புத்தரும் நானும்

புத்தரும் நானும்
அனுபவப்புனைவு

சிறுகதைத்தொகுப்பு

சிறுகதைத்தொகுப்பு
திறனாய்வு

கள்ளி

கள்ளி
கதை

கவிதை

கவிதை
ஆங்கிலம்

வாசித்தலின் பேரின்பம்

Monday, December 11, 2017

1.
நண்பர் இரவு தூக்கம் வரவில்லை, கதை எதையாவது வாசித்துக் காட்டு என்றபோது பிரேம்-ரமேஷின் மகாமுனியை விரித்து 'கனவில் பெய்த மழையைப் பற்றிய குறிப்புகள்' கதையை அவருக்காக வாசிக்கத் தொடங்கினேன். இன்னும் திருத்தமாகச் சொல்லவேண்டுமானால் கதையின் தலைப்பு 'ஜூலை 14, 1789 அன்று கனவில் பெய்த மழையைப் பற்றிய குறிப்புகள்'. நீண்ட இந்தக் கதையின் தலையங்கத்திலிருக்கும் நாளிலேயே பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றிருக்கின்றது. ழீல் என்பவனுக்கும், அவனில் பேரன்பு கொண்ட மதாம் பெர்னாதெத்திற்கும், ழீலிற்கு உளவியல் சிகிச்சை கொடுக்கும் தொனேதேனுக்கும் இடையில் நிகழும் கதைதான் இது. இசை பற்றிய கதையாகத் தொடங்கி மிக விரிவாக வரலாற்றைப் பல்வேறு திசைகளிலிருந்து விசாரிக்கும் அற்புதமான கதை.
அடுத்தநாளும் கதையொன்றை வாசியென நண்பர் கேட்டபோது ஷோபாவின் 'எம்.ஜி.ஆர். கொலைவழக்கு' தொகுப்பிலிருந்து 'வெள்ளிக்கிழமை'யை வாசித்துக் காட்டத் தொடங்கினேன். இதை இப்போது மூன்றாவது தடவைக்கு மேலாய் வாசிக்கின்றேன் என நினைக்கின்றேன். சென்றவருடம் பிரான்ஸ் சென்றபின் பாரிஸின் லா சப்பல் மிகப் பரிட்சயமான பிறகு, இதை வாசித்துப் பார்ப்பது இன்னும் சுவாரசியமாக இருந்தது. வெள்ளிக்கிழமை எனப் பெயரிட்டவர் ஷாலினி அங்காடியில் குத்துவிளக்கு வாங்குவதற்கான முயற்சிகளைச் சுவாரசியமாகச் ஷோபா வர்ணித்திருப்பார். கதை சாதாரணமாகத்தான் போவதுபோலத் தோன்றும், இறுதியில் முடியும்போது கதை இன்னொரு திசையில் நுழைந்து வாசிப்பவருக்கு அஃதொரு முடிவுறாத கதையென உணர்த்தும்போதுதான் அசாதாரணக் கதையாகிவிடுகின்றது. 
கதைசொல்லி அன்னா கரீனீனாவின் நாடகம் பார்க்க ஆயத்தமாவதிலிருந்து கதை தொடங்குவது, மெத்ரோவிற்குள் வயலின் இசைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு அன்னா, மெத்ரோவிற்குள் பாய்ந்து தற்கொலைத்த வெள்ளிக்கிழமை மீண்டு வருதல் என்பவற்றை இணைத்து பார்க்கும்போது இந்தக்கதையின் முடிச்சுக்கள் அவிழக்கூடும்.அந்த முடிச்சவிழ்ப்பின் சுவாரசியம், எஞ்சியிருப்பதால்தான் இந்தக் கதை மறக்கமுடியாததாகின்றது.
2015 சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்குப் போனபோது நிறைய சிறுகதைத் தொகுப்புக்களை வாங்கி வந்திருந்தேன். அவற்றை ஒவ்வொன்றாய் வாசித்து முடித்துவிட்டு , அவை பற்றிக் குறிப்புகள் எழுத நினைவூட்டிப் பார்த்தபோது, ஒவ்வொருகதையும் ஒவ்வொன்றின் சாயல்களில் இருப்பது போலத்தோன்றியது. எனக்கு முதலிரு தொகுப்புக்களில் பிடித்த ஜே.பி.சாணக்யா கூட பின் தங்கி நின்றார். இந்தத் தொகுப்புக்களின் முக்கிய குறைபாடாக இருந்தது அவை எவ்வித பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்க்கவில்லை என்பதுதான். இத்தனைக்கும் அனேக படைப்பாளிகளின் மூன்றாம்/நான்காம் தொகுப்புக்களாய் அவை இருந்துமிருந்தன. ரமேஷ்-பிரேமின் 'மகா முனி'யையோ அல்லது எம்.டி.முத்துக்குமாரசுவாமியின் 'மைத்ரேயி மற்றும் பல கதைகளை' யோ வாசிக்கும்போது அவர்கள் செய்யும் பரிசோதனை முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கும். அதுமட்டுமின்றி பரிசோதனை என்ற பெயரில் வாசிப்பவர்களைச் சோதிக்காமல் சுவாரசியமாக இவற்றில் பலகதைகள் எழுதப்பட்டுமிருக்கும்.
இவ்வாறான புதிய கதைசொல்லலை நான் பார்த்து மிக வியந்தது சிலி எழுத்தாளரான Alejandro Zambraவில். அவரின் Bonsai, The private lives of Tress, Ways of going home என எல்லா நாவல்களையும் தேடித் தேடி வாசித்திருக்கின்றேன். 150-200 பக்கங்களுக்குள் இவ்வளவு விரிவாகவும், சிக்கலாகவும் சிலியினதும், அங்கிருக்கும் மக்களினதும் வாழ்க்கையைச் சொல்ல முடியுமாவென வியந்திருக்கின்றேன். அவ்வாறு பல்வேறு தளங்களை ஊடறுத்துச் செல்லும், பல்வகை கதைசொல்லல் முறைகளை முயற்சித்துப் பார்த்த நாவலாக அருந்ததி ரோயின் The ministry of ultimate happiness ஐயும் சொல்லலாம். காஷ்மீரின் கதையை வாசிக்கும்போது, இந்தியா இராணுவம் ஈழத்தில் இருந்தபோது நடந்த கதையைத்தானோ சொல்கின்றாரோ என 'வாசிப்பு மயக்கம்' தருமளவிற்கு எழுதிச் சென்றிருப்பார்.
இனி நமக்கு - ஈழம்/புலம்பெயர்ந்து இருப்பவர்க்கு- complex ஆகவும், layers ஆகவும் கதைகளைச் சொல்வதுதான் நமக்கு முன்னாலிருக்கும் பெரும் சவாலாகும். முக்கியமாய் போர் பற்றிய கதைகளைச் சொல்வதற்கு, இனி நாம் நேர்கோட்டு/ யதார்த்தப்பாணி கதை சொல்லல் முறையை மட்டும் நம்பியிருக்கமுடியாது. போருக்குப் பின்பான ரஷ்ய இலக்கியங்களையும், எப்போது எது வெடிக்கும் என்ற கொதிநிலையில் அரசியலைக் கொண்டிருக்கும் இலத்தீன் அமெரிக்கப் படைப்புக்களிலிருந்துமே நாம் கற்றுக்கொண்டு நமக்கான புதிய கதை சொல்லல் முறையைக் கண்டறிந்தாகவேண்டும். இலத்தீன் அமெரிக்கக் கதைகள் என்றவுடன் மாய யதார்த்தக் கதைகளுக்கு பாய்ந்துபோகவோ அல்லது பயப்பிடவோ தேவையில்லை. ரொபர்டோ பாலனோவோ அல்லது அலெஜாந்திரோ ஸாம்பராவோ மாயயதார்த்தத்திற்குள் மட்டும் நின்று கதைகளைச் சொல்கின்றவர்களுமில்லை.

2.
பாலியல் கதைகளும் நம்மிடையே நிறைய அண்மைக்காலங்களில் எழுதப்படுகின்றன. அது குறித்து எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் பாவனை செய்கின்ற பாசாங்கைக் கைவிட்டு எழுத முன்வரவேண்டும். எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பில் 9 வது கதையை (இந்தத் தொகுப்பில் எந்தக் கதையிற்கும் தலைப்பிடப்படவில்லை) ஒருமுறை வாசித்துப் பாருங்கள். பதின்ம பையனுக்குப் பூரணமக்கா பாலியலைக் கற்றுக்கொடுக்க அவனது 'ஆண்மை' விழிப்பதுதான் கதை. ஆனால் எவ்வளவு அழகாக எழுதிச் சென்றுவிடுகின்றார். பூரணமக்கா மழையின் நடந்த பதின்மனைத் துவாயால் துவட்டும்போது, அவனைக் குழப்பும் அவரின் மார்புகள்...என்ரை காளியாச்சியைத் தடவிப் பாரும்....உம்முடைய சாமிதான் சிவலிங்கம்.. என வர்ணனைகள். பிறகு இந்தக் காட்சி சட்டென்று முடிகின்றது. ஆனால் எந்த இடத்திலும் பூரணமக்காவின் பாத்திரம் தாழ்ந்துபோவதேயில்லை. அதுதான் எஸ்.பொ. இப்போது பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவாகிய கதைசொல்லி முன்பு நடந்ததை நினைத்து நனவிடைதோய்வதோடு கதை முடிகின்றது.
'ஆண்மை' தொகுப்பை 2000த்தின் கோடையில் நான் வாசித்துவிட்டு இருக்க, எஸ்.பொ 'புலம்பெயர் இலக்கியத்தை முன்னகர்த்துவோம்' என்ற கோசத்தோடு -தமிழ்நாட்டில் காலச்சுவடு தமிழினி-2000ஐ நடத்தும்போது- செப்ரெம்பரில் கனடாவில் வந்து இறங்குகின்றார். அப்போதுதான் நான் பாலகுமாரனின் பாதிப்பிலிருந்து வெளிவந்த பருவம். பெருசிடம், இப்படி ஒரு முரண் உறவிலுள்ள கதையைப் பொதுவில் எழுதலாமா எனக் கேட்கின்றேன். டேய் தம்பி அது எனக்கு நிகழ்ந்த கதையென வைத்துக்கொள்ளேன். நடந்ததை அப்படித்தானே எழுதவேண்டும், ஏன் மறைக்கவேண்டும். எஸ்.பொவிற்கு அது நிகழ்ந்ததா அல்லது இல்லையா என்பதல்ல நமக்கு முக்கியம். எஸ்.பொ மறைந்துவிட்டபின்னும், கிட்டத்தட்ட அதை வாசித்து 17 வருடங்கள் ஆனபின்னும், இப்போதும் வாசிக்கப்போகின்றபோதும் பூரணமக்கா விகசித்துக் கொண்டிருக்கின்றார். அந்தப் பதின்மப் பையனில், எங்களில் யாரேனும் ஒருவர் தன்னைப் பார்த்துக்கொள்ளவும் முடியலாம்.
அது போல அந்தத் தொகுப்பிலே நிறைய பாலியல் சம்பந்தமான கதைகளை எஸ்.பொ எவ்வளவு கவனமாக எழுதியிருப்பாரென்பதையே கவனப்படுத்த விரும்புகின்றேன். அன்றைய காலத்தில் பாலியல் சம்பந்தமாக சாரு நிவேதிதாவின் கதைகளை முன்வைத்து மைக்கேலோடு உரையாடிக்கொண்டிருந்தபோது ஜானகிராமன் தான் காலந்தாண்டியும் நிற்பார், சாருவின் பாத்திரங்களாக இருக்காது என்றார். இப்போதும் ஜானகிராமனின் நாவல்களைப் பற்றிப் பலர் விரிவாகக் கதைத்துக்கொண்டிருக்க, சாரு எங்கேயோ பின் தங்கிவிட்டார் என்பதைத்தான் காலமும் நிரூபித்திருக்கின்றது. அலை எழுகின்றது என்பதற்காய் அவ்வளவு அவசரப்படத்தேவையில்லை. அது துணைகளுடான பாலியலுக்கும் பொருந்தும், எழுதப்படுகின்ற பாலியல் கதைகளுக்கும் பொருந்தும்.
இறுதியில் சுந்தர ராமசாமி கூறியதை நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.
“இளம் படைப்பாளி புதிய தளத்திற்குப் போக வேண்டுமென்றால் அவன் புதிய ஆழம்கொண்ட விமர்சகனாக மலர வேண்டும். வாழ்க்கையை மயக்கங்களின்றி எதிர்கொள்வதன் மூலமே புதிய ஆழத்தை அவன் பெறமுடியும். இன்று வரையிலும் உருவாக்கப்பட்டிருக்கும் சகல கற்பனைச் சுவர்களையும் தாண்டி மனிதன் அடிப்படையில் சமமானவன் என்ற பேருண்மைதான் படைப்பாளிக்கு முடிவற்ற பயணத்தைச் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது.”
-------------------------
உதவியவை:
மகாமுனி - ரமேஷ்-பிரேம்
எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு - ஷோபாசக்தி
ஆண்மை - எஸ்.பொ
துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம் - சு.வேணுகோபால்

(Oct 08)

இளங்கோவின் “பேயாய் உழலும் சிறுமனமே” -மைதிலி தயாநிதி

Wednesday, December 06, 2017

“பேயாய் உழலும் சிறுமனமே” என்று பாரதியின் பாடல் வரியினைத் தனது தலைப்பாக வரித்துக்கொண்ட இளங்கோவின் நூல் அகநாழிகை வாயிலாக 2016 செப்தெம்பரில்  வெளிவந்துள்ளது.  இது 2004 -2014 ஆண்டுகாலப் பகுதியில் பல்வேறு விடயங்கள் பற்றி எழுதப்பட்ட  30 கட்டுரைகளை  ஏறத்தாழ 185 பக்கங்களில்  உள்ளடக்கியிருக்கும் ஒரு கட்டுரைத்தொகுப்பாகும்.  அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு என்று  ஆறு பகுதிகளாக இக்கட்டுரைகள் வகுக்கப்பட்டுள்ளன.   ஓரிடத்தில் நில்லாது அலைந்து கொண்டிருக்கும் பேய் மனதின் எண்ணக் கருக்களின் சொல்வடிவமே இக்கட்டுரைகள் எனலாம்.   

போரும், அதன் வலியும், வடுவும் நிறைந்த பிள்ளைப்பருவ ஞாபகங்கள் பொதிந்த அனுபவக் கட்டுரைகளை முதலாவது பகுதியாக நூலில் வைத்துள்ளமை, அத்தகைய நினைவுகளினூடாக நூலின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையிலான தொடர்பையும், அவை ஒவ்வொன்றுள்ளும் உள்ளடக்கப்பட்ட கட்டுரைகளுக்குமிடையிலான தொடர்பையும் கட்டமைத்துக் கொள்ள உதவுகின்றது.    இராணுவ அடக்குமுறையால் ஒடுக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் வதிந்த  நூலாசிரியரின் பால்ய அனுபவங்கள் கனேடிய பல்லின சமூகத்தில்  சமூக, அரசியல் மையங்களினால் ஒடுக்கப்படுபவர்களின்  நிலைப்பாடுகளினை ஆதரித்துக் குரல் எழுப்புவராக அவரைப் பரிணமிக்க வைத்திருப்பதை புலம்பெயர்வு தலைப்பின் கீழ்  உள்ளடக்கப்பட்ட கட்டுரைகள் புலப்படுத்துகின்றன.   தீவிர வாசகராகத் தன்னை அடையாளம் காட்டும் ஆசிரியர், போரை மையமாகக் கொண்டு 2000 ஆம் ஆண்டின் பின்னர் எழுந்த ஈழத்திலக்கியம், போர் குறித்த அபுனைவுப் பிரதிகள் என்பன பற்றி அலசல், வாசிப்பு  பகுதிகளில் பதினொரு கட்டுரைகளைத் தந்திருப்பதுடன், போரினைப் பின்புலமாகக்  கொண்டு சிங்கள-தமிழ் மக்களின் உறவினைச் சித்திரிக்கும் சிங்கள இயக்குனர்களின் திரைப்படங்களுக்கான விமர்சனங்களையும், ஒடுக்கப்பட்டவரின் அல்லது ஒடுக்கப்பட்டோருக்கான இசை பற்றிய அறிமுகத்தையும் (மாயா, ‘ராப்’ பாடல்களினூடு சிறுபயணம் ) எழுதியுள்ளார்.

கவிஞனாயும், (நாடற்றவனின் குறிப்புகள் , 2007), சிறுகதை (சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் , 2012), பத்தி எழுத்தாளனாயும் விளங்கும் நூலாசிரியருக்கு மொழி வசப்படுகிறது என்பது ஆச்சரியம் அளிக்கும் விடயம் அன்று.  தெளிவு, சொற்றிறம், தடையற்ற மொழி ஓட்டம் எனும் அம்சங்களை இவர் எழுத்தில் அவதானிக்கலாம். மிகுந்த அவதானிப்புகளைப் பிரதிபலிக்கும் இவரின் இளமைப்பருவ வர்ணனைகளில் போர் ஏற்படுத்திய பீதி உறைந்திருப்பினும்,  மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூருங்கால் ஏக்கத்தின் (nostalgia)சுவடுகளையும்   காணக்கூடியதாக உள்ளது. இவரின் எனக்கான தெருக்கள் முதலாவது கட்டுரை  மாறுபட்ட பண்பு கொண்ட  இருவகையான தெருக்களை அருகருகே வைத்துப் பேசுதல் (contrast) மூலமாக  போரின் கொடுமையினையும், அவலத்தினையும் வெளிக்கொணர்கிறது.  போரின் வலிகள் எனும் நாரில் இவ்வனுபவக் கட்டுரைகள் கோர்க்கப்பட்டிருப்பினும், போரின் நிழல்படியாத நினைவுக் குவியல்களாக யாழ்ப்பாணத்து அழகிய மழைக்கால வர்ணனை இடம்பெறுகின்றது.   மேலும், வளர்ப்புப் பிராணிகள் மழைக்காலத்தில் வீட்டு விறாந்தைக்கு இடமாற்றப்படுவது பற்றிய குறிப்பு  இக்கட்டுரையில்  காணப்படும் அதே சமயம், கட்டுரையாசிரியர்  குடும்பமே போர் காரணமாக இடம் பெயர்வது குறித்து அடுத்ததாக வைக்கப்பட்டுள்ள வாளின் நுனியில் சிதறும் வாழ்வு எனும் கட்டுரை பேசுகிறது.

வாசித்த நூல்கள், பார்த்த திரைப்படங்கள் என்பன பற்றிய கட்டுரைகளில் அவரின் தர்க்க ரீதியிலான அணுகுமுறையினை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன், சரிசமநிலையுடைய  பார்வையினை  (balanced view) எல்லாக் கட்டுரைகளிலுமே அவர் தர முயன்றிருக்கின்றார்.  விசேடமாக, அசோகஹந்தகமவின்  இனி அவன் என்ற திரைப்பட விமர்சனம், வரலாற்றின் தடங்களில் நடத்தல் எனும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.  பொதுவாக இவர் எழுத்து தன் கருத்தை வலுவாகக் கூறித் தன்பால் வசப்படுத்தும், persuasive எழுத்து. தர்க்கரீதியாக விடயத்தை அணுகினும் விவாதங்களையும், விமர்சனங்களையும் சிலசமயங்களில் உணர்ச்சிகரமான மொழியில் முன்வைக்கின்றார் போல் எனக்குப் பட்டது. இது அவர்  தனது வாசகர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானமாக இருக்கக்கூடும்.  பலசமயங்களில் வாசகர்களே எழுத்தாளனின் மொழிநடையினைத் தீர்மானிக்கின்றனர்.

அத்துடன்,  இவரது பெரும்பாலான கட்டுரைகளில் இறுதிப் பந்தி மிக முக்கியமானதாக அமைகின்றது.  கட்டுரையில் ஆராயப்பட்ட நூலின் முக்கியத்துவம்,  நூலிலிருந்து வாசகர் பெறக்கூடிய செய்தி, நூல் பற்றிய மதிப்பீடு, அந்நூல் அல்லது அது கூறும் விடயம் குறித்த மறுபார்வை என்பவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார்.

இவர் எழுத்துகள் அனைத்திலும் ஊடே ஓடிக்கொண்டிருக்கும், இவரின் கட்டுரைகளினை வழிநடத்தும்  விழுமியங்கள்  இன, நிற, மத, சாதி, வர்க்க, பால், பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதரை மதித்தல்,நேசித்தல்,  மனிதரைக் கண்மூடித்தனமாகக் கொன்றொழிக்கும் போருக்கும், எதேச்சாதிகாரத்திற்கும்  எதிரான நிலைப்பாடு,  இயற்கையை ஆராதித்தல், விட்ட பிழைகளுக்கான கூட்டுப்பொறுப்பு  என்பனவாகும். இத்தகைய மானுடம் சார்ந்த விழுமியங்களால் இவர் எழுத்துகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.
.  
இனி, இவர் நூல் பற்றிய எனது மறுபார்வையச் சுருக்கமாக  இங்கு பதிவு செய்கிறேன்.  முதலாவதாக, கட்டுரைகள்  சிலவற்றினைக் கால ஓட்டத்திற்கேற்ப மீள்பார்வை செய்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.  எடுத்துக்காட்டு: சமகால ஈழத்து இலக்கியம் (2010),  சில அரசியல் பிரதிகள் (2012).  

மேலும்,  இந்நூலின் 46-47 ஆம் பக்கங்களில் காணப்படும் A Second Sunrise எனும் தொகுப்பிலிருக்கும் colour எனும் கவிதை பற்றிய நூலாசிரியரின் விமர்சனம் கவனத்தை ஈர்க்கிறது.  இக்கவிதை நிறம் எனும் பெயரில் ஏற்கனவே  மீண்டும் கடலுக்கு எனும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பே என்கிறார் நூலாசிரியர்.  Colour எனும் ஆங்கிலக் கவிதையை நான் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.  ஆனால் அது நிறம் எனும் கவிதையின் விசுவாசமான மொழிபெயர்ப்பு எனில், அது வீடற்ற மனிதர்கள் அனைவரையும்  மாறாநிலைப்படுத்துகின்றது  (sterotyping)  என்றோ, வீடற்ற எல்லா விளிம்பு நிலை  மனிதர்கள் பற்றிய விமர்சனமோ என்று கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.  

காட்டுப்பச்சை இராணுவத் தொப்பியுடனும், நீலக்கண்களுடன் இருந்த முதிய வீடற்ற தனிமனிதன் ஒருவன் visual minority சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் மீது இனவாத இழிசொல்லொன்றை வீசுகின்றான் என்றே கொள்ளவேண்டியிருக்கின்றது. அந்த வசைச் சொல் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட சமூகங்களை இழிவுபடுத்தும் சொல். ஆனால் அதைக் கூறியவனுக்குக் கவிதையில் விசேட அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, அவனை வீடற்ற, இரந்து காசு கேட்கும் விளிம்புநிலை மனிதர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனாக, அக்கவிதையை மூலமொழியில் வாசிக்கும்போது என்னால் பார்க்கமுடியவில்லை.

அடுத்ததாக,  with you without you   என்ற பிரசன்ன விதானகேயின் திரைப்படம் குறித்து,நூலாசிரியரின் விமர்சனத்திற்குச் சார்பாக ஒரு கருத்தினைக் கூற விழைகின்றேன்.   சூழ்நிலை காரணமாக நடுத்தரவயது சிங்கள அடகுபிடிப்பாளரை மணமுடிக்கும் தமிழ்ப் பெண்ணொருத்தி தற்செயலாகத் தனது கணவனின் கடந்தகாலம் பற்றி அறிகிறாள். இதன்பின்னர்  அவனுடன் சுமுகமாக வாழ்க்கை நடத்தவியலா நிலையில் ’ விபரீத முடிவொன்றினை’ எடுக்கின்றாள்.  இப்படம் பற்றி நூலாசிரியர் “இது இரண்டு தனி மனிதர்களின் சிக்கலான வாழ்க்கை என்பதை விட இன்னும் சற்று விரித்துப் பார்த்தால் இரண்டு இனங்களுக்கிடையிலான முரண்  என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.  இன்று ஈழத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு வாழ்ந்து விடலாம் என்கிற மேலோட்டமான அறைகூவலை எவ்வித பிரசார நொடியும் இல்லாது இந்தத் திரைப்படம் அடித்து நொறுக்கி விடுகின்றது.” என்று கூறுகின்றார்.  

இந்தக் கருத்து எனக்கு உடன்பாடானதே. எனினும், இத்திரைப்படத்தைப் பார்த்த பின்னர் என் மனதில் எழுந்த கேள்வி,  ”அந்த இரு தனி மனிதர்கள் ஏன் சிங்கள ஆணாகவும், தமிழ்ப் பெண்ணாகவும் இருக்கவேண்டும்? சிங்களப் பெண்ணாகவும் தமிழ் ஆணாகவும் ஏன் இருந்திருக்கக்கூடாது?” என்பதுதான்.  சிங்கள-தமிழ் கலப்புத் திருமணம் தொடர்பாக புலமைசார் கட்டுரைகள் யாதேனும் உள்ளனவா என நான் தேடும்போது 2003 இல் வெளியிடப்பட்ட   Feminists under fire: Exchanges across war zones என்ற நூலில் நெலுகா  சில்வா    The politics of intermarriage in Sri Lanka in an era of conflict  (147-156) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை கிடைத்தது.  ஸ்ரீலங்கா தொலைக்காட்சிநாடகங்களில் சிங்கள-தமிழ் கலப்புத்திருமணம் பற்றிய சித்திரிப்பு பற்றி இதில் இவர் எழுதுகிறார்.  சிங்கள-தமிழ்க் கலப்புத் திருமணம் முதலில் பெரும்பான்மைச் சிங்கள இனத்தவரால் ஆதரிக்கப்படாதிருந்தபோதிலும்,   1998 க்குப் பிற்பட்டு வெளிவந்த  தொலைக்காட்சி நாடகங்களில் அதற்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க சாதகமான போக்கினை அவதானிப்பதாகக் கூறும் அவர்  இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

அதிகாரபூர்வமான பொதுவெளிச் சொல்லாடல்களிலும் (public discourse), ஊடகங்கங்களிலும் ஆதரிக்கப்படும் இரு இனங்களுக்கிடையிலான தொடர்பின் கூட்டிணைவு பிரச்சினைக்குரிய மாதிரியைப் பின்பற்றுவதுபோன்று தோன்றுகிறது.    ஆராயப்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் பெண் சிறுபான்மைத் தமிழ் இனத்தைச் சேர்ந்தவளாகவும்,  ஆண்  பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவனாகவும் விளங்குகின்றான்..  (இதற்கு மாறான நிலை பொதுஅரங்கில் இதுவரை காட்டப்படுவதற்குத் தகைமை வாய்ந்ததாக அமையவில்லை.) சிங்கள ஆணை விவாகம் செய்வதன் மூலம்  தன்னியப்படுத்தல் அரசியல் (politics of assimilation) நிகழ்கிறது.  இப்பெண்கள் தமது அடையாளங்களின் முக்கிய கூறுகளில் ஒன்றான தமிழ்க்குடும்பப் பெயரைக் கைவிட்டு,  ஆணின் சிங்களப் பெயர்களை  ஏற்றுக்கொள்வர் என ஊகிக்கலாம். சுர அசுர தொலைக்காட்சி நாடகத்தில் தனது இனத்துவத்தின் அடையாளமான பொட்டினைத் தொடர்ந்து அணியினும்,  இரஹந்த யத எனும் தொலைக்காட்சி நாடகத்தில் கதாநாயகி பொட்டிடலைத் தவிர்க்கின்றாள். இது அவளின் தமிழினத்துவத்தினை இன்னுமொருபடி சென்று துடைத்தழிக்கின்றது.” (பக்கம் 154) 
என்று கூறும்  நெலுகா சில்வா  சிங்கள ஆணைக் காதலிக்கும் அல்லது  திருமணம் செய்யும் தமிழ்ப்பெண் சிங்கள மொழியில் உரையாடுபவளாகவும், அதே சமயம் ஆண் தமிழில் பேசுதற்கு எவ்வித எத்தனமும் எடுக்காதவனாவனாகவும் காட்டப்படுகின்றான்.  இதை பெரும்பான்மைச் சமூகத்தின் மொழிமேலாண்மைக்குச் சிறுபான்மை இனத்தவர் உட்படுத்தப்படுவதைக் குறிக்கின்றது. தமிழ்ப் பெண்களை திருமணமூலமான உள்வாங்கல்கள் அடிப்படையில் ஒற்றைப்படையான சமூகத்தினை உருவாக்க முடியும் என்ற  பெரும்பான்மையினர்  மத்தியில்  போர்க்காலத்தில் செல்வாக்குப் பெற்ற  கருத்தியலின் பொருத்தப்பாடின்மையையும் with you without you   திரைப்படம் சுட்டிக்காட்டுகின்றது அல்லது தகர்க்கின்றது என்றும் கூறலாம்..

நூலில் இறுதியாக உள்ளடக்கப்பட்டுள்ள நீரிற் கரையும் சொற்கள்  இலக்கிய வாசிப்பும் விமர்சனமும், மனித மனத்தின் விரிதிறம், அன்பை வெளிப்படுத்தல், உயிர்த்திருத்தல்  என்பன குறித்துப் பேசுகின்றன. இலக்கிய வாசிப்பும் விமர்சனமும் குறித்து இளங்கோ இவ்வாறு கூறுகிறார்.

இசையில் ஓவியத்தில் இலக்கியத்தில் அமிழ முன்முடிவுகள் அவசியமற்றவை. ஒருபுத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது, எழுத்தாளரின் பெயரும் அடையாளமும் இன்றி வாசித்தாற்றான் அந்தப் படைப்பில் முற்றாக அமிழ்ந்து போகமுடியும் என்று எப்போதோ வாசித்த கவிதை நினைவிற்கு வருகின்றது.  உண்மையில் இந்தத்தன்மை எனக்குள்ளும் தலைதூக்கியபடிதான் இருக்கின்றது.  விமர்சனங்களை வாசித்து வாசித்து எல்லாவற்றையும் விமர்சனக்கண்ணோடு பார்த்துக் கொண்டு வாழ்வின்/படைப்பின் அரிய தருணங்களைத் தவற விடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு. இலக்கியத்தைவிட எத்தனையோ அற்புதமான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. அவற்றில்தான் அதிகம் அமிழ்ந்து போக விரும்புகின்றேன்.  ஒரு பயணியாய் இலக்கியப் படைப்புகளை வாசித்து விட்டு, அவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியலை உதறித்தள்ளிவிட்டுப் போக விரும்புகின்றேன்.  பிடித்திருந்தால் மனதில் நிறுத்திக்கொண்டும், பிடிக்காவிட்டால் புன்னகைத்தபடியும் வாழ்வில் நகர்தலே சாலச்சிறந்தது. ஆனால் அது எந்தளவில் சாத்தியம்/சாத்தியமின்மை என்பது புரியவில்லை (பக்கம் 184)


ஆசிரியரது இக்குறிப்பு இலக்கியத்திற்கும், விமர்சனத்திற்கும் இடையிலான  மன அசௌகரியமான தொடர்பு பற்றிப் பேசுகிறது.  இது குறித்த எனது கருத்துகளுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.  எல்லா இலக்கியப் பிரதிகளுமே அரசியற்பிரதிகள் என்றுதான் நான் கருதுகிறேன். சில  மிக வெளிப்படையானவை. பல தன் சார்பு நிலையை வெளிப்படுத்தாதவை.    இலக்கிய விமர்சனம் என்பது பிரதியின் பலம் பலவீனங்களை மதிப்பிடுவது (evaluation) என்று மிகக் குறுகிய வட்டத்தில் சிந்திக்கின்றோம். வெவ்வேறு கோட்பாடுகளுக்கூடாகப் அப்பிரதியைப் பார்க்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதையும்  மறந்து விடுகின்றோம்.   இலக்கியப்பிரதியின் கர்த்தா, பிரதி எழுந்த சூழல் இவற்றை எல்லாம் புறம் தள்ளி, வெறுமனே பிரதியை மட்டும் மையமாகக் கொண்டெழுந்த விமர்சனமுறையும் உண்டு.  

அது குறித்த கட்டுரைகளை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வெளியீடான இளங்கதிரில் பேராசிரியர் செல்வநாயகம் எழுதியுள்ளார்.  மேலும், பிரதி எவ்வளவு தூரம் சமூகப்பொறுப்புடையதாக இருக்கின்றது என்பதில் மட்டும் விசேட கவனம் செலுத்தி,  அதன் வடிவம் சார்ந்த அழகியல் அம்சங்களைப் புறக்கணித்து விடுகிறோம்.   ”ஏன் இன்னும் எமது படைப்புகள் தமது தளத்தை உலக அளவிற்கு விசாலிக்கவில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான விமர்சன மரபு தொடர்ச்சியாக வளர்தெடுக்கப்படவில்லை என்பது முக்கிய காரணமாய்த் தோன்றுகின்றது என்று இளங்கோ கூறுவதும் (பக்கம் 43), தமிழிலக்கிய மரபு தனக்கென அழகியலை வளர்த்தெடுத்துக் கொள்ளல் அவசியம் என்று கவிதையியல், அழகியல், சமகாலத்தமிழ்க் கவிதை எனும் கட்டுரையில்  பேராசிரியர் செல்வா கனகநாயகம்  குறிப்பிடுவதும் நமது கவனத்திற்கும் சிந்தனைக்கும் உரியன. 
-------------------------------

(நன்றி: 'பிரதிபிம்பம்')

காற்று, மணல், நட்சத்திரங்கள்

Monday, December 04, 2017

"மனித இனத்தில் வெறுப்பு, நட்பு, மகிழ்ச்சி இவையெல்லாம் நிகழ்த்தப்படும் அரங்குதான் எவ்வளவு எளிதில் நொறுங்கக் கூடியதாக இருக்கிறது! இன்னும் வெதுவெதுப்பாக இருக்கும் எரிமலைக் குழம்பின் மேல் தற்செயலாக வந்து இறங்கி, இனி எதிர்கொள்ளவிருக்கும் பாலைகளும் பனிப்பொழிவுகளும் மிரட்டிக்கொண்டிருக்க, நிரந்தர வாழ்வின் சுவையை இந்த மனிதர்கள் எங்கிருந்து பெறுகின்றார்கள்? அவர்களுடைய நாகரிகம் எளிதில் கலைந்துவிடக்கூடிய நகாசு வேலை மட்டுமே: ஒரு எரிமலை, ஒரு புதிய கடல், ஒரு மணற்புயல் அவர்களை அழித்துவிடும்."
-அந்த்லான் து செந்த்-எக்கபெரி 

'குட்டி இளவரசன்' மூலம் அந்த்லான் து செந்த்-எக்கபெரி மிகப் பிரபல்யமடைந்தவர். சுயசரிதம் போல எழுதப்பட்டிருக்கும் 'காற்று, மணல், நட்சத்திரங்கள்' அவரின்  இன்னொரு பக்கத்தை நமக்குக் காட்டுகின்றது. இளவயதிலேயே எக்கபெரி விமானத்தில் பறக்கத் தொடங்கியவர். ரைட் சகோதரர்கள் பறப்பதற்கான விமானங்களைக் கண்டுபிடித்த சொற்ப வருடங்களிலேயே எக்கபெரியும் பறக்கத் தொடங்கியவர். அவரது பறத்தல் பல்வேறு சாகச நிகழ்வுகளைக் கொண்டதோடு, புதிய விமானத்தடங்களை கண்டுபிடிப்பதிலும் அன்றைய காலங்களில் இருந்திருக்கின்றது.

இந்த சுயசரிதைத்தன்மைக் கொண்ட நாவல், எக்கபெரியின் விமானப் பயணங்களைப் பற்றியது என்றாலும், அதை மேவி நிற்பது அவர் மானிடகுலத்தின் மீது வைத்திருந்த அளப்பெரிய நம்பிக்கைதான். மனிதர்களும், இயந்திரங்களும் ஒன்றல்ல, ஆனால் மனிதர்கள் தமது நிலையறியாது சீரழிகின்றார்கள் என்று இந்நாவல் எங்கிலும் கவலைப்படுகின்றார். அவ்வாறியிருப்பினும் அதை மீறி மனிதர்களை அதிகம் நேசிக்கின்றார்; போரைப் பல்வேறு நிலைகளில் பார்த்தபோதும் அதை ஒவ்வொருமுறையும்  எக்கபெரி எதிர்நிலையில் வைத்தே பார்க்கின்றார்.

இந்த நூலில் எக்கபெரியும் அவரது விமான மெக்கானிக்கும் சஹாரா பாலைவனத்தில் விமானத்தோடு நொறுங்கி விழுந்து, மூன்று நாட்கள் கொடும் வெப்பத்தில் சாகும்தறுவாயிற்குப் போய், ஒரு நாடோடியின் உதவியால் தப்பிவருவதை வாசிக்கும்போது, நாம் இதுவரை அறியாத ஒரு புதிய நிலப்பரப்பிலும், சாகசப்பயணத்திலும் அவர்களோடு சேர்ந்து இருப்பது போல உணர்வோம். அந்தவளவிற்கு மிக அருமையாக விபரித்து எக்கபெரி எழுதியிருப்பார். வாசிப்பதிலும், எழுதுவதிலும் மிக விருப்புக் கொண்ட எக்கபெரி வான் மீதிலிருந்தே நிறைய வாசித்திருக்கின்றார். சிலவேளைகளில் கீழே இறங்கும் விமானதளம் வந்தபிறகும், வாசிப்புச் சுவாரசியத்தில் தரையில் இறங்காமல் மணிக்கணக்கில் சுற்றிக்கூட வந்திருப்பதாய் அவரைப் பற்றிய குறிப்புகளில் இருந்து அறியமுடிகின்றது.

விமானப் பயணங்களைப் போல, ஸ்பானிய உள்நாட்டுப்போரில் நடக்கும் சம்பவங்களை விபரிக்கும்போதும், மூர் இனத்தவரிடம் சிக்கியிருந்த அடிமையான மொராக்கோக்காரரை அவருக்கான பணத்தைக் கொடுத்து விடுவிடுத்து, அவரின் சொந்த இடத்துக்கு அனுப்பிவைக்கும்போதும், எக்கபெரியின் சாகசச் செயல்களை மட்டுமின்றி, அவருக்குள் ஒளிந்துகிடக்கும் அற்புதமான மனிதாபிமானியையும் நாம் கண்டுகொள்ள முடிகின்றது.

'காற்று, மணல், நட்சத்திரங்கள்' எனப் பெயரிட்டப்பட்டு தனக்குத் தெரிந்த விடயங்களைத்தான் இதில் எக்கபெரி எழுதிச் செல்கின்றார் என்றாலும், வாசிக்கும் நாம் அந்த சாகசங்களின் மீது வியப்பையும், இயற்கையின் மீது பேரன்பையும், சகமானிடர் மீது தோழமையுணர்வையும் கொள்கின்றோம். அதுவே 'குட்டி இளவரசனை'ப் போல, இந்த நாவலையும் கடந்துபோய்விடமுடியாத ஒரு படைப்பாக தன்னை ஆக்கியும் கொள்கிறது.

(இந்நாவலை வெ.ஸ்ரீராம் தமிழாக்கம் செய்து, க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது)
---------------------------
(நன்றி: 'பிரதிபிம்பம்')

இலங்கைக் குறிப்புகள் - 01

Saturday, December 02, 2017

சந்திப்பு 01 & 02
அ.யேசுராசாவின் படைப்புக்களைப் பற்றி நெடுங்காலத்திற்கு முன்னர் அறிந்திருந்தபோதும், அவரது 'குறிப்பேட்டிலிருந்து' என்கின்ற பத்தி எழுத்துக்களின் தொகுப்பு வெளிவந்தபோதுதான் முதன்முதலாக நாம் அறிமுகஞ்செய்து கொண்டிருக்கவேண்டும். கொழும்பிலிருந்து நண்பரொருவரினூடாக அவர் அந்த நூலை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
என்னைப் போன்ற நிறையப் பேர், எங்கள் வலைப்பதிவுகளில் உற்சாகமாய்த் தொடர்ந்து எழுதியும், உரையாடிக்கொண்டிருந்த ஒரு காலம் அது. 'தமிழ்மணம்' வலைதிரட்டி பிரபல்யமாய் இருந்து, எழுதும் எங்களை அந்த நாட்களில் ஒன்றிணைத்திருக்கின்றது. அப்போது நடந்த விவாதமொன்றில் நண்பரொருவர், 'நீ அலை யேசுராசாவின் வாரிசாக மட்டுமே வரக்கூடியவன்' என்று எரிச்சலில் ஒரு புதுப் பட்டஞ்சூட்டினார். வேறு ஒன்றுமில்லை, 'நீங்கள் புதிதாய் எதையும் கற்றுக்கொள்ள விரும்பாது, ஒரு வறட்டு மரபு மார்க்சியவாதியாக இருக்கின்றீர்கள்' என அந்த நண்பரோடு தனவியதுதான் இந்தப் பட்டஞ்சூட்டலுக்குக் காரணம். எழுத வரும்போது நாமே நமக்கு எத்தனையோ புனைபெயர்களை வைத்துக்கொள்கின்றோம். அதுபோல பிற நண்பர்களால் இப்படியாக கோபத்தில் சூட்டப்படும் பட்டப்பெயர்களையும் விருப்பி ஏற்கவேண்டியதுதான்.
அ.யேசுராசா எனக்கு தனிப்பட்டு அனுப்பிய தொகுப்பின் காரணமாக, நெகிழ்ந்து அன்றையகாலத்தில் எழுதிய ஏதோ ஒரு பதிவை அவருக்கு காணிக்கை செய்திருந்தேன். 'அ.யேசுராசாவிற்கு...' என்று எழுதியதோடு ஏதோ வேறு சிலவற்றையும் அந்தக் காணிக்கையில் எழுதியிருந்தேன். பிறகு சற்று அதிகப்படியாக இருப்பதாய் அந்தச் சிறுபகுதியை நீக்கியபோது, நம்மைவிட்டு இளவயதில் ