கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

*ச‌ந்தோச‌ம்; ஆனால் யாருக்கும் தெரியாம‌ல்.

Friday, January 29, 2010

1.
ந‌ம்மைப் போல‌ ச‌க‌ ம‌னித‌ரையும் நேசித்த‌ல் என்ப‌து அற்புத‌மான‌ ஒரு விட‌ய‌ம். ந‌ம‌க்குள்ள‌ எல்லாச் சுத‌ந்திர‌ங்க‌ளும் பிற‌ருக்கும் வேண்டும் என்று அவாவி நிற்ப‌து போல்,. ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் த‌னிம‌னித‌ உரிமைக‌ள் பாதிக்க‌ப்ப‌டும்போது ந‌ம‌தான உரிமைக‌ள் பாதிக்க‌ப்ப‌டுகின்ற‌ என்றரீதியில் குர‌ல்கொடுக்கின்ற‌வ‌ர்க‌ள்தான் உண்மையான‌ ம‌னிதாபிமானிக‌ள். ஆனால் உல‌கம் இவ்வாறு அழ‌காய், எல்லோரும் ச‌ம‌ உரிமைக‌ளுட‌ன் வாழ்கின்ற‌ ஒரு நில‌ப்ப‌ர‌ப்பாய் விரிந்திருக்க‌வில்லை என்ப‌துதான் ந‌ம் கால‌த்தைய‌ சோக‌ம். மைய‌வோட்ட‌த்திலிருந்து வில‌க்கி விளிம்புக‌ளாக்க‌ப்ப‌ட்டு, ப‌ல்வேறுப‌ட்ட‌ ம‌க்க‌ள் திர‌ள் இருப்ப‌தைப் பார்த்துக்கொண்டு நாம் 'இவ்வுல‌க‌ம் மிக‌ அழ‌கான‌து' என்று கூறுவ‌து ந‌ம்மை நாமே ஏமாற்றுவ‌துதான்.

புல‌ம்பெய‌ர் தேச‌ங்க‌ளில் ந‌ம‌து நிற‌ம்/நாம் பின்ப‌ற்றும் ம‌த‌ம்/ந‌ம் க‌லாசார‌ப் பின்புல‌ங்க‌ள் என்ற‌ ப‌ல்வேறு வ‌கைக‌ளை முன்வைத்து ஒடுக்க‌ப்ப‌டுகின்றோம் என்று உண‌ர்கின்ற‌ நாமே எம் ச‌மூக‌த்திலேயே சாதி, பாலின‌ம், பிர‌தேச‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றை முன்வைத்து ப‌ல‌ரை விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளாக்கி வைத்திருக்கின்றோம். இது குறித்து சிறிதும் அவ‌மான‌ப்ப‌டாது பிற‌ரை குற்ற‌ஞ்சாட்டுவ‌தில் ம‌ட்டும் கால‌ங்கால‌மாக‌ ந‌ம‌து த‌மிழ‌ர் 'பெருமை'க‌ளைப் ப‌றைசாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

'ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌வ‌ர்க‌ளின் போராட்ட‌ங்க‌ள் ஒருபோதும் முடிவ‌தில்லை'என்ற‌ரீதியில் ப‌ன்முக‌வெளியில் ட‌்ன்ஸ்ர‌னின் உரை தொட‌ங்கிய‌து. டன்ஸ்ர‌ன் த‌ன்னை வெளிப்ப‌டையாக‌ ஓரின‌ப்பாலின‌ராக‌(gay) அறிவித்த‌ ஒருவ‌ர். 'சிநேகித‌ன்' என்ற‌ ஓரின‌ப்பாலின‌ருக்க்கான‌ ஓர் அமைப்பை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து ந‌ட‌த்திவ‌ருப‌வ‌ர். (எளிய‌ புரித‌லிற்காய் நான் இங்கே ஓரின‌ப்பாலின‌ர் அமைப்பு என்று குறிப்பிட்டாலும் அவ‌ர்க‌ள் LGTTIQQ2S என்ற‌ வ‌கைக்குள் வ‌ரும் அனைவ‌ரையும் உள்ள‌ட‌க்குகின்ற‌ன‌ர் என்ப‌தைத் த‌ய‌வுசெய்து க‌வ‌ன‌த்திற் கொள்ளவும்).

நாம் விளிம்பு நிலையாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளாய் இருந்தாலன்றி, அவர்க‌ளின் ஒடுக்க‌ப்ப‌டும் வ‌லிக‌ளைப் ப‌ற்றியோ அத‌ற்கெதிரான‌ போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றியோ முழுதாய் விள‌ங்கிக்கொள்ள‌ முடியாது. ஆனால் அவ‌ர்க‌ள் பேசுவ‌த‌ற்கு வேண்டிய‌ வெளிக‌ளைத் திற‌ந்துவிடுவ‌தில்.., அவ‌ர்க‌ளை வெளிப்ப‌டையாக‌ பேச‌விடுவ‌தென.., ஆரோக்கிய‌மான‌ உரையாட‌ல்க‌ளைத் தொட‌ர்வ‌தில் அக்க‌றையாக‌ நாம் ப‌ங்குபெற‌முடியும். சாதி நிலையில் தான் ஒடுக்க‌ப்ப‌டுவ‌தை, ஒருவர் ஒரு பொதுவெளியில், ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌ணித்தியால‌ங்க‌ளில் த‌ன‌து முழுக்க‌தையையோ வ‌லியையோ/ த‌த்த‌ளிப்புக்க‌ளையோ கூறிவிடுவார் என்று எதிர்ப்பார்க்க‌முடியாது. முத‌லில் தான் அவ்வாறு உரையாடுவ‌தை -தானாய் அல்லாத பிற‌ர்- எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்ற‌ ப‌ய‌ங்க‌ள் விளிம்புநிலையின‌ருக்கு ஏற்ப‌டுவ‌தும், தாம் சொல்லும் நிகழ்வுக‌ளைக் கொண்டு பிற‌கு த‌ன்னை அடையாள‌ப்ப‌டுத்தி, த‌ம்மை மேலும் ஒடுக்குவ‌த‌ற்கு கார‌ணிக‌ளாக‌ இவைக‌ள் அமைய‌க்கூடும் என்ற‌ நினைப்பும் ஒருவ‌ருக்கு ஏற்ப‌டுத‌ல் இய‌ல்பான‌து. நியாய‌மான‌தும் கூட‌.

ஆக‌வே இவ்வாறு விளிம்புநிலையில் உள்ளவர்களின் வாழ்வை அறிந்துகொள்ள‌ அக்க‌றைகாட்டாத‌ ச‌மூக‌த்தில், த‌ன‌து அடையாள‌த்தை வெளிப்ப‌டையாக‌ அறிவித்து ஒருவ‌ர் பொதுவெளியில் உரையாட‌த் த‌யாராகுகின்றார் என்றால் அது கூட‌ மிக‌ப்பெரும் போராட்ட‌த்தின்பின் வ‌ந்திருக்கக்கூடிய‌து என்ப‌தை நாம் முத‌லில் விள‌ங்கிக்கொள்ள‌ வேண்டியிருக்கின்ற‌து. மேலும் ஒடுக்க‌ப்ப‌ட்டு ச‌மூக‌த்திலிருந்து வில‌த்தி வைக்க‌ப்ப‌டும் ஒருவர் தான் க‌ட‌ந்துவ‌ந்த‌ பாதை முழுதையும் பொதுவெளியில் வைக்கும் சாத்திய‌ங்க‌ளும் மிக‌க்குறைந்த‌தாக‌ இருக்கின்ற‌து என்ப‌தையும் நாம் நினைவில்கொள்ள‌ வேண்டும். இவ்வாறான‌ புரித‌ல்க‌ளுட‌னேயே நாம்  விளிம்புநிலையிலிருப்ப‌வ‌ர்க‌ளுட‌னான‌ எம‌து உரையாட‌ல்க‌ளைத் தொட‌ங்க‌வேண்டும். அவ்வாறில்லாது ந‌ம‌க்கு இருக்கும் 'வெளி' அனைத்தும் அவ‌ர்க‌ளுக்கும் இருக்கிற‌து என்று சிறுபிள்ளைத்த‌ன‌ங்க‌ளுட‌ன் உரையாட‌ல்க‌ளை ஆர‌ம்பித்தால் நாம் இன்னும்  அவர்களை ஒடுக்குப‌வ‌ராய் ஆகிவிடும் ஆப‌த்துக்களுண்டு.

2.
பிற‌ அம‌ர்வுக‌ளைப் போலன்றி -தாம் பேச‌ ச‌பையிலிருப்ப‌வ‌ர்க‌ளைச் செவிம‌டுக்க‌ச் செய்யாது- ச‌பையிலிருப்ப‌வ‌ர்க‌ளையும் ப‌ங்குபெற‌ச் செய்யும் நோக்குட‌ன் டன்ஸ‌ர‌ன் அம‌ர்வை மாற்றிய‌மைத்து வித்தியாச‌மாக‌ இருந்த‌து. மூன்று கேள்விக‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டு ஒவ்வொரு குழுவின‌ரின‌தும் ப‌தில்களை அறிந்து, அத‌ன் மூல‌ம் ஒரு க‌ல‌ந்துரையாட‌ல் உற்சாக‌மாய்த் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌து. இதுவே பொதுவெளியில்(த‌மிழ‌ர் ம‌த்தியில்) செய்யும் முத‌ல் அம‌ர்வு என்ப‌தால் எளிதான‌ கேள்விக‌ளை முன் வைத்திருக்கின்றோம் என்ற‌ன‌ர் ட‌ன்ஸ்ர‌னும் அவ‌ருட‌ன் வ‌ந்திருந்த‌ பிற‌ நண்பர்களும்..

முத‌ற்கேள்வியாக‌ Gay, Lesbian என்ப‌வ‌ற்றிற்கு த‌மிழில் எவ்வாறான‌ சொற்க‌ள‌ ப‌ய‌ன‌ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்று கேட்க‌ப்ப‌ட்ட‌து. சில‌ர் ஓரின‌ப்பாலின‌ர்/ த‌ற்பால் சேர்க்கையாள‌ர் என்றும் வேறு சில‌ர் ஆண் ஓரின‌ப்பாலார், பெண் ஓரின‌பாலார் என்றும் கூறினர். இன்னொரு குழு ஓரின‌ப்பாலினருக்கு எவ்வாறான வ‌சைச்சொற்க‌ள் நம் சமூகத்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்று அச்சொற்க‌ளையும் குறிப்பிட்டார்க‌ள். எங்க‌ள் குழுவில் இருந்த‌ ந‌ண்ப‌ரொருவ‌ர் த‌மிழ‌ர் ப‌ண்பாட்டில் ஆதிகால‌த்திலிருந்தே ஓரின‌ப்பால் இருந்து வ‌ந்த‌தென‌வும், ஆனால் ச‌ங்க‌ம் ம‌ருவிய‌ கால‌ங்க‌ளில் ம‌த‌ங்க‌ளின் ஆதிக்க‌த்தால் அவ‌ர்க‌ள் ஒடுக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என‌வும், ஆக‌வே ஓரின‌ப்பாலின‌ருக்குப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌ழைய‌ சொற்க‌ளை நாம் மீட்டெடுப்ப‌த‌ன் மூல‌ம் வ‌ர‌லாற்றை மீள‌க் க‌ண்டுபிடிப்ப‌தாய் இருக்குமென்ற‌ க‌ருத்தை முன்வைத்தார். மேலும் இன்றும் த‌மிழ‌க‌த்திலிருக்கும் (இந்தியா) ப‌ல‌ சிற்ப‌வேலைப்பாடுக‌ளில் த‌ற்பால்சேர்க்கை சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து முக்கிய‌ சாட்சிய‌ம் எனவும் சொன்னோம். அத்துடன் வ‌ர‌லாற்றிலிருந்து புழ‌ங்கிய‌ ஒரு சொல்லை எடுத்தாளும்போது 'இப்போதுதான் இந்த‌ மாதிரியான‌ உறவு/சேர்க்கை' என்று பாசாங்குகாட்டும் ம‌னித‌ர்க‌ளிற்கு உறுதியான‌ எதிர்வினை கொடுக்க‌ உக‌ந்த‌மாதிரியாக‌வும் இருக்கும் என்றும் கூறினோம்.

