கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

உளவாளி

Thursday, December 06, 2012


-இளங்கோ


வ‌ன் க‌ன‌டாவிற்கு வ‌ந்த‌த‌ன்பிற‌கு இப்போதுதான் முத‌ன் முத‌லாக‌ இல‌ங்கைக்குப் போகின்றான். குறிப்பிட்ட‌ கால‌த்துக்கு ஒருமுறை ம‌ல‌ரும் குறிஞ்சிப்பூக்க‌ளைப் காண்ப‌தை போன்ற‌ உண‌ர்வுட‌ன் ப‌ன்னிர‌ண்டு ஆண்டுக‌ளுக்குப் பிற‌கு க‌ட்டுநாய‌க்காவை விமான‌த்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். குடிவ‌ர‌விற்கான‌ அதிகாரி, 'உன‌து நாடு எது?' எனக் கேட்ட‌த‌ற்கு இல‌ங்கையைக் கூறுவ‌தா அல்ல‌து க‌ன‌டாவைக் கூறுவ‌தா என்ற‌ குழ‌ப்ப‌ம் ஏற்ப‌ட்ட‌து. இப்ப‌டியான‌ அர‌சிய‌ல் சிக்க‌ல்க‌ள் த‌னக்கு நேர‌க்கூடாதென்றுதான் ஒரு ஆலோச‌க‌ரை இவ‌ன் எப்போதும் த‌ன் அருகிலேயே வைத்திருப்பான். அவ‌ளின் பெய‌ர் குக‌த‌ர்மினி. அழகான‌ முழுப்பெய‌ரை த‌ர்மினி என‌ வெளிநாக‌ரீக‌த்திற்கு ஏற்ப‌ மாற்றிவைத்திருந்தாள். பிற‌கு இவ‌ன், அவ‌ள் த‌ன் காத‌லி என்ற‌ ஏகபோக‌ உரிமையை நிலைநாட்டுவ‌த‌ற்கென‌ அந்த‌ப் பெய‌ரை மினி ஆக‌ மாற்றியிருந்தான்.

இந்த‌ இட‌த்தில் மினியைப் ப‌ற்றிய‌ சிறு அறிமுக‌த்தைத் த‌ந்தாக‌ வேண்டும். இல்லாவிட்டால் அவ‌ர் முறைப்பாரோ இல்லையோ ஆண் வாச‌க‌ர்க‌ள் நிச்ச‌ய‌ம் கோபிப்பார்க‌ள். மினி த‌ன் ஏழு வ‌ய‌திலேயே இல‌ங்கையை விட்டு இந்தியாவிற்குப் போய், பிற‌கு ம‌லேசியாவில் சில‌ வ‌ருட‌ங்க‌ள் இருந்துவிட்டு பெற்றோரோடு க‌ன‌டாவிற்கு நிர‌ந்த‌ர‌மாய் குடிபெய‌ர்ந்த‌வ‌ர். மினிக்கு தானொரு த‌மிழ‌ச்சி என்ப‌தில் எப்போதும் பெருமைதான். ஏழு வ‌ய‌தில் இல‌ங்கையை விட்டு வ‌ந்த‌வ‌ருக்கு எப்ப‌டி இந்த‌ உண‌ர்வு வ‌ந்த‌தென்றெல்லாம் கேட்க‌க் கூடாது. தான் ஒரு யாழ்ப்பாண‌த்தி என்று பெருமைப‌ட‌க் க‌தைக்கும் மினியிட‌ம், 'மினி உங்க‌ளுக்குத் தெரிந்த‌ யாழ்ப்பாண‌த்தைப் ப‌ற்றிக் கூறுங்க‌ள்?' என‌க் கேட்டால், 'எங்க‌ள் வீட்டு முற்றத்தில் இர‌ண்டு தென்னைக‌ளும், வ‌ல‌து ப‌க்க‌த்தில் ஒரு முருங்கையும், பின்வ‌ள‌வில் ஏழு ப‌னைக‌ளும் நிற்கும்' என்பார். 'என்ன மினி யாழ்ப்பாண‌த்தைப் ப‌ற்றிக் கேட்டால் உங்க‌ள் வீட்டின் சாத்திர‌த்தைக் கூறுகின்றீர்க‌ளே?' என‌ச் சொன்னால் அத‌ற்கும் மினியிட‌ம் ஒரு ப‌திலிருக்கும். 'இப்ப‌டி என் வீட்டை ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கில் பிர‌தி செய்து பார்த்தால் முழு யாழ்ப்பாண‌த்திற்குமான‌ வ‌ரைப‌ட‌ம் கிடைக்கும்' என‌ப் புத்திசாலித்த‌ன‌மாய்க் கூறுவார்.

