கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஈழத்தின் வனப்பு

Wednesday, June 29, 2005

இராவணன் வெட்டு

திருக்கோணச்சரம் கோயிலுக்கு முன்னே இராவணன் வெட்டு உள்ளது. சற்றே அருகில் நெருங்கிப் பார்க்கும்போது அழகையும் பீதியையும் கொடுக்கும். புராணகதைகளில் இதைப் பற்றியும் கதைகள் உண்டு.

அழகு கொஞ்சும் மலைநாடு. படம் எடுக்கப்பட்ட இடத்தில் தேயிலைத் தொழிற்சாலை உண்டு. எப்படி தேயிலை பதமாக்கப்படுகின்றதென்ற செயன்முறை விளக்கங்களும், உடனேயே ப்ரஷ்ஷாக தயாரித்துத் தரப்படும் தேநீர் வசதியும் உண்டு. இரண்டு முறை சென்று அந்த அற்புத சுவையை கேக்குடன் சுவைத்திருக்கின்றேன். இன்னும் நாவில் அதன் உருசி கரைவதாய் ஒரு பிரமை.

கதிர்காமம்

அருணகிரிநாதர் உட்பட பலரால் பாடப்பட்ட தலம். சூரன்போரே இங்கே நிகழ்ந்ததாய்தான் கூறப்படுகின்றது. இப்போது முற்றுமுழுதாக சிங்களப் பிரதேசமாக மாறி, புத்தர் பல இடங்களை ஆக்கிரமித்துவிட்டார். பிரதான கோயில்களில் சிங்களத்தில்தான் வழிபாடுகள் நடக்கின்றது. அதைச் சூழவும் சில கோயில்களில் தமிழ்க் கடவுள்கள் வாளா அமர்ந்திருக்கின்றார்கள். படம் இருட்டில் எடுக்கப்பட்டாலும் முற்றுமுழுதாக சிங்களத்தில் எழுதப்பட்ட பதாகைதான் தொங்குகின்றது. முருகனுக்கு அடையாளமாய் தொங்கிக்கொண்டிருந்த வேலையும் (படத்தில் காண்க) பிறகு ஜேவிபியினர் அல்லது சிங்கள உறுமயக்கட்சியினரோ தூக்கிவிட்டனர் என்று சர்ச்சைகள் நடந்ததைக் கேள்விப்பட்டிருந்தேன். மீளவும் வைக்கப்பட்டதா அல்லது புதைக்கப்பட்டுவிட்டதா சரியா எதுவும் சரியாகத் தெரியவில்லை.

மலையகத்தைச் சுற்றிப் பார்த்தபோது, நான் நீராடி சுத்தமாக்கிய நீர்வீழ்ச்சி இது. இதற்கு மேலே ஏறிப்போனால் இன்னும் அழகாய் விழும் நீர்வீழ்ச்சியையும், கலகலவென்று சிரித்தபடி நீராடும் பெண்களையும் காணலாம்.

சீகிரியா ஓவியங்கள்

படம் எடுக்கத் தடை என்று கூறப்பட்டாலும் கள்ளமாய் எடுத்து தொல்பொருள் ஆய்வாளர்களிடம் ஏச்சும் வாங்கியிருக்கின்றேன். சிகிரியாவில் ஏறிப்போவது ஒரு அலாதியான அனுபவம். மேல் தளத்தில் எல்லாம் உடைந்து நிர்மூலமாகப் போயிருந்தாலும், எப்படி இப்படியொரு இடத்தை காசியப்பன் தனது இராச்சியமாய் தேர்ந்தெடுத்துக்கொண்டான் என வியக்க வைக்கும் இடம். நீராடும் பொய்கைகள் போலக் கூடத் தெரிந்தன (மாதிரி எனக்குக் கிடந்தது). எத்தனை பெண்கள், ஆண்கள், குழந்தைகள் நீராடிக் குதூகலித்த இடமோ? ஒரு இறப்பைப் போல அடையாளமின்றிப் போயிருக்கின்றது இன்று.

நமக்கான கடைசிப்பாடல்

Tuesday, June 28, 2005

காத்திருந்தேன்
முதுகில் குத்தப்பட்ட
கத்தியின் துரோகத்துடன்
ஒரு தொலைபேசி அழைப்புக்காய்

புறக்கணிப்பின் துயருடன்
வளாகவாசல்களில் நூலகங்களில்
உன் சுவடுகள் தேடியலைய
ஓயாதெழும் அலைகளாய்
காதினை உரசுகின்றன
நமது உரையாடல்கள்

இருள்படர்ந்த
நெடும்வனத்தைக் கடந்துவந்தபோது
நினைவுகள் கொல்லும் குளிர்காலம் கரைந்து
அழகாய் விரிந்திருந்தது வசந்தம்

இன்றென் செல்லிடப்பேசி உயிர்ப்புறுகிறது
அந்த இனிமைக்குரலுக்குரிய
அதிர்வெண் மாறவில்லை
எதிர்முனையில் நீ.

எல்லாமே சுழற்சிதான்
நிராகரித்தலும் உச்சிமுகர்தலும்
நேசிப்பின் எழுதப்படாத விதி
உறைந்துபோன இருவிதயங்களுக்கு
உயிர்கொடுக்க முயல்கிறாய்

எதையும் நம்பும்..
உதாசீனத்தை இரசித்து
அனைத்தையும் நேசிக்கும்
குழந்தைமையை தொலைத்துவிட்டிருந்தேன்
அடர்வனம் கடந்த பொழுதில்

இன்று
துரோகத்தை அருந்தி
வன்மத்தை மூச்சாக்கி
மூர்க்கமாய் வளர்ந்த 'ஆண்பிள்ளை'

இனிமேலும் நேசிக்கக்கூடும்
ஆனால் அது நீயல்ல
பதின்மம் கடந்த ஆண்கள்
மீண்டும் மழலைகள் ஆவதில்லை.

ஒரு புத்தகமும் அது எழுப்பும் பல வினாக்களும்

Sunday, June 19, 2005

(1)

