கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வரலாற்றின் பக்கங்களைப்புரட்டிய ஆதிமனிதன் - II

Monday, March 28, 2011

-ஹெச்.வி.ரசூல்
(நன்றி மணற்கேணி, பிப்ரவரி 2011)

(முந்தைய‌ பாக‌த்திற்கு)

புராதனமாக வாழ்ந்து அனுபவித்த மண்ணின் கலாச்சாரமும், வன்முறை பிதுக்கித்தள்ள சொந்த மண்ணைவிட்டு ஐரோப்பிய மண்ணைப் புகலிடமாக்கி வாழ்தலில் உருவான புலம்பெயர் சூழலின் கலாச்சாரமும் ஒன்றுக்கொன்று நினைவடுக்குகளிலும் மொழியடுக்குகளிலும் ஊடுருவிப் பரவுகின்றது. மேற்கத்திய வாழ்வு முறைக்கு ஆளாக்கப்பட்ட அகதி வாழ்வில் தன் பூர்வீக பண்பாட்டிலிருந்து பிடுங்கி வெளியே வீசப்பட்ட செடியின் இலைகள், கொம்புகள் உலர்ந்து போயிருந்தாலும் அதன் வேர்களில் ஈரப் பசபசப்பு இருப்பதைப் போன்று புகலிடக் கலாச்சாரச் சூழலின் அழுத்தத்தின் அடி ஆழத்தில் சொந்த பண்பாடு உரையாடலாய்க் குவிந்து கிடக்கிறது.  இதன் நிலப்பரப்பு, ஞாபகங்களின் உள் அடுக்குகளிலிருந்து உருவாகிறது.  இளங்கோவின் கவிதைகளிலும் இந்தப் பூர்வீகப் பண்பாட்டு வேர்களும் அழிக்கப்படாத ஞாபங்கங்களும் நெருக்கம் கொள்கின்றன.

மரணத்திற்குள் வாழ்தலையும், வாழ்தலுக்குள் மரணத்தையும் இளங்கோவின் கவிதைகள் பேசுகின்றன. தனது அப்பாவின் அப்பா தற்கொலை செய்த அந்தக் கிணற்றிலேயே தானும் ஒருநாள் தற்கொலை செய்வேன் என்றிருந்த துயரத்தையும் மரணத்தை உருவாக்கும் போரிலிருந்து தப்பித்தன் வழியாகத் தனக்கு வாழ்தலை உருவாக்கியுள்ள பெருந்துயரத்தையும் இளங்கோவின் கவிதை எழுத்துக்களில் பதிவு செய்கிறது.

அப்பாவின் அப்பா கோபத்தில்
தற்கொலைத்த அங்கேதான்
என்றோவோர் நாள் தவறி வீழ்ந்து
என் வாழ்வு முடியப்போகிறதென்று
நினைத்த பொழுதில்
ஆயுள் அதிகமெனத் துரத்தியது போர்

ஈழத்து ஒழுங்கைகளில் பின்மாலைப் பொழுதொன்றில் கரங்கள் கோர்த்து குதூகலமாய் நடந்ததொரு பிள்ளைப் பிராயம், ஒரு மழைக்காலத்தில் ஒற்றை வயலின் தந்தியின் சுருதியில் பெருங்குரலெடுத்துப் பாடிய ஆதிமொழியின் பாடலையும் பத்திரப்படுத்துகிறது. தனது இல்லாமையை அம்மாவுக்கு ஞாபகப்படுத்தக் கூடும் நத்தையைப் போல சுருண்டுகிடக்கும் போர்வையையும், மல்லிகைப் பூ வாசம் கமழந்தபடி இருந்திருக்கும் அந்த மண்ணில் கிளித்தட்டு விளையாட்டில் குழப்படி செய்த நண்பனைப் பறநாயேயென விளித்த உயர்சாதித் திமிரின் குரலும், இராணுவத்தால் சிதைக்கப்பட்ட தோழிக்கு முன்பொருகாலம் நாவற்பழம் பொறுக்கிக் கொடுத்த நினைவுக‌ளுமென‌ இந்தப் பூர்வீக மண்ணின் ஞாபகங்கள் எல்லாவித சந்தோசங்களுடனும் ஆற்றுப்படுத்த முடியாத துயரங்களுடனும் வரைபடமாய் விரிகிறது. தென்னை சூழந்த கடற்கரையில், ஊரின் ஞாபகம் அலையலையாய்க் கிளம்ப விழிகள் இரண்டிலும் ஈரம் கசிந்த ஒரு நாடற்றவனின் குறிப்பாக இந்த எழுத்துக்கள் உருக்கொண்டு அலைகின்றன.

புலம்பெயர் மண்ணில், நோயுற்றிறந்த அம்மம்மாவை நினைவுபடுத்தி அடிக்கடி பஸ்ஸில் பயணிக்கும் தமிழ் மூதாட்டியின் தனிமை, அலைச்சல், துயரம், மெளனம் தொடர்கிறது. அந்நியப்பட்டுப் போன அப்பெண்ணைக் கடந்துபோகும் மனது, இந்த வயதான பெண்களுக்கு எங்கள் சொந்த மண்ணில் எப்படியொரு வாழ்வு இருந்திருக்கக் கூடும் என ஏக்கம் ஒன்றைப் பதிலாகக் கூறுகிறது. சித்ரா பவுர்ணமியன்று ஊர் வைரவர் கோயில் ஞாபகத்திற்கு வருகிறது.

மூன்றாம் தத்தைக் கடந்துவிட்டால் வாழ்வு சுபம் என அடிக்கடி சொன்ன அம்மாவின் வார்த்தைகளும், கீரிமலைக் கேணியில் பாசி வழுக்கி மூழ்கி அதிசயமாய்த் தப்பிப் பிழைத்ததையும், ஒற்றை எஞ்சினுடன் பதினொரு படகுகளில் சவாரி செய்து, தாய் தேசத்திலிருந்து மீண்டு சென்ற கடலின் தத்தையும் ஞாபகச் சூழல்களில் எழுதிச் செல்கிற இளங்கோவின் வரிகள் புலம்பெயர் சூழலில் ஆழ்கடல் தேடி மாறி மாறி வலிக்கும் கானாய் சவாரி உடனான உரையாடலையும் நிகழ்த்திக் காட்டுகிறது. இரு வேறு வாழ்வுலகங்களின் சந்திப்பு இது.

இளங்கோவின் கவிதை முன்னிலைப்படுத்தும் தான் என்பதற்கு மாற்றான மற்றமை பல்வித நிலைகளில் வாசகனுடன் தொடர் உரையாடலை நிகழ்த்துகிறது. காதலின் பிரிவாகவும் அதுவே மற்றொரு நிலையில் புலம்பெயர்தலின் பிரிவாகவும் இணை நிலையில் இயங்குகிறது. இக்கவிதைகளில் வெளிப்படும் நீ/உன் என்பதான எதிர்தரப்பு குறித்த நானின் புரிதல், சிதைவுகளின், அவநம்பிக்கையின் பதற்றத்தின் வரிகளாக விரிவடைகின்றன. இந்த 'நீ'யும் ஒற்றைத்தன்மையை மீறி இயங்குகிறது. ஒரு பெண்ணின் கடந்தகால துயர் நிறைந்த வாழ்வும் புலம்பெயர்ந்த மனிதனின் துயர் பெருக்கெடுத்து ஓடும் வாழ்வும் இங்கு சந்தித்துக் கொள்கின்றன. வெறுமையின் தடங்களை அழிப்பதன் மர்மமாய் ஏதோ ஒரு பெண்ணின் வருகை நிகழ்கிறது. அந்த 'நீ' யாரேனும் ஒருவனின் காதலியாகவோ அல்லது குழந்தையொன்றின் தாயாகவோ கூட இருக்க நேர்கிறது. தனிமையின் வலி உச்சப்படுகையில் அதனை ஒரு பூச்செடியாக வளர்த்து பகிரமுடியாத ஆசைகளையும் பிரியங்களையும் அச்செடியின் இலைகளாகவும் கனிகளாகவும் மலர வைக்கிறது. அந்த 'நீ'யின் வருகையில் செடியின் உயிர் சாம்பல் நிற முயலாய் உருமாறுகிறது.

'எவரையும் அனுமதித்திராத/ என் தோட்டமடையும் புதர் படர்ந்த ஒற்றையடிப் பாதையில் மலர்ந்து வந்து/ பிரியம் கூறுகையில் செவியிரண்டும் சிலிர்க்க/ ஒரு சாம்பல் நிற முயலாய் மாறிவிடுகிறது/ எனது செடி.'

இந்த மாற்றுத்தரப்பின் 'நீ' ஒரு ஆண்மையத்தின் பாலியல் அதிகாரத்திற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கித் தவிக்கும் குரலாகவும் சன்னதமாக ஒலிக்கிறது. சென்றமுறை மாதவிலக்கு நேரத்தில் நெஞ்சில் தலைசாய்த்து கூந்தல் கோதிய முன்னிராப் பொழுதில் பரிவோடு இருப்பதைப் போல் பிறகும் நீ இருப்பாயா என்று அவனிடம் இறைஞ்சுகிறது. பாலியல் கலவியில் ஆடைகள் களைந்த மூன்றாம் ஜாமத்தில் தன் மூக்குத்தியை மூர்க்கமாய் பிடுங்கி எறியாமலிருக்க வேண்டிக் கொள்கிறது.

என்றாலும் இந்த இருப்பு நிலையற்ற உறவாய் மாறிவிடுகிறது. புரிதலற்ற, முரண்பட்ட, எதிரிடையாய் மோதுகின்ற ஒன்றான இந்த உறவுச் சிதைவின் கோலம் அழிக்கப்பட்ட சுவடின் ரூபமாகிறது. முதுகைக் காட்டிக் குழ்ந்தையாய்ப் போர்வையில் சுருண்டிருக்கும் அவளை விரல்களால் தீண்டவோ இழுத்து அணைப்பதற்கோ உரிய சாத்தியங்களை இல்லாமல் ஆக்கிவிடுகிறது. ஒட்டியிருப்பதை வெட்டி விடலாமென்றால் ரத்தம் தெறிக்கக் கத்தியை முதலில் யார் வீசுவதென்ற தயக்கமும் இருக்கிறது.

இந்த விலகலும் பிரிவும் இளங்கோவின் படிமங்களால் தொட்டுணர்த்தப்படுகிறது. அது அந்திவானத்தில் எதிர்த்திசைகளில் சிறகடித்துப் பறந்துபோய்த் துயர்களை மீட்டிய இரண்டு குருவிகளாகிறது. தேவாலயத்தின் உச்சியிலிருந்து பலகணியில் கரையொதுங்கிய புறாவின் சிறகுகளாகிறது. இந்தச் சிதைவின் படிமம் இன்னொரு தளத்தில் கந்தக‌வெடியையும், ரத்தச் சகதியையும் சுமந்தபடி ஒற்றைச் சிறகுடன் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளாகின்றன.

இளங்கோவின் கவிதைகளில் மரணத்தின் பயம் தொற்றிக் கொள்கிறது.

யன்னலோரத்தில் - நேசம்
நிரம்பி வழிந்த பொழுதில்
தந்திட்ட ஐந்தூரியச் செடி
இரையைக் கவ்வத் துடிக்கும்
மரநாயொன்றின் வன்மத்துடன்
அசையாதென்னைக் கவனிக்கிறது.

நேசத்தின் வெளிப்பாடு கொலை வெறிப் பகையாக உருமாறுகிறது. கொலைகளும் மரணங்களும் இடைவிடாது துரத்தியபடி இருக்கின்றன. ஓநாயின் பற்களில் பிரியம் வைத்தவர்கள் கோரமாய்த் தொங்குகின்றார்கள். ஒழுங்கு தவறாத லயத்தில் வேலை, உறக்கம், கணினி வாசிப்பு என்பதைப் போலக் கொலைகள் நிகழ்தலும் அன்றாட நிகழ்வாகிப் போகிறது. எனக்கொரு கொலை நிகழாக் காலம் வேண்டுமென மனது யாசிக்கிறது. இலையுதிர்த்த மரங்களின் கிளைகளில் தொங்கும் உறைந்துபோன பனியாக மனது இறுகுகின்றது. ஒவ்வொரு காலையும் தற்கொலை செய்வதற்கான தருணமாக மாறுகிறது.

புலம்பெயர் சூழலின் முக்கியப் பிரச்சினைகளாக, ஈழத்தின் நீட்சியாகத் தமிழ்க் குழுக்களுக்கிடையிலான படுகொலைகளும் புலம்பெயர்ந்த தமிழ் யுவதிகளின் தர்கொலைச் சாவுகளும் உறவின்மைகளும் மனோவியல் சிக்கல்களும் எழுகின்றன. இந்த வகை கனடிய தமிழ்ச்சூழலின் குரூர இறப்பின் எதார்த்த சுவடுகளை இளங்கோவின் கவிதைகளில் உணரலாம். அந்நியப்பட்டுப் போன மனத்தின் அவலம் சமூகம் நிறுவிய ஆதிக்கங்களின், ஒழுங்குகளின் புழுக்கம் தாங்காமல்

'கொண்டாடிக் கொண்டிருக்கின்றேன்
சமூகத்துடன் ஒன்றி வாழ முடியா
எனது சுயத்தை போதையுடன்'
எனச் சொல்லி சமரசப்படுத்துக்கொண்டு ஒரு விளிம்புநிலை வாழ்வைத் தேர்வு செய்துவிடுகிறது.

புலம்பெயர் வாழ்வு கலாச்சாரச் சிதைவை எதிர்கொள்கிறது. பாலியல் நெருக்கடியும் முரண்பாடும் மனத்தின் பிளவுகளும் உந்தித் தள்ளுகின்றன. நடுநடுங்கியபடி விரகமெழும் உறைபனிக்காலத்தில் கொஞ்சம் கொச்சைத்தமிழும் அதிகம் ஆங்கில‌மும் நாவில் சுழலும் அன்புத் தோழியுடன் மரபுகளைச் சிதைத்தபடி கலவியும் கிறங்கலுமாய்க் கழிகிற வாழ்வு பதிவாகிறது. மழைக்காலத் தெருவில், திசைகள் தெரியாப் புராதனத் தெருக்களில், ஒளியின் அரூப நடனத்துடன் பயங்களற்றுப் பயணிக்கிறது. மதுவருந்தி மயங்கும் வெள்ளியிரவுகள், நள்ளிரவுக்கப்பால் தொடர்கிற மதுவும் நடனமும், மதுபான விடுதியில் கோப்பையை நிறைக்கும் மது, நரம்புகளைத் துளைக்கும் இசை, எனக் களியாட்டங்களாய்ப் புராதன உலகத்திலிருந்தும் புலம்பெயர் உலகத்திலிருந்தும் வேறுபட்ட மூன்றாவது வெளி உருவாகிறது. புத்தர் கூட, அருந்துவதற்கு மிதமாய்க் கலந்து வைத்திருந்த வோட்காவைப் பகிர்ந்தபோது ஒவ்வொரு மிடறும் தாகத்திற்கு இதமாய் இருக்கிறதென்று கூறுகிறார். சில நேரங்களில் குறியென விறைத்து நிற்கும் துப்பாக்கி முனையின் நினைவு அச்சுறுத்துகையில் கலவியும் காமமும் கூடப் பயம் சார்ந்த வாழ்தலின் குறியீடாகவும் அதிகாரத்தின் பயமுறுத்தலாகவும் உருமாறிவிடுகிறது.

வீடற்றவர்களை நகரம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு செர்ரிப்பூ உதிர்ந்து நிலத்தை வந்தடைவதற்குள் கட்டவேண்டிய கடன் ரசீதுகள் மலைபோல் குவிகின்றன என்பதான புலம்பெயர்ந்தவர்களின் பொருளியல்சார் வாழ்வியல் நெருக்கடியும் வாழ்தலை துரத்துகின்றன. தரிசாகிக் கொண்டிருக்கும் மனத்தில் நீயொரு மரம் நட முயல்கிறாய் இதில் தளிரொன்று அரும்புவது அவ்வளவு இலகுவல்ல என வெறுமையின் தடத்தை வரைந்து காட்டுகிறது.

வாழ்தலை எதிர்நோக்கிய இருப்பிற்கு மாற்றாக மரணத்தை எதிர்நோக்கிய உடல்களின் இருப்பு தயாராகி விடுகிறது. இங்கு உடல்கள் எழுதும் காவியத்தின் முடிவாக மரணம் உருவகப்படுத்தப்படுகிறது. சுற்றிவளைக்கும் துப்பாக்கிகளுக்குக் காணிக்கையாக்கி சவப் பெட்டிகளுக்குள் சடலங்கள் அடுக்கப்படுகின்றன.

இருப்பின் சமன் குலைவு நிகழ, எதிர்பார்க்கப்பட்ட மரணம் என்பதைவிட எதிர்பார்க்கப்படாத தற்செயல் மரணமாக நிகழ்தலை மனது அறிவிக்கிறது. இது எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி குணடடிபட்டு இறக்கும் மரணம் என்பதைத் தாண்டி எதிரிகளை அழிப்பதற்கு உடலையே குண்டாக்கி அழிவின் எல்லையை எட்டும் மரணமாகிறது. எந்தவித அடையாளமற்ற, பெயரற்ற வனாந்தரத்தில் நிகழும் மரணமாக உருமாறுவதற்கும் மனம் தயார் நிலையாகிறது.

தடயங்களின்றி
இந்த ஆண்டு இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்புகிறேன் - எனது மரணத்தை.

இளங்கோவின் கவிதைகளில் இடம்பெறும் அழகியல் படிமங்களில் ஒன்று பனி.

இரவைப் பனிமூடிக்கிடக்க
விரல்களிலும் படிகிறது குளிர்
நிழல்களைப் போல அசைந்தாடுகிறது
கடந்தகாலத்தின் துயர்

இந்த வரிகள், கடந்தகாலத்தின் துயர் மிகுந்த வரலாற்றை ஞாபகப்படுத்துகிறது. இது ஈழமக்கள் மீது ஏவப்பட்ட ராணுவ வன்முறைகள், படுகொலைகள், பாலியல் சிதைப்புகள், கூட்டு வன்புணர்ச்சி, பலாத்காரம் என்பதான எல்லைகளினூடே பயணப்படுகின்றது.

வன்புணர்ந்துவிட்டு
கிணற்றிலும் கிரனைட்டிலும்
அடையாளங்களைச் சிதைத்துவிட்டு
எகத்தாளமாய்ச் சிரிக்கவும் செய்யுங்களடா

எனத் தொடரும் வரிகளில் ஈழப்பெண் கோணேஸ்வரியைப் பத்து இலங்கை காவலர்கள் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, கூட்டுப்புணர்ச்சி செய்து அடையாளம் தெரியாமல் சிதைக்க, யோனியில் கிரானைட் வைத்து வெடிக்கச் செய்த வன்கொடுமை மெளன வரலாய்ப் புதைந்துள்ளது.

இலங்கை ராணுவம் மட்டுமல்ல பன்னாட்டு ராணுவம் இலங்கைக்குள் நிகழ்த்தும் தமிழன் மீதான இன அழிப்பும் மிகக் கொடூரமானது. உள்நாட்டுப் போர்ச்சூழலில் முன்பு அமைதியை நிலைநாட்டுவதற்காய் சென்ற அமைதிப்படையினர் நிகழ்த்திய வன்கொடுமையும் இளங்கோவின் வரிகள் விமர்சனம் செய்கிறது.

எதிர்வீட்டு அக்காவின் ஆடைக்குள்
குண்டிருப்பதாய்
எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
அமைதியானவர்கள்
முலைகள் திருகிக் கூட்டாய்ப் படர்கையில்
அசையாய்ச் சாட்சிகளாவது
நானும் மதியவெயிலும்

இந்த வகை இழப்பீடுகளுக்கு மாற்றாக எதை முன்வைப்பது? அழிக்கபப்டும் உடல்களும் வாழ்வும் பழி தீர்ப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்கிற கேள்வி சமகால வாழ்வியல் தளத்தில் எழுப்பப்படுகிறது. எல்லா வாசல்களும் மூடப்பட்ட பதற்றமான சூழலில் மிச்சமிருக்கும் முள்வேலிகளுக்குள் வாழும் தமிழர்களின் மறுகுடியேற்றம் என்பதான சிந்தனையோட்டங்களே மிஞ்சுகின்றன. ஒரு படைப்பு நிலையில் நிகழும் சாத்தியம் என்பது பழிதீர்க்கும் படலமாகவே புனைவு எழுத்தில் தோற்றம் கொள்கிறது.

வரலாற்றின் இருண்ட குழிகளிலிருந்து
யோனிகளும் முலைகளும் எழுந்து வந்து
பூர்வீக நிலங்களிலிருந்து
அடியோடு வேரறுக்கும் இந்தப் பாவிகளை

என எழுதிச் செல்லும் இளங்கோவின் எழுத்தில் அழிக்கப்பட்டவற்றின் தீவிர அரசியல் மேலெழும்பி வருகிறது.

பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிய ஆதிமனிதன், தேவதைகள் மழைக்காலத்தில் அனுப்பிய நாககன்னியுடன் பிணைந்து மலர்வித்த குழந்தைகளின் குதூகலத்தை வந்திறங்கிய கடற்கொள்ளையர்கள் அபகரிக்கின்றனர். விரும்பியதைப் புனைந்து விரும்பியதை அருந்தி இயற்கையாய் வாழ்ந்த நாககன்னியை வன்மத்துடன் புணரத் துடித்த குறிகளின் வசீகரப் பேச்சால் ஆதிமனிதன் தன் சுயத்தைத் தொலைக்கிறான. ஒரு அமாவாசை இரவில் நாககன்னியும் பச்சைக்குத்தப்பட முடியா குழந்தைகளும் கொன்றொழிக்கப்படுகின்றனர். இந்த நாககன்னி தொன்மம் இழந்துபோன ஈழத்தின் குறியீடு. கொன்றொழிக்கப்பட்ட தமிழ் இனத்தின் வரலாறு.  அழிக்கப்பட்ட வரலாறு புனைவின் உச்சமாகி நம்முடன் செயலூக்கத்திற்கான உணர்வெழுச்சியைப் பகிர்ந்துகொள்கிறது.

(27.11.2011 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிய ஆதிமனிதன்

Sunday, March 27, 2011



-ஹெச்.வி.ரசூல்
(நன்றி மணற்கேணி, பிப்ரவரி 2011)

ஈழத்துப் புலம்பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப்படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ்ச் சகோதரப் போராளிக் குழுக்களிடையே வன்மமாக வளர்ந்துவிட்ட பகை சொந்த இனத்தின் அழிவின் துரத்தல்களாக வெளிப்படுகின்றன. கடலோரத்து கத்தோலிக்கத் தமிழ்க் கிறிஸ்தவமும் தமிழ் இஸ்லாமியமும் தமிழ் இந்து சமய அடையாளஙகளுடனான மோதல்களாகவும் வெளிப்பட்டுக் கொள்கின்றன. தமிழ் அடையாளங்களினூடே ஆதிக்கச் சாதிகளின் செல்வாக்கும் சமூகரீதியான ஒடுக்குமுறை தலித்துக்களின் மீது நிகழ்வதும் படிநிலை சாதீய கட்டுமானத்தைத் தக்கவைத்துக் கொள்வதும் நிகழ்கின்றன. இவற்றின் சூழலில் உயிர் அழிப்பையும், உடல் சிதைப்பையும் புலம்பெயர் படைப்புலகம் முன்னெடுத்துச் செல்கிறது.

இரண்டாயிரத்திற்குப் பிறகான ஈழத்துக் கவிஞர்களின் படைப்புகளிலும் புலம்பெயர் எழுத்துக்களிலும் நிலவியல்சார் ஒலிகளும் மண்சார்ந்த பெருந்துயர்களும் அனுபவ வெளியினூடே நீக்கமற நிறைந்துள்ளன. இக்காலகட்டத்தில் தீவிரமாக எழுதும் ஏறத்தாழ முப்பது கவிஞர்களையாவது அடையாளம் காட்டமுடியும்.

கிளிநொச்சி, வன்னிப்பகுதியின் பிரதேச அடையாளம் சார்ந்த போர்வதைத் துயரத்தையும் குழந்தைமையின் நிராதரவையும் தீபச்செல்வனின் பதுங்குகுழியொன்றில் பிறந்த கவிதை இவ்வாறாக எழுதிச் செல்கிறது. 'நான் கடும் யுத்தப் பேரழிவின்/ பிறந்ததாய்/ அம்மா சொன்னாள்/ எனது குழந்தையை நான் இந்தப் பதுங்கு குழியில்தான்/பிரசவித்திருக்கிறேன்.'

துவக்குகளின் அதிகாரமும் ராணுவ ஆதிக்கமும் பதற்றங்களே வாழ்வாகிப்போன யாழ்ப்பாண மண்ணின் சிதைந்த வாழ்வை, முகங்களைக் கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள் நடமாடத்தொடங்கிய பிறகு, குழந்தைகள் தெருக்களை இழந்தன என சித்தாந்தன பதிவு செய்கிறார்.

ஈழத்தின் கிழக்குப் பிரதேச வாழ்வுலகத்திலிருந்தும் அனுபவ வெளியிலிருந்தும் உருவாகிய அனார், பஹிமா ஜவஹான், அலறி, றஷ்மி உள்ளிட்ட கவிஞர்கள் படைப்புத் தளத்தில் தீவிரமாக இயங்குகிறார்கள். கவிதைப் புனைவின் வெளிப்பாட்டில் எதிர் அழகியலையும் மாற்றுபிரதிகளின் உருவாக்கத்தையும் செய்கின்ற ரியாஸ் குரானாவின் எழுத்துக்களும், இவ்வகையில் முக்கியமானவை.

இன்றின் புலம்பெயர் கவிதை எழுத்தைப் பேச முற்பட்டால் வ.ஜ.ச செயபாலன், சேரன், தமிழ்நதி, இளங்கோ, திருமாவளவன், த.அகிலன், நிவேதா, மாதுமை எனப் படைப்பாளிகளின் பட்டியல் நீண்டு செல்கிறது. எண்பதுகளில் எழுதத் துவங்கிய பழைய தலைமுறைப் படைப்பாளிகளிலிருந்து, சமகாலப் புதிய தலைமுறைப் படைப்பாளிகள் என இவ்வரிசை தொடர்கிறது.

முப்பது வயதே நிரம்பிய ஈழத்து இளம்படைப்பாளியான இளங்கோ யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்துப் போர்ச்சூழலில் தன் இளவயதிலேயே அலைக்கழிப்புக்கும், இடம்பெயர்வுக்கும் ஆளாகி தாயக மண்ணிலேயே அகதியாக அலைந்தவர். தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். ஈழத்தில் தான் வாழ்ந்த இருப்பிடம் இராணுவ உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் வருவதால் ஒருபோதும் ஊரையோ வாழ்ந்த வீட்டையோ மண்ணின் உறவுகளையோ பின்னாட்களில் பார்க்க முடிந்ததில்லை என எழுதுவார்.

டிசே தமிழன் எனும் மாற்றுப்பெயரில் இணைய தளங்களிலும், இலக்கிய இதழ்களிலும் படைப்பாளியாகவும் விமர்சகராகவும் அறியப்பட்டவர். இளங்கோ டாட் நெட் வலைப்பக்கத்திலும் இவரது எழுத்துக்களை வாசிக்க முடியும். பின்காலனியம், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலை எனக் கோட்பாடு சார்ந்த விவாத நிலைகளிலும் படைப்பிலக்கிய வெளிகளிலும் தொடந்த தனது உரையாடல்களின் மூலமாகப் புதிய திறப்புக்களைச் செய்பவர்.

தொன்மவியல் கதாபாத்திரங்கள் மீதான வரலாற்றை அழித்துத் திரும்பவும் சமகாலச் சூழலில் எழுதப்படும் மறு வ‌ர‌லாறாக‌ இளங்கோவின் கவிதைப் புனைவு உருவாகிறது. புத்தர் கவிதைப் பரப்பெங்கும் பன்மை மாதிரியாய் உருவெடுக்கிறார். தமிழ் அடையாள மீட்பில் விகாரையிலிருந்து வெளியேறிய புத்தரும் பங்கெடுத்துக் கொள்கிறார். பூமியெங்கும் பரப்பிவைக்கப்பட்ட கண்ணிவெடியில் ஒற்றைக் காலினை இழந்து ஊர் வைரவர் புத்தருக்கு அடைக்கலம் கொடுத்து, தெய்வநிலையிலிருந்து புனைவு நீக்கம் செய்து ஒரு கிராமத்து மனிதனின் சகலவிதமான ஆசாபாசங்களோடு கள்ளுக்கொட்டிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

புனித விகாரையிலிருந்து வெளியேறிய புத்தர் தனது நீங்கலுக்கான காரணமாகச் சீடர்களான பெளத்த பிக்குகளின் நிலைப்பாடு முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் அவர்களது முன் படைக்கப்பட்ட குவளைகளில் நிரம்பி இருப்பது ரத்தம்.  இந்த ரத்தம் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் ரத்தமென்பதை வாசகன் தன்னுணர்வாக புரிந்துகொள்ள முடிகிறது. தியானமும் துறவும் அர்த்தமற்ற வெளிப்பரப்பில் பொருளற்றுப் போகின்றன.

'நேற்று என்கனவில்/ புத்தர் பெருமான் சுடப்பட்டிருந்தார்/ சிவில் உடை அணிந்த அரசகாவலர் அவரைக் கொன்றனர்/ யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே/ அவரது சடலம் குருதியில் கிடந்தது' என எண்பதுகளில் நுஃமான் எழுதிய புத்தனின் கொலை கவிதையையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம். ஹம்சத்வனியின் புத்தனின் நிர்வாணம் என்றதொரு கவிதை 'மூடிய விழிகளைத் திறந்து பார்த்தபோது/அவனது கால்களை நனைத்தது குருதி ஆறு/ உலகை வெறுத்து போதி மரத்தில் தூக்குப்போட்டுச் செத்தான் புத்தன்' எனப் புத்தனின் மரணத்தைப் பேசியது. பூர்வீக பெளத்தம் அரச பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளதை இக்கவிதைகள் குறிப்பீடு செய்கின்றன.

இளங்கோவின் கவிதையில் தான் நம்பிய துறவும் தியானமும் அதன் பூர்வீகச் சாரத்தை இழந்துவிட்ட சமகால இருப்பின் துயரம் நெட்டித்தள்ள வனம் நீங்கி புத்தன் பதற்றத்துடன் தன் இல்லம் நோக்கித் திரும்புகிறார். மற்றுமொரு கவிதையில், சாம்பர் பூத்திருந்த அடுப்பிலிருந்து தூசி தட்டியபடி புத்தர் உயிர்த்தெழுந்து வருவதும் நிகழ்கிறது. நவீன வாழ்வியல் சூழலின் நெருக்கடிகளில் மறு உயிர்ப்பு பெற்ற புத்தரால் ராப் பாடலுக்கு ஆடவும் தெரிகிறது. எனினும் ஒரு கவிதையின் முடிவு இவ்வாறாக எழுதப்படுகிறது.

நேரம் நள்ளிரவைக் கடந்தபோது
வெறுமையான மதுக் கோப்பைகளையும்
சில நட்சத்திரங்களையும் துணைக்கு விட்டுவிட்டு
புத்தரும் எனது நான்கு வயது மகளும்
காணாமற் போயிருந்தனர்

ஈழத்துச் சூழலில் நிகழும் சிறார் கடத்தலும் அவர்கள் மீதான வன்முறையும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு அழிக்கப்பட்ட பெண்குழந்தைகளின் துயரமும் மாற்று உருவில் இவ்வரிகளினூடே உயிர்ப்பு பெற்றுள்ளது.

அரச வாழ்வையையும் யசோதரா, ராகுலன் என மனைவி குழந்தை குடும்பத்தையும் விட்டு விலகி சித்தார்த்தனை புத்தனாக மாற்றியது எதுவெனும் கேள்வி தொடர்ந்து கேட்டபடி இருக்கிறது. புத்தனின் கண்களில் பெருகும் அமைதி இதயத்தில் உயிர்ப்புடன் கசிந்து பரவுகிறது என்றாலும் புத்தனின் மனைவி யசோதரா ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும்போதுதான் அந்த அறையிலிருந்து யதோதராவுக்குத் தெரியாமலேயே புத்தர் வெளியேறுகிறார். இந்தப் புறக்கணிப்பின் வெளிப்பாடாகவே இளங்கோவின் யசோதரா மறு உருவாக்கம் பெறுகிறாள். வரலாற்றின் சொல்லப்படாத, மெளனப்படுத்தப்பட்ட பக்கங்களிலிருந்தும் புனைவு கட்டி எழுப்பப்படுகிறது. அறியப்படாத கதை மாந்தர்களின் வருகை நிகழ்வுகளின் சுழல்களோடும் ரணங்களோடும் நானை அழித்த இன்னொன்றாக கவிதைக்குள் பிரதிநித்துவம் பெறுகிறது.

யசோதரா இந்த வகையில் புனிதங்களையும் பராம்பரிய பெருமைகளையும் இழந்துபோன ஒரு அகதி சித்திரத்தின் புலம்பெயர்ந்த குறியீடு. மூலைக்கடை முடக்குத்தெரு பெஞ்சில் வரலாற்றில் தன்னந்தனிமையாய் புத்தனால் கைவிடப்பட்ட யசோதரா தென்படுகிறாள். அகதியாக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட யசோதராவின் இருப்பு சோகமயமானது. பெண் சார்ந்த இருப்பும் காயங்களும் வேறுவிதமானவையென கூறிய யசோதரா செய்யாத தொழிலுக்காகச் சம்பளம் பெறுவதில்லை எனவும் கூறுகிறாள். நவீனத்துவ மேலை வாழ்வின் சாயல் யசோதராவின் மீதும் படர்கிறது. நெடுமிரவில் கண்கூசா வெளிச்சத்தில் கிறீக் உணவும் வைனும் அருந்தி தன் உணர்வுகளை சிகரெட் புகைக்குள் மறைத்தபடி உரையாடிக் கொண்டிருப்பவளாகவும் மாறுகிறாள்.

தமிழ்நதி தன் கவிதையொன்றில் யசோதராவைச் சித்திரப்படுத்துகையில் சாளரத்தின் ஊடே அனுப்பிய/ யசோதரையின் விழிகள் திரும்பவேயில்லை/ பெளர்ணமி நாளொன்றில் அவன் புத்தனாகிறான்/ இவள் பிச்சியாகினாள்-- என எழுதிச் செல்வார். சுழலும் ஒளிவட்டங்களின் பின்னாலிருக்கிறது கவனிக்கப்படாத இருட்டென புத்தனின் மீதும் துறவற ஞானத்தின் மீதும் விமர்சனக் குறிப்பை முன்வைத்து யசோதராவின் மறைக்கப்பட்ட அவலத்தை தமிழ்நதி உணர்த்துகிறார்.

புத்தனோடு தொடர்புறுத்தப்பட்ட தொன்மக் கதையாடல்களில் குவேனியும் கவிதைக்குள் மறு உருவாக்கம் பெறுகிறாள். முதல் சிங்கள மன்னனாகக் கருதப்படும் விஜயனால் முன்னர் திருமணம் செய்யப்பட்டு பாண்டிய நாட்டு இளவரசியை இரண்டாவதாக மணந்து அரசனாக முடிசூட்டிய பின் நாட்டைவிட்டே துரத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்ட தீவொன்றின் குலராணி குவேனி. குவேனியும் புத்தனும் பெளத்த பழங்குடி மரபின் இரு அடையாளங்கள். சங்கமித்ராவின் ஆவேசமும் ஊழிநடனமும் புத்தரின் நட்பிற்கு எதிரான எதிர்ப்பின் வெளிப்பாடாகப் படர்கின்றன. அரசமரக்கிளைக்குப் பதிலாக சங்கமித்ராவின் கரங்களில் கொடும் ஆயுதங்கள் முளைக்கின்றன. இந்தக் கொலை வதைப்படலத்தில் புத்தர் குவேனி எனும் இரு சடலங்கள் காலப்பெருவெளியில் மிதக்கின்றன.

வன்முறையும் மரணமும் இருப்பின் யதார்த்தம். இதன் மீள் பிரதியாக்கமே வெவ்வேறான அளவீடுகளில் வெவ்வேறான தொன்மக் கதையாடல்களுடனான கதாபாத்திரங்களோடு கவிதையில் புனைவாய் மாறுகின்றன. யுத்ததிற்கும் அமைதிக்குமான போராட்டம் எல்லையில்லாப் பெருவெளியில் தொடர்ந்து நடக்கிறது. அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான இந்த ஈர்ப்பு சிங்கள இனவாதமாகவும் ராணுவ மேலாதிக்கமாகவும் தமிழர்களின் மீதான இன அழிப்பாகவும் சமகால வாழ்வில் அர்த்தம் பெறுகின்றன.

இளங்கோவின் கவிதைகள் தொடர்ந்து மரணத்தின் பதற்றத்தை எழுதிச் செல்கின்றன. வாழ்தலுக்கும் மரணத்திற்குமான இடைவெளியும் தூரமும் குறைந்து கொண்டே வருகின்றது. மகிழ்ச்சியும் துயரமும் இடைவிடாது துரத்தியவண்ணம் உள்ளது.

'ரைபிளை துடைத்தபடிக்கு/ காதலிக்கு முத்தம் கொடுப்பேன்' என முற்றுபெறாத காதலுக்கும் யுத்தத்திற்குமான உணர்வெழுச்சி வ.ஜ.ச.செயபாலனின் வரிகளில் முன்பு வெளிப்பட்டது. இளங்கோவின் கவிதை இவ்வுணர்ச்சியை வேறு விதமாகப் பிரதியாக்கம் செய்கிறது. வாழ்தலுக்கும் மரணத்திற்குமான இடைவெளியை அக்கவிதை வரிகள் இவ்வாறு எழுதிச் செல்கிறது.

ஒரு முத்தத்தையும்
இன்னொரு முத்தத்தையும் பிரிப்பது
வினாடிகள் அல்ல
விரலிழுக்கும் துப்பாக்கி விசை

இந்த முத்தம் காத‌ல‌ன்-காதலி என்ற ஒற்றைப் பரிமாணத்தைத் தாண்டி குழந்தைக்குத் தந்தை கொடுக்கும் முத்தமாகவும், மகனுக்குத் தாய் கொடுக்கும் முத்தமாகவும், போராளிக்குக் காதலி கொடுக்கும் முத்தமாகவும் இன்னும் பலவாகவும் அர்த்தங்களைப் பல்கிப் பெருக்கி உணர்த்துகிறது.

இரு முத்தங்களுக்கு இடையே கூட மரணம் காத்திருக்கிறது. இது இருப்பின் இல்லாமை சார்ந்த வெளிப்பாடாகும்.

இளங்கோவின் மற்றுமொரு கவிதை இவான் என்னுமொரு சிறுவனைப் பற்றியது. அந்த நீள் கவிதையை இவ்வாறாக வாசித்தும் பார்க்கலாம்.

இன்னமும் உருகிவழியும்
வெம்மையைத் தவிர்க்க
ஏசி நிறையுமென் அறையினுள் நுழைகிறான்
இவான் என்னுமொரு சிறுவன்
வெறுமையையும் முடிவிலா கவலையையும்
அறையினுள் அலையவிட்டு
மேசையில் குழந்தையொன்றின்
குருதி தோய்ந்த படத்தை
வெறித்துக் கொண்டிருப்பவனைக் கண்டு
பதற்றம் நிரம்புகிறது அவனது விழிகளில்
......
......

வந்த இவான்
இடையில் எங்கே போனானென
பதற்றத்துடன் வீடு திரும்புகையில்
முன்னர் மேசையிலிருந்த
குருதி தோய்ந்த குழந்தையின் படம்
இவானாய் மாறியிருந்தது.

யதார்த்தமும் புனைவும் ஒரு விசித்திரமாக மாறி நிகழும் வன்முறையின் துயரத்தைப் பதிவு செய்கிறது. மேசையின் மீது இருந்த குருதி தோய்ந்த படம் குழந்தையொன்றின் உடலாக மாறுகிறது. இருப்பிற்கும் இல்லாமைக்குமான நுண் உரு இது. சிறார் மரணங்களின் வருத்தமிகுந்த வலி நுட்பமான மொழியினூடாகக் கவிதைப் படிமமாக மாற்றுகிறது.

நாட்டார் தெய்வ -- பெளத்த கலாச்சாரங்களின் சந்திப்பு இளங்கோவின் கவிதைகளில் நிகழ்கிறது. மிதிவெடியில் காலை இழந்த ஊர் வைரவர் என்கிற கிராமப்புற நாட்டார் தெய்வ அடையாளம் மட்டுமல்ல, பிள்ளையாரெனும் பெருங்கதையாடலாகிவிட்ட கணேசரின் இருப்பும் பத்திரகாளியின் ஊழி நடனமும் கவிதைக்குள் நடமாடுகின்றன. தமிழர்களின் பாதுகாவலற்ற பதற்றமான இருப்பை இளங்கோவின் வரிகள் இவ்வாறாக கோணேசரின் குறியீட்டு மொழியின் வழி உணர்த்திச் செல்கிறது.

கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு

தமிழ் மூதாதைக்கவி கணியன் பூங்குன்றன் பேசிய யாதும் ஊரே யாவரும் கேளீர், விரிந்த தோழமை பூண்ட மண்ணின் உறவு சமகாலத்தில் சொந்த மண்ணை இழந்த நாடற்றவனின் துயரத்தோடு முரண்படுவதை இளங்கோவின் கவிதை வலிமிகுந்த சொற்களால் உருவாக்குகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும்
ஒற்றப் பாடலில் உயிர்த்திருக்கும் கணியனுக்கு
எப்போது திரும்பினாலும் காத்திருக்கும்
ஓர் ஊர் வாய்த்திருக்கலாம்

கணியனுக்கு வாய்த்த ஊர், புலம் பெயர்ந்த ஈழத்தமிழனுக்குக் கிடைக்காமல் போனதுதான் வலிமிகுந்த துயரம்.

சங்கத் தமிழ்த் தொன்ம கதாபாத்திரங்களில் ஒன்றான புறநானூற்று வீரத்தாய் படிமம் இளங்கோவின் கவிதைகளில் மறு உருவாக்கம் பெற்றுள்ளது. போரில் எதிர்களை வீழ்த்த முடியாமல் புறமுதுகிட்டு ஓடினான் என்றால் இரு முலைகளையும் அறுத்தெறிவேன் என்ற புறநானூற்றுத்தாய் போருக்காவும் அதன் வெற்றிக்காகவும் எதிரியின் அழிப்பிற்காகவும் சபதமேற்கிறாள். இத்தகைய போரின் மீது ஏற்றப்பட்டிருக்கும் புனிதங்களின் எதிர்மாறான தரப்பாக இளங்கோவின் கவிதை இயங்குகிறது. இது மிகை புனைவு தளத்தில் இயங்கும் கவிமொழியிலிருந்து வேறுபட்டது. யதார்த்த தளத்தில் போரின் வன்கொடுமையால் அழிக்கப்பட்ட மக்கள் வாழ்விலிருந்தும் சிதைவிலிருந்தும் பெரும் துயரிலிருந்தும் மறுதரப்பாய் இக் கவிமொழி இயங்குகிறது. போரில் இறந்துபோன தனது பிள்ளைகளை நினைவுகூரத் தன் முலைகளை அறுத்தெறிகிறாள் இந்தத் தாய். இளங்கோவின் கவிதைப் படிமம் இவ்வாறாக உள் எழுச்சியில் உருவாகி ஒரு புறச்சித்தரிப்பாய் உருவாகி நிற்கிறது.

புறமுதுகிட்டு பிள்ளை ஓடினானெனின்
முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய்
போரை விதந்தோத்திய
கவிஞர்களின் எழுதுகோல்களை நொறுக்கி
இறந்துபோன பிள்ளைகளை நினைவுகூர்கிறாள்
தன் முலைகளை அறுத்தெறிந்து.

என்றாலும் இன்னொருவித மன எழுச்சியில் சங்க இலக்கியத்தின் அகத்துறையான காதலையும், காமத்தையும், பசலை படர்ந்த பிரிவின் துயரத்தையும் பேசுகிற பெண்ணாக இருப்பதற்கு மாற்றாகப் போர்க்களத்தின் வாளாகவும், கவச‌மாகவும் உருமாறும் பெண்ணை முன்னிறுத்தவும் செய்கிறது.

'பின்னிரவில் மயிலிறகு வீசி/ மடியில் கிடக்கும்/ பிரிவில் பசலை படிந்து வெம்பித் தவிக்கும் / சங்ககாலப் பெண்ணுமல்ல நீ/ போர்க்களத்தில் வீசுகின்ற வாளாகவும்/ தாங்குகின்ற கவசமாகவும் மாறிவிடத் துடிப்பவளின்/ மொழி கிள்ளிப் புனைவேன் கவிதை.'

இவை இரட்டை மனநிலைகளால் கட்டமைக்கப்பட்ட வெவ்வேறு உணர்வுநிலைகளாக இளங்கோவின் கவிதைக்குள் உணரலாம். ஒன்று போரின் சாவுகளுக்கு எதிரானதாகவும் மற்றொன்று சாவினைத் தடுக்கும் போரின் தரப்பாகவும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது.

(தொடரும்...நீளங்கருதி)

(27.01.2011 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

க‌ட‌தாசிப்பூக் குறிப்புக‌ள்

Thursday, March 17, 2011

1.
நஹீப் மஹ்பஷ் எழுதிய 'அரேபிய இரவுகளும் பகல்களும்' (Arabian Nights and Days), 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்' கதைகளைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல். 'ஆயிரத்தொரு அரேபிய கதைகளின்' இறுதியில் சுல்தான்(ஷாகிரியார்), கதைகளைச் சொல்லும் ஷஹாரஜாத்தைக் கொல்லாது, மன்னித்து மணமுடிக்கப் போவதாக முடிகிறது.  இங்கே, 'அரேபிய இரவுகளும் பகல்களும்' நாவலில் மணவிழாவிற்கான கொண்டாட்டங்களோடு, நாட்டின் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கதை தொடங்குகின்றது. ஆனால் சுல்தானை மணமுடிக்க இருக்கும் ஷஹரஜாத் உண்மையில் நாடு நிம்மதியாக இல்லையென தனக்குத் தெரிந்த, நாட்டில் நிகழும் கதைகளைச் சொல்லத் தொடங்குகின்றார். பூதங்களும் (Genie) அதிகாரம் மிக்க மனிதர்களும், மாறி மாறிக் கொலைகளையும், வன்புணர்வுகளையும் செய்ய நாடே கொந்தளிப்பில் தத்தளித்துக் கொண்டிருப்பதாய் ஷஹாரஜாத்தின் பார்வை வழியே கதை சொல்லப்படுகின்றது. 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில்' ஒவ்வொரு கதைகளின் முடிவிலிருந்தும் இன்னொரு கதை கிளைத்தெழுவதுபோல, இந்நாவலிலிலும் அநேக அத்தியாயங்களில் ஒரு கதாபாத்திரத்தின் கதை முடிய இன்னொரு புதிய பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்புதிய கதாபாத்திரத்தின் வழியே கதை சொல்லப்படுகின்றது. இதற்கு நிகரான ஒரு கதைசொல்லல் முறையே ஒர்ஹான் பாமுக்கின், 'எனது பெயர் சிவப்பிலும்'' (My name is Red ) பின்பற்றப்படுவதை நாம் கவனிக்கலாம். இறுதியில் பூதங்கள் அல்லது பூதங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களே நாட்டின் அதிகாரமிக்கவர்களாய் மாறுவதாய் கதை முடிக்கப்பட்டிருக்கும்.

உண்மையில் இந்நாவல், 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகளின்' நீட்சி எனச் சொல்லப்பட்டாலும் இது ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்' கதையை நிகழ்காலத்திற்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்கின்றது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் துஷ்பிரயோகத்தினால் ஒரு நாடே கொந்தளிப்பாக மாறி, அச்சமும் பீதியும் எல்லா இடங்களிலும் பரவிப் பாய்கின்றது என்ப‌தை இந்நாவ‌ல் மிக‌ நுட்ப‌மாக ப‌திவு செய்கிற‌து. இந்தக் கொந்தளிப்பின் நிமித்தம் அநீதியானவர்கள் மட்டுமின்றி நேர்மையானவர்களும் பலியிடப்படுகின்றனர் என்பதை இந்நாவலில் எக்குற்றங்களையும் செய்யாத அலாவுதீன் போன்றோர் வீணே தூக்குத் தண்டனைக்கு ஆளாவதை உதார‌ண‌ங்க‌ளாய் எடுத்துக் கொள்ள‌லாம். அலாவுதீனில் ஆசானாய் இருந்து, தன் மகளான சூபிடாவை மணமுடித்து வைக்கின்ற சீக்கிடம் (Sheikh), ஏன் அலாவுதீன் அநியாயமாய்க் கொல்லப்பட்டார் எனக்கேட்கப்படும்போது, 'I prayed to Almighty God and gave myself over to death, relinquishing all hope in human beings. When night fell I heard a movement at the surface of the hole. As I listened to it the mouth of hole was opened and I saw a large animal like dragon. It let down its tail to me and I knew that God had sent it to rescue me. I clung on to its tail and it drew me up. Then a voice from the heavens called out to me, "We have saved you from death with death." (p 171) என ஒரு மரணத்தைக் தவிர்க்க இன்னொரு மரணமே வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது. அந்த மரணம் இன்னொரு அப்பாவியான அலாவுதீனின் மரணமாக இங்கே அமைந்திருக்கிற‌து.

மாயத்தன்மை நிறைந்த புதிர்கள் நிறைந்த உலகிற்கு இந்நாவல் வாசிக்கும் ஒருவரை அழைத்துச் செல்கிறது. ஒருவர் கொல்லப்படுவதற்கு அல்லது கொலையாளியாவதற்கு எப்போதும் உறுதியான காரணங்கள் இருப்பதேயில்லை. நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடில்லாது ஒரு சிறுசந்தேகம் அல்லது முன்பகை ஒருவருக்கு உடனேயே தீர்ப்பளித்து மரணதணடனை கொடுக்க்கப்படுவதற்கு போதுமாயிருக்கிறது. இந்நாவலை நாம் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து உருவாகும் எந்தத் தலைமையிடமும், எந்த நாட்டோடும் கூட பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். நஹீப் மஹ்பஷின் கதைசொல்லும் முறையின் ஆளுமை மொழிபெயர்ப்பினூடாகவே சிலாகிக்க முடிகிறதென்றால் மூலமொழியில் இன்னும் வனப்பாகவே இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மேயில்லை. சிலவேளைகளில் பூதங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கை கொடுத்து கொலைகளைச் செய்யத் தூண்டிவிட்டு இடைநடுவில் அவர்களைக் கைவிட்டு விடுகின்றன‌. பிறசமயங்களில் அவர்களுக்கு மறுபிறப்புக் கொடுத்து அவர்கள் வாழ்ந்த நகரங்களில் வேறு ந‌ப‌ர்க‌ளாக‌ உருமாற்றி வாழவும் விடுகின்றன. அவ்வாறான பொழுதுகளில் தமக்குத் தெரிந்த மனிதர்கள் எல்லோரும் அந்நியராகப் போகும் விந்தைகளை மஹ்பஷ் அழகாக விவரிக்கின்றார். இன்னொருவிதத்தில் பார்த்தால் இது எப்போதும் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய 'இருத்தலியச் சிக்கல்'தான் என்பதாகவும் வாசித்துக்கொள்ளலாம்.

2.
'Veronica Guerin' திரைப்படம் ஒரு பத்திரிகையாளரின் கதையைச் சொல்லும் படம். அயர்லாந்தின் வறுமையை தமக்குச் சாதகமாக்கி பதின்மர்களை அதிகம் குறிவைத்து இயங்கிய போதைமருந்து மன்னர்களை அம்பலப்படுத்தி எழுதிய வெரோனிக்கா என்கின்ற‌ பெண்ணே இதில் முக்கிய‌ பாத்திர‌மாக‌ வ‌ருகிறார். . எதற்கும் அஞ்சாது உண்மைகளை எழுதுவேன் என உறுதியாக இருந்த வெரோனிக்காவை அவரது 38 வயதிலேயே இந்தப் போதைமருந்துக் கும்பல் கொலை செய்தது. ஆனால் வெரோனிக்காவின் மரணம் ட்பளினையே உலுக்கி சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்ய வழிகோலியிருக்கிறது. Criminal Assets Bureau Act வெரோனிக்காவின் மரணத்தின் பின் அறிமுகப்படுத்தபட்டு, சட்டவிரோத செயல்களைச் செய்து வரும் பணத்தால் வாங்கும் சொத்து எதுவாயினும், அவை அனைத்தும் அரசால் சுவீகரிக்கப்படும் எனகின்ற சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் நிமித்தம் பல போதைமருந்துக் கும்பல்களின் தலைவர்களின் சொத்துக்கள் அயர்லாந்தில் பறிக்கப்பட்டிருக்கின்றது. இச்சட்டத்தின் பின்னர் பதின்மர்களிடையே இருந்த போதைமருந்துப் பயன்பாடு அடுத்தடுத்த வருடங்களில் 15% மாக அய‌ர்லாந்தில் குறைந்ததாக இப்படத்தின் முடிவில் கூறப்படுகின்றது. இச்சட்டம் அமுலாக்கப்பட்டதைப் போல வெரோனிக்காவின் கொலையோடு சம்பந்தப்பட்ட பலருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றது. வெரோனிக்காவின் கொலை 1996ல் நிகழ்ந்திருந்தாலும் சென்ற வருடம் கூட இதுவரை தலைமறைவாக ஓடி ஒளித்திருந்த ஒருவர் பிடிப‌ட்டுமிருக்கிறார்.

வெரோனிக்கா ஒரு மகனுக்குத் தாயாக இருந்தபோதும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உண்மையை வெளிக்கொணர்வேன் எனத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர். கொலைப் பயமுறுத்தல்கள் மட்டுமில்லாது, அவரது வீட்டுக்கு வந்து அவரைத் தொடையில் சுட்டபோதும் அச்சமின்றி எழுதிக்கொண்டிருந்த வெரோனிக்காவை, இப்படி இனியும் எழுதுவதை நிறுத்தச் சொல்கிறார் அவரின் கணவர். அப்போது, 'தெருக்களில் போய் அங்கே போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் பதின்மர்களைக் கண்ட என்னைப் போன்ற ஒருவராய் நீ இருந்தால் உன்னால் கூட இவற்றை எழுதாமல் சும்மா இருக்கமுடியாது' என்று தன் கணவருக்குக் கூறுகின்றார். அதுபோல் செய்தி சேகரிப்பதற்காய் போதைமருந்துக் கும்பலின் தலைவர் ஒருவரிடம் செல்லும்போது மிகமோசமாய் தாக்கப்படுகின்றார். நிகழ்ந்ததை வெளியே சொன்னால் உனது மகனை வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலையும் செய்வோமென வெரோனிக்கா அவரால் பயமுறுத்தப்படுகின்றார். இவ்வளவு நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் இயங்கிக்கொண்டிருந்த வெரோனிக்காவை ஒரு பகல்பொழுதில் காரில் போகும்போது கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் வந்து கொல்கின்றனர். இத் திரைப்படம் முடிகின்றபோது Sinead O'Connor ன் 'One more day' ( http://www.youtube.com/watch?v=mFyiWlp13a8&feature=related ) ஒலிக்கும்போது ஒரு கணமாவது வெரோனிக்காவின் வாழ்வை மீள நினைக்காமல் இருக்கமுடியாது. ஜ‌ன‌நாய‌க‌ வ‌ழிமுறைக‌ள் கைக்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌ ஒரு நாட்டில், ஒரு ப‌த்திரிகையாள‌ர் கொலைசெய்ய‌ப்ப‌டும்போது பெரும் கொந்த‌ளிப்பே நிக‌ழ்கின்ற‌து. ஆனால் எத்த‌னையோ நேர்மையான‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ள் கொலைசெய்ய‌ப்ப‌ட்டும், க‌ட‌த்த‌ப்ப‌ட்டும், காணாம‌ற்போகின்ற‌போதும் அதுகுறித்த‌ அச‌ம‌ந்த‌ப்போக்கும் மூடிம‌றைப்புக்க‌ளுமே இல‌ங்கை போன்ற‌ 'ச‌ன‌நாய‌க‌ சோச‌லிச‌' நாடுக‌ளில் நிக‌ழ்வ‌தையும் நாம் இந்த‌க் க‌ண‌த்தில் நினைவுப‌டுத்திக் கொள்ள‌லாம்.