இதைவிட‌ மினியிட‌ம் இன்னொரு முக்கிய‌ இர‌க‌சிய‌மும் இருக்கிற‌து. எல்லோரிட‌மும் இந்த‌ இர‌க‌சிய‌த்தைக் கூறிவிட்டு, 'த‌யவு செய்து இந்த‌ விடயத்தை எங்கும் சொல்லிவிட‌வேண்டாம், பிற‌கு எங்க‌ள் குடும்ப‌த்தின் உயிருக்கே ஆப‌த்து' என்று கூறுவார். ம‌லேசியாவில் மினி இருந்த‌போதுதான், அவ‌ரின் த‌கப்ப‌னின் ஊடாக‌ பெடிய‌ங்க‌ளுக்கு கிளைட‌ர் செய்வ‌த‌ற்கான‌ ப‌குதிக‌ள் க‌ப்ப‌லில் போன‌து என்ப‌துதான் அந்த‌ இர‌க‌சிய‌ம். இவ‌னுக்கு இதை முத‌ன்முத‌லில் மினி சொன்ன‌போது சிரிப்புத்தான் வ‌ந்த‌து. ஏழு வ‌ருட‌ங்க‌ளிற்கு முன் கிளைட‌ருக்கான‌ சாமான்க‌ளையெல்லாம் அனுப்பியிருந்தால் ஏனின்னும் பெடிய‌ள் அதைப் ப‌ற‌க்க‌விடாது ப‌துக்கி வைத்திருக்கின்றார்க‌ள் என‌த் திருப்பிக்கேட்டால் மினி முறைக்கின்ற‌ முனியாகி விடுவார்.

இப்போது இல‌ங்கைக்குப் போகின்ற‌ இந்த‌ திட்ட‌த்தைக் கூட‌ மினிதான்  முன் வைத்தாள்.  தானும் மினியும் இவ்வ‌ள‌வு ப‌ண‌ம் செலவு செய்து இல‌ங்கைக்குப் போவ‌தில் என்ன‌ பிர‌யோச‌ன‌ம் என்றுதான் இவ‌ன் முத‌லில் யோசித்தான். 'பிள்ளையும் இங்கை சின்ன‌ வ‌ய‌சிலையே வ‌ந்துவிட்டாள், ஊர் ப‌ற்றி அவ்வ‌ளவு ஞாப‌க‌மில்லை, ஒருக்காய் கூட்டிக்கொண்டு காட்டினால் ந‌ல்லம்தானே' என்று மினியின் எரிகின்ற‌ ஆசைக்கு இவ‌னின் வ‌ருங்கால‌ மாமியார் வேறு எண்ணெய் ஊற்றிக்கொண்டு இருந்தார். திரும‌ண‌ம் என்கின்ற‌ ஓர் உட‌ன்ப‌டிக்கை வ‌ரும்வ‌ரை எத்த‌னை பேரோடு போராடித் தோற்க‌ வேண்டியிருக்கிற‌தென‌ த‌ன் விதியை இவ‌ன் நொந்துகொண்டான்.