Vanmam

பாமா எழுதிய, 'வன்மம்' நாவலை இன்றுதான் வாசித்து முடித்திருந்தேன். பாமா ஏற்கனவே 'சுருக்கு', 'சங்கதி' என்ற நாவல்களையும், 'கிசும்புக்காரன்' என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார். 'வன்மம்' நாவல், கண்டம்பட்டி என்ற ஊரிலுள்ள, பள்ளர் பறையர் என்ற இரு ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கிடையிலுள்ள பகைமையையும் நட்பையும் விரிவான தளத்தில் எடுத்துச் சொல்கின்றன. அந்த ஊரிலுள்ள பறையர்களில் அநேகர் கிறிஸ்தவ மதத்தவர்களாகவும், பள்ளர்கள் இந்து சமயத்தவர்களாகவும் இருக்கின்றனர். பறையர்கள் வெளியூர்களுக்குப் படிக்கப்போகவும், பணஞ்காசு சேமிக்கத் தொடங்கவும் அந்த ஊரிலுள்ள ஆதிக்க சாதியினரான நாயக்கர்களுக்குப் பிடிக்காமல் போக பள்ளர்களை உசுப்பி பறையர்களுடன் மோத விடுகின்றனர். இந்தச் சூழ்ச்சியை அறிந்தும் அறியாமலும் பள்ளர்களும் பலியாகிப்போகின்றனர். பறையர்களின் எழுச்சியை சகிக்காது உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்த பள்ளர்கள், தாங்கள் பறையர்கள் கூறிக்கொள்ளும் 'தலித்' என்ற பிரிவுக்குள் வரமாட்டோம் அதையும் விட மேலுயர்ந்த சாதியினர் தாங்கள் என்று கூறிப்பெருமிதங்கொள்கின்றனர். வெளியூருக்குப் படிக்கப்போன பறையர் சாதி இளவட்டப்பயலுகள் தங்கள் சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்றெண்ணி 'கழனிக் கலைக்குழு' என்றமைத்து தமது சமூகத்து மக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். இதன் நீட்சியில் தமது பறையர் தெருச் சாவடியில் அம்பேத்காருக்கு ஒரு சிலை வைக்கின்றனர். இதற்கு பள்ளர்களும் நிதியுதவி ஒத்தாசை செய்கின்றனர். எனினும் பறையர்கள் அம்பேத்காருக்கு சிலை வைத்தால் தாங்கள் இம்மானுவேலுக்கு சிலை வைக்கவேண்டும் என்று பள்ளர் தெரு இளவட்டப்பயலுக்கள் வெளிக்கிட, பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் இதுவரை உரசிக்கொண்டிருந்த பகை வன்மமாக உருவெடுக்கின்றது. அதன் தொடர்ச்சியில் பறையர் சாதி ஆண் ஒருவரை ஓட ஒட வெட்டிச் சாய்க்கின்றனர், பள்ளர் சாதி இளவட்டப்பயலுகள். இந்த அப்பாவி உயிர்ப்பலிக்கு உடனேயே வெஞ்சினம் தீர்க்கவேண்டுமென்று உறுமும் பறையர் சாதி இளவட்டப்பயலுகளை அவர்களது நாட்டமையும், பெரிசுகளும் தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் இந்தக் கொலையைப் போல முன்பும் பலமுறை பல பறையர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்ற யதார்த்தம் புரிபட தமது உயிர்களுக்கு எந்த உத்தரவாதமுமில்லை என பறையர் சாதி இளவட்டப்பயலுகளுக்கும் விளங்குகின்றது. இதற்கிடையில் இந்த கொலையைப் பார்த்த பதினமவயது பயலுகள் முன்றுபேர் வீச்சரிவாள் முதுகில் சுமந்துகொண்டு, பள்ளர்களில் ஒருவரையாவது போடாமல் விடுவதில்லையென வெஞ்சினத்தோடு அலைகின்றார்கள். ஒருநாள் பசாரில், ஒருத்தரையல்ல மூன்றுபேரைப் போட்டுத்தள்ளிவிட்டு அந்தப் பதினமவயதுகள் ஊரைவிட்டே ஓடிப்போகின்றார்கள். அந்த ஆத்திரத்தில் பள்ளர்கள், பறையர் சாதி ஆண்கள் ஓடித்தப்பியதால் இரண்டு பெண்களைப் போட்டுத்தள்ளிவிடுகின்றார்கள். இதன் தொடர்ச்சியில் பறையர் தெருக்கள் முழுதுமே இடம்பெயர்ந்து ஊரே வெறிச்சோடிப்போகின்றது. கலவரத்தைத் தடுக்க வருகின்ற பொலிசும் பள்ளர்களுக்குச் சாதகமாக நிற்க, பறையர்கள் பஞ்சத்திலும் உயிர்ப்பயத்திலும் அலைக்கழிகின்றனர். வேறு ஊர்களில் ஒளித்துநின்றாலும் பறையர் சாதி ஆண்களைப் பொலிஸ் தேடி தேடிப் பிடித்து சிறைக்குள் அனுப்புகின்றது. பெண்கள் பொலிசாலும், பட்டினியாலும் சொல்லவொண்ணா துயரங்களைச் சந்திக்கின்றனர். படிப்பதற்குப் போன பிள்ளைகள் பாடசாலைகளுக்குப் போகாமல் நிற்கின்றனர். அத்துடன் பறையர்கள் எங்கு போகவேண்டுமென்றாலும், பள்ளர் மற்றும் ஆதிக்கச் சாதிகளில் தெருக்களைத் தாண்டித்தான் போகவேண்டும் என்பதால் ஒரு நாள் கஞ்சிக்குடிப்பதற்கு உழைக்கக் கூட முடியாமல் தங்கள் தெருக்களுக்குள்ளேயே அடங்கிக்கொள்கின்றனர், உயிர்ப்பயத்துடன். இப்படி மூன்று வருடங்களாய் நிகழும் வன்மத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று இரண்டு சாதி நாட்டாமைகளூம் கடுமையாக முயல்கின்றனர். வெட்டிக்கொல்லப்பட்டவர்கள் போய்விட்டனர் இனி நாமாவது பகையில்லாது வாழ்வேண்டும் என்று, பறையரை வெட்டிக்கொன்றவரின் வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது, பறையர்கள் சாட்சி அளிக்காது தவிர்த்துவிடுகின்றனர். அவ்வாறே பள்ளர்களை வெட்டிக்கொன்ற வழக்கில் தாங்களும் சாட்சி சொல்லமாட்டோம் என்று பள்ளர்களும் உறுதியளிக்கின்றனர். இனி தமது பகைமையை மறந்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று உறுதிப்படுத்துகின்றனர். அதுவரை பஞ்சாயத்து தேர்தலில் பிரசிடெண்டாய் வருகின்ற நாயக்கர்களுக்கு எதிராக பள்ளர்களும், பறையர்களும் ஒன்றாய் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறவும் செய்கின்றனர். 'இனிமேல்பட்டு நம்ம ரெண்டு சாதிகளும் சண்டை சச்சரவு போடாமே, வாழனும். இந்த பஞ்சாயத்துத் தேர்தல்ல செயிச்சது மட்டும் போதாது. சட்டசபை, நாடாளுமன்றம் எல்லா எடத்துலயேயும் நம்ம தலித்துக குரல் ஓங்கி ஒலிக்கனும். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்கார் சொன்னதுபோல, அரசியல் அதிகாரத்தைக் கைப்பத்தனும். அதுக்கு இது முதல்படியா இருக்கட்டும்' என்கின்றார் ஒருவர். இறுதியில், 'இனிவரும் தலைமுறையாவது வன்மமில்லாமெ, வன்முறை இல்லாமெ, சண்டை சச்சரவு இல்லாமெ, ஒன்னா மண்ணா இருக்கனும்னு இப்ப உள்ள சனங்க கடுமையா பெராயாசைப்பட்டு, திட்டமிட்டு செயல்பட்டாக. வருங்காலத்தப் பத்திய நம்பிக்கையோடெ, பயமும் இருக்கத்தான் செய்யுது. இருந்தாலும் மனசுல தெளிவும், தீர்க்கமான உறுதியும் இருந்துச்சு' என்றபடி நாவல் நிறைவுபெறுகின்றது.

