக்கே ஏவி விடுவது.

என்னதான் ஆண்கள், பெண்கள் என்று ஆரோக்கியமாய் பழகினாலும், எங்களின் ஆசிரியர்கள் பலருக்கு அதைப் புரிந்துக்கொள்ளமுடியாததாகவே இருந்திருக்கிறது. அநேகமாய் ஊர்ப்பாடசாலைகளில் O/L பரீட்சை எடுத்தாப்பிறகுதான் கொஞ்சம் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவார்கள் என்று நினைக்கின்றேன். நாங்கள் ஒன்பதாம் வகுப்பிலே இப்படி சகஜமாகப்பழகியதை இயல்பாய் எடுக்கமுடியாத ஆசிரியர்களிடம் இப்படி இருந்தற்காய் பலமுறை அடிகள் வாங்கியிருக்கின்றோம். என்றாலும் என்ன நல்ல விடயங்களுக்காய் சிலவற்றை சகிப்பது பெரிய விசயமல்ல.பிறகொருபொழுதில், புலமைப்பரிசிலை காரணங்காட்டி, யாழ்நகரின் பெரிய பாடசாலை ஒன்றுக்குப்போய் அங்கே பெடியள் மட்டும் இருப்பது கண்டு சகிக்கமுடியாமல், திரும்பி நான் படித்த பாடசாலைக்கு ஓடியப்போயிருக்கின்றேன். காசும் கொடுத்து, கஷ்டப்பட்டு அனுமதியும் எடுத்து அங்கே படிக்கவிட்டால் திரும்பி வந்துவிட்டான் என்று அப்பா அடிக்கடி கூறிக்கொண்டபோதும் பழைய பாடசாலையிலே தொடர்ந்து படிப்பது எனக்குப்பிடித்திருந்தது.
........
ஒரு பொழுதில் ஊரும் போய், பாடசாலையும் போய் இனியிருப்பதற்கு என்னவிருக்கிறது என்று காலத்தை நொந்து சமுத்திரங்கள் தாண்டியும் வந்தாயிற்று. வயதுப்பிரச்சினையால் இலட்சங்களில் கொடுத்து எல்லை கடந்ததால் எனக்குப்பிடித்த நண்பர்களிடமோ, பிரியமான தோழிகளிடமோ முறையாக விடைபெறவில்லையென்ற உறுத்தல் தசாப்தம் தாண்டி இன்னமும் இருக்கிறது. காடு போல் மரங்களும், கொடிகளும், மிதிவெடிகளும் புதையுண்டுபோய் ஊராரை விரட்டிவிட்ட நிலத்தை இனி ஊரென்று அழைக்கமுடியுமா? இல்லை பத்து வருடங்களுக்கு முன்பான வாழ்வை, பாடசாலை நாள்களை, நண்பர்களை, குறும்புத்தனம்மிக்க தோழியரை, ஊரவர்களை, உயிரிழந்துபோனவர்களை, காணாமற்போனவர்களை எவர்தான் மீட்டுத்தரக்கூடும்?

சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, சில அவதானங்கள்

Wednesday, February 02, 2005

புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்களில் என்னை அதிகம் வசீகரித்த படைப்பாளிகள் யார் என்றால் ஷோபாசக்தியையும், சக்கரவர்த்தியையும் தயங்காமல் உடனே சொல்வேன். படைப்புக்களில் மட்டுமில்லாது அவர்களின் பிற செயற்பாடுகளாலும் என் கவனத்தை ஈர்ந்தவர்கள் இந்த இருவரும். சக்கரவர்த்தி, யுத்தசந்நியாசம் என்ற கவிதைத் தொகுப்பையும், யுத்தத்தின் இரண்டாம் பாகம் என்ற சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். யுத்தத்தைத் தின்போம் என்ற மூன்று கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிலும், இவரும் ஒரு படைப்பாளி. ஷோபாசக்தி, கொரில்லா, ம் என்ற இரண்டு நாவல்களையும், தேசத்துரோகி என்றொரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