ப‌ய‌ண‌த்திற்கான‌ ரிக்கெட்டுக்க‌ளை வாங்கிய‌பின், 'என‌க்குத்தான் வீட்டையோ ஊரையோ பார்க்க‌முடியாது, அது உய‌ர்பாதுகாப்பு வ‌ல‌ய‌த்தில் இருக்கிற‌து, உங்க‌ளுக்கு விரும்பிய‌மாதிரி ப‌ய‌ண‌த்திட்ட‌த்தைத் த‌யாரியுங்க‌ள்' என‌ இவ‌ன் மினியிட‌ம் கூறிவிட்டான். மினியும் த‌கப்ப‌னும் இர‌ண்டு மூன்று நாட்க‌ளாய் அங்கே இங்கேயென‌ தொலைபேசி அடித்து, இணைய‌த்தில் துழாவி எடுத்தென‌  ஒரு திட்ட‌த்தை போட்டிருந்த‌ன‌ர். க‌ட்டுநாய‌க்காவில் போய் இற‌ங்கிய‌வுட‌ன் நேரே பெடிய‌ள் இருக்கின்ற‌ வ‌ன்னிக்குப் போவ‌து, பிற‌கு சில‌ வார‌ங்க‌ள் யாழ்ப்பாண‌ம், அத‌ன்பின்னும் நாட்க‌ள் மிஞ்சினால் இல‌ங்கையின் மிச்ச‌ இட‌ங்க‌ளைப் பார்ப்ப‌தென‌ என‌ ஒரு திட்ட‌ம் வ‌குக்கப்ப‌ட்டிருந்த‌து. 'ஏன் மினி உட‌னேயே வ‌ன்னிக்குப் போக‌வேண்டும், கொஞ்ச‌ நாள் கொழும்பில் நின்றுவிட்டு போனால்தான் என்ன‌?' என்று இவ‌ன் கேட்டான். 'கொழும்போ, ஏன் உங்க‌ளுக்குப் பதினைந்து வ‌ய‌தில் முத‌ல் கிஸ் ப‌ண்ணின‌ சிங்க‌ள‌த்திக்கு மீண்டும் கிஸ் கொடுக்க‌ப் போகிறிய‌ளோ'  என்றாள் மினி. எப்போதாவ‌து காத‌ல் கிற‌க்க‌த்தில் இருக்கும்போது பெண்க‌ள், 'அன்பே நீங்க‌ள் இத‌ற்கு முன் யாரையாவ‌து காத‌லித்த‌ அனுப‌வ‌ம் உண்டா?' என‌க் கேட்ட‌வுட‌ன் இவ‌னைப் போன்ற‌வ‌ர்க‌ள் பெருமித‌த்துட‌ன் க‌ட‌ந்த‌கால‌த்தை உள‌றிவிடுவார்க‌ள். அது பின்னாளில் ஒரு கொள்ளிவால் பிசாசைப் போல அவ்வ‌ப்போது இப்ப‌டித்தான் செவிட்டில் அறைய‌ச் செய்யும்.  'இப்போது ஏன் மினி இப்ப‌டிக் கோப‌ப்ப‌டுகின்றீர்க‌ள்' என‌ உர‌த்துச் சொல்லிவிட்டு ' ஓமோம், நீங்க‌ள் வ‌ன்னிக்குப் போய் மாமா க‌ப்ப‌லில் அனுப்பிய‌ கிளைட‌ரில் ஏறிப் ப‌ற‌க்க‌ப் போவ‌தை, நானும் பார்க்க‌த்தானே போகின்றேன்' என‌ இவ‌ன் த‌ன‌க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

