கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

குறிஞ்சிப்பூ

Thursday, August 31, 2006

பயணஞ் செய்தலை ஓடுகின்ற ஆற்றுக்கு உவமிக்கலாம் போலத் தோன்றுகின்றது. இப்போது ஓடுகின்ற ஆறு முன்னர் ஓடியது போன்றதல்ல என்பது போல ஒவ்வொரு பயணமும் புதுப்புது அனுபவங்களை, சிலிர்ப்புக்களை தந்துகொண்டேயிருக்கின்றன. ஒரே நேர்கோட்டில் நகர்ந்துகொண்டிருக்கும் நாளாந்த வாழ்வை இடைவெட்டி ஒழுங்கைக் குலைக்கச் செய்கின்ற பயணங்கள் எப்போதும் சுவாரசியந்தரக்கூடியனதான். வீட்டில், வீட்டின் அறைகளுக்குள் மட்டுமே மர்மச்சுழிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன எனக்கற்பிதம் செய்து, பொழுதை வெயிலோடு பந்தென எறிந்து அலுப்புடன் ஆட்டம் ஆடுகின்றவனுக்கு வெளியே கால்களை முன்னகர்த்தும் எந்த அனுபவமும் அலுக்கப் போவதுமில்லை.

வாழ்வை ஒரு கொண்டாடும் நகர் அது. தம் பண்பாடுகளை கலாச்சாரங்களை செழிப்புடன் வைத்திருக்க விரும்புவர்கள் எனினும் தமது நம்பிக்கைகளை எவர் மீதும் திணிக்க விரும்புவதில்லை அந்நகர் வாழ் மக்கள். தேவாலயங்கள், ஆடுகின்ற கிளப்புக்கள், நிர்வாண விடுதிகள், தெருவில் சிகரெட் பிடித்தபடி,ஒளிரும் தோள்பைகளை தாங்கியபடி மனிதநாகரிகத்தின் 'ஆதித் தொழில்' செய்யும் பெண்கள், ஒரினப்பாலாருக்கான் கேளிக்கை அரங்குகள், 'பெண்களுக்கு மட்டும் அனுமதி'யென அழைப்புவிடுக்கும் விடுதிகள் எல்லாமே/எல்லோருமே நிரம்பக் கிடைக்கும் உங்கள் நம்பிக்கைக்களுக்கேற்ப, நீங்கள் வரிந்துகொண்ட வாழ்வின் பாதைக்கேற்ப எதையேனும் ஒன்றைத் தெரிவுசெய்யலாம்; இல்லையெனில் விலத்திப்போகலாம். ஆனால் எவரும் எவரையும் மிரட்டமுடியாது; எவரும் எவர் மீதும் ஏறி மிதித்துக்கொண்டு போய்விடவும் முடியாது.

e4

ஆமாம் அந்த ஆண்டு
மலர்கள் நிறையப் பூத்திருந்த ஓர் ஆண்டு
கண்ணுக்கு மைதீட்டிய பலபெண்கள்
அந்த ஆண்டில்
வீதிகளில் உலவினர் தேர்போல
(ப 10)


ஊரில் இருந்தவரை பழமை வாய்ந்த கோயில்களின் மீது ஈர்ப்பிருந்தது. வருகின்ற வருமானத்துக்கேற்ப வர்ணங்களைப் பூசி, இன்னுமின்னும் மனிதர்களை வர்ண'ஜிகினா'க்காட்டி உள்ளிழுக்கும் கோயில்களைவிட, பழமை ஊறிய, பாசி படிந்த, சிலைகளின் செப்பு துருவேறிய தலங்கள் மீது அதிக ஈர்ப்புண்டு. அதுவரை சாதாரணமாய் தெரிந்த பெண்கள் எல்லாம் கோயிலுக்கு வரும்போது விபரித்துச் சொல்லமுடியாத உணர்வுகளை மனதுக்குள் கிளர்த்திக்கொண்டிருக்கின்றார்கள். . 'உன் கடைக்கண் பார்வை பெற்றால்...' எல்லாவற்றையும் சாதித்துவிடுவேன் என்று பாரதி எழுதும்போது அவன் கோயிலொன்றுக்கு அருகிலிருந்திருக்கவும் கூடும். சனநெரிசல்களிடையே,மூலஸ்தானக் கடவுளைக் காண்பது எவ்வளவு கடினமானதோ, அவவளவு கடினமானது தோழிகளுடன், பெற்றோருடன், சகோதரகளுடன் வரும் ஒரு பெண்ணுடன் கோயிலில் வைத்து இயல்பாய் உரையாடுவதும். எனினும் இத்தகைய இறுக்கங்களிடையேயும் பார்வைகள் பரிமாறப்படுகின்றன், மவுன பாசைகள் கற்றலையில் அதிர்வெண்ணாகின்றன, திருநீறு சந்தனம் பிடித்தமான கைகளுக்கு மாறுகின்றன. இவ்வாறான பொழுதுகளில் மனம் மிகச் சாந்தியடைந்து உலகம் தழுவிய அன்பு பெருக்கெடுத்து ஓடவும் தொடங்குகின்றது. கடவுளர்களும் தமது இருப்பிறகான ஒரே நோககம் -இனங்களை மொழிகளை மதங்களைத்தாண்டிய - இவ்வாறான பொழுதுகளை உருவாக்குதலேயென மனம் நிறைந்து புன்னகைக்கக்கூடும்.

காலம் செல்லச் செல்ல கோயில்கள் மீதும் கடவுளர் மீதும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்துபோய் சித்தர்களோடும் யோகிகளோடும் இப்போது எஞ்சி நிற்கின்றது. சிறுவயதில் உனக்குப் பிடித்தமான கார்த்திகேயன் பின்பான பொழுதுகளில் உலர்ந்துவிட்டான். என்னைப் போலன்றி, உனக்குள் கடவுளின் மரணம் விரைவில் நிகழ்ந்தமைக்கு, உனது பரந்த வாசிப்பும், இடதுசாரிக் குடும்ப பின்புலமும் ஒரு காரணமாய் இருக்கக்கூடும். குறிஞ்சி மலையில் குமரன் புன்னகை ததும்ப வீற்றிருக்கின்றான். அவனைப் பார்க்க எல்லாப் பருவங்களிலும் மலையேறிப் போய்விடமுடியாது. பனிக்காலங்களில் -மனிதர்களைப்போல-குளிர் தாங்காது தன் தலம் நீங்கி மலையடிவாரம் சென்றுவிடுவான் போலும். கோயிலுக்குள் போக விரும்புவர்களை கோயிலுக்குள் போகச் சொல்லிவிட்டு, காட்டை ஊடுருவி மலையடிவார ஆச்சிரமத்தை அடையும் ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்குகின்றோம். கோயிலின் சாம்பிராணிப் புகை நம்மைப் பின் தொடர்கின்றது போலும்.

e2

உனக்குத் தெரியுமா? தமிழக நிலப்பரப்பிலிருந்த் மனிதர்களின் ஆதிக்கடவுளாய் முருகன் இருந்திருக்கின்றான், அவனுக்கு அப்போது வள்ளி என்ற குறத்தி மட்டுமே துணையாக இருந்திருக்கின்றாள்; பிறகு இந் நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்தவர்களால் முருகன் அவர்களினதும் கடவுள் ஆக்கப்பட்டு தெய்வானை என்ற இன்னொரு துணையும் உருவாக்கப்பட்டார் என்று எங்கையோ வாசித்திருக்கின்றேன் என்கின்றேன். எங்கே போனாலும் உன் குதர்க்கப் புத்தி மாறாதாக்கும் என்று ஒரு முறைப்புப் பார்வை பார்த்துவிட்டு மலையினிலிருந்து வெண்பஞ்சைப் போல இறங்கிக்கொண்டிருக்கின்றாய். இப்போது மழை மெல்லியதாய் தூறத் தொடங்குகின்றது. மலையில் மழையில் கருஞ்சாம்பர் வானப்பின்னணியில் பசுமை விரிந்த நிலஙகளினுடாக நடந்து செல்லுவது மிகவும் இதமானது. தியான மணடபத்துடன், மரத்தால் செய்யப்பட்ட சிறு கோயில்கள், தங்குமிட விடுதிகளுடன் அந்த ஆச்சிரமம் தென்படத் தொடங்குகின்றது.

ஒவ்வொரு நாளும் எழுதலாம்
வெவ்வேறு விதமாக இந்த மழையை
முகில் கவிந்திருந்தபோது
அண்ணாந்து பார்த்து
வானம் விழப்போகுதென்று
நீ சொன்னபோது
இந்தப் பத்தாவது பாடல் பிறந்தது
மழைபற்றிய
பதினொராவது பாடலுக்கான ஆயத்தங்களுடன்
(ப 35)


தியானம் பழகுகின்றவர்களின் நிசப்தத்தினூடே இவ்வழகிய பூந்தோட்டங்களில் அலைந்து திரிவது இதுவரை அனுபவித்திராத அனுபவம். நெற்றியில் விழுந்த மழையின் துளியொன்று இறங்கி உன் உதட்டில் மினுங்குகையில் எமக்கான காலம் உறைகின்றது. நானும் நீயும் சேர்ந்து நனைவதற்காய் வருடங்களாய் காத்திருந்த பெருமழை இப்போது பொழியத் தொடங்குகின்றது.


கவிதைகள்: சோலைக்கிளியின் 'என்ன செப்பங்கா நீ' யிலிருந்து

2 comments:

ஒரு பொடிச்சி said...

//ஒளிரும் தோள்பைகளை தாங்கியபடி மனிதநாகரிகத்தின் 'ஆதித் தொழில்' செய்யும் பெண்கள்,//
பெண்கள் செய்யும் மனிதநாகரிகத்தின் 'ஆதித் தொழில்'எது?

9/01/2006 10:08:00 PM
இளங்கோ-டிசே said...

பரத்தையர்கள் ஜந்திணைகளில் ஏதோ ஒரு நிலத்தின் ஒழுக்கமாகவே வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அதை விட, பல படைப்புக்கள்/படைப்பாளிகளின் சொல்லாடல்களில் 'ஆதித்தொழில்' என்று அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே தான் கண்டவற்றைக் காட்சிப்படுத்த விரும்பிய இந்தப்பதிவில் அந்தச் சொல்லையே பயன்படுத்தியிருந்ததோடு,'ஆதித்தொழில்' என்று அடைப்புக்குள் போட்டதுகூட -அப்படியா?- என்று வினாவதன் நோக்கமே.
இன்று அதனோடு சம்பந்தப்பட்ட சிலராலயே இதற்கு மற்றத் தொழில்களைப்போல ஒரு தொழிலுக்குரிய அங்கீகாரம் வழங்கும்படி கோரிக்கைகள் வைக்கும்போது -தொழில்- என்று பாவிப்பதில் தவறேதுமில்லை என்றே நினைக்கின்றேன். மற்றும்படி இது குறித்த அரசியல் பற்றி நிரம்பவே பேசலாம்.

9/03/2006 12:36:00 AM