(2)
vanmam2

பாமாவின் மண்வாசனைகுரிய மொழியில் இந்த நாவலை வாசிக்கும்போது நாமும் மனங்குளிர நனைந்துவிடமுடிகின்றது. வட்டார மொழி வழக்கு சிலவேளைகளில் வாசிப்பு ஓட்டத்தை சற்று நிறுத்தி நிதானித்து ஒடச்செய்தாலும் நாவலோடு ஒன்றிவிட்டால் அது பெரிய விடயமாகத் தெரியாது. பாமாவின் இந்த நாவலை நான் வாசிக்கும்போது நான் வியந்த விடயம், பாமா ஆண்களின் உலகை அழகாய்ப் பதிவு செய்தது. பாமா என்ற பெயரைப் போடாது விட்டிருந்தால் ஒரு ஆணே எழுதியிருக்ககூடியதாக ஆணின் உலகை மிக இயல்பாய்ப் பதிவுசெய்திருக்கின்றார். முக்கியமாய் இளவயதுப் பயலுகள் எப்படிக் கதைப்பார்கள், நடமாடுவார்கள் என்பதை எழுதிய இடங்கள் எனக்கு வியப்பாக இருந்தது. அத்தோடு இல்லாமல் பெண்களின் படைப்புக்களில் அவ்வளவு இயல்பான ஆண்பாத்திரங்கள்/உரையாடல்கள் வருவதை வாசித்தில்லாதபடியால் இது எனக்கு முக்கிய விடயமாகத் தெரிந்தது. பாமாவோ அல்லது வேறெவரோ மறுத்தாலும், இது பறையர் சாதியினருக்கு ஆதரவாக எழுதப்பட்ட நாவல் என்று ஆரம்பத்திலிருந்தே புரிந்துகொள்ளமுடியும். பொதுப்படையாக நடப்பதாக அல்லது, ஒரு ஊரில் மட்டும் இந்தக் கதை நடப்பது என்று வாசிப்பில் தெரிந்தாலும், பள்ளர் சாதியினர் மீது பலவிடங்களில் stereo-typeல் பல கருத்துக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. நிச்சயம் பறையர்கள் பள்ளர்களால் ஒடுக்கப்பட்டிருந்தாலும் எழுத்தில் பொதுவான தளத்தில் வைக்கும்போது இவை குறித்து அவதானமாக இருக்கவேண்டும் போலத் தோன்றியது. இதையெல்லாவற்றையும் விட தலித்துக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டிய இன்னொரு முக்கிய புள்ளி உண்டு. இவ்வாறான ஒடுக்கப்பட்டவர்களுக்கிடையிலான முரண்கள் பகைகள் வெளியே கூறப்படும்போது அவர்களுக்கும் மேலேயுள்ள ஆதிக்கசாதிகள் இவற்றை தங்கள் வசதிக்கேற்ப திரித்து எழுதி தலித்துக்களை இன்னவும் ஒடுக்கவும் கூடும். தமக்குச் சாதகமான கருத்துக்களை மட்டும் எடுத்து எழுதிப்போட்டு தலித்துக்களை நோக்கி நக்கல் சிரிப்பு சிரிக்க காத்திருக்கின்றன பனங்காட்டு நரிகள் என்பதை அவ்வளவு இலகுவில் ஒதுக்கிவிடமுடியாது. பாமாவின், 'வன்மம்' இன்றைய பொழுதில் எழுதப்பட்டிருக்ககூடாது என்ற விமர்சனங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். என்னால் அந்தக் கருத்துடன் உடன்படமுடியாதுவிட்டாலும், ஒரு சென்சிட்டாவான விசயத்தை எழுதும்போது பாதிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து அது எதிரான திசையில் திசை திரும்பாமலிருக்க, பாமாவைப்போன்றவ்ர்கள் இந்த நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் குறித்து தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்தியபடி இருக்கவேண்டும். இந்த நாவலில் இறுதி இரண்டு அத்தியாயங்களைத் தவிர, மிகுதி அனைத்திலும் பள்ளர்கள் பறையர்களுக்கு எதிராளிகளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கிடையிலுள்ள வன்மத்தைச் சொல்வதற்கு எடுத்த அவகாசத்தை அவர்களைத் தூண்டிவிடும் சக்திகளுக்கும் செலவழித்திருக்கவேண்டும். முக்கியமாய் இன்றைய பொழுதில் பாமாவின் நாவல்கள் வேற்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும்போது, தலித் பிரச்சினைகள் என்பதே பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் மட்டும் இடையிலானதொன்று என்ற தோற்றத்தை இதுகுறித்து அவ்வளவு அறியாதவர்களிடம் இந்த நாவல் கொடுக்கக்கூடிய அபாயமும் உண்டு.

(3)
இந்த நாவலை வாசித்துக்கொண்டுபோகும்போது, எனக்குப் பதின்மத்தில் வாசித்த கே.டானியல், செ.கணேசலிங்கத்தின் நாவல்கள் நினைவுக்கு வந்தன. எங்கேயும் ஒடுக்கப்பட்டவர்களில் மொழியும் துயரமும் ஒரேமாதிரிதான் இருக்கும் போல. இந்த நாவலை ஈழத் தேசியப்போராட்டத்துடன் ஒப்பிட்டுக்கொண்டு போக முடிந்தது. இளம்பெடியன்கள் அநியாங்களைச் சகிக்காது தங்கள் உரிமைக்காக தாங்களே போராவேண்டும் என்று கூறும்போது ஒரு வயசானவர் கூறுவார், 'இன்னைக்குக் குடிக்க கூழு இருக்கான்னு பாருங்கடா. அதுக்கே வழி இல்ல. இவனுக பெரிய போராட்டம் நடத்துவாங்களாம்...." என்று கூற, 'குடிக்கக் கூழு இல்லைல? ஒங்கப்பங் காலத்துலயும் இல்ல. ஒம் பாட்டங்காலத்துலயும் இல்ல. ஒங்காலத்துலயும் இல்ல. இனி ஒம் மகே காலத்துலயேயும் இருக்காது. இது எதுக்கன்னாலன்னு யோசிச்சுப் பாத்தியா, வருசக்கணக்குல இப்படியே கெடக்கப்போய்த்தான் ஒரு பெய மதிக்க மாட்டேங்கா" என்பதை ஈழப்போராட்டத்தின் ஆரம்பகால வரலாற்றுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கலாம் போலத் தோன்றியது. இன்றைக்கு இந்தியா டூடே, குமுதம் போன்றவை எப்படி ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்த 'மாற்றுக்கருத்தாளர்கள்' என்று பிரகடனப்படுத்துகின்றவர்களைத் தேடித் தேடி நேர்காணல் கண்டு வெளியிடுகின்றதோ அவ்வாறு பாமா போன்றவர்களும் ஆதிக்கசக்திகளின் பாஸிச கரங்களுக்குள் பலியாகாமல் இருக்கவேண்டும். இதை ஏன் நான் கூறுகின்றேன் என்றால், 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற மாற்றுக்கருத்துப் புத்தக்கத்தை எழுதியவர் மற்றும் தன்னை நடுநிலையாளர் என்று பிரகடனப்படுத்தியவர்தான் (பிறகு தீராநதியில் பேட்டிகொடுத்தவர்) சுகனையும், தேவதாசையும் போட்டுத்தள்ள பிஸ்டலோடு பாரிஸ் தெருக்களில் திரிந்தவராம். அது போதாதென்று தலித்துகளுக்கு புத்தகம் வெளியிடுகின்றேன் என்ற சோபாசக்திதான் தன்னை வெள்ளாளன் என்று அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்கின்றவர் என்று 'மாற்றுக்கருத்தாளர்களின்' தளத்திலுள்ள கட்டுரைதான் கூறுகின்றது. ஒரு புத்தகம் வெளியே வந்தவுடனேயே பலரது உண்மை முகங்கள் வெளுக்கத்தொடங்கியுள்ளன. எனவே பிற மாற்றுக்கருத்தாளர்களும் புத்தகங்களை வெளியிடவேண்டும். இவ்வாறானவர்களிடம் இருந்துதான் மாற்றுக்கருத்துகான அடித்தளம் இடப்படுகின்றதென்றால், இன்று கறைபட்டிருக்கும் ஈழப்போராட்டத்துத் தலைமைகளை விட இவை இன்னும் அச்சமூட்டுபவையாகவே புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து ஈழத்து/புலம்பெயர் இலக்கியத்தை அறியமுனையும் என்னைப்போன்றவருக்கு இருக்கும்.

வாரயிறுதிகள்: நாட்குறிப்பில் எழுத மறந்த நினைவுகள்

Thursday, June 16, 2005

சனிக்கிழமை
(அ)புல்வெளியில் கவிதைகள் வாசித்தல்

pic2

வெள்ளி பின்மாலையில்தான் அடுத்தநாள் சனிக்கிழமை இப்படி ஒரு நிகழ்வு நடத்துவது என்று நண்பர்களின் வீட்டில் நின்ற சமயம் உறுதிப்படுத்தப்பட்டது. பத்மநாப ஜயரும், மதியும் தான் இந்நிகழ்வு நடக்கவேண்டும் என்று மும்முரமாக நின்றனர். ஏற்கனவே முதல் சனிக்கிழமை மொழிபெயர்ப்பு பட்டறை நடந்திருந்தாலும், வெளிச்சுழலில் இறுக்கமற்று, மூலக் கவிதைகளும் (ஆங்கிலத்தில்) மொழிபெயர்த்த கவிதைகளும் விரும்பிய போக்கில் வாசித்து உரையாடுவதே முக்கிய நோக்கமாக இருந்தது. சனிக்கிழமை பத்மநாப ஜயர், மு.நித்தியானந்தன், ராஜா போன்றவர்களை பூங்காவுக்கு அழைத்துவரும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது. வழமைபோல ஒரு மணித்திலாயம் தாமதாகத்தான் அவர்களை உரிய இடத்துக்கு என்னால் அழைத்துச் செல்ல முடிந்தது. காத்திருந்த நண்பர்கள் என்மீது கோபப்படாதது (இல்லை மனதுக்குள் திட்டிக்கொண்டு வெளியில் காட்டாதிருந்தார்களோ தெரியாது) சற்று நிம்மதியாயிருந்தது. அவசரமாக ஒழுங்கு செய்திருந்தாலும், கிட்டத்தட்ட இருபது பேர் பங்குபற்றியிருந்தோம். வெளிச்சூழலில் கவிதை படிப்பதற்கு இந்தளவுக் கூட்டந்தான் அளவானது போலத் தோன்றியது. அல்லாவிட்டால், அது உள்ளக அரங்குகளில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டம் போலவாகிவிடும். வட்டமாக அமர்ந்து ஒலி/ஒளிபெருக்கிகள் இல்லாது இயல்பாய் பேச இந்த அளவு எண்ணிக்கைதான் சரிவரும்.

meeting1

பத்மநாப ஜயரும், மு.நித்தியானந்தனும் வாசிக்கப்பட்ட கவிதைகளை எழுதிய கவிஞர்களைப் பற்றி முன்னுரைகள் கொடுக்க தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை வாசிப்புக்கள் நடந்தேறின. மிக நட்புறவான சூழலில், எவரது கருத்தையும் எவரிலும் திணிக்காது அமைந்தது மனதுக்கு இதமாயிருந்தது. பிறகு ராஜாவும், பா.அ.ஜயகரனும் நீலாவாணனின் 'ஓ வண்டிக்கார', சண்முகம் சிவலிங்கத்தின், 'ஆட்காட்டியே' மற்றும் மகாகவியின் கவிதைகளாகப் பாடிக்காட்டியது கவிதை வாசிப்புச் சூழலுக்கு இரம்மியத்தைக் கொடுத்தது. அத்தோடு புதிய/இளைய முகங்கள் பலதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. பத்மநாப ஜயர், நித்தியானந்தன், ராஜா போன்றவர்கள் தங்கள் தலைகளின் பின்னால் ஒளிவட்டம் எதையும் சுழலவிடாது மிக இயல்பாய் நம் அனைவருடனும் உரையாடியதையும் குறிப்பிட்டுச் சொல்லதான் வேண்டும்.

pic3

(ஆ) மாணவர் எழுச்சி நாள்

அன்றைய மாலைப் பொழுதில் மாணவர் எழுச்சி நாளுக்குப் போயிருந்தேன். மாணவர் எழுச்சி நாள், சிவகுமாரன் சயனைட் அருந்தித் தற்கொலை செய்துகொண்ட நாளில் ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நினைவுகூரப்படுகின்றது. அரங்கத்தின் வாயிலை அடைந்தபோது நண்பர்கள் அடுத்தநாள் ட்சுனாமியால் பாதிப்புற்ற மக்களூக்காய் நடத்த இருந்த நடைபவனிக்கு (walkathon) flyers வழங்கிக்கொண்டிருக்க அவர்களோடு இணைந்து கொண்டேன். பிறகு அரங்கத்துக்கு உள்ளே சென்று சில நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். சில நடனங்கள் மேடையில் போய்க்கொண்டிருந்தன. மூன்று மாணவிகள் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக ஆடினர். நடனத்தின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லாவிட்டாலும், இப்படி தொடர்ச்சியாக ஆட (ஒரே வித அசைவுகளுடன்) எவ்வளவு பயிற்சி செய்திருப்பார்கள் என்றும், நடனக்குறிப்புக்களை எந்த மொழியில் எழுதி விளங்கிக்கொண்டிருப்பார்கள் என்றும் வழமைபோல யோசித்தபடி நான் பின்னேரக் கனவு காணத்தொடங்கியிருந்தேன் . பிறகு மாணவர்களாய் எழுதி, பாடிய இசைத்தட்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதற்கு பாடல் எழுதும்படி என்னையும் அழைத்திருந்தனர் (படித்து ஒரு வருடம் முடிந்தபின்னும் மாணவன் என்று அழைப்பு விடுத்த அந்த நண்பர் குழாமுக்கு நன்றி). தோழியொருத்தி தொலைபேசியில் அழைத்து அழைத்து தொண்டையில் பிடித்தபோதும் என்னால் இந்த விளையாட்டுக்கு வரமுடியாது என்று விலத்திவிட்டேன். சில பாடல்களைக் கேட்டேன். நன்றாக இருந்தது. அரங்கம் வெக்கையாக இருந்ததாலும், ஒலிபெருக்கிகள் பாடுவதற்குப் பதிலாக அலறவும் தொடங்கியதாலும், நான், கிஸோ மற்றும் ஒரு நண்பன் வெளியே ஒரு கோப்பிக்கடைக்கு தேநீர் குடிக்கப்போய்விட்டோம். பிறகு நண்பர்கள் மீண்டும் விழாவுக்கு சென்றபோதும், நான் அடுத்த நாள் காலை நடக்கும் நடைபவனிக்கு நேரத்துக்கு வரவேண்டும் எனவே என்னை வீட்டிற்கு சென்று படுக்கவிடுங்கள் என்று நல்ல சாட்டுக்கூறிவிட்டு வந்துவிட்டேன்.

ஞாயிற்றுக்கிழமை

(அ) ட்சுனாமியால் பாதிக்கப்பட்டவர்க்காய் நடந்த நடைபவனி

ட்சுனாமி அழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்நிர்மானத்துக்காய் இந்த நடைபவனி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்தளவில் இந்த வருடத்தில் நடந்த மூன்றாவது நடைபவனி இது. மூன்று நடைபவனிகளிலும் ஏதோ கொஞ்சம் நானும் பங்குபற்றியிருந்தேன். முதலாவது நடைபவனி, யோர்க் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் மாலை 6.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணிவரை நிகழ்ந்தது. நான் வழமைபோல அங்கும் தாமதாக (இரவு பதினொரு மணியளவில்) சென்று முடியும் வரை பங்குபற்றியிருந்தேன். நின்ற ஏழு மணித்தியாலங்களில் ஆகக்குறைந்தது நான்கு மணிகளாவது நடந்திருக்கின்றேன் என்பது அதிசயமான விடயம்தான். அரைவாசி பகல்/இரவு நடந்த அந்த நடைபவனியில் முடியும்போது கிட்டத்தட்ட நூறுபேர் இருந்திருப்போம். இளைஞர்கள் என்றால் வன்முறையும், குழப்படியும் செய்பவர்கள் என்பதைத் தாண்டி பெண்களும் ஆண்களும் அங்கே கூடியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை நம்பி அனுப்பிய பெற்றொரையும் பாராட்டத்தான் வேண்டும். இடையில் கிளித்தட்டு விளையாடினோம். கூடைப்பந்தாட்டம் ஆடினோம். பதின்ம வயதுப் பையன்கள் கானாப்பாடல்களுக்கு அந்தமாதிரி நடனம் ஆடினார்கள். அதைப் பார்த்து கொஞ்சம் வெட்கமும் நிரம்ப திறமையுடன் பெண்களும் தங்களுக்குள்ளே ஆடி மகிழ்ந்தார்கள். இடையில் சில ஜேர்சிகள் ஏலத்தில் விட்டபோது, பெண்களின் ஜேர்சியை இறுதியாய் வாங்கிய ஒரு பெண்ணோடு வேண்டுமென்று போட்டி போட்டு ஏலத்தைக் கூட்டி, சற்று அதிகப்படியான விலைக்கு அவரை வாங்க வைத்திருந்தோம். அந்தப்பெண் எங்களோடு பலவருடங்களுக்கு முந்தி தமிழ் வகுப்பொன்றில் இருந்ததும், எனக்கு கொஞ்சமும், நண்பனுக்கு சற்று அதிகப்படியான நனவிடைதோய்தலும் அவரால் இருந்ததும் இந்த விலையுயர்த்தலுக்கு முக்கிய காரணமெலாம். அன்றைய பொழுதில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பல தோழர்/தோழிகளுடன் ஆறுதலாகப் பேச ஒரு சந்தர்ப்பமும் வாய்த்திருந்தது. சென்ற வருடம் ஈழத்திற்குச் சென்ற பத்து பேர் கொண்ட குழுவில் முக்கால்வாசிப்பேரை மீண்டும் அங்கே கண்டது அருமையான அனுபவம்.

helpingposter

இரண்டாவது நடைபவனி ஒரு பூங்காவிலிருந்து ஆரம்பித்து ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் வரை நீண்டு முடிந்திருந்தது. அந்த நடைபவனியின்போதே பத்மநாப ஜயரின் சந்திப்பு/மொழிபெயர்ப்பு பட்டறை நடந்ததால் என்னால் முழுமையாய் பங்குபெறமுடியவில்லை. ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளில் கொஞ்சம் ஈடுபடமுடிந்தது. முக்கியபணிகளை இரண்டு பெண்களே எடுத்து நடத்தியிருந்ததனர். தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவழித்து அருமையான நடைபவனியை நடத்திக்காட்டிய அந்தத் தோழியரும் அவர்களோடு தோள் கொடுத்த அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள். மூன்று நடைபவனிகளும் எந்தக் குழப்பமோ, பிறருக்குத் தொந்தரவோ இல்லாது நடந்தேறியது குறிப்பிடவேண்டியது. முதலாவது நடைபவனியில் 12,000 டொலர்களும், மூன்றாவது நடைபவனியில் 13,000 டொலர்களும் சேகரிக்கப்பட்டிருந்தாய் நான் அறிந்தேன். இரண்டாவது நடைபவனியில் சேகரிக்கப்பட்ட நிதியினளவு தெரியவில்லை. இந்த நிதி ஈழத்திற்கு ஒழுங்காய்ப் போய்ச்சேர்ந்து அங்கு ட்சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள் சிலவற்றையாவது நிவர்த்தி செய்தால்தான் இங்கு கடுமையாக உழைத்தவர்களின் உழைப்பு மேன்மைப்படுத்தப்பட்டதாக இருக்கும். TEDDOR அமைப்பு இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும், சில திட்டங்களுக்கான முன்வரைவுகள் ஏற்கனவே பொதுப்பார்வைக்கு இங்கே வைக்கப்பட்டிருந்தாயும் நினைவு.

(ஆ)பத்மநாப ஜயருக்கு இயல் விருது

iyrer3

ஞாயிற்றுக்கிழமை இரவு பத்மநாப ஜயருக்கு இயல் விருது விழா வழங்கும் வைபவம் நடந்தேறியது. ஜயரினதும், 'அசை' சிவதாசனினது உரைகள் நன்றாக இருந்தன. பத்மநாப ஜயர் இன்றைய தமிழ் இல்க்கிய உலகத்தில் நடப்பது என்னவென்று up-to-date யாய் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. பத்மநாப ஜயர் குறித்து, மு.நித்தியானந்தனால் (?) எடுக்கப்பட்ட ஒரு விவரணப்படமும் ஒளிபரப்பட்டிருந்தது. பத்மநாப ஜயருக்கு இந்த விருதால் பெரிதாய் ஒரு பிரயோசனமும் இல்லையென்றாலும், இன்னும் தமிழுக்காய் உழைக்க அவருக்கு இது ஒரு உந்துசக்தியாக அமையக்கூடும். ஆக்ககுறைந்து புதிய நண்பர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பாவது அவருக்குக் கிடைத்திருக்கும். தான் ஒருவித திசையில் இலக்கிய உலகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன் என்றால், தான் கால்வைக்க் முடியாத இன்னொரு திசையில் சோபாசக்தி, சுகன், கற்சுறா போன்றவர்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள். எனவே ஈழத்து/புலம்பெயர் இலக்கியம் என்பது இப்படியான பல்வேறு போக்குகளால்தான் முழுமைபெறுமே தவிர, தன்னால் மட்டும் ஈழத்து/புலம்பெயர் இலக்கியம் விகாசிக்காது என்று ஜயர் புரிந்துவைத்திருப்பதுதான், அவரோடு பழகிய சில நாள்களில் எனக்கு முக்கிய அவதானமாய்ப்பட்டது.

வசந்தம்

Monday, June 13, 2005

ஒரு ரோஜாவும் கொடுத்துச் சிவந்த விரல்களும்
rose3

June 13/05

இரண்டு சஞ்சிகைகள்

Wednesday, June 08, 2005

அற்றம்

Attam

'அற்றம்' இதழ் பெண்களை ஆசிரியர்களாகக் (கஜானி குமார், கெளசல்யா, தான்யா, பிரதீபா.தி) கொண்டு பெண்களின் ஆக்கங்களை மட்டும் கொண்டு முதல் இதழ் வெளிவந்துள்ளது. சந்திரமதி கந்தசாமி, செல்வநாயகி, தான்யா, நிருபா, பொடிச்சி என்று நமக்கு ஏற்கனவே வலைப்பதிவுகளில் அறிமுகமான பலர் எழுதியிருக்கின்றனர். 'பெண்ணியத்தை அறைகூவி விற்பதற்கல்ல. எழுத்தில் ஆர்வத்துடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமையுடன், யாவருக்கும் பொதுவான இதழாகவே அற்றம் தொடரும்' என்று ஆசிரியத்துவத்தில் கூறுகின்றனர். மற்றும், 'பெண்கள் என்றால் கவிதை மட்டும் எழுதுபவர்களாகவே பொதுவாக நோக்கப்படுகின்றது. மாறாக, அற்றம், அவரவர் தேடலனுபவத்துக்குட்பட்ட பிற இலக்கிய வடிவங்களை பரிசீலிப்பதற்குரிய
தளம்'
என்ற ஆசிரியத்துவத்தில் கூறப்பட்டமாதிரி, கவிதை தவிர்த்தும் பிற விடயங்கள் எழுதிய பெண்களின் குரல்கள் இந்த இதழில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 'ஒரினச் சேர்க்கையாளர்களைப் புரிந்துகொள்ளல் பற்றி...' பற்றி பொடிச்சி எழுதியுள்ள கட்டுரையும், 'அனுபவம், பகிர்வு, எதிர்வுறல்' என்ற அதீதாவின் ஆளுமை மிக்கப் பெண்கள் பற்றிய கட்டுரையும், 'இருட்டைக் கிழிக்கும் ஒரு ஒளிக்கீற்று'' என்ற செல்வநாயகியின் Black திரைப்படம் பற்றிய விமர்சனமும் முக்கியமானவை. 'அட!' என்ற தலைப்பில் பெண் படைப்பாளிகளின் பெண் விடுதலை, பெண் உடல் குறித்த பல்வேறு இதழ்களில் வந்த பெண் பார்வைகளைத் தொகுத்து எழுதியிருப்பது நன்றாக இருக்கின்றது. அவ்வாறே பெண்கள் எழுதிய புத்தகங்கள் பற்றிய சிறு விமர்சனக்குறிப்புக்களும் நல்லதொரு அறிமுகத்தை வாசிப்பவரிடையே தருகின்றது.

பெண் உடலை மட்டுமே பெண்ணாகப் பார்க்கும் பார்வையை தான்யாவின் கவிதையொன்று வலியுடன் சொல்ல விளைகின்றது. 'வெறி கொண்ட ஆன்மா/ இன்பத்தைத் தூண்டும்/ எல்லா உறுப்புக்களையும்/ அறுத்தெறிய முனைகின்றது/' என்பதின் பின்னால் பொதிந்துள்ள வடுவை ஆண்களால் அவ்வளவு இலகுவில் உணர்ந்துகொள்ள முடியாது. இந்த இதழில் உள்ள சில படைப்புக்கள் சில ஏற்கனவே வலைப்பதிவுகளிலும் வந்திருக்கின்றது என்பதால் சிலவேளைகளில் அவற்றை இரண்டாம் முறை வாசிப்பது போலத்தோன்றுகின்றது. ஆசிரியர்கள் இவ்வாறான கட்டுரைகள் அச்சிலும் பரவலான வாசிப்புப் பெறவேண்டும் என்பதற்காய் சேர்த்திருக்கக்கூடுமென்றாலும், வலைப்பதிவுகள் தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு சிலசமயம் இது அலுப்பைத் தரலாம். இனித் தொடர்ந்து வரும் இதழ்களில் ஏற்கனவே வலைப்பதிவுகளில் பிரசுரமான ஆக்கங்களை இயன்றளவு தவிர்த்து வலைப்பதிபவர்களிடமே புது ஆக்கங்களை அற்றம் குழு வாங்கிப்பிரசுரித்தால் நன்றாக இருக்கும். மற்றபடி, முதலாம் இதழ் என்றவகையில் 'அற்றம்' மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றது. தொடர்ச்சியான இடைவெளிகளில் தொடர்ந்து அற்றம் பல்வேறு தளங்களில், எழுத ஊடக வாய்ப்பில்லாத பெண்களை முதன்மைப்படுத்தி வெளிவரவேண்டும். கனடாவிலிருந்து பெண்கள் தனித்துவமாக ஒரு சஞ்சிகையைக் கொண்டுவருகின்றார்கள் என்றவகையில் என்னளவில் மிகுந்த மகிழ்ச்சியே.

'அற்றம்' இதழ் குறித்த தொடர்பாடலுக்கு: attamm@gmail.com


மற்றது


File0002

கற்சுறாவையும், ஜெபாவையும் ஆசிரியர்களாகக் கொண்டு 2004 ஆண்டில் முதல் இதழ் வெளிவந்துள்ளது. 'வன்முறை அரசியலைக் காவி நிற்கின்றது ஈழத்து இலக்கியம். இந்தியப் பார்ப்பனீய அரசியலுடன் மெல்ல மெல்லக் கரைகின்றது புலம்பெயர் இலக்கியம். எழுத்ப்படும் வரலாறுகளோ எழுதப்படுவோரது வரலாறாக மட்டும் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வார்த்தைகள் எங்கிலும் மிக நுணுக்கமாய்ப் புதைந்து கிடக்கிறது யாழ்ப்பாண மையவாதம். அதன் தொடரோட்டமாய் புகலிடத்திலும் கொண்டாடப்படுகின்றது சமயமும் சாதீயமும்' என்று இந்த இதழ் ஆசிரியத்துவத்தில் சொல்வதை அவ்வளவு இலகுவில் புறக்கணிக்க முடியாது போலத்தான் தோன்றுகின்றது. இந்த இதழில், 'உடல் வதையும் உள வதையும்: கனடியத் தமிழ்ச் சூழலில் பெண்கள்' என்ற தலைப்பில் கற்சுறா, உளநோய் ஆலோசகராக பணியாற்றும் பார்வதி கந்தசாமியுடன் உரையாடியாடியதைப் பதிவாக்கியது மிக முக்கியமானதொன்று. இந்த உரையாடலை வாசித்துப்பார்க்கும்போது கனடாவிலும் எவ்வளவு தூரத்துக்கு பெண்கள் உடல்/உளரீதியாக ஒடுக்கப்படுகின்றார்கள் என்பது தெரியவரும். அசுரா எழுதியுள்ள, 'மட்டக்களப்புத் தமிழகம்: நூலின் வரலாற்றுப் பதிவுகளும் அதன் விளைவுகளும்' மட்டக்களப்பு பற்றிய விரிவான அறிதலை பல்வேறு பின் தளங்களினூடு தருகின்றது. பதிலீடுகள்: தமிழ்த் திரைப்படத்தை முன்வைத்து நடிகர் பார்வையாளர் உறவு' என்று எஸ்.வி.ர·பேல் எழுதியுள்ள கட்டுரையில் வரும் ஒரு பகுதியான, 'கார்ட்டூனும் ரஜனிகாந்தும்: ஒற்றுமை ஒப்புநோக்கு' கட்டாயம் வாசிக்கவேண்டியதும் சிந்திக்கவேண்டியதுமான பகுதி. பெண்கள் பருவமடையும்போது ஏற்படும் உளவியல் சிக்கல்கள், சமூகம் கொடுக்கும் அழுத்தங்கள் (உ+ம் அக்கா இருக்கும்போது தங்கை பருவமடைந்தால் அந்தக்குடும்பம்/பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்) பற்றி ஜெபா எழுதியுள்ள கட்டுரை முக்கியமானது. மிக இயல்பான நடையோட்டத்தில் ஊரில் நடந்தவற்றை ஜெபா பதிவாக்கியுள்ளார். குளிக்கும்போது மதகிலிருந்து ஒளித்திருந்து பார்க்கும் பெடியன்களின் காமப்பார்வைகளிலிருந்து தப்புவது, இரவு படுக்கும்போது நல்ல கால்முட்ட உடுப்புக்கள் போட்டுப் படுப்பது, வீட்டில் தனியாக இருக்கும்போது நல்ல உடுப்புப்போட்டுக் கொண்டு நிற்காதிருக்க கட்டளையிடப்படுவது என்று ஜெபாவின் கட்டுரைகளில் வரும் பெண்கள், ஆண்களின் வக்கிரங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனையோ செய்கின்றார்கள். இவற்றையெல்லாம் மீறிக்கூட, யாரோ ஒரு பெண் அவளின் தகப்பனினாலேயே கொடுமையான பாலியல் வன்முறைக்குட்படுத்தப்ப்பட்டு கழுத்தில் தூக்குமாட்டிச் செத்துப்போகவும் செய்கின்றாள் என்பது எவ்வளவு கொடுமையான விடயம்.

'கற்கால இருளில் அறைபடும்
குளம்பொலி வரிசை
பின்னெதிர் ஓடி உறையும்
கருங்குருதிப் பனிமை.
தெளிவுறாப் புலனில்
மாறி எதிர்வுறும் சூல்
விடுக்கெனப் பரவி வெளித்தள்ளும்
பெண்பருவச் சிறகின் முதல் ஒலி'
என்ற கற்சுறாவின் (?) (எனது வாசிப்பில்) பெண் பருவமடைவதைச் சொல்லும் இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்தாலும், அதற்கப்பாலுள்ள பெண்களின் துயரை ஆண்களால் எவ்வளவு தூரத்துக்கு உணரமுடியும் என்பதுவும் யோசிக்கவேண்டிய விடயமே. முழுத்தொகுப்பாய் பார்க்கும்போது, 'மற்றது' நல்லதொரு சஞ்சிகையாகத் தெரிகின்றது. இதுவும் 'அற்றம்' போலத் தொடர்ச்சியாக வந்து பரவலான தளங்களில் உரையாடலை நிகழ்த்தவேண்டும்.

'மற்றது' இதழ் குறித்த தொடர்பாடலுக்கு: matrathu@hotmail.com

பொன்மாலைப்பொழுது: ரொரண்ரோவில் வலைப்பதிவர் சந்திப்பு

Monday, June 06, 2005

சென்ற சனிக்கிழமை அந்தி மாலை மயக்கத்தில் ரொரண்ரோவில் வலைப்பதிவர்கள் சந்திந்துக்கொண்டார்கள். இதுநாள் வரை காய்க்காத ஆப்பிள் மரங்களில் ஆப்பிள்கள் காய்க்கவும், புற்களிடேயே இருந்து அழகான ரோசாப்பூக்கள் முகிழ்ந்ததுமான அதிசயம், நாம் அந்தப் பூங்காவுக்குள் நுழைந்தசமயம் நிகழ்ந்தது. மதி கந்தசாமி, சுந்தரவடிவேல், பாலாஜி-பாரி,வெங்கட், கறுப்பி, நற்கீரன், கிஸோக்கண்ணன், பிரதீபா, தான்யா, சக்தி, மற்றும் எதற்குமே இலாயக்கில்லாத டிசே என்று வலைப்பதிபவர்களும், தமக்கென்று சொந்தக் குடில் இல்லாவிட்டாலும், தொடர்ந்த வலைப்பதிவுகள் வாசிப்புப் பழக்கமுள்ள வசந்தி ராஜா, ரூபன், சத்தியா, ஜானகி மற்றும் மாசிலன் போன்றவர்களும் கலந்துகொண்டு அன்றைய மாலையை பொன்மாலைப் பொழுதாக்கினர்.

Maasi

மதியை ஒரு பாடல் பாடும்போது நாம் வேண்டிக் கேட்டபோது, அவர் 'கத்தரி தோட்டத்து வெருளியை' (சமர்ப்பணம் செர்ரிப்பூவுக்கென்று கூறி) ஒரு மேசையின் மீது ஏறிநின்று பாடத்தொடங்கியதும், அதைச் சகிக்காது அமைதியாக உருவாக வந்திருந்த சக்தி வீட்டிற்கு போகப்போவதாக கோபத்துடன் கூறிப் புறப்பட்டுவிட்டார். இது போதாதென்று பாலாஜி-பாரியை தன்னைப்பற்றி அறிமுகஞ்செய்யக் கூறிய சமயத்தில், சூரியனைக் கண்டுவிட்டு, ஆக்கிமீடிஸ் யுரேகா யுரேகா என்று அலறித்திரிந்தமாதிரி தன்னை அறிமுகஞ்செய்யாமல் சூரியனின் பின் ஓடித்திரிந்தது பொறுக்காமல் வெங்கட்டும் சிலமணித்துளிகளில் புத்தகவெளியீட்டு விழா உரைக்காக கிளம்பிவிட்டார். எனதும் கிஸோவினதும், 'ஆக்களைத் துரத்தும்' திட்டத்தை, மதியும், பாலாஜியும் களவெடுத்துவிட்டதை வன்மையாக நானும் கிஸோவும் கண்டிக்கையில், தங்கள்பாட்டில் பறந்துகொண்டிருத சில நாரைகள் மயக்கமுற்றுத் தரையில் விழுந்த அசம்பாவிதம் நடந்தது.

P1010040

வந்திருந்த வலைப்பதிவு வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த/தாங்கள் விரும்பி வாசிக்கும் வலைப்பதிவுகளைப் பகிர்ந்துகொண்டனர். சத்தியாவுக்கு ரோசாவசந்தினது பதிவுகளும், பெயரிலி எடுத்துப்போடும் படங்களும் பிடித்திருந்ததாகவும், ரூபன் தான் கறுப்பி, பொடிச்சி போன்றவர்களின் பதிவுகளை விரும்பிவாசிப்பதாயும் கூறியிருந்தார்கள். வலைப்பதியும் நண்பர்கள் தாம் எப்படி வலைப்பதிவர் உலகத்திற்கு வந்தது என்பது குறித்தும், தமக்குப் பிடித்த வலைப்பதிவுகள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர். சுந்தரவடிவேல் அநியாயத்திற்கு மிக 'அமைதியாக' இருந்தது எங்கள் அனைவருக்கும் மிகவும் வியப்பாயிருந்தது. ஒரு வார்த்தை வாய்திறந்து பேசக்கூட மிகவும் யோசித்துத்தான் பேசினார். உதாரணமாய் 'ஆம்' என்று பதில் சொல்வதைக் கூட, தனியே 'ம்' என்றுதான் கூறி முடித்தார். இது ஏன் என்று நான் வினாவியபோது, ஆம் என்று பதில் சொல்லும்போது வாய் பெரிதாகவதாவும், ம் என்னும்போது உதடுகளைத் திறக்கவே தேவையில்லை என்று மிக நுட்பமாக பதிலிறுத்தார். மேலும் 'ம்' மைவிட இன்னொரு சிறு சொல் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபடப்போவதாயும் இதனால் வலைப்பதிவுகளில் 'கடி'க்கும் மற்றும் 'கொறி'க்கும் நேரம் குறையப்போவதாயும் மிகவும் கவலைப்பட்டுக்கூறினார்.

kios1

வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் பெயரிலியின் பின்னூட்டம் இடும் வேகந்தான் மிகவும் வியப்பான செய்தியாக இருந்தது. இதற்கு பாலாஜி, பெயரிலியின் டி.என்.ஏயுக்கும், திருமூலரின் டி.என்.ஏயுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கா என்று அண்மையில் போகத்தொடங்கிய பிரெஞ்சு வகுப்பில் ஆராயப்போவதாகவும் கூறியிருந்தார். நானும் எனது பங்குக்கு, கிஸோ செய்யும் காட்டுத்தீயை எப்படி விரைவாக அணைப்பது என்ற ஆராய்ச்சியைப் போல, பெயரிலி பின்னூட்டங்கள் எழுதும்போது அவரது கரங்களா, மூளையா விரைவில் தூண்டல்/துலங்கல் மாற்றங்களுக்கு உள்ளாகின்றது என்றதொரு thesis செய்வதாக முடிவெடுத்துள்ளேன்.

P1010065

சுந்தரவடிவேல், கறுப்பி, மதி போன்றவர்கள் சந்திப்பு முடிவில் பாரிற்குக் கூட்டிச்செல்லும்படி கேட்டபோது நான் இந்த மாதம் முழுதும், செவ்வாய் தோசத்தைப் போக்குவதன் நிமிர்த்தம் மாமிசம், மது தொடமுடியாது என்பதை ஆழ்ந்த சென்டிமென்டுடன் சொன்னபோது அனைவரின் கண்களிலும் கண்ணீர் அருவியாக்கொட்டியது என்று சொல்லவும் வேண்டுமா? ஒரு மனிதனுக்கு நல்ல 'வாழ்வு' கிடைக்கும் நிமிர்த்தம், அனைவரும் பிறகு தமிழ் உணவகத்துச் சென்று இரண்டு நாற்காலிகளை நமது hotஆவி மற்றும் 'கூழ்'ஆவிக்கு ஒதுக்கி உணவருந்தினோம். hotஆவியின் உணவை மதியும், 'கூழ்'ஆவியின் உணவை நானும் இரசித்துச் சுவைத்தோம்.

blog1

இந்தச் சந்திப்பில் நாயகனாகத் திகழ்ந்தவர் 'ஓ வண்டிகார' புகழ் மாசிலன். அவர் அந்தப் பூங்காத்திடலையை கலகலப்பாக்கியபடி, எம் அனைவருடனும் இலகுவில் இணைந்துகொண்டார். அப்பாக்களுக்கு ஆப்பு வைக்க என்று மாசிலன், நித்திலன் போன்றோர் இப்போதிருந்தே துடிப்பாக இருப்பது என்னைப் பொறுத்தவரையில் மிகுந்த சந்தோசமான விடயமே. அடுத்த நாள் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு குற்றாலத்தைப் போல் குளிக்கச்சென்ற சுந்தரவடிவேலும், பாலாஜியும் ஏன் தண்ணீர் இப்படிச் சுடுகின்றது என்று என்னிடம் வினாவியபோது,இது கார்த்திக்கின் சதிவேலை என்றும் அவர்தான் hotஆவியாக நயாகராவில் இரண்டறக்கலந்து உங்களைக் குளிக்கவிடாது தடுக்கின்றார் என்றும் கூறினேன்.

kiso2

அட இதனால் இவர்கள் இருவரும் வருத்தமுறுவார்கள் என்று பார்த்தால், பத்துவருடங்களாக குளிக்காதிருந்த தம்மை மேலும் பத்து வருடங்கள் குளிக்காமற்செய்த கார்த்திக்கு நன்றி கூறியபடி வழமைபோல ஒரு பெரிய போத்தல் cologneஐ விசிறியடித்தபோது ரொரண்ரோ மக்கள் அனைவரும் மயக்கமடைந்து தூக்கத்திற்குப் போயிருந்தனர்.

ரொரண்ரோவில் நடந்த சந்திப்பில் நடந்த நல்ல விடயங்களைப் பற்றி மட்டுமே என்னால் கூறமுடிந்தது. இதன் எதிர்மறையான விடயங்களையும், நான் விட்டுச்சென்ற இடைவெளிகளையும் மற்ற நண்பர்கள் இனிவரும் நாள்களில் நிரப்பிக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.