ல‌ங்கை க‌ட‌ந்த‌ ப‌ன்னிர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் நிறைய‌வே மாறியிருந்த‌து. மினியின் த‌ந்தையார் விமான‌ நிலைய‌த்திலிருந்து நேரே வ‌ன்னிக்குப் போவ‌த‌ற்கு ஒரு வாக‌ன‌த்தை ஏற்பாடு செய்திருந்தார். இர‌ண்டு பேர் இவ‌ர்க‌ளுக்காய்க் காத்துக்கொண்டிருந்த‌ன‌ர். ப‌ய‌ண‌ப்பொதிக‌ளை வானில் பின்ப‌க்க‌த்தில் வைத்துவிட்டு மினியோடு போய் உள்ளே அம‌ர்ந்தான். விமான‌நிலைய‌த்தின் வெளியே, வ‌றிய‌ பல முக‌ங்க‌ள் ஏதாவ‌து கிடைக்காதா என்ற‌ எதிர்பார்ப்போடு த‌டுப்பு வேலிக்குள்ளால் கைக‌ளை ஏந்திய‌ப‌டி இருந்த‌ன‌. அந்த‌ விழிக‌ளின் வேத‌னையைப் பார்க்க‌ச் ச‌கிக்காது  இவ‌ன் த‌லையைக் கீழே தாழ்த்திக் கொண்டான். இவ‌ர்க‌ள் சென்றிற‌ங்கிய‌ நேர‌ம் காலை வேளையாகையால் பாட‌சாலைக்குப் போகின்றவ‌ர்க‌ளும் சுத‌ந்திர‌ வ‌ர்த்த‌க‌ வ‌ல‌ய‌த்தில் வேலை செய்ப‌வ‌ர்க‌ளும் ந‌ட‌ந்த‌ப‌டியும், ப‌ஸ்சுக்காய்க் காத்துக்கொண்டும் இருந்தார்க‌ள். இவ‌ன் த‌ன் ப‌தினைந்து வ‌ய‌து ச‌ம்பிக்கா, இப்போது எப்ப‌டி இருப்பாள் என‌ யோசித்துப் பார்த்தான். ஒருபொழுது இப்ப‌டித்தானே தானும் ச‌ம்பிக்காவும் எல்லாக் க‌வ‌லைக‌ளையும் ம‌ற‌ந்த‌ப‌டி பேசிக்கொண்டு வீதியெங்கிலும் ந‌ட‌ந்து திரிந்துகொண்டிருந்தோம் என‌ நினைத்துக் கொண்டான். போர் எல்லோர் ம‌ன‌திலும் ந‌ஞ்சினை விதைத்துப் போயிருக்கிற‌து. வ‌ன்ம‌ம் ம‌ட்டும் அறுவ‌டை ஆகியாகி இந்நாடு கோப‌த்தால் ஆள‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கிற‌து போலும். இந்த‌ச் சமாதான‌ கால‌மாவ‌து இனி ஒரு போர் வேண்டாம் என்ற‌ நிலையை எல்லோரிட‌மும் உருவாக்கினால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்குமென‌ இவ‌ன் நினைத்துக் கொண்டேன். மினி ப‌ய‌ண‌க் க‌ளைப்பில் இவ‌ன் தோளில் த‌லை சாய்த்த‌படி தூங்க‌த் தொட‌ங்கிவிட்டாள். 'நாமெல்லோரும் நேசிக்கவும் நேசிக்க‌பட‌வுந்தான் பிற‌ந்திருக்கின்றோமே அன்றி, வெறுக்க‌வும் வெறுக்க‌ப்ப‌ட‌வும் அல்ல’‌ என ஒருமுறை ச‌ம்பிக்கா கூறிய‌து இவ‌னுக்குள் க‌த‌க‌த‌ப்பாய்ப் ப‌ர‌வ‌, த‌ளும்பும் நேச‌த்துட‌ன் மினியின் நெற்றியில் முத்த‌மிட்டுக் கொண்டான். 

பின்னேர‌ம‌ள‌வில் வ‌வுனியா நக‌ரை வ‌ந்த‌டைந்திருந்தார்க‌ள். ந‌க‌ரைத் தாண்டிச் செல்ல‌ செல்ல‌ இராணுவ‌த்தின் ந‌ட‌மாட்ட‌ங்க‌ள் தெரிய‌த்தொட‌ங்கின‌. ஒவ்வொரு ப‌த்த‌டிக்கும் இடையில் ப‌ல‌மான‌ காவ‌ல‌ர‌ண்க‌ள் தென்ன‌ங்குற்றிக‌ளாலும், ம‌ண்மூட்டைக‌ளாலும் அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. மினிக்கு எல்லாமே புதிதாய்த் தெரிந்த‌து. இதைவிட‌ அதிக‌ ப‌ல‌மிக்க‌ இட‌ங்க‌ளைத்தான் பெடிய‌ள் 'ஓயாத‌ அலை'க‌ளில் அடித்துப் பிடித்தார்க‌ள் என்‌று மினி க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாற்றை இவ‌னுக்கு நினைவூட்டினாள். ஆனால் வெட்டை வெளியில் ப‌ர‌ந்து கிட‌ந்த‌ ஆனையிற‌வு முகாமைப் பெடிய‌ள்  கைப்ப‌ற்றிய‌துதான் இவ‌னால் ஒருபோதுமே ந‌ம்ப‌முடியாத‌ விட‌ய‌மாக‌ இருந்த‌து.

ஓம‌ந்தையைத் தாண்டி பெடிய‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்துக்குப் போன‌போது பெய‌ர்க‌ளைப் ப‌திந்து உள்ளே செல்ல‌ அனும‌தி பெற‌வேண்டும் என்றார்க‌ள். இவ‌ன‌தும் மினியின‌தும் பெய‌ரைப் ப‌திந்துகொண்டிருந்த‌ பெண் ‘உங்க‌ளின் பின் இல‌க்க‌ம் என்ன‌?’ என்றார். இவ‌னுக்கு ஒன்றுமே விள‌ங்க‌வில்லை, ஏன் த‌ன் வ‌ங்கியின் பின் இல‌க்க‌ம் கேட்கிறார், அது ப‌கிர்வ‌த‌ற்குரிய‌து அல்ல‌வே என்று நினைத்து குழ‌ம்ப‌த் தொட‌ங்கினான். இவ‌ன் இப்ப‌டி முழிப்ப‌தைப் பார்த்த‌ அந்த‌ப் பெண், ‘நீங்க‌ள் வெளிநாட்டில் இய‌க்க‌த்துக்கு காசு கொடுப்ப‌தில்லையா, அந்த‌ப் பின் இல‌க்க‌த்தைத்தான் நான் கேட்கிறேன்?’ என‌ விரித்துக் கேட்டார். 'நான் திருகோண‌ம‌லையில் இருக்கும் விபுலான‌ந்த‌ர் சிறுவ‌ர் இல்ல‌த்திற்குத்தான் கொஞ்ச‌ம் காசு கொடுத்திருக்கின்றேன். ம‌ற்ற‌ப‌டி இய‌க்க‌த்துக்கு ம‌ட்டுமில்லை இல‌ங்கை அர‌சுக்கும் நான் எந்த‌ப் ப‌ண‌த்தையும் வ‌ழ‌ங்கிய‌தில்லை' என‌ இவ‌ன் கூற‌ அந்த‌ப் பெண் ம‌ட்டுமில்லை மினியும் கூட‌ முறைத்துப் பார்த்தாள். இப்ப‌டியே இவ‌னைப் பேச‌விட்டால் வ‌ன்னிக்குள் நுழைந்த‌பாடுதான் என்று எண்ணியோ என்ன‌வோ மினி, 'எங்கள் அப்பா இயக்க‌த்துக்கு காசு கொடுக்கிற‌வர், இதுதான் அந்த‌ப் பின் இல‌க்க‌ம்' என‌க் கூறி அந்த‌ இல‌க்க‌ங்க‌ளைச் சொன்னார்.

ப‌திவு எல்லாம் சுமுக‌மாய் முடிந்த‌பின் ஏ9 வீதியால் கிளிநொச்சிக்குப் போய், வெளிநாட்டிலிருந்து வ‌ருப‌வ‌ர்க‌ள் செல்கின்ற‌ ந‌ந்த‌வ‌ன‌த்திற்குச் சென்றார்க‌ள். அங்கே .... என்ப‌வ‌ரைச் ச‌ந்தித்தால் அவ‌,ர் இவ‌ர்க‌ள் நிற்ப‌த‌ற்கான‌ ஒழுங்கு செய்வார் என‌வும் மினியின் அப்பா கூறியிருந்தார். ந‌ந்த‌வ‌ன‌த்திற்கு முன்னிருந்த‌ தொலைபேசி நிலைய‌த்திலிருந்து மினி த‌ங்க‌ள் வீட்டுக்கு தொலைபேசியில் பேச‌த் தொட‌ங்கினாள். இவ‌ன் மினியைக் க‌தைக்க‌ விட்டுவிட்டு ந‌ந்த‌வ‌ன‌த்திற்கு எதிர்ப்புற‌ம் இருந்த‌ அறிவ‌முது புத்த‌க‌நிலைய‌த்தில் பேப்ப‌ர் வாங்கினான். த‌லைப்புச் செய்தியாக‌, 'கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைச்ச‌ர் .................. மீது குறிவைத்து த‌ற்கொலைக் குண்டுத்தாக்குத‌ல், அமைச்ச‌ர் ம‌யிரிழையில் த‌ப்பினார்' என்றிருந்த‌து. ந‌ல்ல‌வேளை தாங்க‌ள் கொழும்பில் நிற்க‌வில்லை, இங்கால் ப‌க்க‌ம் வ‌ந்துவிட்டோம், இல்லாவிட்டால் வீணான‌ சிக்க‌லிற்குள் மாட்டிக்கொள்ள‌ நேர்ந்திருக்கும் என‌ நினைத்த‌ப‌டி ந‌ந்த‌வ‌ன‌த்தை நோக்கி இவன் ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினான்.

அத‌ற்குள் இவ‌ர்க‌ள் த‌ங்குவ‌த‌ற்கு வ‌ச‌தி செய்ப‌வ‌ரும் ந‌ந்த‌வ‌ன‌த்திற்கு வ‌ந்திருந்தார். வெளிநாட்டிலிருந்து வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ங்கி நிற்க‌வென‌ க‌ன‌காம்பிகை அம்ம‌ன் கோயிலிருந்த‌ வீதியில் க‌ட்டியிருந்த‌ விடுதியில் இவ‌ர்க‌ளுக்கு இட‌ம் ஒழுங்கு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. இவ‌ர்க‌ளோடு கூட‌வே வ‌ந்த‌ ..... அண்ணா, அடுத்த‌ நாள் மாலை தான் வ‌ருவ‌தாக‌வும் க‌ன‌காம்பிகைக் குள‌த்தோடு அண்டியுள்ள‌ ப‌குதியை வேண்டுமென்றால் ப‌க‌லில் நடந்து போய்ப் பாருங்க‌ள் என‌வும் கூறினார். மினிக்குச் ச‌ரியான‌ ச‌ந்தோச‌ம். க‌ன‌டாவில் பிற‌ந்த‌நாள் கொண்டாட்ட‌ங்க‌ளுக்கும், சாம‌த்திய‌ வீடுக‌ளுக்கும் ஒரேயொரு முறை அணிந்துவிட்டு டிராய‌ரில் சும்மா உற‌ங்கிக்கிட‌ந்த‌ சுடிதார்க‌ளை எல்லாம் அள்ளிக்க‌ட்டிக் கொண்டு வ‌ந்திருந்தார் மினி. தின‌ம் தின‌ம் அவ‌ற்றைப் போட்டுக்கொண்டு வெளியே உலாப்போக‌லாம் என்ப‌தில் மினிக்கு அள‌வில்லாக் குதூகலம். ம‌றுநாள் காலையுண‌வைச் சாப்பிட்டுவிட்டு ஏ9 வீதியிலிருந்து க‌ன‌காம்பிகை அம்ம‌ன் கோயில் ப‌க்க‌மாய் நீளும் வீதியில் மினியும் இவ‌னும் ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினார்க‌ள். ச‌ற்றுத்தூர‌ம் தாண்டிய‌வுட‌னேயே தார் ரோட்டு முடிவ‌டைந்து செம்ம‌ண் புழுதி வீதி நீளத் தொட‌ங்கிய‌து. அந்த‌ வீதியின் இட‌துப‌க்க‌மாய் செஞ்சோலை இருந்த‌து. நீண்ட‌ ம‌திலும், அந்த‌ ம‌றைப்புப் போதாதென்று ம‌தில் மேல் ஓலைக‌ளால் வேய்ந்த‌ இன்னொரு அரிக்கையும் க‌ட்டியிருந்தார்க‌ள். அங்கே பெண் பிள்ளைக‌ள் இருக்கின்றார்க‌ள், அதுதான் இப்ப‌டி என‌ச் சொன்னார்க‌ள். நிறைய‌ப் பேர் சைக்கிளில் இவ‌ர்க‌ளைத் தாண்டிப்போய்க் கொண்டிருந்தார்க‌ள். மினி அவர்க‌ளைப் பார்த்துவிட்டு 'நீங்க‌ளும் என்னைச் சைக்கிளில் ட‌புள் ஏற்றிக்கொண்டு போக‌வேண்டும்' என‌த் த‌ன் ஆசையை இவ‌னிட‌ம் வெளிப்ப‌டுத்தினார். 'சைக்கிள் என்ன‌துக்கு? நான் உங்க‌ளை கிளைட‌ரில் ஏற்றிக்கொண்டு ப‌ற‌க்க‌லாம் என்றல்ல‌வா யோசித்துக்கொண்டிருக்கிறேன்' என்று ந‌க்க‌லாய்ச் சொன்னான் இவ‌ன்.

இப்ப‌டியே இவ‌ர்க‌ள் ந‌ட‌ந்து க‌ன‌க‌ராய‌ன் அணைக்க‌ட்டு வ‌ரை போயிருந்தார்க‌ள். அணைக்க‌ட்ட‌டியில் பெடிய‌ள் துவ‌க்கோடு சென்றிக்கு நின்றார்க‌ள். கீழே ஓடிக்கொண்டிருந்த‌ ம‌த‌கில் சிறுவ‌ர்க‌ள் நீத்திக்கொண்டிருந்தார்க‌ள். இவ‌ன் திரும்பும் வ‌ழியில் வீதியில் நின்ற‌ புளிய‌ம‌ர‌த்திலிருந்து புளிய‌ம்பூவை ஆய்ந்து  'இதைச் சாப்பாட்டுப்பாருங்க‌ள் ந‌ல்ல‌ சுவையாக‌ இருக்கும்' என‌ மினியிட‌ம் கொடுத்தான். 'ஆ... இ என்று ப‌ல்லைக் க‌டிக்கிது’ என்றார். ‘ப‌ல்லைக் க‌டிக்கிற‌து இல்லை, ப‌ல்லுக் கூசுது’ என்று இவ‌ன் மினியைத் திருத்தினான். 'வெயில் எறிக்கிற‌து என்று சொல்லாம‌ல் எப்ப‌வும் வெயில் அடிக்கிற‌து என்று த‌மிழைப் பிழையாக‌ப் பேசுகிற‌வ‌ர் என்னைத் திருத்த‌ வ‌ந்திட்டாராக்கும்' என‌ மினி திரும்ப‌ச் சொன்னாள். இவ‌ளுக்கு எல்லாம் இப்ப‌டி எங்கே த‌மிழ் ந‌ன்கு தெரிய‌ப்போகிற‌து? தான் இப்ப‌டி விடும் த‌வ‌றுக‌ளை த‌ன் வ‌ருங்கால‌ மாம‌னார் தான் க‌ண்டுபிடித்து மினியிட‌ம் போட்டுக் கொடுத்திருக்கின்றார் என்ப‌து இவ‌னுக்கு ந‌ன்கு விளங்கிய‌து. இவ‌னின் வ‌ருங்கால‌ மாம‌னார் த‌மிழ் வாத்திய‌ராக‌ இல‌ங்கையில் இருந்த‌தை இப்ப‌டித்தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் நிரூபித்துக்கொள்வார். அதுவும் ம‌ரும‌க‌ன் முன் தான் அறிவாளி என‌ நிரூபிக்க‌ விரும்பாத‌ மாமனார்க‌ள் இவ்வுல‌கில்தான் உண்டா என்ன?