3.
வண்ணநிலவனின் வாசிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த 'கம்பாநதி'யையும், 'ரெயினீஸ் ஐயர் தெரு'வையும் அண்மையில்தான் வாசிக்கும் ச‌ந்த‌ர்ப்பம் வாய்த்த‌து . இர‌ண்டாயிர‌த்தின் தொடக்கத்தில் வாசித்த வண்ணநிலவனின் 'கடல்புறத்தில்' தந்த நெருக்கமும் நெகிழ்ச்சியும் என்றைக்குமே மறக்கமுடியாது. 'கடல்புறத்தை இப்போது மீண்டும் வாசித்தால் அதே அனுபவத்தைத் தருமா என்பதும் சந்தேகமே. 'கடல்புரத்திலும்' , 'ஜே ஜே சில குறிப்புகளை'யும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வாசித்தாலும், ஜே.ஜே. சில குறிப்புகள் பின் தங்கிவிட இன்றும் கடல்புறத்தில்' மனதில் மித‌ந்துகொண்டிருக்கிற‌து.

'கம்பா நதி' ஒரு வேலையைத் தேடுகின்ற இளைஞனின் கதையோடு அவனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களை விபரிக்கின்றது. இக்கதையில் வேலைக்காய் நேர்முகத்திற்காய் போகின்ற இளைஞனின் அவஸ்தைகளை நம்மில் அநேகர் சந்தித்திருக்கக் கூடியவை; அனுபவித்திருக்கக் கூடியவை. வேலை தேடிக்கொண்டிருக்கும் பாப்பையாவின் இன்னமும் திருமணம் முடிக்காத அக்கா சிவகாமி, பாப்பையா விரும்புகின்ற கோமதி, பாப்பையாவையோ சிவகாமியையோ பற்றி அக்கறையில்லாது குடியும், இன்னொரு மனைவியும் வைத்துக்கொண்டு திரிகின்ற பாப்பையாவின் தகப்பன் சங்கரன்பிள்ளை...என இந்நாவலில் வரும் பாத்திரங்களை எல்லாம் நாம் சந்தித்திருக்கக் கூடியவர்கள், சிலவேளைகளில் அந்தப் பாத்திரங்களில் ஒருவராக நாமே இருக்கக்கூடியவர்களும் கூட.  நகரும் வாழ்க்கை எல்லா அவமானங்களையும் தோல்விகளையும் தின்று செரித்திருக்கக்கூடியதுதான், ஆனால் அவ்வப்போது சிறுபொறி பழைய நினைவுகளை சரசரவென்று பற்றவைத்துவிடுகின்றது. கோமதியின் திருமணத்தின்போது மிதமிஞ்சிக் குடித்து தெருவில் கிடக்கிற சங்கரன்பிள்ளை, அவளுக்கு அவரின் மகனான பாப்பையாவை மீள நினைக்கும்படி செய்துவிடுவதும் அப்படித்தான்.

'கம்பாநதி'யில் குறிப்பிடப்படுகின்ற ரெயினீஸ் ஜயர் தெரு, டாரதி எல்லாம் வண்ணநிலவன் இரண்டு வருடங்களுக்குப் பின் எழுதுகின்ற 'ரெயினீஸ் ஐயர் தெரு'வில் விரிவாக வருகின்றார்கள்/வருகின்றது. இன்னொருவிதமாக இது 'ரெயினீஸ் ஐயர் தெருவில்' இருக்கும் குடும்பங்களைப் பற்றிய விரிவான கதை எனச் சொல்லலாம். 'கம்பாநதி'யில் நதி எல்லோரும் குவிகின்ற ஒரு மையமாக வருகின்றதோ அவ்வாறே 'ரெயினீஸ் ஐயர் தெரு'வில் ஒரு தெரு முக்கிய பாத்திர‌மாய் வருகின்றது. வழக்கமாய் ஒரு தெருவில் இருக்கும் குடும்பங்களிடையே வரும் சண்டைகளும், சச்சரவுகளும், சமாளிப்புக்களும், கள்ளத்தனங்களும், உளவறிதல்களும் இந்நாவலில் மெல்லியதாகச் சித்தரிக்கப்படுகின்றது. ரெயினீஸ் ஐயர் தெருவில் வழமைபோல பெய்கின்ற மழையோடு நாவல் நிறைவுபெறுகிறது. மழைக்காலத்தில் மனிதர்களை நம்மால் ஒருபோதும் வெறுக்கமுடியாது என்று நாவலில் கூறப்படுவதுபோல வாசிக்கும் நம்மாலும் இந்நாவலின் பாத்திரம் எதனையும் வெறுக்கமுடியாதுதான் இருக்கிறது. ஆனால் இந்நாவலில் வரும் 'கல்யாணி அண்ணன்' என்கின்ற பாத்திரம் ஏன் எப்போதும் ஒரு தேவதூதரைப் போல 'வித்தியாசமாகச்' சித்தரிக்கப்படுகின்றது என்பதுதான் புரியவில்லை.

எல்லோருக்கும் மிகப் பிடித்தமான, எப்போதும் அன்பைப் பகிர்ந்துகொண்டிருக்கும் அலீஸ் இளவயதில் இறப்பது, எஸதர் சித்திக்கு அவரின் பெறாமகனாய் இருக்கின்ற சாம்சனோடு உடல் சார்ந்த உறவு இருப்பது, எப்போதும் குடியும், தறுதலையுமாய் இருக்கும் தியோடர், முதிர்ந்த தம்பதிகளான ஆசீர்வாதம் - ரெபேக்காளுக்கு உதவி செய்வதற்கு ஒருபோதும் தயங்காதது.... என வாழ்க்கை வித்தியாசமான மனிதர்களையும் அவர்களின் விசித்திரமான மனோநிலைகளையும் வரைந்துகொண்டே இருக்கிறது. இருதயத்து ரீச்சர் வீட்டுக்குள் குறுக்கு மறுக்குமாய் ஓடும் கோழிகளும், மழை பெய்யும் நாட்களில் நீரை ஊறச்செய்ய வாசல்களில் விரிக்கும் சாக்குப்பைகளும் ஊர்களில் வாழ்ந்திருப்பவர்க்கு இன்னும் நெருக்கத்தைத் தரும் படிமங்கள். ஆனால் பெரிய பிள்ளையாக ஆகும் ஜீனோ, 'அம்மாவோ இன்னொரு மனுஷியாகத் தெரிந்தாள். மிக மோசமான, தாழ்ந்த குலப் பெண்ணாக அம்மா இருந்தாள்' என நினைக்கும்போதுதான் சற்று நெருடுகின்றது. வயதுக்கு வரும் பெண்களுக்கு அம்மாவுடனான ஒரு விலகல் ஏற்படலாம். ஆனால் அது ஏன் 'மோசமான, தாழ்ந்த குலப்பெண்ணாக' சித்தரிக்கப்படுகின்றது என யோசிக்கும்போது இது ஜீனோவின் உள்மனக்குரலா அல்லது வண்ணநிலவனின் விருப்புச்சார்ந்த ஒலிப்பா என கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் மட்டுமின்றி வேறு சில இடங்களிலும் 'தாழ்ந்த குலம்' பற்றிய வர்ணிப்புக்கள் வருகின்றது. நாவல் எழுதப்பட்ட 81களில்தான் இந்தப் 'பிரக்ஞை'கள் இல்லையென்பதை ஒரு சாட்டாக முன்வைத்தாலும், நான் வாசித்த நர்மதா பதிப்பாக 2001ல் வந்த மறுபதிப்பிலாவது திருத்தி எழுதியிருக்கலாமென நினைக்கிறேன். சாதாரண நிகழ்வுகளின் விடுபட்டவைகளை நுட்பமாகச் சித்தரிக்கும் ஒரு படைப்பாளி என மதிப்பிடப்படுகின்ற வண்ணநிலவன்...எப்போதும் மனிதர்களை அவர்களின் பலங்களோடு அன்றி அவர்களின் பலவீனங்களோடும் நேசிக்கச் சொல்லும் வண்ணநிலவன், இவ்வாறான 'தாழ்ந்த சாதி' என எழுதுவதும், தாழ்ந்த சாதி அல்ல தாழ்த்தப்பட்ட சாதிகளாக்கியதே ஆதிக்கசாதிகள் தான் என்பதை உணர மறுப்பதுதான் என்னளவில் வியப்பாயிருக்கிறது. வண்ணநிலவன் என்ற படைப்பாளியின் இந்தப் பலவீனங்களோடு (இவ்வாறான விடயங்களை அவர் மாற்றவேண்டுமென தெளிவாய் வலியுறுத்தியபடியும்) எனக்கு கம்பா நதியும், ரெயினீஸ் ஐயர் தெருவும் பிடித்திருந்தன என்பதையும், அவை எழுதப்பட்ட காலங்களில் அவை ஒரு பாய்ச்சல்தான் என்பதையும் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

4.
இவ்வருடத்திற்கான 'இயல்விருது' எஸ்.பொன்னுத்துரைக்கு வழங்கப்பட்டிருப்பது மிக மகிழ்ச்சி தருகின்ற செய்தி. ஈழத்து இலக்கியம் சார்ந்து சில விடயங்களை விரிவாக எழுதுவதற்காய் எனக்குப் பிடித்தவர்களை பட்டியலிட்டபோது, ஒரு முக்கோணத்தின் மூன்று நுனிகளில் வருகின்றவர்களாய் மு.தளையசிங்கத்தையும், பிரமிளையும், எஸ்.பொவையுமே குறியிட்டு வைத்திருக்கிறேன். அந்த முக்கோணத்தை இன்னுமிர‌ண்டு கோடுக‌ளால் நீட்டித்து  சாய்சதுரமாய் ஆக்கினால் அதில் வரக்கூடியவர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியும் என்பதாய்த் தீர்மானித்திருந்தேன். அவர்களுக்குள்ளால் மேலும் விரியக்கூடியது முற்போக்கு இலக்கியக்க்காரர்களின் பட்டியல்.

1999ன் பிற்பகுதியில் என நினைக்கிறேன். முதன் முதலாக செல்வத்தின் 'வாழும் தமிழ்' கண்காட்சியிற்கு சென்றபோது இரண்டு நூற்களை வாங்கினேன். ஒன்று சு.ராவின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' மற்றது எஸ்.பொவின் 'ஆண்மை'. அதுவரை பாலகுமாரனை ஒரு குருவாய் நினைத்து அவரின் படைப்புக்களுக்குள் அமிழ்ந்துகொண்டிருந்தவனை கை நீட்டி இன்னொரு திசையில் அழைத்துச் சென்றவர்கள் சு.ராவும், எஸ்.பொவும்தான். அதேபோன்று எஸ்.பொவை 2000ல், காலச்சுவடு 'தமிழ் இனி' நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் கனடாவில் சந்திக்க முடிந்திருந்தது. அப்போது எஸ்.போ புலம்பெயர் இலக்கியத்தை எவரெஸ்டின் சிகரத்தில் ஏற்றிவிடுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு உலக நாடுகளாய் சென்று தமிழ் ஊழியம் செய்துகொண்டிருந்த காலகட்டம். ஒரு முழுநாள் நிகழ்வாய் எஸ்.பொ அந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார். கனடாவில் இருந்த பல்வேறுபட்ட படைப்பாளிகளை ஒரேயிடத்தில் சந்தித்த பொழுது அது. அப்படி ஒரு அரங்கு நிறைந்த/நிறைவான கூட்டத்தை அதன்பின்னர் எப்போதும் கண்டதுமில்லை. பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவற்றை எல்லாம் விட எஸ்.பொவின் அன்றைய காலத்தில் வெளிவந்த படைப்புக்கள் எல்லாவற்றையும் ('தீ', 'சடங்கு', 'இனி') போன்றவற்றையும் வாங்க முடிந்திருந்தது. எஸ்.பொவின் 'ஆண்மை'யை வாசித்த இன்பத்தில் அவரைத் தொடர்ந்து பின் தொடர்ந்தபடியே இருந்தேன். பிறகு இன்னொரு கூட்டம் இது தமிழில் பட்டம் பெறப்படிப்பவர்கள் படிக்கும் இடத்தில் நடந்தது. எஸ்.பொ எப்படி முதல் நிகழ்வில் தன்னை கைலாசபதி,சிவத்தம்பி எப்படி புறக்கணித்தார்கள் என்று விரிவாகப் பேசினாரோ இங்கேயும் அதேயே பேசினார். படித்துக்கொண்டிருந்த சில பெண்கள் சிவத்தம்பியிடமும் படித்தவர்கள். ஆகவே அவர்கள் தம் குருவை விட்டுக்கொடுக்காது எஸ்.பொவை திரும்பிக் கேள்விகள் கேட்டு மடக்கினார்கள். எஸ்.பொவும் கோபம் வந்து 'என்னிடம் கேள்வி கேட்பதுபோல நீங்கள் சிவத்தம்பியிடம் கேட்டிருந்தீர்களா?' எனத் திருப்பி மடக்கினார். இரண்டு தரப்பிடமும் தீ பற்றாத குறைதான். இரண்டு கூட்டங்களின் அனுபவத்தின்படி எஸ்.பொ என்ன பேசுவார் என்ற 'வித்தை' கைவரப் பெற்றதால், அவரைப் பின் தொடர்வதைவிட எனக்குப் பிடித்த அவரின் படைப்புக்களைப் பின் தொடர்வதே சிறந்தது என -அவரின் கூட்ட உரைகளுக்குப் போவதை மறந்துவிட்டு- வாசிப்பில் கவனஞ்செலுத்தினேன்.

எஸ்.பொ ஒரு சிறந்த கதை சொல்லி. அதை மறுத்துக் கூறும் எவரோடும் எங்கும் உரையாடுவதற்குத் தயாரகவே இருக்கின்றேன். சமஸ்கிருத வார்த்தைகள் அளவுக்கதிகமாய் அவரது படைப்புக்களில் சிலவேளைகளில் பெருக்கெடுத்தாலும் அவர் தன் படைப்புக்கள் புதிய சொற்கள் பலதை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அதற்கு அவர் கற்றிருக்கக்கூடிய பைபிள் கைகொடுத்திருக்கலாம்தான். எனினும் அதைத் தேவையான இடத்தில் பொருத்திவிடக்கூடிய நுட்பம் எஸ்.பொவுக்கு மிக எளிதாக வாய்த்திருக்கிறது. சடங்கில் மிக நுட்பமாய் பதியப்பட்ட யாழ்ப்பாணிகளின் வாழ்க்கையை நாம் மறந்துவிடக்கூடுமா என்ன? ஆனால் நான் விதந்தோத்துகிற எஸ்.பொதான் கட்டுரையாக எழுதக்கூடிய 'மாயினியை' ஒரு மோசமாக நாவலாகத் தந்திருக்கின்றார் என்பதையும் மறந்துவிடமுடியாது. மரபார்ந்த மார்க்சியர்களை கேள்வி கேட்டு எழுதியபோது -அவ்வப்போது சண்டைபிடிப்பதும் கட்டியணைப்ப்துமாய் - இருக்கின்ற நண்பர் 'நீயெல்லாம் எஸ்பொ ஏற்கனவே வைத்திருக்கும் பட்டுக்குஞ்சத்தையே தலையில் போடத்தான் லாயக்கானவன்' என்றபோது....எந்தப் பட்டமும் விரும்பாதபோதும் இந்தக் குஞ்சம் எனக்குப் பிடித்தமாய்தான் இருந்தது.  ஆக, இவ்வாறு எனக்குப்பிடித்த எஸ்.பொவுக்கு, ஒரு சிறந்த படைப்பாளியான அவருக்கு,  இயல் விருதுக்குழு இயல்விருதை வழங்கி தன்னைக் கவுரவித்திருக்கிறது எனத்தான் சொல்லவேண்டும்.

நிகழ்வு முடிந்து எஸ்.பொ போய்க்கொண்டிருக்கின்றார். 'ஆண்மை'யில் இருக்கும் கதையில் அக்கா என்கிற கதாபாத்திரம் மிக இளவயதான ஒரு சிறுவனிடம் (உடல்) உறவு வைத்திருக்கிறார். இதையெல்லாம் கதையில் எழுதுவது நியாயமா? என ஒரு அப்பாவியாய் எஸ்.பொவிடம் கேட்கிறேன். எஸ்.பொ ஒரு முறை என்னை உற்றுப் பார்த்தார். பிறகு. 'இதெல்லாம் யதார்த்தில் நடந்திருக்கிறது. அதைத்தான் எழுதினேன், தவறு சரியெல்லாம் கதைகளில் அடங்காது' என்கிறார். எனக்கு அந்தக் கதையை வாசித்தபோது, அதில் பட்டும்படாமலும் கதையில் வரும் அக்காவுக்கும் சிறுவனுக்கும் உறவு இருந்தென்பது விளங்கியது, அதை உறுதிப்படுத்தத்தான் எஸ்.பொவிடம் கேட்டேன். நான் நினைத்தது சரிதான் என என் வாசிப்புப் பற்றிய நம்பிக்கையில் உற்சாகமடைந்தேன். எஸ்.பொ அடுத்த நிகழ்வொன்றுக்காய் தன் உறவினர்கள் புடைசூழ யாரோ போட்டிருந்த மாலை கழுத்தில் தொங்க நடந்துபோய்க்கொண்டிருந்தார்.
...............................
*க‌ட‌தாசிப்பூவின் இன்னொருபெய‌ர் போக‌ன்வில்லா