சக்கரவர்த்தி முழக்கம் பத்திரிகைக்கு ஒருமுறை கொடுத்த நேர்காணல் இங்கே பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. வெள்ளாளர்களையும், ஆறுமுகநாவலர், இராமநாதன் என்ற சனாதனவாதிகளையும் கிழிகிழியென்று அந்த நேர்காணலில் கிழித்திருந்தார். இதற்கு எதிர்வினையாக, ஆறுமுகநாவலரை இந்துசமயத்தின் (?) காவலராய் இன்னொரு பத்திரிகையான முரசொலி புகழ்ந்து எழுத, சக்கரவர்த்தி அந்தப் பத்திரிகையிலே பொய்யான தகவல்களை எல்லாம் திரித்து வேறொரு பெயரில் எழுத அதையெதுவுமே சரிபார்க்காது அப்படியே அந்தப் பத்திரிகை பிரசுரித்திருந்தது. பிறகு சக்கரவர்த்தி தாந்தான் (கணபதிப்பிள்ளை என்ற பெயர் என்று நினைக்கின்றேன்) சும்மா பொய்யான தகவலகளுடன் எழுதினேன் என்று முழக்கத்தில் தெரியப்படுத்த, முரசொலி பத்திரிகை மூக்குடைந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றது. அதே மாதிரி, கனடாவிற்கு வந்த வைரமுத்துவின், கவியரங்கிலும் கவிதை பாடி சர்ச்சைக்குள்ளாகி, அடுத்த நாள் நடைபெற இருந்த கவிதா நிகழ்வும் நிறுத்தப்பட்டிருந்தது. கலகக்காரர்கள் என்று சொல்லில் மட்டுமில்லாது செயலில் செய்து காட்டியிருந்தது சக்கரவர்த்தியின் மீது மேலும் மதிப்பு ஏற்பட்டது.

ஷோபாசக்தியும், பிறரைப் போல நடுநிலையாளர்கள் என்று பிரகடனப்படுத்தி புலி எதிர்ப்பு மட்டும் செய்துகொண்டிருக்காதிருந்தது பிடித்திருந்தது. புலிகளை 100% எதிர்க்கிறேன். ஆனால் 200% இலங்கை அரசாங்கத்தின் பயங்காரவாதத்தை எதிர்க்கின்றேன் என்று சொன்னதோடு மட்டும் நில்லாமல், தனது பிரதிக்குள்ளேயும் இதை நிகழ்த்தியும் காட்டியவர்/காட்டுபவர். ஷோபாசக்தியின் நேர்காணல்களை வாசித்தபோது பிடித்த விடயம் என்னவென்றால், அவர் எந்தப்படைப்பாளியையும் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திட்டியதில்லை. ஏதோ ஒரு நேர்காணலில் உங்கள் நண்பர்கள் கற்சுறா, சாருநிவேதிதா எல்லாம் உங்கள் கதைகளை நிராகரிக்கின்றார்களே என்றபோது, அது அவரவர்களின் கருத்து. அவர்களுக்கு அதை முன்வைக்கும் சுதந்திரம் உண்டு என்று நிதானமாய்த்தான் பதிலளித்திருந்தார். அவன் என்னண்டு இப்படிச்சொல்லுவான் என்று முண்டாதட்டாதது ஆறுதலாயிருந்தது. புலம்பெயர் படைப்புக்களுக்கு ஒரு களமாய் இருந்த எக்ஸில் சஞ்சிகை, பிறகு எக்ஸில், உயிர்நிழல் என்று தமிழகத்து இலக்கிய அரசியலின் பாதிப்பில் தேய்ந்து கட்டெறும்பானது அநேகருக்குத் தெரிந்திருக்கும். நேர்காணலின்போது, பின்னோக்கி பார்க்கும்போது, சின்ன விடயத்தை பெரிதுபடுத்தி வீணாய் சண்டைபிடித்துவிட்டோம் என்று மனவருந்தி ஷோபாசக்தி இதுகுறித்து கூறியிருந்தார். ஷோபாசக்தி எக்ஸிலிருந்து பிரிந்து பிறகு அம்மாவில் கூட ஆசிரியர்களில் ஒருவராய் இருந்திருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

இவர்களின் அரசியல், படைப்புக்கள் என்று பலவிடயங்களில் எனக்கு முரண்பாடிருக்கும்போதும் (ஜெயமோகன் -சூர்யா தவிர அனைவரும் எங்கோ ஓரிடத்தில் வித்தியாசப்படவே செய்வோம்), இவர்களது படைப்புக்களும், ஆளுமைகளும் என்னை கவருகின்றன. சிலவேளைகளில் இவர்கள் தங்களவில் நேர்மையாக இருப்பதால் இன்னும் கூடுதல் ஒட்டு வருகின்றதோ என்றும் நினைப்பதுண்டு. இந்தச் சமயத்தில்தான், ஈழத்து இலக்கியம் பற்றிய பதிவுகள் விவாதத்தில் ஜெயமோகன், ஈழத்தில் யார் நல்ல சிறுகதைகள் எழுதுகின்றார்கள் என்ற பதிலுக்கு நான் சக்கரவர்த்தியையும் ஒரு உதாரணமாகச் சொல்லியிருந்தது ஞாபகம் வருகின்றது. அந்தப்பொழுதில் சக்கரவர்த்தியின் சில சிறுகதைகளை வாசித்திருந்தாலும், யுத்தத்தின் இரண்டாம் பாகம் தொகுப்பு வாசித்திருக்கவில்லை. அதையும் இப்போது வாசித்தபின் நான் சொன்னதில் தவறில்லை என்றுதான் நினைக்கின்றேன். ஆடு புலி புல்லுக்கட்டு, மற்றும் படுவான்கரையும் மிகச் சிறந்த படைப்புக்கள். வழமைபோல் ஜெயமோகன் அதை நிராகரித்திருந்தாலும் (அவருக்கு அ.முத்துலிங்கத்தைத் தவிர வேறொருவரும் கதை எழுதுவதில்லை என்று ஒரு நினைப்பு) அது குறித்து நான்(ம்) அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஜெயமோகனைப் போன்றவர்களுக்கு அ.முத்துலிங்கம் போன்றவர்களைப் பிடிப்பதற்கு அ.முத்துலிங்கம் எந்த அரசியலையும் தனது படைப்புக்களில் முன்வைப்பதில்லை. ஆனால் புலம்பெயர்ந்த 99%மான ஈழத்தமிழர்களுக்கு அரசியலைத் தவிர்த்து வாழ்வென்பது கிடையாதென்றுதான் நினைக்கின்றேன். அ.முத்துலிங்கம் எந்த அரசியலையும் வெளிப்படையாக வைக்காததால் எல்லா தமிழகத்துப் பத்திரிகைளும் எந்தப்பிரச்சனையுமின்றி அவரது படைப்புக்களை வெளியிடுகின்றன (இதனால் நான் அ.முத்துலிங்கத்தின் அனைத்துப் படைப்புக்களை நிராகரிக்கின்றேன் என்று அர்த்தமல்ல). இனி புதிதாய் வாசிக்கத்தொடங்கும் எந்த வாசகரும் அ.முத்துலிங்கத்தின் படைப்புக்களை மட்டும் புலம்பெயர்ந்த படைப்பாய் முன்னுதாராணம் கொள்ளும் அபாயம் வரக்கூடும். சக்கரவர்த்தியின் சில கதைகள் கூட, அந்நியச்சுழலை முற்றுமுழுதாக முன்வைத்து எழுதப்பட்டிருக்கின்றன (EX-அழகி, நானும் ஓகஸ்டீனாவும் ஒரு பந்தயக்குதிரையும்). ஆனால் சக்கரவர்த்தி ஏனைய 99% ஈழத்தமிழர்களைப்போல அரசியலைத் தவிர்த்து பேசமுடியாதவராகையால், இந்தப்படைப்புக்கள் கூட கவனத்தில் இல்லாமற்போய்விட்டன.

இந்தக்கணத்தில்தான் ஜெயமோகன் போன்றோர் முன்வைக்கும் நுண்ணரசியல் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். புலம்பெயர் எழுத்துக்கள் என்றால் அ.முத்துலிங்கத்தையும் , தலித் படைப்புக்கள் என்றால் *பூமணியையும், சோ.தருமனையும் ஏன் இவர்கள் முன்வைக்கிறார்கள் என்றால், அவர்களின் கதைகளோ அல்லது அவர்களோ ஏற்கனவே வழிமொழியப்பட்ட இலக்கியத்தளத்தை அடைய முயற்சிப்பவை. அ.முத்துலிங்கம் எப்படி தனது அரசியலை மறைக்கின்றாரோ அப்படியே *பூமணி போன்றவர்கள் தமது தலித் அடையாளங்களை மறந்து மேல்வர்க்கங்களோடு சமரசம் செய்து போக விரும்புகின்றவர்கள். முரணான விடயம் என்னவென்றால், அழகியல் பற்றி பேசுகின்ற விமர்சகர்கள், அழகியல் என்று ஒன்றிருந்தால் அழகியல்Xஎதிர் அழகியல் என்பது இருப்பதை இலகுவாக மறைத்துவிடுகிறார்கள். இந்த எதிர்அழகியல்தான் தமிழக தலித்துக்களிடம், ஈழத்தமிழர்களிடமும் வெளிப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளத்தவறும் இவர்களது அழகியலரசியல் நமக்கொன்றும் புதியதுமல்ல.

வைரமுத்துவின் தலைமையில் நடந்த கவியரங்கில் சக்கரவர்த்தி வாசித்த சர்ச்சைக்குள்ளான கவிதையிலிருந்து சில பகுதிகள்...

....
சிலுவைகள் கிளை உடைய
சிறகுகள் இப்போது
சுமையாகிப் போயின.
நான் என் தேசம் மீளல் வேண்டும்
தேசம் மீதான பசலை நோய்
தேகத்தில் படர
தேசம் பற்றிய கனவு
நமக்கிப்போது பிணியாகிப் போனது.

துப்பாக்கிகள் எப்போது துருப்பிடிப்பது.
நாம் எப்போது
நம் தேசம் மீள்வது?
நான்கு புறமும் அலைகள்
நடப்பதென்னவோ கொலைகள்.
...........
87 இல்
நம் சகோதரிகளை
விரட்டி விரட்டி
கற்பழித்த ஹிந்தியன்
இன்று நம் வீட்டு அயல் வீட்டுக்காரன்

துரத்தி துரத்தி
முலைகடித்த சீக்கியன்
இன்று நம் எதிர்வீட்டுக்காரன்.
எதிரி எனப்பட்டவன்
எதிர்க்க இருந்தும்
இன்று நாம் அவனை புன்முறுவலுடன் சிநேகிக்கவில்லையா?
என்ன ஆயிற்று நம் கோபம்
என்ன ஆயிற்று நம் மானம்?
எங்கே போயிற்று
தமிழ் மறவர் வீரம்?
..................
இனச்சுத்தம் இனச்சுத்தம்
எனச் சொல்லி
சோனகரை எல்லாம்
ஒற்றை நாள் இடைவெளியில்
நாட்டைவிட்டு நாம் விரட்டியடித்தோம்.

நாமென்ன நாசிகளுக்கா பிறந்தோம்?
நம் பூர்வீகம் என்ன ஜேர்மனியா?

தூக்கிச் செல்ல மனச்சுமையும்
ஜநூறு ரூபாயையும் மட்டுமே
அனுமதித்த நாம் ஏன் மறந்தோம்,
பாட்டன் முப்பாட்டன் பரம்பரையாய்
சோனகரே ஆயினும்
அவனும் தமிழன் என்பதை ஏன் மறந்தோம்?

காலத்தின் கட்டாயத்தை
இப்போது இங்கே பாருங்கள்
இனச் சுத்தம் பேசும் நம் பரம்பரையின்
பிள்ளைகள் இன்று
கறுப்பின ஆபிரிக்கருடன் சல்லாபிக்கும்
காலத்தின் கட்டாயத்தைப் பாருங்கள்!
கறுப்பருடன் சல்லாபித்து விட்டு
வெள்ளைத்தோல் அமெரிக்கருக்கு
பிள்ளை பெற்றுக் கொள்ளும்
காலத்தின் தீர்ப்பை யார் மறுப்பார்!
..............
ஜயாயிரம் மைல்களுக்கப்பால்
சிவனே என்றிருக்கும் நயாகராவைப் பாடும்
சிகரங்களைத் தொட்ட
எங்கள் வைரமுத்து ஜயா(?) அவர்கள்
கூப்பிடு தூரத்தில் அழுகை ஒலி கேட்பதைப் பற்றி
அலட்டிக் கொள்வதில்லை?

வயாகரா மீது இருக்கும் அக்கறை
அக்கரையில் இருக்கும்
ஈழத்தின் மீது ஏன் இல்லை?

போகட்டும்

வெல்லத்தானே வீரம்
கொல்வதற்கு இல்லை.
கவியரசு ஜயா!
நீங்கள் சொன்னதாகத் தான் சொல்கிறது
பாட்டுப் பெட்டி.

யுத்தம் ஒன்றைத் தவிர
வேறொன்றும் தெரியாதென்னும்
எம் தேசம் நோக்கி
கொல்லாமல் வெல்வது எப்படி
என்றாவது சொல்லுங்கள்....
............


* பூமணி பற்றி இப்படி எனக்கு ஒரு விமர்சனம் இருப்பினும், அவர் நல்ல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கின்றார் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.

ஷோபாசக்தியின் 'கொரில்லா'

Tuesday, February 01, 2005

நாவலிருந்து சில பக்கங்கள்

5. குஞ்சன்வயல் கடக்கரையே ரெத்த வெடில் பிடிச்சுது. ஒவ்வொரு வாகனமாய் ஓடி ஓடி ரொக்கிராஜ் பிரேதங்களைப் பார்த்தான். அவனால நிலத்தில நிக்கக் கூட ஏலாமலுக்கு தலை சுத்தி அப்பிடியே ரோட்டில் இருந்திற்றான். குழந்தை, குஞ்சு, குருமான், ஆம்பிளையள், பொம்பிளையள் எண்டு எல்லாமாய் ஐம்பத்து சொச்சப் பிரேதங்கள்.

6. எல்லோரையும் வெட்டித்தான் கொலை செய்திருக்கிறாங்கள். கையில்லாமல், காலில்லாமல், தலையில்லாமல், கைக்குழந்தையைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு கிடந்த பிரேதங்களை தோணிகளில ஏத்தினாங்கள். தோணியள் நாவாந்துறையைப் பார்த்து போகுது. நாவாந்துறையில் இருந்து பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போறதுக்கு அங்கயும் வாகனங்கள் றெடியாய் நிக்குதெண்டு செய்தி கிடைச்சுது. குஞ்சன்வயல் சனங்கள் ஒரே ஆத்திரமும், அழுகையுமாய் பிரேதங்களை தோணியில ஏத்திறதுக்கு உதவி செய்தவை.

7. காலையில வழமை போல நெடுந்தீவிலையிலிருந்து குமுதினி லோஞ்சு வெளிக்கிட்டிருக்கு. அது நேராய் புங்குடுதீவு குறிகட்டுவான் ஜெற்றிக்கு வரவேண்டும். ஆனால் இப்ப அப்படி வர ஏலாது. இடையில பாதையை மாத்தி நயினாதீவு நேவிகாம்புக்கு போகவேணும். நேவி செக் பண்ணி பிடிக்கிற பொடி பொட்டையளை பிடிச்சுக்கொண்டு விட்டாப்பிறகுதான் குறிகட்டுவானுக்கு வர ஏலும். எப்பிடியும் காலையில பத்து மணிக்குப் பிந்தாமல் குமுதினி லோஞ்சி குறிகட்டுவான் ஜெற்றிக்கு வந்திரும்.