மாலை ...... அண்ணா வ‌ந்திருந்தார். ‘உங்க‌ளுக்கு வ‌ன்னியை வடிவாய்ச் சுற்றிப் பார்க்க‌வேண்டும் என்றால் ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருக்கிது. வ‌ருகிற‌ கிழ‌மை வெளிநாட்டிலை இருந்து நிறைய‌ மாண‌வ‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு இய‌க்க‌ம் இட‌ங்க‌ளைக் காட்ட‌ ஒழுங்கு செய்திருக்கிற‌து. நீங்க‌ளும் அந்த‌ மாண‌வ‌ர்க‌ளோடு இணைந்துகொள்ள‌லாம். இர‌ண்டு வார‌ங்க‌ள் அந்நிகழ்வு ஒழுங்கு செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆனால் ஆம்பிளைக‌ள் த‌னிய‌ பொம்பிளைக‌ள் த‌னிய‌த்தான் த‌ங்க‌வேண்டும்' என்றார். மினிக்கு இதைக் கேட்டு ச‌ரியான‌ ச‌ந்தோச‌ம். இவ‌னோடு க‌ல‌ந்து யோசிக்காம‌லே உட‌னேயே ஒமென்று கூறிவிட்டாள். இவ‌னுக்கு அவ்வ‌ள‌வு விருப்ப‌மிருக்க‌வில்லை. ச‌ரிதான் போய்ப் பார்ப்ப‌மே என்று அரைமனதோடு ச‌ம்ம‌தித்தான். .... அண்ணா புறப்படும்போது, 'அண்ணை இங்கே க‌ள்ளுக் குடிக்கிற‌ இட‌ம் எதுவும் உங்க‌ளுக்குத் தெரியுமோ' என்று கேட்டான். ஏதோ த‌ன்னிட‌ம் விச‌ம் குடிக்க‌ ச‌ய‌னைட்டைக் கேட்ட‌மாதிரி அவ‌ருக்கு முக‌ம் எல்லாம் சிவ‌ந்துபோய்விட்ட‌து. ஒன்றும் கூறாம‌ல் போய்விட்டார். 'ஏன் மினி ... அண்ணை இப்ப‌டிக் கோப‌ப்ப‌ட்டார்' என‌ மினியிடம் கேட்ட‌போது, 'இந்த‌ அங்கிள் எங்க‌ள் அப்பாவிட‌ம் ப‌டித்த‌வ‌ர். பிறகு இய‌க்க‌த்தில் நீண்ட‌கால‌ம் இருந்து அண்மையில்தான் ஒரு இய‌க்க‌ப் பிள்ளையைத் திரும‌ண‌ம் செய்த‌வ‌ர். அத‌னால் இப்போது அட்மினிஸ்ரேச‌ன் வேலை செய்கின்றார், ஆனால் அவ‌ர் இன்ன‌மும் இய‌க்க‌ந்தான்' என்றாள். ‘இதை முத‌லிலே என‌க்குச் சொல்ல‌க்கூடாதே, நான் ஏற்க‌ன‌வே அவ‌ர் இய‌க்க‌த்தில் இருக்கிறார் என்று தெரிந்துதான் வேண்டுமென்று நான் ந‌க்க‌லுக்குக் க‌ள்ளுக் குடிக்கிற‌தைப் ப‌ற்றிக் கேட்டேன் என‌ நினைக்க‌ப்போகிறார்' என்றான் இவ‌ன். யாழில் முந்தி இருந்த‌போது ஒரு நிக‌ழ்வில் புதுவை 'எதிரியே உன் ப‌டுக்கையை உத‌றிவிட்டுப் ப‌டு உன் க‌ட்டிலுக்கு கீழேயே புலி இருப்பான்' என‌க் க‌விதை பாடிய‌து இவ‌னுக்கு நினைவுக்கு வ‌ந்த‌து. எதிரியின் க‌ட்டிலுக்கு கீழேயே ப‌துங்கியிருக்க‌கூடிய‌ பெடிய‌ள், வ‌ன்னியின் காற்றெங்கும் க‌ல‌ந்திருப்பார்க‌ள் என்ப‌து ஏன் த‌ன‌க்கு விள‌ங்காம‌ல் போன‌து என‌ இவ‌ன் த‌ன்னையே நொந்துகொண்டான். இனி அன்ன‌, ஆகார‌ம் த‌விர‌ வெறொன்றுக்கும் சும்மா வாயைத் திற‌ப்ப‌தில்லையென‌ த‌ன‌க்குத் தானே ச‌த்திய‌ப் பிர‌மாண‌ம் செய்துகொண்டான்.

(இன்னும் வரும்...)

நன்றி: 'காலம்' 40 & 41 இதழ்

0 comments: