கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஏகாந்தம் என்பதும் உனது பெயர்

Tuesday, January 12, 2016

ழமை போல வேலைக்குப் போவதற்காய் நிமலன் ஆறு மணிக்கு எழும்பியிருந்தான். இரவு திரைச்சீலையை மூடாததால் சூரிய ஒளி அறைக்குள் தெறித்துக்கொண்டிருந்தது. இன்றைக்கும் வேலைக்குப் போக வேண்டுமா என நினைக்க இன்னும் சோம்பல் கூடியது. சட்டென்று இன்று வேலைக்குப் போகாவிட்டால் என்ன எனவும் தோன்றியது. நல்ல விடயங்களை பிற்போடக்கூடாது என்று யாரோ சொன்னது நிமலனுக்குள் ஒலிக்க, உடனேயே மானேஜரின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து  வேலைக்கு வரமுடியாதிருக்கின்றது எனத் தன் குரலைப் பதிவு செய்தான்.
 
சோம்பலாய் விடிந்த பொழுது இப்போது நிமலனுக்கு உற்சாகமாய் மாறியிருந்தது.  கட்டிலிலிருந்தபடி இன்று என்ன என்ன செய்யலாமென பட்டியலிட  முயற்சித்தான். பிறகு ஒவ்வொருநாளும் ஏதோவொரு ஒழுங்கில்தானே விடிந்து கரைகிறது, எதெது அந்தக் கணத்தில் வருகிறதோ அது அதைச் செய்வோமென தீர்மானம் எடுத்துக் கொண்டான்.

நீண்டகாலமாய் ஜிம்மிற்கு போகாமல் உடலை அடைகாக்கும் கோழி போல ஒன்றும் செய்யாது வைத்திருந்த நினைவுக்கு வர, கொஞ்சத் தூரம் ஓடிவிட்டு வருவோமென காலில் அடிடாஸ் சப்பாத்தைப் போட்டுக்கொண்டு எலிவேற்றரடிக்குப் போனான்.இருபதாவது அடுக்குமாடியில் குடியிருப்பதில் நல்ல விடயம் என்னவென்றால் நகரைப் பறவைக்கோணத்தில் பார்த்து இரசிக்கலாம். ஆனால் சிக்கல் என்னவென்றால் நினைத்த நேரத்தில் அவ்வளவு எளிதில் தரைக்குப் போய்விட முடியாது. 

இப்போது கீழே போவதற்கு காத்திருக்கையில், எலிவேற்றர் தேருக்குள் இருக்கும் சாமி போல ஆடியசைந்து ஆறுதலாய் வந்து சேர்ந்தது. பாடசாலை தொடங்குகின்ற நேரம். நிறையப் பிள்ளைகள் நசுங்கி நெரிந்துகொண்டு உள்ளே  நின்றார்கள். அது போதாதென்று சிறுவர்களை பஸ்சில் ஏற்றிவிடுவதற்கென அவர்களின் அம்மாக்களும் கூடவே எலிவேற்றரின் இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். பாடசாலை பஸ் வரப்போகும் அவசரத்தில் சில பெண்கள் இரவுடைகளோடே வந்திருந்தார்கள்.  நிமலனுக்கு அவர்களின் நெகிழ்ந்த ஆடைகளைப் பார்க்க ஆசை பெருகிக்கொண்டிருந்தாலும், அதைத் தவிர்த்து எலிவேற்றரின் மேற்றளத்தில் ஏதேனும் பல்லி தென்படுகிறதா எனக் கஷ்டப்பட்டு மேலே பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் ஒவ்வொரு தளத்திலும் எலிவேற்றர் திறந்து மூடும்போது அவனது ஆசை, பல்லியிறந்தபின்னும் அசையும் வாலைப் போல துடித்துக்கொண்டிருந்தது. 

வெளியே வந்ததும் ஏரிக்கரையை நோக்கி ஓடத் தொடங்கினான். வேலைக்குப் போகின்றவர்கள் எல்லோரும் நேரத்துக்குப் போய்விடவேண்டுமென்ற பதற்றத்துடன் பறக்கையில் தான் அவர்களில் ஒருவனல்ல என எதிர்த்திசையில் ஓடிக்கொண்டிருப்பது நிமலனுக்கு மகிழ்ச்சியைத் தந்திருந்தது. உடலை எரிக்கும் வெக்கை இல்லை என்பதால், சூரிய ஒளியும் சுகமாயிருந்தது. 

வியர்க்க விறுவிறுக்க ஓடியபின் ஷவருக்குள் போய் நீண்டநேரம் நிற்பது நிமலனுக்குப் பிடித்தமான ஒரு விடயம். Old Spice, body washஐ பாவிக்கும்போது அவனுக்கு முன்னாள் காதலியொருத்தி நினைவுக்கு வந்தாள். அதுவரை காலமும் கையில் கிடைக்கும் சவர்க்காரத்தைப் போட்டுக் குளித்துக்கொண்டு திரிந்தவனுக்கு அவள்தான் ஒருநாள் shoppers drug martற்குப் போய் கடல் வாசனை வரும் body wash  ஒன்றை வாங்கிக் கொடுத்தாள். ஆனால் அதைப் பயன்படுத்தத் தொடங்கி, வாசத்தைப் பழக்கமாக்க முன்னரே அந்தக் காதலி இவனை விட்டுப் பிரிந்து போனது இன்னொரு துயரக்கதை.

'நல்ல வாசனையாக இருக்கிறதே இது என்ன பிராண்ட்' என அதன் மதிப்பை உணர்த்தியவள் அதற்குப் பிறகு வந்த இன்னொரு காதலி. அவள்தான் நிமலனுக்கு  ஒவ்வொரு பொழுதுக்கும், இடத்திற்குமென வெவ்வேறு வாசனைத் திரவியங்கள் இருக்கிறதென Calvin Kleinயின் அனைத்து வகைமைகளையும் அக்கு வேறு ஆணி வேறாகச் சொல்லிக் கொடுத்தவள்.  இப்படி ஒவ்வொரு காதலியும் புதிது புதிதாக எதையோஅறிமுகப்படுத்த அவர்களை அவற்றின் ஊடாக நினைவில் வைத்திருப்பது நிமலனுக்கு எளிதாக இருந்தது. 

ளியின் வேகத்தை விட, கடந்த காலம் இன்னும் வேகமாக சுழலத் தொடங்கியது. ஒருமுறை கோஸ்டா ரிக்காவின் மழைக்காட்டை, இயற்கையின் மீதான நேசத்தினால் நிமலனும், அவனின் Old Spice காதலியும் தேர்ந்தெடுத்திருந்தனர். தங்குமிடம் மூன்று மாடிகளாய் இருந்தாலும் கொடிகள் மூடி அதுவும் பசுமை போர்த்தி காட்டின் ஒரு பகுதியாக மாறியிருந்தது. வரவேற்பறைக்கருகில் ஒரு சிறு மணியை கட்டி வைத்திருந்தார்கள். எதற்கென வினாவியபோது புதிய விருந்தினரின் வருகையைத் தெரிவிக்கும் சம்பிரதாயத்திற்கு என்றார்கள். 

நிமலன், ஊரில் பிள்ளையார் கோயில் காண்டாமணியை அடிப்பதுபோல பலம் முழுதையும் பாவித்து அதையொருமுறை அடித்தான். தங்கிமிடத்தில் இருந்தவர்க்கு மட்டுமில்லை காட்டினுள் இருந்த மிருகங்களுக்கும் கேட்கும்படியாக அது கொஞ்சநேரம் அதிர்ந்து ஓய்ந்திருந்தது. இன்னொருமுறை அடிக்க ஆசையாகக் கிட்டப்போனபோது காதலியின் முறைப்புத் தடுத்திருந்தது. இவர்களுக்கு இரண்டாவது தளத்தில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. நிமலன் மழைக்காட்டுக்குள் வந்ததைக் கொண்டாட மினி பிரிட்ஜீற்குள் இருந்து வைன் போத்தலையும் கொறிப்பதற்கென முந்திரிகை வத்தலையும் எடுத்துக்கொண்டு பல்கணியிற்குப் போனான். 

கதவில் 'குரங்குகள் நடமாட்டம் இருக்கும் தயவுசெய்து அதற்கு உணவிடவேண்டாம்' என எச்சரிக்கை இருந்தது. நாங்கள் புலிகளோடும் சிங்கங்களோடும் வளர்ந்தவர்கள் குரங்குகள் எல்லாம் துச்சமென நிமலன் தனக்குள் நினைத்துக் கொண்டான். வந்ததும் வராததுமாய் உடனே குடியா என காதலி கேட்க, இல்லை வேறொன்றும் இருக்கிறதென கண்களைச் சிமிட்டி, இரண்டு கிண்ணங்களில் வைனை நிரப்பி ஒன்றைக் காதலியிடம் கொடுத்தான்.  முன்னே விரிந்திருந்த மலைக்கும் ஏரிக்கும் இடையில், சூரியன் மெல்ல மெல்ல மறையத் தொடங்குவதைப் பார்க்க மனோரதியமாய் இருந்தது. 

எப்போதாவதுதான் வானவில் தோன்றுவது போல காதலி  இன்று நல்ல மனோநிலையில் இருந்தாள். நிமலனை இழுத்தணைத்து முத்தமிடத் தொடங்கினாள். தாபத்தின் தளிர்கள் மெல்ல மெல்லப் படர்ந்து காமம் பசுமையாய்ப் படர்ந்தபோது ஆடைகள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கியிருந்தன. நாரைகள் இரவுணவிற்காய் ஏரியின் கரையில் காத்திருக தொடங்க, சில்வண்டுகள் தம்மிருப்பை இயம்பிக்கொண்டிருந்தன. இருளை மட்டும் ஆடையாய் உடுத்தி இயற்கையோடு நிமலனும் காதலியும் கரைந்துபோயிருந்தனர். 

திடீரென்று இரு விழிகள் மின்மினியின் வெளிச்சத்தைப் போல பல்கணியில் நகரத் தொடங்க பாம்பாய் இருக்குமோ என நிமலன் முதலில் திடுக்குற்றான். உடனே தன்னோடு பிணைந்து போயிருந்த காதலியை அறைக்குள் தள்ளிவிட்டு அதை அடிப்பதற்கு வைன் போத்தலைத் தேடினான். ஆனால் கையில் அவசரத்திற்கு அகப்பட்டதோ சிப்ஸ் பை. உள்ளுக்குள் தள்ளப்பட்ட காதலி, 'உள்ளே வா வெளியே நிற்காதே' என பயத்தில் அலறத் தொடங்கினாள். சிப்ஸ் பையால் பாம்பை அடிக்க முடியாதென்பதால் பல்கணியின் கதவைச் சாத்திவிட்டு நொடிக்கணத்திற்குள் அறைக்குள் போனான். 

நிமலனோடு கூடவே ஓடிவந்த மின்மினியின் கண்கள் பூட்டப்பட்ட பல்கணியின் கண்ணாடியில் அடிபட்டுத் திரும்பியது. லைற்றைப் போட்டதும் அது பாம்பில்லை குரங்கென்பது இவர்களுக்குத் தெரிந்து போனது. குரங்கு இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிப்ஸிற்காய்த்தான்  ஒரு திடீர்த்தாக்குதலை இவர்கள் மீது நடத்த முயன்றிருக்கிறது. நிமலன் கையோடு சிப்ஸ் பையைக் கொண்டு வந்ததால் வைன் போத்தலை நுகர்ந்து விட்டு அது சுற்றுமுற்றும் பார்த்தது. 

இன்னமும் வைன் குடிக்கப் பழக்கப்படாத மந்தி போலும் அது. ஆனால் தான் நினைத்தது நடக்காத கோபத்தில் தரையில் கிடந்த  உள்ளாடையை எடுத்துக்கொண்டு தாவத் தொடங்கியது. 'ஆ....இதென்ன குரங்கு, பக்கத்து அறைச் சனங்கள் பார்த்தால் அவமானப் போய்விடப்போகிறதோ' என காதலி ச்சூசூ என துரத்தினாள். அது ஆறவமர பல்கணியின் ஓரங்களில் நடந்து மரமொன்றில் தாவி வந்ததற்கு அடையாளமாய் உள்ளாடையையும் கொண்டு சென்றது. 'கொண்டு போகின்ற ஆடையை வைத்தே அது ஆம்பிளைக்குரங்கு போலத் தெரிகிறது' என்றான் நிமலன். 'உனக்கு இந்த நேரத்திலும் உந்த ஆராய்ச்சிதான் வேண்டிக் கிடக்கிறது' என காதலி கையால் அடிக்கப் போனாள். இலங்கையில்தான் சிங்கம் புலிக்கு எல்லாம் பயப்பிட வேண்டியிருக்கிறதென்றால் இங்கே வந்து இறுதியில் குரங்குக்குக் கூட பயந்தோட வேண்டியதாயிற்றே என நிமலன் நினைத்துக்கொண்டான்.

நிதானமாய் நிமலன் முழுகிவிட்டு விட்டு டவுன்ரவுன் பக்கமாய்ப் போய்ப் பார்க்கலாமென புறப்பட்டான். நிலத்தைக் குடைந்த சுரங்கப் பாதையினால் இரெயின் போய்க்கொண்டிருந்தபோது, நிலத்துக்கும் நமக்குமான உறவு என்னவென யோசித்தான். இந்த நிலம் எத்தனை எத்தனை மனிதர்களைக் கண்டிருக்கும். அவர்கள் ஒவ்வொருவரும் மறையும்போது, புதைக்கப்படும்போதோ எரிக்கப்படும்போதோ இந்த நிலம் எதை பிரதிபலிக்கும் என மீண்டும் ஆழ்மனதில் அமிழத் தொடங்கினான். 

நம் வாழ்விலுந்தான் எத்தனை மனிதர்கள் வருகிறார்கள். நாம் சிலரை இவர்கள் எப்போதும் எம்மோடு இருக்கப் போகின்றவர்கள் என நினைக்கும்போது அவர்கள் வநதது மாதிரியே சட்டென்று பிரிந்தும் போய்விடுகிறார்கள்.  என் வாழ்விலுந்தான் அருமையான  Old Spiceயை எதற்கெனத் தெரியாமலே தொலைத்திருக்கின்றேன். இந்த இழப்புக்களின் வீழ்ச்சிகளிலிருந்து நாம் என்றென்றைக்குமாய் மீட்சி பெறவே முடியாதா என யோசித்துக்கொண்டு போக, யூனியன் ஸ்ரேசனும் வந்திருந்தது.

ரொறொண்டோவின் நீளமான வீதிகளில் ஒன்றான யங் தொடங்கும் ஏரிக்கரையோரம், கப்டன் ஜாக் கப்பல் உணவகம் தண்ணீருக்குள் அசைந்துகொண்டிருந்தது. மேற்குப் பக்கமாய்  நடந்துபோய் நிமலன் தனக்குப் பிடித்தமான கஃபேயில்  காலைச் சாப்பாட்டுக்கு ஓடர் கொடுத்துவிட்டு   தெருவில் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். 510 என இலக்கமிடப்பட்ட பேருந்துகள் வருவதும் போவதுமாய் இருந்தன. 

காலைப்பொழுதின் உற்சாகத்தோடு பயணிகளைப் பார்த்தபொழுது எல்லோருமே அழகாய்த் தெரிந்தனர். நேரம் பத்துமணியாகியிருக்கும்.  Scrambled செய்யப்பட்ட முட்டையை முள்ளுக்கரண்டியால் அளைந்துகொண்டிருந்தவனுக்கு தெருவின் எதிர்த்திசையில் நின்று ஒருவர் கையைக் காட்டிக்கொண்டிருந்தது போலத் தெரிந்தது. அவனுக்கு யாரென அடையாளங்காண முடியவில்லை. தூரப் பார்வை வரவரக் குறைந்து, அணிந்திருந்த கண்ணாடியை விரைவில் மாற்றவேண்டுமென்பது இப்போது நினைவுக்கு வந்தது. தனக்கா அல்லது பக்கத்தில் இருக்கும் வேறு எவருக்கா கை காட்டப்படுகிறதா எனக் குழப்பத்தில் இருந்தவனைப் பார்த்து, எதிர்த்திசையில் நின்றவர் இப்போது தெருவைக் கடந்து இவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

'Don't you remember me?' என கையைக் காட்டியவள்  அருகில் வந்து கேட்கத்தான்,   'இது என் Old Spice காதலி அல்லவா?' எப்படி இவளின் முகத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட்டேனென நினைத்தான். 

இவ்வளவு அழகாகவும் புத்துணர்ச்சியாகவும் இவள் இருப்பாள் என்று அருகில் இருந்த காலங்களில் உணர்ந்ததேயில்லையென தேவையில்லாத சிந்தனை ஒன்று வந்து தெறித்துவிட்டுப் போனது.

Old Spiceஐ கண்டு நான்கைந்து வருடங்களுக்கு மேலாய் இருக்கும். அவளை என்றுமே  வாழ்வில் சந்திக்கமாட்டேன் என நினைத்தவனுக்கு அவள்  இப்படி முன்னே வந்து நின்றது ஆச்சரியமாயிருந்தது. சிலவேளைகளில் எல்லாமே ஒரு வட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருப்பதை நம்பத்தான் வேண்டும் போலும். 

நிமலன் தனக்கிருக்கும் Bipolar disorder ற்கும் இப்படித்தான் வட்டங்கள் இருக்கின்றன என நினைத்துக்கொண்டான். உற்சாகமான மனோநிலையோ, அழுத்தமான சூழ்நிலையோ இப்படித்தான் சுற்றுக்களில் நிகழும். சிலவேளை அவை ஒரு நாளோடு முடிந்து போகும். சிலவேளைகளில் வாரக்கணக்கில் அந்த மனோநிலை அப்படியே இருக்கும். எப்போது ஒரு வட்டம் முடிந்து இன்னொரு வட்டம் தொடங்கும் என்பது அவ்வளவு எளிதாய்த் தெரியாதோ, அவ்வாறே எப்போது இந்த வட்டங்கள் தோன்றும் என்பதையும் தெளிவாய்ச் சொல்லிவிடமுடியாது. சின்னக் காரணத்திற்காய் தற்கொலையைக் கூட நாடிவிடும் அபாயகரமான நிலைகளும் உண்டு.

அதனால்தான் ஒருத்தி பிரிந்து போகப்போகின்றேன் எனச்சொன்னவுடன் 'மரத்திலிருந்து ஒரு பறவை பறந்து போகிறது' என இயல்பாய் எடுத்துக்கொண்டவனுக்கு, Old Spice  விலகிச் சென்றபோது அப்படிச் செய்யமுடியவில்லை. தாளமுடியாத் துயரத்துடன் நித்திரையைத் திருத்தமாக்குவதற்கென வாங்கிய நிறையக் குளிசைகளை உள்ளெடுத்து தற்கொலைக்கு முயற்சித்திருந்தான். வீட்டிலிருந்தவர்கள் அள்ளியெடுத்து அவசர சிகிச்சைக்குக் கொண்டுபோனதில்தான் அருந்தப்பில் தப்பியவன்.

'என்ன இந்தப் பக்கம், உனக்குத்தான் டவுன்ரவுன் அவ்வளவாய்ப் பிடிக்காதே?' என்றாள் Old Spice. 

'இன்றைக்கு வேலைக்கு சிக் அடித்துவிட்டு என்ன செய்வதென்று தெரியவில்லை, அதுதான் சப்வே எடுத்து வந்தேன். அதுசரி நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் இங்கே?' எனக் கேட்டான் நிமலன்.

'நானா? நான் இப்போது Bay Streetல் இருக்கும் Erest & Young ல் வேலை செய்கிறேன். இப்போது காலையில் எடுக்கும் short break. அதுதான் Bagel வாங்கப் போய்க்கொண்டிருந்தேன்.

அமெரிக்காவின் wall street போல கனடாவிற்கு Bay Street . நல்ல வேலையில் தான் இருப்பாளென நிமலன் நினைத்துக்கொண்டான்.

'என்றாலும் நீ என்னை மறந்துவிட்டாய் அல்லவா? என அவள் தொடர்ந்தாள்.

'அப்படியெல்லாம் இல்லை. உன்னை நினைவுபடுத்தும் ஒரு பொருளை நான் தினமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். பிறகெப்படி உன்னை மறக்கமுடியும்?'

'என்ன?'

'சொன்னால் முகஞ்சுழிப்பாய். நீ அறிமுகப்படுத்திய aqua reef body wash ஐத்தான் இப்போதும் பயன்படுத்துகிறேன்.'

மெல்லப் புன்னகைத்து 'என்னை நினைவுபடுத்த ஏதேனும் ஒன்றை இப்போதும் வைத்திருக்கிறாயே. அதுவே போதும்'.என்றாள்.

உரையாடிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 'பிரேக் முடிந்திருக்கும். நீ வேலைக்குப் போகத் தேவை இல்லையா?' என நிமலன் கேட்கவும், அவள் 'நீ விரும்பினால் இன்றைக்கு வேலையிலிருந்து விடுப்பு எடுக்கிறேன்' என்றாள். இவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

ஒருகாலத்தில் இவள் விலகிப் போனது, நித்திரைக் குளிசைகளை அளவுக்கதிகமாய் எடுத்தது, ஆறேழு மாதங்களாய் மனவுளைச்சலில் உழன்றது எல்லாம் நினைவுக்கு வர மெளனமாக இருந்தான்.
அவள், மெளனத்தை சம்மதமாய்க் கொண்டாளோ என்னவோ, 'நான் வேலைக்குச் சென்று, எனக்கு உடம்பு சரியில்லை என் லீவு எடுத்துவிட்டு வருகிறேன். அதுவரை காத்துக் கொண்டிருக்கிறாயா? என்றாள். அவன் ஆமா, இல்லையா என எளிதாய்ப் பிரித்தறிய முடியாமல் ஒரு மார்க்கமாய்த் தலையை அசைத்தான்

காலையுணவில் தரப்பட்டிருந்த அவித்த உருளைக்கிழங்களைச் சாப்பிட்டுவிட்டு ஒரேஞ்ஜ் ஜூஸைக் குடித்துக்கொண்டிருந்தபோது அவள் திரும்பி வந்துகொண்டிருந்தாள். ஏதோ பதின்மத்தில் முதன்முதலாய்க்  காதலிக்கும் ஒருவனைப் போன்ற உணர்வு அவனுக்குள் எழத்தொடங்கியது.  இப்போது பைபோலரின் இன்னொரு வட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும். இது அதிகவேளைகளில் வருவதைப் போன்ற மன அழுத்தத்தைத் தரும் சுழற்சியல்ல;  அரிதாய் வரும் அதீத உற்சாகமான மனோநிலையென குறித்துக்கொண்டான். 

அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்கள் அணியும் இறுக்கமான ஆடை அவளின் உடலின் வளைவு நெளிவுகளைத் திருத்தமாய்க் காட்டியது. அவளைப் பார்த்து, 'இந்த வெள்ளை மேலாடை உனக்கு மிகவும் வனப்பாய் இருக்கிறது' என்றான்.

வர்கள் ஒன்ராரியோ ஏரியை அண்டிய வீதியில் நடக்கத் தொடங்கினார்கள். ஸ்பைடைனா வீதி குறுக்கே வந்தபோது 'நமது வீதியல்லவா இது' என்றாள். அவன் அவளைக் காதலித்துக்கொண்டிருந்தபோது ரொறொண்டோ யூனிவர்சிட்டியில் அவள் படித்துக்கொண்டிருந்தாள். டவுன்ரவுண் வந்தால் எப்போதும் தொலைந்துபோகின்றவனாக இருந்த அவன், அருகேயிருக்கும் நூலகத்தின் சோபாவில் அமர்ந்து  அவளுக்காய்க் காத்துக்கொண்டிருப்பான். பிறகு சிறு வீதிகளினூடாக  கைகளைக் கோர்த்தபடி நடக்கத் தொடங்குவார்கள். 

திடீரென்று நினைவு வந்தவளாய், 'சிலவேளைகளில் நான் வர தாமதமாகும்போது, நான் வரும்வரை காத்திருந்துவிட்டு ஒன்றுமே பேசாமல் என்னோடு கோபித்துக்கொண்டு போகிறனியல்லவா? அது நினைவிருக்கா?' என்றாள்.

'ம்...அப்படிச் செய்திருக்கின்றேன். சிலவேளை உன் மீது அவ்வளவு அன்பிருந்தும் அவ்வாறு ஏன் கோபப்படுகிறேன் என்பதை விளங்கிக்கொள்ளவே முடிந்ததில்லை.'

'நீ கனடாவின் காலநிலையைப் போன்றவன்...அதுதான் காரணம்' சிரித்தபடி சொன்னாள் அவள்.
'இல்லை, பிறகு கண்டுபிடித்தனான் எனக்கு biploar disorder இருக்கிறதென்று.'

'இதை ஒரு excuse யாய் சொல்கிறாயா?'

'அப்படி நான் நடந்தது பிழைதான். ஆனால் இப்படி ஒரு சிக்கலான நிலையும்  எனக்கு இருக்கிறது  என்பதையும் நினைவூட்டத்தான்' என்றான் அவன் தலையைத் தாழ்த்தியபடி.

சட்டென்று மவுனம் அவர்களுக்கிடையில் நிழலாய் நடக்கத் தொடங்கியிருந்தது.  முன்பு அடிக்கடி அமரும்,  நூலகத்தின் முன்னிருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்தார்கள்.

அவள் அவனது கரத்தை எடுத்து மெதுவாய் வருடி, 'உண்மையிலேயே உனக்கு bipolar disorder தானா' என்றாள். அவனுக்குள் சட்டென்று ஏதோ உடைந்துமாதிரி எல்லாவற்றையும் கரைத்துவிட வேண்டுமெனப் போல கண்கள் கலங்கத் தொடங்கின.

அவள் அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட, அவளை விலத்தி, 'நீ இப்படி கண்கள் கலங்குவதும் ஒரு excuse என சொல்லப் போகிறாய்' என விழத்துடிக்கும் கண்ணீர்த்துளியை மறைத்தபடி சொன்னான்.
அருகிலிருந்த ஓர் உணவகத்தில் மதியவுணவைச் சாப்பிட்டுவிட்டு, ஏரிக்கரைப் பக்கம் போனார்கள். அங்கிருந்த அரங்கொன்றில் சில கலைஞர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். படகுகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு 'சென்ரர் ஜலண்டு'க்குப் போய்க்கொண்டிருந்தன. பெரிய பாய்மரக்கப்பலில் 'ஏரிக்குள்  மாலைச் சவாரியும், போகும்போது உள்ளேயே இரவுணவும்' என்று ஒரு பதாதை வைத்திருநதார்கள். 'படகில் போய் கடலின் நடுவிலேயே இரவுணவைச் சாப்பிடுவோமா?' எனக் கேட்டான். இதற்கிடையில் இசை நிகழ்ந்துகொண்டிருந்த இடத்தில் நின்ற ஒருவனிடம் காசு கொடுத்து வாங்கி இழுத்திருந்த இலைச்சுருள் நிமலனை இன்னும் அதீத உற்சாகத்திற்குக் கொண்டு போயிருந்ததும் அவளுக்குத் தெரியும்.

படகில் இரவுணவை முடித்துவிட்டு கரை திரும்பியபோது 'உன்னோடு இன்னும் நிறையக் கதைத்துக்கொண்டிருக்கவேண்டும் போல இருக்கிறது' என்றாள். ஆனால் இப்போது ஒன்ராறியோ ஏரியில் காற்றில் ஈரப்பதன் கூடி குளிரத் தொடங்கியிருந்தது. அருகிலிருந்த 'ஹொட்டலுக்குப் போவோமா' என்றாள்.

'Westin Castle' ல் ரூமை ஓரிரவுக்கு எடுத்தபோது அறை ஏரியைப் பார்த்தபடி இருக்கும்படியாக உறுதிசெய்துகொண்டான் அறையிலிருந்து பார்த்தபோது பல படகுகள் விரித்திருந்த பாய்களோடு கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. ஐலண்ட் எயார்போட்டில் விமானங்கள் நீரைத் தொட்டும் தொடாமல் தரையிறங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க அழகாய் இருந்தது. யன்னலை திறந்தபோது 'சைரஸ்' அரங்கிலிருந்து கசிந்துகொண்டிந்த ப்ளூஸ் காதிற்குள் நுழையத் தொடங்கியது. 
அவள் நெருங்கி வந்து அவன் அணிந்திருந்த சாம்பல் நிற  ரீசேர்ட்டைக் கழற்றினாள். அலைகளில் சுழன்று கொண்டிருந்த அவனின் நெஞ்சில் சாய்ந்த அவள் 'உண்மைதான் நீ என்னை இன்னும் மறக்கவில்லை. இப்போதும் aqua reef மணக்கிறது' என்றாள். 

ஏரியில் அலைகள் மெல்ல மெல்ல மேலெழும்பிக்கொண்டிருந்தன. சுருண்டு வளைந்து நிமிர்ந்து கரைகளில் படரும் அலைகளில் அவனின் இன்னொரு நான் தொலைந்து போய்க்கொண்டிருந்தது. 
அவள் உடலின் கதகதப்பில் திளைத்து, அவளின் மேலாடையின் தெறிகளைக் கழற்றியபோது, அவள் கோஸ்டா ரிக்காவில் அணிந்திருந்த நிறத்திலேயே உள்ளாடை அணிந்திருந்தது தெரிய, புன்னகைத்து கொண்டான்.

'எதற்கு இப்போது சிரிக்கிறாய்?' என அவள் காதினை உதட்டால் மெல்லியதாய்க் கடித்தபடி கேட்டாள்.

 'நீயுந்தான் இன்னும் மாறவில்லையென உன் ஆடையின் வர்ணம் சொல்கிறது'  என்றான். 

கடைசிச் சாட்சியான சூரியனும் இப்போது மறையத் தொடங்கியது. 

'உனக்கு திருமணமாயிற்றா?' என்று நிமலனோ, 'எவரேனும் காதலி இருக்கா?' என்று அவளோ கேட்கவில்லை. அவர்களுக்கு அந்தப்பொழுதில் அது தேவையாய் இருக்கவுமில்லை.

---------------------------------
(ஜூன், 2013)
(நன்றி: ‘காலம்’ இதழ் - 46)