எல்லாக் குழுக்க‌ளின் க‌ருத்துக்க‌ளை தொகுத்து ட‌ன்ஸ்ர‌ன் த‌ன‌து சில‌ க‌ருத்துக்க‌ளையும் சேர்த்து LGTTIQQ2Sக்கு விரிவான‌ விள‌க்க‌ம் கூறியிருந்தார். தான் 90களில் அமைப்பாயிருக்கையில் LGBT ம‌ட்டுமே இருந்த‌தாக‌வும் இப்போது இன்னும் ப‌ல‌ விளிம்புநிலையின‌ரை உள்ளட‌க்கி தாமொரு உறுதியான‌ அமைப்பாக‌ மாறிவ‌ருகின்றோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதேவேளை எல்லாப் பிற‌ அமைப்புக்களிற்கும் இருப்ப‌தைப் போல‌ தாங்களிற்கும் ப‌ல‌ பிள‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌ என‌வும் அவ‌ற்றோடும் போராடவேண்டியிருக்கிற‌து என்றும் குறிப்பிட்டார். முக்கிய‌மாய் த‌ங்க‌ள் 'சிநேகித‌ன்' அமைப்பில் அதிக‌ இல‌ங்கைய‌ர்க‌ள் இருப்ப‌தால் தென்னிந்தியாவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் அதிக‌ம் க‌வ‌னிக்க‌ப்ப‌டாது இருக்கின்றோம் எனறு நினைக்கும் நிலை இருக்கிற‌து என்றார்.

இர‌ண்டாவது கேள்வியாக‌ என்ற‌ எப்ப‌டி த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் Gay, Lesbians சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் கேள்வி கேட்க‌ப்ப‌ட்ட‌து. த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளே எங்க‌ள‌ ச‌மூக‌த்தின் முக‌ங்க‌ளாக‌ (அதாவ‌து அதிகமானோர் பார்ப்ப‌வ‌ர்க‌ள் என்ற‌வ‌கையில்) இருப்ப‌த‌னால் இந்த‌க்கேள்வி கேட்க‌ப்ப‌ட்ட‌தாய்க் கூற‌ப்ப‌ட்ட‌து. அரவாணிக‌ள்/திருந‌ங்க‌ளைக‌ள் போல‌ எவ்வித‌ மாற்ற‌முமின்றி மிக‌க்கேவ‌ல‌மான‌ முறையிலேயே அனைத்து விளிம்புநிலையின‌ரும் சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தே ப‌ல‌ரின் பொதுக்க‌ருத்தாய் இருந்த‌து 'வேட்டையாடு விளையாடு'வில் வ‌ரும் வில்ல‌ன்க‌ளை ஓரின‌ப்பாலாக்கி ந‌கைச்சுவை என்ற‌ பெய‌ரில் அது வ‌ன்ம‌மாய் வெளிப்ப‌ட்ட‌து ப‌ல‌ரால் இங்கே சுட்டிக்காட்ட‌ப்ப‌ட்ட‌து. அதேபோன்று இவ்வாறான‌ விளிம்புநிலையின‌ரை இய‌ல்பாய்காட்டும் எந்த‌ சாத‌க‌மான‌ முய‌ற்சியும் த‌மிழ்ச்சூழ‌லில் காட்ட‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தையும் குறிப்பிட்டிருந்தோம்.

மூன்றாவ‌து கேள்வியாக‌, க‌ன‌டாவில் ஓரின‌ப்பாலின‌ர் திரும‌ண‌ம் செய்வ‌தை ஏற்றுக்கொள்ளும் ச‌ட்ட‌ம் குறித்து என்ன‌ நினைக்கின்றீர்க‌ள்? என‌க் கேட்க‌ப்ப‌ட்ட‌து. அனைவ‌ரும் இச்ச‌ட்ட‌ம் ஏற்றுக்கொள்ள‌க்க்கூடிய‌து; வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து என்று கூறினோம். அதேச‌ம‌ய‌ம் இந்த‌ச் ச‌ட்ட‌ம் இவ்வாறானவ‌ர்க‌ளை ச‌மூக‌த்தில் இய‌ல்பான‌வ‌ர்க‌ளாய் ஏற்றுக்கொள்ளாது அடையாள‌ப்ப‌டுத்தி வேறுப‌டுத்தி வைத்திருக்கும் அபாய‌முண்டு . என‌வே இவ்வாறான‌வ‌ர்க‌ளை இய‌ல்பாய் பொதுச்ச‌மூக‌ம் ஏற்றுக்கொள்ளும்வ‌ரை தொட‌ர்ச்சியான‌ போராட்ட‌ங்க‌ள் நிக‌ழ்த்த‌ப்ப‌டுத‌ல் அவ‌சிய‌மான‌து என்றும் க‌வ‌ன‌ப்ப‌டுத்தினோம். எனெனில் இனி ஓரின‌ப்பாலின‌ருக்கான‌ உரிமைக‌ளையோ அல்ல‌து அவ‌ர்க‌ள் ஒடுக்கப்ப‌டுவ‌தையோ குறிப்பிட்டால் 'அதுதானே ஏற்க‌ன‌வே ச‌ட்ட‌மிருக்கிற‌து;அது பார்த்துக்கொள்ளும் ' என்று -தொட‌ர்ச்சியாய் செய்ய‌வேண்டிய‌ போராட்ட‌த்தை- அட‌க்கிவிடும் வாய்ப்பு அதிகார‌வ‌ர்க்க‌ங்க‌ளிற்கும், ம‌த‌ம்சார்ந்த‌ அமைப்புக்க‌ளிற்கும் பொதுப்புத்தியிற்கும் ஏற்பட்டுவிடும் என்ற‌ அபாய‌த்தைச் சுட்டிக்காட்டினோம்.

3.
இக்கேள்விக‌ளுக்குப் அப்பால் பிற‌கு இன்னொரு கேள்வி டன்ஸ்ர‌னின் ந‌ண்ப‌ர்க‌ளால் முன்வைக்க‌ப்ப‌ட்ட‌து. அதாவ‌து பெற்றோராக‌ இருக்கும்/இருக்க‌ப்போகும் நீங்க‌ள் உங்க‌ள் ம‌க‌னோ/ம‌க‌ளோ தான் த‌ற்பாலின‌த்த‌வ‌ர் என்று கூறினால் உங்க‌ள‌து எதிர்வினை எப்ப‌டியிருக்கும் ?‌. ப‌ல்வேறு க‌ருத்துக்க‌ள் இக்கேள்வியை முன்வைத்துச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌. சில‌து மிகுந்த‌ அபத்த‌மாக‌வும் இருந்த‌ன‌. அதைத் த‌னிம‌னித‌ர்க‌ளின் க‌ருத்து என்றில்லாது பொதுப்புத்தி சார்ந்த‌ க‌ருத்துக்க‌ள் என்ற‌வ‌கையிலும் த‌ம‌து ம‌ன‌தில் உள்ள‌த்தை வெளிப்ப‌டையாக‌ச் சொல்கின்றார்க‌ள் என்ற‌வ‌கையிலும் அவ‌ற்றை ட‌ன்ஸ்ர‌னும் அவ‌ரின் ந‌ண்ப‌ர்க‌ளும் எடுத்துக்கொண்டாலும் என‌க்கு -த‌னிப்ப‌ட்ட‌வ‌ளவில்- எரிச்ச‌லாக‌வே இருந்தது. முக்கிய‌மாய் ஒருவ‌ர், சிறார்க‌ளாய்/ப‌தின‌ம‌ங்க‌ளில் இருக்கும்போது த‌ற்பால் சேர்க்கையில் க‌ட்டாய‌மாய் ஈடுப‌டுத்த‌ப்ப‌டுவ‌தால் அவ‌ர்க‌ள் பிற்கால‌த்தில் அப்ப‌டியாகிவிடும் அபாய‌ம் இருக்கிறது என்றார். இதை ம‌றுத்து சும‌தி அதை பாலிய‌ல் துஷ்பிர‌யோக‌மாக‌வே (sexual abuse) எடுக்க‌வேண்டுமே த‌விர‌ ஒரு உற‌வாய் எடுக்க‌வேண்டிய‌தில்லை என‌க்குறிப்பிட்டார். நானும் அதேயே ஆண்க‌ள்/பெண்க‌ள் த‌னியே விடுதிகள்/சிறைக‌ள் போன்ற‌வ‌ற்றில் இருக்கும்போது த‌ற்பால் உற‌வில் ஈடுப‌டுகின்றார்க‌ள். அது நிச்சய‌ம் பாலிய‌ல் வ‌ற‌ட்சியால் (sexual starvation) ஏற்ப‌டுவ‌தே த‌விர‌,இய‌ல்பான‌ ஓரினபாற் சேர்க்கையாய் இருப்ப‌தில்லை. எனெனில் பிற‌கு பொதுவெளிக்குள் அவ‌ர்க‌ள் வ‌ரும்போது த‌ம‌து பாலிய‌ல் உற‌வை இய‌ல்பாய்த் தேர்ந்தேடுக்கின்றார்க‌ள். ஆகவே பாலிய‌ல் வ‌றட்சியால் வ‌ரும் த‌ற்பால் உற‌வுக‌ளையும், இய‌ல்பாய் வ‌ரும் த‌ற்பால் உற‌வுக‌ளையும் ஒன்றாய்ச் சேர்த்துக் குழ‌ப்ப‌க்கூடாது என்றும் குறிப்பிட்டேன். அவ்வாறு பார்த்தால் ஆண்கள்/ பெண்க‌ள் என‌த் தனித்த‌னியே ஹொஸ்ட‌ல்க‌ளில் த‌ங்கியிருந்த‌வ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் பிற்கால‌த்தில் த‌ற்பால் சேர்க்கையாள‌ராக‌ இருக்க‌வெண்டும். ஆனால் அவ்வாறான‌ விகித‌ம் அதிக‌ம் இருப்ப‌த‌ற்காய் எந்த‌த் த‌ர‌வையும் நான் அறிந்த‌தில்லை என‌வும் குறிப்பிட்டேன் (நிகழ்வில் நான் சொல்ல‌வ‌ந்த‌தைச் ச‌ரியாக‌க் குறிப்பிட்டேனோ தெரிய‌வில்லை)

உரையாட‌லின் முடிவில், ட‌ன்ஸ்ர‌ன் த‌மிழ்ச்ச‌மூக‌த்தில் ஓரின‌ப்பாலின‌ராய் இருப்ப‌த‌ன் அவ‌திக‌ளையும் ப‌த‌ற்ற‌ங்க‌ளையும் முன்வைத்து சில‌ விட‌ய‌ங்க‌ளையும் கூறினார். உதார‌ண‌மாய் நான்கு ச‌கோத‌ர‌க‌ளுட‌ன் பிற‌ந்த‌ த‌ன‌க்கு த‌ன்னை த‌ற்பால் சேர்க்கையாள‌ர் என‌ பொதுவெளியில் அடையாள‌ப்ப‌டுத்த‌ல் (ஒர‌ள‌வு) எளிதாய் இருப்ப‌தைப் போன்று, ச‌கோத‌ரிக‌ளுட‌ன் பிற‌ந்த‌ ஒரு த‌ற்பால் சேர்க்கையாள‌ருக்கு எளிதாக‌ இருப்ப‌தில்லையென்றார். எனெனில் 'உன‌து ச‌கோத‌ர‌ர் த‌ற்பால்சேர்க்கையாள‌ர்' என்று அச்ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌வாழ்வு ந‌ம் ச‌மூக‌த்தில் குழ‌ப்ப‌டும் சாத்திய‌ங்க‌ள் நிறைய‌ உள்ள‌தென‌க் குறிப்பிட்டார். மேலும் த‌மிழில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் உற‌வு முறை அழைப்புக்க‌ளிலும் சிக்க‌ல்க‌ள் த‌ங்க்ளைப் பொறுத்த‌வ‌ரை உள்ள‌தென்று குறிப்பிட்டார். உதார‌ண‌மாய் த‌ன‌து ச‌கோத‌ர‌ரின் ம‌க‌ன் த‌ன்னைச் சித்த‌ப்பா என்று அழைக்கின்ற‌வ‌ர். ஆனால் த‌ன‌து துணையை ச‌கோத‌ர‌ரின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகும்போது எவ்வாறு அவ‌ரை அழைப்ப‌து போன்ற‌ சிக்க‌ல்க‌ள் இருக்கின்ற‌தென்றார். சிறிய‌ விட‌ய‌ங்க‌ளாய் நாம் க‌வ‌னிக்காத‌ இம்மாதிரியான‌வை பெரும் 'அர‌சிய‌லாய்' இருப்ப‌தை நாம் உண‌ர்ந்துகொள்ள‌லாம். இவ‌ற்றுக்கு எல்லாம் தீர்வுக‌ளை அடைவ‌த‌ற்கு ஓரின‌பாலாருக்கு ம‌ட்டுமில்லை அவ‌ர்க‌ளைப் புரிந்துகொள்ள அக்க‌றைப்ப‌டும் ந‌ம‌க்கும் இருக்கின்ற‌து என்ப‌தை ஒருபோதும் ம‌றந்துவிட‌முடியாது.


புகைப்ப‌ட‌ங்க‌ள்: சென்ற‌வ‌ருட‌ம் (2009) றொறொண்டோவில் ந‌ட‌ந்த‌ Pride Week ன்போது எடுக்க‌ப்ப‌ட்ட‌வை

*ட‌ன்ஸ்ர‌னும், அவ‌ரின் ந‌ண்ப‌ர்க‌ளும் இத் த‌லைப்பிலேயே த‌ம‌து அம‌ர்வைச் செய்திருந்த‌ன‌ர்

(ந‌ம் சூழ‌லில் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ள் விரிவாக‌ உரையாட‌ப்ப‌டுவ‌தில்லை என்ற எண்ண‌த்தாலேயே நிக‌ழ்வில் நிகழ்ந்த‌ அனைத்தையும் இய‌ன்ற‌வ‌ரை தொகுத்திருக்கின்றேன்)

சாந்தனின் படைப்புலகம்

Monday, January 04, 2010

'விளிம்பில் உலாவுதல்' குறுநாவல்களின் தொகுப்பை முன்வைத்து
1.

ஈழ‌த்துப் ப‌டைப்பாளிக‌ளில் முக்கிய‌மான‌ ஒருவ‌ரான‌ சாந்த‌ன் நெடுங்கால‌மாக‌ எழுதி வ‌ருகின்ற‌வ‌ர். ஈழ‌த்தில் முற்போக்கு அலை, வீச்சுட‌ன் இருந்த‌ எழுப‌துக‌ளில் அத‌னுள் எற்றுப்ப‌ட்டுப்போகாம‌ல் த‌ன‌க்குரிய‌ கதை சொல்லும் முறையை இவர் த‌னித்துவ‌மாய்க் கொண்ட‌வ‌ர். சாந்த‌னின் தொட‌க்க‌ கால‌ க‌தைக‌ள் ‍‍-அவ‌ரே ஓரிட‌த்தில் ‍குறிப்பிடுவ‌தைப் போல‌-பேருந்துக‌ளிலும் புகைவ‌ண்டிக‌ளிலும் நிக‌ழ்ப‌வை. எளிய‌ ம‌னித‌ர்க‌ளும், சாதார‌ண‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் சாந்த‌னின் க‌தையுல‌க‌த்தில் பெரும்பாலும் நுழைந்தாலும் அவ‌ர்க‌ளை/அவ‌ற்றை ம‌ற‌க்க‌முடியாத‌வ‌ர்க‌ளாய் மாற்றிக்கொள்வ‌தில்தான் சாந்த‌ன் என்னும் ப‌டைப்பாளி முக்கிய‌ம் உடைய‌வ‌ராக‌விடுகின்றார். சாந்த‌ன் த‌ன‌து பாத்திர‌ங்க‌ளின் வ‌ர்ண‌னைக‌ளுக்கு அதிக‌ இட‌ம் எடுத்துக்கொள்வ‌தில்லை. பெரும்பாலான அவரது க‌தைக‌ள், ஏதோ இர‌ண்டு ம‌னித‌ர்க‌ள் க‌தைத்துக்கொண்டிருக்கும்போது -இடையில் நுழைகின்ற‌ மூன்றாவ‌து ம‌னித‌ன் எப்ப‌டி உரையாட‌லில் ப‌ங்குகொள்வானோ- அப்ப‌டியே ச‌டுதியாக‌ க‌தைக‌ள் ஆர‌ம்பித்து அதிக‌ம் அல‌ட்ட‌லில்லாது சொல்ல‌ வ‌ந்த‌தைக் கூறிவிட்டு அதேவேக‌த்தில் முடிந்தும்விடுகின்ற‌ன‌. அத‌னாலேயே அவ‌ர‌து அதிக‌ சிறுக‌தைக‌ள் ஒரு சில‌ ப‌கக‌ங்க‌ளிலோ (சிலவேளைக‌ளில் ஒரு ப‌க்க‌த்தில் கூட‌) முடிந்துவிடுகின்ற‌வையாக‌ இருக்கின்ற‌ன‌. குறுநாவ‌ல்க‌ளின் அத்தியாங்க‌ளுக்குக் கூட‌ அதிக‌ ப‌க்க‌ங்க‌ளைச் செல‌வ‌ழிக்க‌ விரும்புவ‌தில்லை சாந்த‌ன். அதனால் என்ன‌, குறைந்த‌ ப‌க்க‌ங்க‌ள் கொண்ட‌ க‌தைக‌ள் என்றாலும் சாந்த‌னின் க‌தைக‌ள் சுரீரென்று எங்கோ ம‌ன‌தில் குத்திவிட்டு ந‌க‌ர‌த்தான் செய்கின்ற‌ன‌.

ஒரு ப‌டைப்பாளி என்ப‌வ‌ர் எப்போதும் விசால‌மான‌ ம‌ன‌தோடு இருக்க‌வேண்டும். தொட‌ர்ச்சியாக‌ சுற்றியிருப்ப‌வை குறித்து அவதானித்து, வேண்டிய‌வ‌ற்றை எடுத்தும் வேண்டாத‌வ‌ற்றை வ‌டிக‌ட்டிய‌ப‌டியும் இருக்க‌வேண்டும். ப‌டைப்பாளிக‌ள் ப‌ல்வேறு மொழிக‌ளை அறிந்துவைத்திருப்ப‌தும், வித்தியாச‌மான‌ க‌லாசார‌ப்பின்ன‌ணிக‌ளில் வாழ‌ நேர்கின்ற‌போதும், ப‌டைப்புக்க‌ள் ப‌ன்மைத்துவ‌மாய் முகிழும் ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் அதிக‌ம் இருக்கின்ற‌ன‌ சில‌ர் எங்குபோனாலும் கிண‌ற்ற்துத‌வ‌ளையாக‌ த‌ம‌து க‌லாசார‌மும் மொழியும் ம‌ட்டுமே உய‌ரிய‌து என்று க‌த்திக்கொண்டிருப்பார்க‌ள், அவ‌ர்க‌ளை இப்போதைக்கு மறந்து விடுவோம். சாந்த‌னுக்கு த‌மிழ், சிங்க‌ள‌ம், ஆங்கில‌ம் ஆகிய மூன்று மொழிக‌ளில் ந‌ன்கு தேர்ச்சி இருக்கின்ற‌து; இர‌ஷ்ய‌மொழியை விரும்பிக் க‌ற்றுமிருக்கின்றார். அத‌ன் நிமித்த‌ம் மொஸ்கோவுக்கு -சோவிய‌த்து ஒன்றிய‌த்தின் அழைப்பின்பேரில்- ப‌ய‌ணித்துமிருக்கின்றார். 1966 - 1980 வ‌ரை க‌ட்டுப்பெத்தை, கொழும்பு, திருக்கோண‌ம‌லை போன்ற‌ யாழ்ப்பாண‌த்தைத் தாண்டிய நகரங்களில் வாழ்ந்த‌ சாந்த‌னின் அனுப‌வ‌ங்க‌ளும், ஆர‌ம்ப‌கால‌ங்க‌ளில் அவருக்கு அதிக ஈர்ப்பிருந்த‌ மார்க‌சிச‌மும் அவ‌ர‌து ப‌டைப்புல‌கிற்கு இன்னும் வளத்தைக் கொடுக்கின்றன சொந்தமண்ணைவிட்டுப் பிரிவதில்லையென்ற வைராக்கியத்தில். -1980க‌ளின் பின் யாழை விட்டு வெளியேற‌விட்டாலும்- அவ‌ரால் ஈழ‌த்தில் எல்லா ம‌க்க‌ளையும் ப‌டைப்பின் மூல‌ம் நேசிக்க‌ முடிகின்ற‌து.


'விளிம்பில் உலாவுத‌ல்' என்கின்ற‌ இத்தொகுப்பில் சாந்த‌னின் அய்ந்து குறுநாவ‌ல்க‌ள் இருக்கின்ற‌ன‌. அவை 1984 லிருந்து 2007 வ‌ரை ப‌ல்வேறு கால‌ க‌ட்ட‌ங்க‌ளில் எழுத‌ப்ப‌ட்ட‌வை. எந்த‌ ஒரு ப‌டைப்பும் அது சார்ந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பையும் க‌தைக்கான‌ ச‌முக‌ அரசிய‌ல் கார‌ண‌ங்க‌ளையும் நேர‌டியாக‌வோ அல்ல‌து ம‌றைமுக‌மாவோ உண‌ர்த்திக்கொண்டேயிருக்கும். புனைவுக‌ளினூடாக‌க் கூட, ஒரு கால‌க‌ட்ட‌த்தின் வ‌ர‌லாற்றைப் ப‌டிக்க‌லாம் என்று சில‌ சிந்த‌னையாள‌ர்க‌ள் குறிப்பிடுகின்றார்க‌ள். இன்றைய‌ சில‌ ஈழ‌த்து/புலம்பெய‌ர் ப‌டைப்பாளிக‌ள் நில‌த்தில் காலூன்றா வான‌த்துப் ப‌ற‌வைக‌ளாகிவிடுகின்ற‌ன‌ர் என்ப‌தும் ஒருவ‌கை அவ‌ல‌மே.

சாந்த‌னின் க‌தைக‌ளில் வ‌ரும் சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளினூடாக‌ அந்த‌க்கால‌ அர‌சிய‌ல் சூழ‌ல்க‌ளும், நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌ நில‌ப்ப‌ர‌ப்புக‌ளும் துல்லிய‌மாக‌க் காட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஏற‌த்தாழ அரை நூற்றாண்டுக‌ளாய் அரசிய‌ல் ப‌த‌ற்ற‌ங்க‌ளோடேயிருக்கும் ஈழ‌த்தில் ஒவ்வொரு பிர‌தேச‌மும் அத‌ற்குரிய‌ அர‌சிய‌லைக் கொண்டிருக்கின்ற‌ன‌. யாழ்ப்பாண‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளும் கொழும்பில் இருப்ப‌வ‌ர்க‌ளும் வெவேறு சூழ‌லில் வாழ்ந்துகொண்டிருப்பார்க‌ள். அதேபோன்று யாழில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் ம‌ட்ட‌க்கிள‌ப்பில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்குமான‌ சூழ‌ல் வெவ்வேறு வ‌கையான‌து. யாழ்ப்பாண‌த்தில் ஒருகால‌க‌ட்ட‌த்திற்குப் பிற‌கு முற்றுமுழுதாக‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டுமே வாழ்ந்து வ‌ந்திருக்கின்ற‌ன‌ர். ம‌லைய‌க‌ப் ப‌குதிக‌ளிலும், கொழும்பிலும் பெரும்பான்மை சிங்க‌ள ச‌மூக‌த்தோடு வாழ்ப‌வ‌ர்க‌ளுக்கான‌ சூழ‌ல் முற்றிலும் வேறுவித‌மான‌வை. ம‌ட்ட‌க்கிள‌ப்பு, திருக்கோண‌ம‌லை, அம்பாறை போன்ற‌ எல்லைக் கிராம‌ங்க‌ளிலும், குடியேற்ற‌த்திட்ட‌ங்க‌ளோடும் வாழ்ப‌வர்க‌ளுக்கான‌ சூழ‌ல் இவையெல்லாவ‌ற்றையும் விட‌ இன்னும் வித்தியாச‌மான‌வை. யாழில் நிறைய‌க் கால‌ம் வாழ்ந்தாலும்,வெவ்வேறு பிர‌தேச‌ங்க‌ளில் வாழ்நதிருந்ததால் சாந்த‌னின் க‌தைக‌ள் அவை சொல்ல‌ப்ப‌டுகின்ற சூழ‌லில் காலூன்றியே கதை சொல்கின்றன.

2.
இத்தொகுப்பிலுள்ள‌ முத‌ற்க‌தையான‌ 'ஆரைக‌ள்' கொழும்பின் பின்புல‌த்தில் நிக‌ழ்கின்ற‌து. 1977 க‌ல‌வ‌ர‌ம் முடிந்து மீண்டு வந்து வேலை செய்யும்போது த‌மிழ‌ர்க‌ளுக்கிடையில் இருக்கும் சாதி பார்த்து ப‌ழ‌கும்/ கூட‌ச்சேர்ந்து தேநீர் குடிக்கும் ப‌ழ‌க்க‌ங்க‌ளை இன‌ங்காட்டுகின்ற‌து இக்க‌தை. எத்த‌கைய‌ அசாத‌ர‌ண‌ சூழ்நிலையாய் இருந்தால் என்ன, தொழில்ச‌ங்க‌ அமைப்புக்க‌ளாய் இருந்தால் என்ன‌, இவ‌ற்றை மீறி ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளிடையே ஊடுருவியுள்ள‌ சாதி ஒருபோதும் ம‌றைவ‌தேயில்லை என்பதை மறைமுகமாய் உணர்த்துகின்றது. நான்கு வ‌ருட‌ங்க‌ளாய் ஒரே அலுவ‌ல‌க‌த்தில் வேலை செய்தும் கதைசொல்லியைப் பார்த்து சிறிதும் புன்ன‌கைக்காத‌ த‌ன‌பால் இறுதியில் க‌தைக்க‌த் தொட‌ங்குகின்றார். அத‌ற்கு அவ‌ர் கூறும் கார‌ண‌ம் 'க‌ன‌நாளைக்குப் பிற‌கு இவ‌ன் மூர்த்திதான் சொன்னான், எட‌ போய்யா, அவ‌ன் சுண்டியெடுத்த‌ வெள்ளாள‌ன் எல்லோ எண்டு'. ஒரு உய‌ர்ந்த‌ சாதிக்கார‌ன் இன்னொருவ‌னோடு உரையாடுவ‌த‌ற்கான‌ முன் நிப‌ந்த‌னையாக‌ இருக்க‌வேண்டிய‌து, ம‌ற்ற‌வ‌ரும் உய‌ர்ந்த‌ சாதிக்கார‌ராய் இருக்க‌வேண்டும் என்ப‌தை நினைத்து, க‌தை சொல்லி ஏள‌னமாய்ச் சிரித்துக்கொள்வதோடு கதை முடிந்துவிடுகின்றது.

இர‌ண்டாவ‌து க‌தையான‌ 'உற‌வுக‌ள் ஆயிர‌ம்' ர‌ஷ்யாவில் நிக‌ழ்கின்ற‌து. க‌தை சொல்லி, கொழும்பிலிருந்த‌ கால‌த்தில், விருப்பின்பேரில் ர‌ஷ்ய‌ மொழி க‌ற்க‌, அவ‌ரை ர‌ஷ்யாவைச் சுற்றிப் பார்க்க‌ அழைக்கின்றார்க‌ள். ஈழ‌த்தில் இளைஞ‌ர்க‌ள் இய‌க்க‌ங்க‌ளாய்த் த‌ங்க‌ளை த‌க‌வ‌மைத்துக் கொள்கின்ற‌ கால‌க‌ட்ட‌ம் அது. மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வேலையிலிருந்து விடுமுறை எடுத்து க‌தைசொல்லி ர‌ஷ்யாவுக்குப் ப‌ய‌ணிக்கின்றார். அங்கே ப‌ல்வேறு நாடுக‌ளிலிருந்து வ‌ந்த‌ ப‌ல்வேறும மொழிக‌ளைப் பேசுப‌வ‌ர்க‌ளோடு ப‌ழ‌கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கிற‌து. அந்த‌வேளையில் கேர‌ளாவிலிருந்த‌ வ‌ந்த‌ கீதாவுக்கும் க‌தை சொல்லிக்கும் இடையில் மெல்லிய‌ காத‌ல் முகிழ்வ‌து அழ‌காக‌ச் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஆனால் வெளிநாட்டுப்ப‌ய‌ண‌த்தைக் கூட‌க் குதூக‌லிக்க‌ முடியாது இடையில் இல‌ங்கையிலிருந்து ஒரு செய்தி(வ‌த‌ந்தி) ப‌ர‌வுகின்ற‌து. க‌ட்டுநாய‌க்காவில் போய் இற‌ங்குகின்ற‌ த‌மிழ‌ர்க‌ளையெல்லாம் இல‌ங்கை அர‌சு பிடித்துக்கொண்டு போய் சிறையில் அடைக்கிற‌தென்று. அந்த‌ அவ‌திக‌ளினால் க‌தைசொல்லியின் காத‌ல் கைந‌ழுவிப் போவ‌தையும் எப்ப‌டி க‌தைசொல்லி போய் க‌ட்டுநாய‌க்காவில் இற‌ங்க‌ப்போகின்றார் என்ற‌ ப‌தைபதைப்ப‌தையும் இக்க‌தை ப‌திவுசெய்கின்ற‌து. இக்க‌தையை வாசிக்கும்போது ச‌ட்டென்று ம‌ன‌தில் வ‌ந்து தோன்றிய‌து அசோக‌மித்திர‌னின் 'ஒற்ற‌ன்' நாவ‌ல். எங்கிருந்தோ வ‌ந்து புதிய‌ சூழ‌லில் கொஞ்ச‌கால‌ம் ந‌ட்பாய்ப் ப‌ழ‌கி, பிற‌கு என்றென்றைக்குமாய் அவ‌ர்க‌ளில் ஒருவ‌ரையும் பார்க்க‌முடியாது பிரிகின்ற சூழ‌ல் மிகுந்த‌ நெகிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌து. அசோகமித்திர‌னின் 'ஒற்ற‌னும்', சாந்த‌னின் 'உற‌வுக‌ள் ஆயிர‌மும்' வெவ்வேறு க‌தைப் ப‌ர‌ப்பைக் கொண்டிருந்தாலும், இர‌ண்டிலும் க‌தைசொல்லிக‌ள் த‌ங்க‌ளுக்கு இதுவ‌ரை ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்தாத‌ புதிய‌ நாடொன்றுக்கு முத‌ன்முறை போகின்றனர். அத்தோடு தாங்க‌ள் இதுவ‌ரை பார்த்த‌றியாத‌ ம‌னித‌ர்க‌ளையும், க‌லாசார‌ங்க‌ளையும் த‌ங்க‌ள் பார்வையிலிருந்து பார்த்து எந்த முன்முடிவுகளும் எடுக்காது, அம்ம‌னித‌ர்க‌ளை அவர்களின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்வ‌துமென‌வும்... ஒத்த‌ த‌ன்மையுடைய‌வ‌னாய் இருக்கின்றன. தஸ்தயேவ்ஸ்கியின் 'வெண்ணிற‌ இர‌வு'க‌ளை வாசித்த‌ நில‌ப்ப‌ர‌ப்புக்கு தாங்க‌ள் உண்மையில் நிக‌ழ்கால‌த்தில் இருக்கின்றோம் என்று கீதாவும் க‌தைசொல்லியும் உரையாடும் பகுதியும், கீதா காத‌லுடன் ஒரு ம‌லையாள‌ப் பாட‌லை குழுவாய் இருக்கும்போது பாடுவ‌தை அப்ப‌டியே என்றென்னைக்குமாய் கதைசொல்லி நினைவில் வைத்திருப்ப‌துமான பகுதியும் வாசிப்பவருக்கு நெகிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌வையாகும்.

'ம‌னித‌ர்க‌ளும் ம‌னித‌ர்க‌ளும்' என்கின்ற‌ க‌தை 1977ம் ஆண்டு க‌ல‌வ‌ர‌ம் நிக‌ழும்போது கொழும்பில் சிக்கிக்கொண்ட‌ சில‌ குடும்ப‌ங்க‌ளின் க‌தையை அந்த‌ப் ப‌த‌ற்ற‌ங்க‌ளோடு முன்வைக்கின்ற‌து. கொழும்பில் இருப்ப‌து சாத்திய‌மில்லை என்கின்ற‌ நிலையில் அங்கிருக்கும் த‌மிழ்ம‌க்க‌ள் த‌ங்க‌ள் சொந்த‌ இட‌ங்க‌ளுக்கு புற‌ப்ப‌ட‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். அவ்வாறான‌வ‌ர்க‌ள் முத‌லில் அக‌தி முகாமில் த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்டு க‌ப்ப‌லில் ஏற்றிச் செல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். அஃதொரு நெடிய‌ ப‌ய‌ண‌ம். இவ்வாறு போவ‌தை விரும்பாத‌ சில‌ குடும்ப‌ங்க‌ள் புகைவ‌ண்டியில் போவ‌த‌ற்குத் தீர்மானிக்கின்ற‌ன‌ர். இர‌விலிருந்து விடிகாலை வ‌ரை ஊர‌டங்குச் ச‌ட்ட‌ம். இவற்றினூடாக‌ க‌தைசொல்லியும் அவ‌ர‌து ம‌னைவியும் இன்னொரு குடும்ப‌மும் த‌ப்பிப் போகின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றிய‌தே இக்க‌தை. க‌தையில் இத்த‌கைய‌ அவ‌திக‌ளுக்குள்ளும் த‌ங்க‌ளைக் காப்பாற்றும் ஒரு சிங்க‌ள ஆட்டோக்கார‌ருக்கும் அவ‌ரின் உத‌விக்குமாய் க‌தை சொல்லி நெகிழ்வ‌து மொழிக‌ளையும், இன‌ங்க‌ளையும் தாண்டிய‌ ம‌னித‌ர்க‌ளுக்குள்ள காருண்ய‌த்தைத் தெளிவாக‌க் காட்டுகின்ற‌து

'எழுத‌ப்ப‌ட்ட‌ அத்தியாய‌ங்க‌ள்' குறுநாவ‌ல் சுதும‌லையில் புலிக‌ளின் த‌லைமையை இந்திய‌ இராணுவ‌ உல‌ங்குவானூர்த்திக‌ள் ஏற்றிச்செல்வத‌ற்கான‌ காத்திருப்பில் தொட‌ங்கும் க‌தை க‌ட‌ந்த‌ கால‌த்தையும் நிகழ்காலத்தையும் நோக்கி முன்/பின்னாக ந‌க‌ர்கின்ற‌து. அவ்வ‌வ்போது வ‌ந்து போகும் ச‌மாதான‌ முயற்சிகளில் ம‌க்க‌ள் ந‌ம்பிக்கை கொள்வ‌தையும், இவ்வாறான‌ வானூர்த்திக‌ளே த‌ன‌க்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ளை முந்தைய ஆண்டுக‌ளில் ப‌லியும் எடுத்தும் இருக்கின்ற‌து என்ப‌தையும் கதைசொல்லி நினைவுகூர்கிறார். காத்துக்கொண்டிருக்கும்போது வ‌ழ‌மைபோல‌ அர‌சிய‌லும் பேச‌ப்ப‌டுகின்ற‌து. ஒரு கால‌த்தில் ந‌ம்பிக்கை த‌ர‌க்கூடிய‌தாய் இருந்த‌ இட‌துசாரி இய‌க்க‌த்தில் தான் இணைந்த‌தையும், அதிலிருந்த‌ சில‌ அர்ப்ப‌ணிப்புள்ள‌ த‌லைவ‌ர்க‌ளைப்ப‌ற்றியும் க‌தைசொல்லி அசைபோடுகின்றார். வ‌ட‌க்கு கிழ‌க்கிற்கு இணைப்புக்கு ஒரு ம‌க்க‌ள் வாக்கெடுப்பை வைப்ப‌துபோல‌ ஏன் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் முழு இலங்கையிலிருந்து பிரிந்துபோவ‌த‌ற்கான‌ ஒரு தேர்த‌லை இவ‌ர்க‌ள் ந‌ட‌த்த‌க்கூடாதென‌ ஒரு இட‌துசாரி வினாவ‌ச் செய்ததை கதை சொல்லி அசைபோடுகின்றார். இந்த‌ ச‌ம‌ய‌த்தில் ஒருவ‌ர் 'நீங்க‌ள் யாரோடு?' என்று கேட்கும்போது க‌தைசொல்லி 'நான் ச‌ன‌ங்க‌ளோடு' என்று கூறுவ‌தோடு ம‌க்க‌ள் ம‌ய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டிய‌ போராட்ட‌ம் இடைந‌டுவில் சிதைந்துபோன‌து குறித்தும் கவலைப்படுகின்றார். ஈழ அரசியலில் உன‌து நிலைப்பாடு என்ன‌வென்கின்ற‌போது, 'ச‌ன‌ங்க‌ள் எதைத் தீர்மானிக்கின்றார்க‌ளோ, அதுதான். என்னைப் பொறுத்த‌ளவிலை த‌மிழ‌ர்க‌ள் ஒரு த‌னித் தேசிய‌ இன‌ம். அவ‌ர்க‌ளுடைய‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை ம‌றுக்க‌ப்ப‌டமுடியாதது. எந்த‌வித‌ சுர‌ண்ட‌ல்க‌ள் பாகுபாடுக‌ள், அட‌க்குமுறைக‌ள், அடிமைத்த‌ன‌ங்க‌ளுக்கும் ஆளாகாம‌ல் இறைமையோடும் கெள‌ர‌வத்தோடும் நாங்க‌ள் வாழ‌ ஏற்ற‌ வ‌ழி எந்த‌ வ‌ழி ஏற்ற‌து என்ப‌தைத் தெரிவு செய்கிற‌ சுத‌ந்திர‌ம் அவ‌ர்க‌ளுக்கு உண்டு. எந்த‌ வித‌த்திலென்றாலும் அவ‌ர்க‌ளுக்கு நியாய‌மும் பாதுகாப்பும் இருக்க‌வேண்டும். பிர‌ச்சினை தீர‌வேண்டும் அதுதான் முக்கிய‌ம்' என்று கதைசொல்லும் ப‌குதி இன்றைய‌ கால‌த்திற்கும் பொருந்த‌க்கூடிய‌தே.

'அடையாள‌ம்' என்கின்ற‌ க‌தை, நீண்ட‌ கால‌ம் க‌தைசொல்லி யாழ்ப்பாண‌த்தில் இருந்துவிட்டு ந‌ண்ப‌ரொருவ‌ரின் அழைப்பின்பேரில் இந்தியாவுக்கு ஒருவார‌ம் செல்கின்ற‌தைப் ப‌ற்றிய‌ க‌தை. யாழ்ப்பாண‌த்திலிருந்து கொழும்புக்கு வ‌ரும் க‌தைசொல்லிக்கு கொழும்பு மிகுந்த‌ ப‌த‌ற்ற‌த்தைத் த‌ருகின்ற‌து. பொலிஸ் ப‌திவு, பாதுகாப்புச் சோத‌னைக‌ள் போன்ற‌வ‌ற்றையெல்லாம் மிகுந்த‌ பய‌த்துட‌னேயே எதிர்கொள்கின்றார். வீதியில், லொட்ஜில் ச‌ந்திக்கும் த‌மிழ‌ர்க‌ளெல்லாம் த‌ன‌து ப‌ழைய‌கால‌த்தை நினைவுப‌டுத்தி பொலிசில் சிக்க‌வைத்து வைத்துவிடுவார்க‌ளோ என்ற‌ ப‌த‌ற்ற‌ம் தொட‌ர்ந்த‌ப‌டியே அவருக்கு இருக்கின்ற‌து. என்றாலும் கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தினைந்துவ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு ச‌ந்திக்கும் சிங்க‌ள் ந‌ண்ப‌ர் எவ்வித‌ மாற்ற‌மில்லாது ந‌ட்புட‌ன் இருப்ப‌து க‌தைசொல்லிக்கு நிம்ம‌தியாக‌ இருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் சொற்ப‌ வார‌த்திலும் எப்போது கொழும்புக்குத் திரும்பிப் போவ‌து.., அங்கே என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என்று அந்த‌ர‌த்தோடே க‌தைசொல்லி ஓடிக்கொண்டிருக்கின்றார். அந்த‌ப்ப‌ய‌ண‌த்தின்போது நீல‌ ப‌த்ம‌நாப‌ன், அருந்த‌தி ரோயையெல்லாம் ச‌ந்திப்ப‌தாக‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌து. க‌ட்டுநாய‌க்காவில் வ‌ந்து இற‌ங்கும்போது இவ‌ரை ஏற்றிச்செல்ல‌ எவ‌ருமில்லாது ஓட்டோவொன்றில் செல்லும்போது க‌தைசொல்லிக்கும், ஒரு சிங்க‌ள முதிய‌வ‌ருக்கும், இவ‌ர் முத‌ன்முத‌லான் சுவைக்கும் பிய‌ருக்கும் இடையில் நிக‌ழும் உரையாட‌ல் நினைவில் நிற்க‌க்கூடிய‌து. த‌ன்னையொரு த‌மிழ‌னாக‌ சோதனைச்சாவடிகளில் காட்டாதிருக்க‌ பிய‌ரைக் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் குடித்துக்கொண்டு இருப்பது காப்பாற்றும் என்று இவர் ந‌ம்புகின்றார். இறுதியில் பார்த்தால் அந்த‌ பிய‌ர் கானில் 'ப்ளு ரைக‌ர்' என்ற பெய‌ருட‌ன் புலிப்ப‌ட‌மொன்றும் இருக்க‌ த‌ன‌து அச‌ட்டுத்த‌ன‌ம் க‌தைசொல்லிக்கு புரிகின்ற‌மாதிரி க‌தை முடியும்.

சாந்த‌ன் இதுவ‌ரை த‌மிழில் 15 தொகுப்புக்க‌ளையும், ஆங்கில‌த்தில் 4 தொகுப்புக்க‌ளை வெளியிட்டிருக்கின்றார். சாந்த‌னின் எழுப‌துக‌ளின் வ‌ந்த‌ தொகுப்பைப் பார்க்கும்போது அங்கே வ‌ரும் க‌தைசொல்லிக‌ள் ப‌ய‌ண‌த்தை உற்சாக‌மாய் மேற்கொள்ப‌வ‌ர்க‌ளாய்... நினைத்த‌ நேர‌த்தில் கொழும்பிலிருந்து யாழுக்கும், திரும‌லைக்கும் போக‌க்கூடிய‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். ஆனால் இறுதியாய் வ‌ந்த‌ இததொகுப்பில் உள்ள கதைகளில் (80க‌ளின் ந‌டுப்ப‌குதிக்கு பின்) இப்ப‌ய‌ண‌ங்க‌ள் எவ்வ‌ளவு அல்ல‌ல்க‌ளுக்கும் ப‌தற்றங்க‌ளுக்குமிடையில் நிக‌ழ்கின்ற‌து என்ப‌தை விள‌ங்கிக்கொள்ள‌ முடியும். உண்மையில் இந்த‌ப் 'ப‌யண‌ங்க‌ளின் க‌தை'க‌ளினூடாக‌க் கூட‌ நாம் ஈழ‌த்தின் அர‌சியல் நில‌வ‌ர‌ங்க‌ளைப் புரிந்துகொள்ள‌ முடியும். எவ்வாறு த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ அர‌சிய‌ல் சூழ‌ல் ஈழத்தில் மாறிக்கொண்டிருந்த்ன என்பதை சாந்த‌னின் 70க‌ளின் கொழும்புச் சூழ‌லை முன்வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் முக்கிய‌ சாட்சிக‌ளாகும். சாந்த‌னின் யாழுக்கு அப்பால் வாழ்ந்த‌ சூழ்நிலை சிங்க‌ள ம‌க்க‌ளை வெறுத்தொதுக்காம‌ல் த‌மிழ‌ர்க‌ளின் மீதான‌ பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை மட்டுமே கூற‌க்கூடிய‌தாக‌ இருப்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

இந்த‌ அய்ந்து குறுநாவ‌ல்க‌ளில் -சாந்த‌னின் ஏனைய‌ அநேக‌ சிறுக‌தைக‌ளைப் போல‌வே- எந்த‌ப் பிர‌ச்சார‌த்தொனியும் புல‌ப்ப‌ட‌வில்லை. 'எழுத‌ப்ப‌ட்ட‌ அத்தியாய‌ங்க‌ள்' கதையில் கூட‌ அர‌சிய‌ல் வெளிப்ப‌டையாக‌ப் பேச‌ப்ப‌டுவ‌து, யாழ் சூழ‌லில் அவ்வாறு மக்கள் இருப்பது இய‌ல்பான‌ ஒன்றென‌க் காட்சிப்ப‌டுத்துவ‌த‌ற்கேயாகும். 1977ம் இன‌க்க‌ல‌வ‌ர‌த்தில் த‌ப்பிப்போவ‌த‌ன் ப‌த‌ற்ற‌த்தைத் 'ம‌னித‌ர்க‌ளும் ம‌னித‌ர்க‌ளும்' கதையில் த‌க்க‌வைத்திருந்தாலும் புகைவ‌ண்டியில் ஏறுவ‌தோடு க‌தையை சாந்தன் முடித்துவிடுகின்றார். தேவைக்க‌திம‌காய் புகைவ‌ண்டிப்ப‌ய‌ண‌த்தில் என்ன‌வெல்லாம் நிக‌ழ்ந்திருக்கும் என்றேல்லாம் விப‌ரிக்க‌வில்லை. அநேகமான கதைகளில் சாந்தன் வாசிப்பவருக்கான வெளியை கதை முடிந்தபின்னும் தருகின்றார். உதாரண்மாய் 'உறவுகள் ஆயிரம்' கதையில், கதை சொல்லி கட்டுநாயக்காவில் போயிறங்கும்போது என்ன நிகழப்போகின்ற பதற்றத்தை வாசிப்பவரிடையே படியவிட்டாலும், கதை மொஸ்கோவில் விமானம் ஏறுவதோடு முடிந்துவிடுகின்றது. கட்டுநாயக்காவில் என்ன நிகழ்ந்திருக்கும் என்ற வெளி வாசகருக்கு திறந்துவிடப்படுகின்றது. கட்டுநாயக்காவில் இறங்கி எளிதாக வெளியேறியவர் ஒருமாதிரியும், அங்கே சோதனைக் கெடுபிடிகளால் சிக்குப்பட்டு அல்லற்பட்டவர் வேறொரு மாதிரியுமாய் இக்கதையை வாசித்து முடிப்ப‌த‌ற்கான‌ வெளி தரப்படுகின்றது.

'உற‌வுக‌ள் ஆயிர‌ம்' க‌தையில் க‌றுப்பின‌த்த‌வ‌ர்க‌ளை 'நீக்ரோக்க‌ள்' என்று ஓரிட‌த்தில் குறிப்பிடுகின்ற‌து.இன்றைய‌ வ‌ழ‌க்கில்லாத‌, ஒரு இன‌த்துவேச‌ வார்த்தையாக‌ ம‌திப்பிட‌ப்ப‌டுகின்ற‌ இவ்வார்த்தையை சாந்த‌ன் அடுத்த‌ ப‌திப்பிலாவ‌து திருத்திக்கொள்ள‌வேண்டும். அத்தோடு 'ஆரைக‌ள்' க‌தையில் கொழும்பு போன்ற‌ பல்லின‌ச்சூழ‌லில் இருந்துகொண்டு, க‌ல‌வ‌ர‌த்தால் பாதிக்க‌ப்ப‌ட்டும் சாதி பார்ப்ப‌தை சாந்த‌ன் கேலி செய்தாலும், அதை முழுமையாக‌ தெளிவாக‌ ம‌றுக்காம‌ல் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளை ஒரு ஏள‌ன‌ப் புன்ன‌கையால் எளிதாக‌க் க‌ட‌ந்துவிட‌முடியுமா என்ப‌தும் கேள்விக்குரிய‌து.  எனெனில் நாம் சாதி குறித்த‌ க‌தையாட‌ல்க‌ளில் மிக‌த் தீவிர‌மாக‌வே எதிர்வினையாற்ற‌ வேண்டியிருக்கிற‌து.

ஏறத்தாழ 40 வருடங்களுக்கு மேலாய் யாழ் சூழலில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சாந்தனுக்கு உரிய அங்கீகாரம் தமிழ்ச்சூழலில் கொடுக்கப்படவில்லையெனவே எண்ணத்தோன்றுகின்றது. சனங்களுக்கான கதையை அந்தச் சனங்களில் ஒருவராய் போர்ச்சூழலுக்குள் நின்று எழுதிக்கொண்டிருப்பவர்களை நமது தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் கவனித்ததாய் வரலாறுகளும் இல்லை என்பதும் உண்மையே. ஈழத்தின் அரசியல் வரலாற்றை -புனைவுக‌ளினூடாக‌- அறிந்துகொள்ள விரும்புவர்கள், 1970களிலிருந்து 2000 வரையான‌ சாந்த‌னின் கதைகளை வாசித்தால் தமிழர்கள் எவ்வாறு வரலாற்றில் நுட்ப‌மாய் திட்ட‌மிட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பதையறிய முடியும். அதேபோன்று தமிழர்களின் அரசியல் வரலாற்றில் விடப்பட்ட தவறுகளும், இழைக்கப்பட்ட துரோகங்களும் கூட சாந்தனின் கதைகள் பூடகமாய் பதிவுசெய்வதையும் நாம் கவனிக்கவேண்டும். சாந்தனைப் போன்ற பல்லின மொழி மக்களோடு பரிட்சமுடைய படைப்பாளிகளின் குரல்களை இலங்கை அதிகார வர்க்கங்களோ, தமிழ்ப்போராட்ட இயக்கங்களோ அதிகம் செவிமடுத்திருந்தால் நாம் இன்றைய பேரழிவுக்கு வந்திருக்கமாட்டோமோ என்ற ஆதங்கம் எழுவதைத் த‌விர்க்க‌வும் முடிவதுமில்லை. சாந்தனின் கதைகள், பிறரை நேசிப்பதற்கான விசாலமனதையும், எதிர்க்கருத்தாய் இருந்தாலும் செவிகளைத் திறந்து வைத்துக் கேட்பதையும்தான் வேண்டி நிற்கின்ற‌ன‌ போல‌த் தெரிகின்ற‌து.

இக்க‌ட்டுரைக்காய் மேல‌திக‌மாய் உத‌விய‌வை:
காலங்கள் (1984)
ஒரே ஒரு ஊரிலே (1975)

விக்கிபீடியா (சாந்த‌னின் புகைப்ப‌ட‌ம்)

(கூர் 2010ம் ஆண்டு தொகுப்பிற்காய் எழுதிய‌து)

இரண்டு உலகங்களுக்கு இடையில்

Sunday, January 03, 2010

-விமுத்தி ஜெயசேகராவின் In Between Two Worldsஐ முன்வைத்து-

1.
திரைப்ப‌ட‌ங்க‌ள் என்ப‌து பொழுதுபோக்கிற்கான‌து மட்டுமே என்றொரு விம்ப‌ம் த‌மிழ்ச்சூழ‌லில் பொதுப்புத்தியில் ப‌திந்திருக்கின்ற‌து. அவ்வாறான‌ சூழ‌லிலிருந்து வ‌ரும் நெறியாள்கையாள‌ர்க‌ளும் பொதுப்புத்தியைத் த‌விர்த்து புதிய‌ க‌ள‌ங்க‌ளில் த‌மிழ்த்திரைப‌ட‌ச்சூழ‌லை ந‌க‌ர்த்துவ‌த‌ற்கு அக்க‌றை கொள்வ‌துமில்லை.. ஆக‌வேதான், வ‌ழ‌மைக்கு மாறாய் ஆடல், பாட‌ல், ச‌ண்டைக்காட்சிக‌ள் குறைவாக‌ வ‌ரும் திரைப்ப‌ட‌ங்க‌ளைக் கொண்டாட‌வேண்டிய‌ அவ‌ல‌ச்சூழ‌ல் த‌மிழில் இருக்கிற‌து. எனினும் இவ‌ற்றுக்கு அப்பால் இவ்வாறான‌ திரைப்ப‌ட‌ங்க‌ளில் கூட‌ த‌லித்துக்க‌ள், பெண்க‌ள், அர‌வாணிக‌ள் போன்ற‌ விளிம்புநிலை ம‌னித‌ர்கள் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள் மிக‌ மோச‌மாக‌ நுண்ணிய‌த‌ள‌த்தில் இய‌ங்கிக்கொண்டிருப்ப‌தை நாம் அவ‌தானிக்க‌ முடியும்.த‌மிழ்ச்சூழ‌லோடு ஒப்பிடும்போது மிக‌ச்சிறிய‌ பார்வையாள‌ர் வ‌ட்ட‌த்தையும் மோச‌மான‌ த‌ணிக்கைச் சூழ‌லையும் கொண்ட‌ சிங்க‌ள‌த் திரைப்ப‌ட‌ச்சூழ‌லிலிருந்து அற்புத‌மான‌ திரைப்ப‌ட‌ங்க‌ள் ப‌ல்வேறு பின்புல‌ங்க‌ளை முன்வைத்து வ‌ர‌த்தொடங்கிவிட்ட‌ன‌. அதிகார‌த்தின் அமைப்புக‌ளுக்கு அறைகூவ‌ல் விடுத்தப‌டி ப‌ல இளைய‌ நெறியாள்கையாள‌ர்க‌ள் த‌ம‌க்கான‌ -முக்கிய‌மாய் போருக்கும்/அர‌ச அதிகார‌ங்க‌ளுக்கும் எதிரான‌ க‌தைக‌ளைத் துணிவுட‌ன்- திரைப்ப‌ட‌மாக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ன‌ர். இன்று ப‌ல்வேறு நாடுக‌ளில் நிக‌ழும் திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் சிங்க‌ள‌ப்ப‌ட‌ங்க‌ள் திரையிட‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுவ‌தும், விருதுக‌ளைப் பெறுவ‌தும் புதிய‌ க‌ள‌ங்க‌ளைப் ப‌ரீட்சித்துப்பார்த்த‌ சிங்க‌ள‌த்திரைப்ப‌ட‌ச்சூழ‌லிற்குக் கிடைத்த‌ அங்கீகார‌மென‌ எடுத்துக்கொள்ள‌லாம்.

அவ்வாறான‌ சிங்க‌ள‌ நெறியாள்கையாளர்களில் ஒருவ‌ராக‌, த‌ன‌து இருபத்தேழாவது வ‌ய‌தில் The Forsaken Land திரைப்ப‌ட‌த்தை இய‌க்கிய‌த‌ன் மூல‌ம் பல‌ர‌து க‌வ‌ன‌ததைத் திருப்பிய‌ ஒருவ‌ர் விமுக்தி ஜெய‌சேக‌ரா. இல‌ங்கையின் தென்ப‌குதியில் பிற‌ந்த‌ விமுக்தி திரைப்ப‌ட‌த்துறை சார்ந்த‌ க‌ல்வியை இந்தியாவில் புனேயிலும், பின்ன‌ர் மேற்படிப்பை பிரான்சிலும் மேற்கொண்ட‌வ‌ர். இப்போது மீண்டும் -நான்கு வ‌ருட‌ இடைவெளியின்பின்- த‌ன‌து இர‌ண்டாவ‌து ப‌ட‌மான‌ Between Two Worlds என்ற‌ ப‌ட‌த்தோடு வ‌ந்திருக்கின்றார்.. ஏற்க‌ன‌வே வெனிஸ் திரைப்ப‌ட‌ விழாவில் திரையிட‌த்தெரிவான‌ இத்திரைப்ப‌ட‌ம் இமமாத‌ம் ரொற‌ண்டோவில் நிக‌ழ்ந்த‌ ச‌ர்வ‌தேச‌த் திரைப்ப‌ட‌விழாவிலும் தெரிவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. .மிக‌க் குறைவான‌ உரையாட‌ல்க‌ளையும், நிறைய‌ப் ப‌டிம‌ங்க‌ளாலான‌ கவித்துவ‌க்காட்சிக‌ளையும் கொண்ட‌ விமுத்தியின் ப‌ட‌ங்க‌ளில் சாதார‌ண‌மாய் ஒருவ‌ரால் அவ்வ‌ள‌வு எளிதில் நுழைந்துவிட‌முடியாது..மிக‌ மெதுவாக‌வும், நேர்கோட்டுத்த‌ன்மை அற்ற‌ காட்சிக‌ள் ஒன்றுக்கு ஒன்று தொட‌ர்பில்லாது அடிக்க‌டி மாறிக்கொண்டிருக்கும் இத்திரைப்ப‌ட‌ங்களைப் பார்க்க‌த் த‌ன்னைத் த‌க‌வ‌மைத்துக்கொள்ளாத‌ ஒரு பார்வையாள‌ரை இத்திரைப்ப‌ட‌ங்கள் த‌ம்மிலிருந்து வெளியே எற்றி எறிந்துவிட‌வே செய்யும். Between Two Worlds என்கின்ற இத்திரைப்ப‌ட‌ம் தொட‌ங்குவ‌த‌ற்கு முன், ஒரு சிறு அறிமுக‌த்தை விமுக்தி த‌ரும்போது, "ஏற்க‌ன‌வே இப்ப‌ட‌த்தைப் பார்த்த‌ ப‌ல‌ர் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டினமான‌ ப‌ட‌ம் என்றே கூறியிருக்கின்றார்க‌ள். இது ப‌ல‌ puzzleக‌ளைக் கொண்ட‌ ஒரு திரைப்ப‌ட‌ம். ப‌ட‌ம் முடியும்போது நீங்கள் puzzleளைப் பொருத்தி உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும்" என்றிருந்தார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌ம் பார்வையாள‌ருக்குரிய‌ திரைப்ப‌ட‌ம்; .puzzleக‌ளை மாற்றி மாற்றி அடுக்குவ‌த‌ன் மூல‌ம் பார்ப்ப‌வ‌ர் த‌ன‌க்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும். ஒருவ‌ர் உருவாக்கும் க‌தையும், ப‌ட‌த்தைப் பார்க்கும் ம‌ற்றொருவ‌ர் உருவாக்கும் க‌தையும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்ற‌ எந்த அவ‌சிய‌மும் இல்லை. இதை இன்னொருவித‌மாய் இது த‌ன்ன‌ள‌வில் பார்ப்ப‌வ‌ரின் சூழ‌லுக்கும், அனுப‌வ‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌ க‌ண‌ந்தோறும் மாறிக்கொள்ளும் பிர‌தியென‌ எடுத்துக்கொள்ள‌லாம். ஆனால் ஒற்றைத்த‌ன்மையிலும், நேர்கோட்டுக்க‌தைச் சொல்ல‌லிலும் ஊறியிருக்கும் ந‌ம்மில் எத்த‌னைபேர் இத்திரைப்ப‌ட‌ம் த‌ரும் சுத‌ந்திர‌த்தை அனுப‌விக்க‌த் த‌யாராக‌ இருக்கின்றோம்? கட்டற்ற சுத‌ந்திர‌ம் என்ப‌து சில‌ருக்குப் பிடிக்காதுபோல‌ இத்திரைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌வித‌மும் ப‌ல‌ருக்குப் பிடிக்காது போக‌வும் கூடும்.

2
ஒருவ‌ன் ம‌லையுச்சியிலிருந்து க‌ட‌லுக்குள் வீழ்வ‌துட‌ன் ஆர‌ம்பிக்கும் முத‌ற்காட்சி, அவ‌ன் திரும்ப‌வும் ம‌லை மீதேறி ந‌க‌ருக்குள் நுழையும்போது ந‌க‌ர் க‌ல‌வ‌ர‌த்தின் அந்த‌ர‌த்தில் மித‌க்க‌த் தொட‌ங்கியிருக்கின்ற‌து. தெருவில் போகின்ற‌வ‌ர்க‌ளை அடித்துத் துவைத்து க‌டைக‌ளையெல்லாம் நொறுக்கிய‌ப‌டி குழுக்குழுவாய் இளைஞ‌ர்க‌ள் கூக்குர‌லிட்ட‌ப‌டி இருக்கின்றார்க‌ள். க‌ல‌வ‌ர‌த்தின் ந‌டுவில் ப‌யந்து ந‌டுந‌டுங்கிய‌ப‌டி ஒரு பெண்ணிருப்ப‌தைப் பார்த்து, க‌ட‌லில் விழுந்து ந‌க‌ர் மீண்ட‌ இளைஞ‌ன் அவ்ளைக் காப்பாற்றுகின்றான். சீன‌ச்சாய‌லுடைய‌ பெண்ணை இவ‌ன் (திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்திற்கு பெயர் எதுவும் இருக்காததால் அந்தப் பாத்திரத்தை 'இவன்' எனக்குறிப்பிடுகின்றேன்) இன்னொருத்த‌னின் வானில்(Van) ஏற்றிய‌ப‌டி நீண்ட‌வீதியினூடாக‌ கிராம‌ப்புற‌த்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார்க‌ள். 'உன்னை வ‌ன்புண‌ர்ந்த‌வ‌ர் யாரென்று தெரியுமா' என அந்த‌ப் பெண்ணிட‌ம் கேட்கும்போது, 'உன்னைப் போன்ற‌ சாய‌லுடைய‌ ஒருவ‌ன்' என்கிறாள் அந்த‌ப்பெண். வானிற்குள் வைத்து -காப்பாற்றிப்போகும்- பெண்ணை வ‌ன்புண‌ர‌ இவ‌ன் துடிக்கின்ற‌போது, வானை ஓட்டிக்கொண்டு வ‌ருகின்ற‌வ‌ர் அதற்கு இடைஞ்ச‌லாய் இருப்ப‌து புரிகின்ற‌து. இப்ப‌ய‌ண‌த்தின்போது சீனாவில் ஒரு நகரில் ப‌ல‌ தொலைத்தொட‌ர்புச்சாத‌ன‌ங்க‌ளைத் த‌க‌ர்த்த‌ப‌டி போராளிக‌ள் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்றொரு செய்தி -வானின் வைத்து கேட்க‌ப்ப‌டும் வானொலியில்- சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து (ம‌றைபொருளாய் இல‌ங்கையிலிருக்கும் போராளிக‌ள் என்றும் அர்த்த‌ம் கொள்ள‌லாம்). ப‌ய‌ண‌த்தின் ந‌டுவில், இவ்வாறு காம‌த்துட‌ன் பித்தேறியிருக்கும் இவ‌னை அடித்துப்போட்டுவிட்டு அந்த‌ப்பெண்ணும், சார‌தியும் வானில் ஏறித் த‌ப்பிப்போகின்றார்க‌ள்.

இவ‌ன் மீண்டும் த‌ன‌து கிராம‌த்திற்குப் ப‌ஸ்சில் போகின்றான். ஊரிலிருப்ப‌வ‌ர்க‌ள் 'ஊருக்கு ஏன் இவ்வ‌ளவு விரைவில் திரும்பி வ‌ந்தாய்?' என்று கேட்டு, 'தெருவில் திரியாதே அவ‌ர்க‌ள் சுட்டுப்போட்டுவிடுவார்க‌ள், காட்டுப் பாதையால் போய் எங்கையாவ‌து ஒளிந்துகொள்' என்கின்றார்க‌ள். அவ‌னைப் போன்ற‌ ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள் அதிகார‌ அமைப்பின் வ‌ன்முறைக்குப் ப‌ய‌ந்து ஊரைவிட்டு ஒதுங்கி காட்டுப்ப‌க்க‌மாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தை ஒரு சிறுவ‌னின் துணைகொண்டு இவ‌ன் அறிகின்றான். .தானும் அவ‌ர்க‌ளோடு ப‌துங்கிவாழ‌ இவ‌ன் த‌யாராகின்ற‌போது, தான் வ‌ந்த‌ வான் குள‌மொன்றில் க‌விழ்வ‌தைக் காண்கின்றான். இவ‌ன் விரைவாக‌ ஓடிப்போய் குள‌த்தைப் பார்க்கின்ற‌போது அங்கே வான் விழுந்த‌த‌ற்கான‌ எந்த‌ அடையாள‌மும் இல்லை.. குள‌த்தினுள் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு முதிய‌வ‌ரிட‌ம் இது குறித்துக் கேட்கும்போது, 'வான் எதுவும் குள‌த்தினுள் இப்போது விழ‌வில்லை. ஆனால் முன்னோர் கால‌த்தில் இப்ப‌டியோரு ச‌ம்ப‌வ‌ம் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌து எதுவும் இனி நிக‌ழாது என்றும் அறுதியிட்டுக் கூற‌முடியாது' என்கிறார். இப்போது அடுத்த‌ காட்சி மாறுகின்ற‌து.

3.
ஒரு முதியவ‌ரும் இளைஞ‌னும் ந‌ல்ல‌ வெறியில் க‌ட‌லையொட்டிய‌ குன்றொன்றில் அம‌ர்ந்திருக்கின்றார்க‌ள். முதிய‌வ‌ர் க‌தையொன்றைச் சொல்ல‌ப்போவ‌தாய்க் கூறுகின்றார். ஆனால் க‌தையின் ந‌டுவில் எதுவும் கூறி க‌தையை வேறு வித‌மாக‌ மாற்றக்கூடாது என்று இளைஞ‌னை எச்ச‌ரிக்கின்றார். க‌தை: ஒரு நாட்டின் அர‌ச‌னுக்கு இர‌ண்டு ம‌க‌ன்க‌ளும் ஒரு ம‌க‌ளும் இருக்கின்றார்க‌ள். எதிர்கால‌த்தில் இந்த‌ அர‌ச‌னின் ம‌க‌ள் திரும‌ண‌ஞ்செய்து அவளுக்குப் பிற‌க்கின்ற‌ ஆண் குழ‌ந்தை, அவ‌னின் இரு மாம‌ன்க‌ளையும் கொன்றுவிட்டு அரசாட்சியைக் கைப்ப‌ற்றுவான் என்று சோதிட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்றார்க‌ள். இத‌ன் நிமித்த‌ம், எவ‌ரையும் திரும‌ண‌ஞ்செய்து குழ‌ந்தை பெறாதிருக்கும் நோக்கில், அரச‌னின் ம‌க‌ள் ஒரு தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌டுகின்றாள். ஆனால் ஏதோவொரு வ‌கையில் அவ‌ள் கர்ப்ப‌ம‌டைந்து ஒரு ஆண் குழ‌ந்தையைப் பெற்று விடுகின்றாள். வ‌ள‌ர்ந்துவ‌ரும் அந்த‌ இள‌வ‌ர‌ச‌னைக் கொல்ல‌ இர‌ண்டு மாம‌ன்க‌ளும் முய‌ல்கின்றார்க‌ள். இறுதியில் அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ விதம் ப‌ற்றிப் ப‌ல‌ க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒன்று: இள‌வ‌ரச‌ன் குறித்த‌ ச‌ரியான‌ அடையாள‌ந்தெரியாத‌தால், அந்நாட்டிலுள்ள‌ அவ‌ன் வ‌ய‌தொத்த‌ அனைத்து இளைஞ‌ர்க‌ளையும் கொலைசெய்ய‌ அவ‌ன‌து மாம‌ன்மார்க‌ள் க‌ட்ட‌ளையிட்டார்க‌ள் என்று க‌தை சொன்ன‌ முதிய‌வ‌ர் கூறுகின்றார். அதைக் க‌தை கேட்ட‌ இளைஞ‌ன் ம‌றுத்து, அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் த‌ன‌து தோழ‌ர்க‌ளுட‌ன் நீராடிக்கொண்டிருந்த‌போது அவ‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு கொல்லப்படுகின்றார்கள், எனினும், இள‌வ‌ர‌ச‌ன் தப்பிப்போய் ஒரு ம‌ர‌ப்பொந்தில் போய் ஒளிந்துகொள்கின்றான் என‌வும், அவ‌ன் இன்ன‌மும் அந்த‌ ம‌ர‌ப்பொந்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து என்றும் க‌தையை வேறுவித‌மாய் முடிக்கின்றான்.

4.
இதற்கு அடுத்து வரும் காட்சியில், . காட்டுக்குள் த‌ன் வ‌யதொத்த‌ -ப‌துங்கியிருக்கும்- இளைஞ‌ர்க‌ளைத் தேடும் இவ‌ன், த‌ன‌து அண்ணியின் வீட்டுக்குள் வ‌ருகின்றான். க‌ண்ணில் காய‌ம் ஏற்ப‌ட்டு ஒரு விழி திற‌க்க‌முடியாத‌ இவ‌னுக்கு அவ‌ர் முலைப்பால் விட்டு காய‌ம் ஆற்றுகின்றார். இடையில் இவ‌னுக்கு அண்ணி மீது உட‌ல்சார்ந்த‌ ஈர்ப்பு வ‌ர‌ அண்ணி அவ‌னை உத‌றித்த‌ள்ளுகின்றார். 'என‌து ராஸ்க‌ல் அண்ண‌ன் இனியும் திரும்பி வ‌ருவான்?' என்று நீங்க‌ள் நினைக்கின்றீர்க‌ளா என்று வினாவுகிறான். பின்னொரு பொழுதில் அண்ணி இவ‌னோடு ப‌ற்றைக‌ளுக்கிடையில் கூடுகின்றார். மீண்டும் இவ‌ன் சிறுவ‌னின் துணையுட‌ன் ஒளிந்திருக்கும் இளைஞ‌ர்க‌ளைத் தேடிப் போகின்றான். சிறுவ‌ன் ஒரு ம‌ர‌ப்பொந்தைக் காட்டுகின்றான். அருகே போகும்போது வெடிச்ச‌த்த‌ங்க‌ள் கேட்கின்ற‌ன‌. இவ‌ன் சிறுவ‌னின் ம‌ன்றாட்ட‌த்தையும் அல‌ட்சிய‌ம் செய்து ம‌ர‌த்த‌டிக்குப் போகின்றான். அந்த‌ ம‌ர‌ம் இள‌வ‌ர‌ச‌ன் தான் கொல்ல‌ப்ப‌டுவ‌திலிருந்து த‌ப்ப‌ ஒளிந்து கொள்வ‌தாய்த் தொம‌க்க‌தையில் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌ ம‌ர‌ம்.

இத‌ற்கிடையில் கிராம‌ம் எங்கும் கைக‌ள் ம‌ட்டும் வெளியே தெரியும் உட‌ல‌ங்க‌ள் தென்ப‌ட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. கிராம‌த்துக் குழ‌ந்தைக‌ளும், பெண்க‌ளும் பீதியுட‌ன் உறைந்த‌ நிலையில் இவ‌ற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். நாய்க‌ள் மாடுக‌ள் எல்லாம் கூட‌வே சுட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு முழு மாட்டைக் கோர‌மாய் கிழித்துண்ணும் க‌ரிய‌ நாய் சூழ‌லின் கொடூர‌த்தை ந‌ன்கு புல‌ப்ப‌டுத்துகின்ற‌து.. கிராம‌த்தில் எல்லா இய‌ல்ப‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌ன‌. இளைஞ‌ர்க‌ள் காணாம‌ற்போய்க்கொண்டிருக்கின்ற‌ க‌தையை வெளியே சொல்ல‌முடியாத‌ க‌ன‌த்த‌ சோக‌த்தை த‌ங்க‌ள் தொண்டைக்குழிக‌ளுக்குள் அட‌க்கிய‌ப‌டி கிராம‌த்த‌வ‌ர்க‌ள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்க‌ள்.அதேவேளை கிராம‌த்த‌வ‌ர்க‌ளின் நீர்த்தேவைக‌ளைப் பூர்த்திசெய்யும் குள‌மும் ந‌ஞ்சூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. பதுங்கியிருக்கும் இளைஞ‌ர்க‌ள் வெளியே வர, இவனும் அந்த இளைஞ‌ர்க‌ளும் ஒன்றுசேர்ந்து அக்குள‌த்தைச் சுத்திக‌ரிக்கும் ப‌ணியில் இணைந்துகொள்கின்றார்கள். ஒரு இயக்கமாய்ச் சேர்ந்து. குள‌த்தைச் சுத்திக‌ரித்து வெற்றியைக் கொண்டாடும்போது குதிரைக‌ளில் ஆயுத‌ங்க‌ளுட‌ன் வ‌ருப‌வ‌ர்க‌ள் கூடி நிற்கும் இளைஞ‌ர்க‌ளைத் அடித்தும் சுட்டும் கொல்ல‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். எல்லோரும் கொல்ல‌ப்ப‌ட‌ இவ‌ன் ம‌ட்டும் த‌ப்பிப்போய் ம‌ர‌ப்பொந்தில் ஒளிந்துகொள்கின்றான். காணாமற்போன‌ இவ‌னைத் தேடி சிறுவ‌னும், இவ‌ன‌து அண்ணியும் அலைய‌த்தொட‌ங்குவ‌துட‌ன் ப‌ட‌ம் முடிவுபெறுகின்ற‌து.

காட்சிக‌ளை அப்ப‌டியே ப‌திவாக்குவ‌து என்றால் இப்ப‌டித்தான் இத்திரைப்ப‌ட‌த்தின் க‌தையிருக்கும். விமுத்தி குறிப்பிட்ட‌துபோல‌ பார்ப்ப‌வ‌ர் இந்த‌ puzzleக‌ளை எப்ப‌டி அடுக்கித் த‌ன‌க்கான‌ ப‌ட‌த்தை உருவாக்குகின்றார் என்ப‌தில்தான் ப‌ட‌த்தின் முழுமை த‌ங்கிருக்கிற‌து. திரையிட‌லின் பின் ப‌ட‌ம் குறித்த‌ கேள்விக‌ளுக்கு, 'இந்த‌ப்ப‌ட‌த்தின் மூல‌ம் எந்த‌க் க‌தையைச் சொல்ல‌ விரும்புகின்றீர்க‌ள்?' என்று பார்வையாள‌ரிடையே இருந்து வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'நீங்க‌ள் யோசியுங்க‌ள் இப்போதில்லாவிட்டாலும் இன்னும் ஒருவார‌த்தில் உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தை உருவாகியிருக்கும்' என்று விமுத்தி ப‌தில‌ளித்திருந்தார்.. 'சில‌வேளைக‌ளில் இந்த‌ப்ப‌ட‌த்தை த‌ங்க‌ளின் ஜ‌தீக‌க் க‌தைக‌ளோடு இணைத்துப் பார்த்து இல‌ங்கைய‌ர்க‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முடியும், அத‌னாற்றான் எங்க‌ளால் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டின‌மாய் இருக்கிற‌தா?' என்றொருவ‌ர் கேள்வி எழுப்பிய‌போது, 'இதில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ க‌தை ம‌காவ‌ம்ச‌த்தில் வ‌ருகின‌ற‌து. ஆனால் ம‌காவ‌ம்ச‌த்தை வாசித்தால்தான் இந்த‌ப் ப‌ட‌ம் விள‌ங்கும் என்ப‌த‌ற்கு எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை' என்றும் விமுக்தி க‌வ‌னப்ப‌டுத்தியிருந்தார்.. ஒரு நேர்கோட்டு முறையில் சொல்லும் வ‌ர்த்த‌க‌ ஹொலிவூட் ப‌ட‌ங்க‌ளுக்கு தான் எதிரான‌வ‌ன் என்ப‌தை விமுக்தி ப‌திவு செய்த‌போது, அப்ப‌டியாயின் இத்திரைப்ப‌ட‌த்திற்கான‌ பார்வையாள‌ர்க‌ள் யாரென‌ வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'அது குறித்து நான் அக்க‌றைகொள்ளவில்லை. என்ன‌ளவில் எத்த‌கைய‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாரில்லை. ஆக‌க்குறைந்து அய்ந்துபேர் பார்த்தாலே போதுமான‌து' என்று விமுத்தி தெளிவாக‌வே கூறியிருந்தார்.

5.
இனி, என‌க்கு விள‌ங்கிய‌மாதிரி உருவாக்கிக்கொண்ட‌ க‌தை: இர‌ண்டுவித்தியாச‌மான‌ உல‌கு என்ப‌தை விமுக்தி ய‌தார்த்த‌திற்கும் புனைவுக்குமான‌ உல‌க‌ம் என்று குறிப்பிட்டிருந்தார். நான் இன்னும் எளிதாக்கி இது க‌ன‌வுக்கும் ந‌ன‌வுக்கும் இடையிலான‌ உல‌க‌ம் என்று பொருள் கொள்கின்றேன். உண்மையில் இந்த‌ க‌ன‌வு X ந‌ன‌வு என்கின்ற‌ இர‌ண்டு உல‌கை அவ்வ‌ளவு எளிதாக‌ எவ‌ராலும் வித்தியாச‌ப்ப‌டுத்த‌ முடியாது. நாம் ய‌தார்த்த்தில் இருக்கும்போதே ச‌ட்டென்று க‌ன‌வுல‌க‌த்திற்குப் போய்விட‌முடியும். இங்கே த‌ன்னை த‌டுத்துநிறுத்த‌ முய‌ல்கின்ற‌ சிறுவ‌னை இவ‌ன் த‌ரையில் அடித்துக்கொள்வ‌தும், த‌ன‌க்கு புண‌ர‌ முத‌லில் ச‌ம்ம‌த‌ம் த‌ராத‌ அண்ணியை க‌ல்லொன்றால் ச‌த‌க் ச‌த‌க் என்று இர‌த்த‌ம் பீறிட இவன் கொல்வ‌துமான‌ காட்சி யதார்த்த‌தில் நிக‌ழ்வ‌துபோல‌க் காட்ட‌ப்ப‌ட்டிருந்தாலும் இவைய‌னைத்தும் இவ‌னின் உள்ம‌ன‌தில் உருளுகின்ற‌ உல‌கில் வ‌ருப‌வையே. எனெனில் இறுதிக்காட்சிக‌ளில் இவ‌ன் பொந்தில் இருக்கின்ற‌போது தேடி உயிருட‌ன் மீள‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் இச்சிறுவ‌னும் அண்ணியுமே ஆகும். விமுத்தியிற்கு ப‌டிம‌ங்க‌ளைக் காட்சிப்ப‌டுத்துவ‌தில் பெருவிருப்ப‌ம் உள்ள‌தென்ப‌தால் எதையும் நேர‌டியாக‌ச் சொல்வ‌தற்காய் அதிக‌ நேர‌ம் செல‌வ்ழிப்ப‌தில்லை. அவ‌ர‌து முத‌ற்ப‌டமான‌ Forsaken Land லிலேயே, போரைப் ப‌ற்றிச் சொல்ல‌ப்பட்டாலும் போரின் நேர‌டி அழிவுக‌ளை எந்த‌வொரு காட்சியிலும் காட்சிப்ப‌டுத்தியிருக்க‌ மாட்டார்.. அதுபோல‌ அந்த‌ப்ப‌ட‌த்தில் அடிக்க‌டி ஒரு ப‌டிம‌மாய் வ‌ரும் க‌வ‌ச வாக‌ன‌மும் (ராங்கியும்) அது குறிப்பார்க்க‌த் திருப்புகின்ற‌ நீண்ட‌ குழாயும், 'ச‌மாதான‌ கால‌ம்' என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ கால‌த்திலும் போர் வாச‌ற்ப‌டியில் நின்று, எப்போதோ மீண்டும் நிக‌ழ‌த் த‌யாராகின்ற‌தென‌ நாம் எடுத்துக்கொள்ள‌லாம். இந்த‌ப் ப‌ட‌த்திலும் அவ்வாறான‌ ப‌டிம‌ங்க‌ளையே விமுக்தி ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌த்தில் வ‌ரும் இவ‌ன் ஒரு முன்னோர் கால‌த்தில் நிக‌ழ்வ‌தாய்க் கூற‌ப்ப‌டுகின்ற‌ க‌தையில் வ‌ருகின்ற‌ இள‌வ‌ர‌ச‌னின் இன்னொரு ப‌டிம‌மே. இங்கே வ‌ரும் அண்ணியும் கூட‌. அவர் மூன்றாம் முறையாக‌ இவ‌ன‌து காய‌த்தை ஆற்றுவ‌த‌ற்காய் த‌ன‌து முலைப்பால் கொடுக்கும்போது, இவ‌ன் கேட்கின்றான் எப்ப‌டி 'உங்க‌ளுக்குப் பிள்ளையில்லாம‌லே முலை சுர‌க்கிற‌து?' என்று. இதை நாம் அந்த‌ ஜ‌தீக‌க் க‌தையில் தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌ட்ட‌ இளவ‌ர‌சி எவ‌ருமேயின்றி எப்ப‌டி ஒரு ஆண் குழ‌ந்தைக்குத் தாயாகின்றாள் என்ப‌தோடு பொருத்திப் பார்க்க‌லாம். அதே மாதிரி இள‌வ‌ர‌ச‌னின் தோழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ நிக‌ழ்கால‌த்தில் இவ‌ன‌து ஊரைச் சேர்ந்த இளைஞ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். ஒரு கிள‌ர்ச்சி/க‌ல‌க‌ம் அழிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து என்று அதிகார‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ள் கொண்டாடுகின்ற‌போதும், இவ‌ன் பொந்தில் இருப்ப‌து என்ப‌து, போராட்ட‌த்திற்கான‌ கார‌ணி இன்ன‌மும் அழிந்துவிட‌வில்லை என்ப‌தைக் குறியீடாக‌க் கொள்ள‌லாம். இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை ஈழ‌த்தில் ந‌டைபெற்ற‌ இர‌ண்டுவித‌மான‌ உள்நாட்டுப் போர்க‌ளோடு ஒப்பிட்டுப் பார்க்க‌லாம்.. திரைக்க‌தை மேலோட்ட‌மாய் த‌னியொருவ‌னின் க‌தையைச் சொல்வ‌தாக‌ இருந்தாலும், அது ஒரு போராடிய ச‌மூக‌த்தின் க‌தையைத்தான் சொல்கின்ற‌து என்ற‌ நுட்பமான பார்வையை நாம் வ‌ந்தடைய‌ முடியும். ஈழ‌த்தில் ந‌டைபெற்று முடிந்த‌ த‌மிழரின் ஆயுத‌ப்போராட்ட‌ம், சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் 'சே குவேரா' (ஜேவிபி) கிள‌ர்ச்சிக‌ளுட‌ன் நாம் இணைத்துப் பார்க்கலாம். என்னைப் பொருத்த‌வ‌ரை அதிக‌மாய்ப் பொருந்திப் போவ‌து ஜேவிபியின் கிள‌ர்ச்சிக்கால‌ம் என்றே சொல்வேன். பிரேமதாசா ஜ‌னாதிப‌தியாக‌ இருந்த‌போது ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ சிங்க‌ள இளைஞ‌ர்க‌ள் மிக‌ மிலேச்ச‌த்த‌ன‌மாய் எந்த‌வித‌ சாட்சிக‌ளோ விசார‌ணைக‌ளோ இன்றி கொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். இல‌ங்கையின் தென்பாகம் எங்கும் ச‌ட‌லங்க‌ள் க‌ட‌லில் மித‌ந்த‌தாக‌வும் அரைகுறையாய் புதைக்க‌ப்ப‌ட்ட‌தாக‌வும் பின்வ‌ந்த‌ க‌தைக‌ள் சாட்சிய‌ம் கூறியிருக்கின்ற‌ன‌. இன்றைய‌ த‌மிழின‌ அழிப்பில் எவ்வாறு இந்தியாவின் கொடூர‌க்க‌ர‌ங்க‌ள் இருந்த‌ன‌வோ அதேபோல் சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் கிள‌ர்ச்சிக்கால‌த்தை ஒடுக்க‌வும் இந்தியாவின் இர‌த்த‌க்க‌ர‌ங்க‌ள் நீண்டிருந்த‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம்.

மானுட‌ விடுத‌லைக்கான‌ கல‌க‌ங்க‌ள் எவ்வ‌ளவு கொடூர‌மாய் அதிகார‌த்தின் க‌ர‌ங்க‌ளால் ஒடுக்க‌ப்ப‌ட்டாலும் அவை என்றேனும் ஒருகால‌த்தில் மீண்டும் திரும்பி வ‌ருவ‌த‌ற்கான‌ நிக‌ழ்த‌க‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையே இப்ப‌ட‌ம் உள்ளுறை உவ‌மமாக‌க் கூறுவ‌தாக‌த் தோன்றுகின்ற‌து.. இப்ப‌ட‌த்தில் ஒரு முதிய‌வ‌ர் அடிக்க‌டி வ‌ந்து வ‌ர‌லாற்றில் நிக‌ழ்வுக‌ள் அடிக்க‌டி மீள‌ நிக‌ழ‌க்கூடிய‌வை என்ப‌து இச்சாராம்ச‌த்தோடு இணைந்துபோக‌க்கூடிய‌துதான். விமுத்தியின் Forsaken Landயாய் இருந்தால் என்ன‌, இந்த‌ப் ப‌ட‌மாய் இருந்தாலென‌ன‌ அவ‌ருக்கு மிக‌ப்பெரும் வெளியைக் காட்சிப்ப‌டுத்துவ‌து பிடித்திருக்கின்ற‌து. Forsaken Landல் பொட்ட‌ல் வெளி என்றால், இங்கே காடு சார்ந்த‌ பெரு நில‌ப்ப‌ர‌ப்பு. அத்தோடு அதிக‌ காட்சிக‌ளில் க‌மரா அப்ப‌டியே அசையாம‌ல் ச‌ல‌ன‌ம‌ற்றிருக்கின்ற‌து; அது காட்டுகின்ற‌ வெளியில் ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள், பிற‌கு ம‌றைந்தும் போய்விடுகின்றார்க‌ள்.. அக‌ண்ட‌காட்சிகளாய் விரியும் ப‌ல‌ காட்சிக‌ளில் வ‌ந்துபோகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் மிக்ச்சிறிதாக‌த் தெரிகின்றார்க‌ள். இந்த‌ப் ப‌ட‌க்காட்சிக‌ள் ந‌ம‌து ம‌ன‌தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய‌வை. நம‌து வாழ்வில் எத்த‌னையோ ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள் போகின்றார்க‌ள், ஆனால் ந‌ம‌து வாழ்வு தொட‌ர்ந்து ஒரேயிட‌த்தில் நின்று இவை எல்லாவ‌ற்றையும் ச‌ல‌ன‌ம‌ற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌துபோல‌.

விமுக்தியின் பட‌ங்க‌ளை -ஏற்க‌ன‌வே குறிப்பிட்ட‌தைப் போன்று- சாதார‌ண‌ப் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் வேக‌த்திலோ, அதிர‌டியான‌ திருப்ப‌ங்க‌ளையோ எதிர்பார்த்தோ பார்க்க‌ முடியாது. முத‌ல் வ‌ரும் காட்சிக்கும் அடுத்த‌ காட்சிக்கும் க‌ட்டாய‌ம் தொட‌ர்பு இருக்க‌வேண்டும் என்ற‌ அவ‌சிய‌த்தையெல்லாம் விமுத்தி உடைத்துத்த‌ள்ளும் அதேவேளை சில‌ காட்சிக‌ள் மிக‌ மிக‌ மெதுவாக‌ ந‌க‌ர்கின்ற‌போது ச‌ற்று அலுப்பு வ‌ர‌ச்செய்வ‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும். இன்று விமுத்தியின் ப‌ட‌த்தை பார்த்து ஒரு க‌தையை உருவாக்கும் ஒரு பார்வையாள‌ர் நாளை அத‌ற்குத் தொட‌ர்பில்லாத‌ இன்னொரு க‌தையைத் த‌ன்ன‌ளாவில் உருவாக்கிக்கொள‌ள‌வும் முடியும். நாம் வாசிக்கும் ஒரு பிர‌தி வாசிக்கும் க‌ண‌ந்தோறும் த‌ன‌க்கான‌ க‌தையை மாற்றிக்கொள்ளும் மாய‌த்தை உள்ள‌ட‌க்கினால் எப்ப‌டியிருக்குமோ அப்ப‌டியே விமுத்தியின் இப்ப‌ட‌மும் ஒவ்வொரு காட்சியிலும் புதிர்க‌ளின் குறுக்குவெட்டுக்க‌ளால் புதிய கதைகளைப் புனைந்துகொள்ள‌ முனைகின்ற‌து. இந்த‌க் மாய‌ வித்தை சில‌ருக்கு வ‌ன‌ப்பூட்ட‌லாம், வேறு சில‌ருக்கு அலுப்பூட்ட‌லாம். அது க‌தைசொல்லியின் த‌வ‌றும‌ல்ல‌, க‌தைகளைச் ச‌துர‌ங்க‌க் க‌ட்ட‌த்தில் ந‌க‌ர்த்த‌ விரும்பும்/விரும்பாத‌ ந‌ம‌து த‌னிப்ப‌ட்ட‌ விருப்புக‌ள் சார்ந்த‌வை.

நன்றி: உன்னதம் & வைகறை