8. ஆனால் அண்டைக்கு குமுதினி நயினாதீவு நேவிக் காம்புக்கு வரமுன்னமே நேவிக்கப்பலுகள் குமுதினியை தேடிப்போய் நடுக்கடலில் மறிச்சுப் பிடிச்சுக்கொண்டுதுகள்.

9. ஒரு பச்சப்பாலகனுக்கு - பிறந்து ஆறு மாசம் கூட இருக்காது- நெஞ்சில வாளல குத்தி அந்தப் பிள்ளையின்ரை வாயுக்குள்ள ஆணுறுப்பை அடைஞ்சு வைச்சிருக்கிறாங்கள். லோஞ்சியல பயணம் செய்த ஒருத்தரும் உசிரோடு தப்பயில்ல. எல்லாரையும் வெட்டிச் சரிச்சுப் போட்டுத்தான் போயிருக்கிறாங்கள்.

10. பத்து மணிக்கு வரவேண்டிய குமுதினி வரயில்ல. அது மத்தியானத்துக்குப் பிறகு குறிகட்டுவான துறையில நிண்ட சனங்களின்ர கண்ணில தெரிஞ்சுது. குமுதினி ஜெற்றியைப் பார்த்து வராமல் கடலுக்குள்ளேயே அலையிறதைக் கண்டு போட்டு துறையிலயிருந்த சனம் வள்ளத்தில ஏறிப்போய் குமுதினியைப் பார்த்தால் இந்தக் கொடூரம். ஒரு மாதிரி போன ஆக்கள் குமுதினிய ஜெற்றிக்கு கொண்டுவந்து சேர்த்திச்சினம்.

11. எல்லாப் பிரேதங்களையும் தோணியில ஏத்தி அனுப்பினாப் பிறகு அப்படியே கடலுக்குள்ள இறங்கி எல்லாப் பொடியளும் கால், முகம் கழுவிச்சினம். பிறகு, ஓஷிலா "நேவிக்கு அழிவு காலம் கிட்டுது" எண்டு சொன்னான்.

12. பொடியள் சொன்ன மாதிரி செய்து காட்டினாங்கள். ஒருநாள் நயினாதீவு நேவியின்ர ஜெற்றியையும் ஜெற்றியில நிண்ட வள்ளங்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் கிளப்பினாங்கள்.

13. "எல்லாம எத்தின நேவி முடிஞ்சிருப்பாங்கள்?" எண்டு ரொக்கிராஜ் கேட்கவும் ஓஷிலா ஒர் செக்கன் கண்ணை மூடித் திறந்து போட்டு "கிட்டத்தட்ட கணக்கு சரியா வந்திருக்கும்" எண்டான்.

14. "அண்ணே நாங்கள் கதைக்கிறது பிழையோ? இது கணக்குப் பார்க்கிற காரியமில்லை" எண்டு சடாரெண்டு ரொக்கிராஜின்ர வாயில் வந்திற்று. ஓஷிலா ஒரு மாதிரி சொண்டைச் சுழித்துக் கொண்டே ரொக்கிராஜைப் பார்த்து, "எனக்கே அரசியலா?" எண்டு கேட்டான். சுத்தி நிண்ட பொடியள் சிரிச்சாங்கள்.

(பக்கம் 90 -93)

சிறு குறிப்பு: இந்தப்பக்கத்தில் நிலாந்தனின் குமுதினி சம்பவம் பற்றிய 'கடலம்மா' என்ற கவிதை தரப்பட்டிருந்தது. நேரங்கிடைத்தால் அந்தக் கவிதையை பிறிதொருபொழுதில் பதிவிலிடுகின்றேன்.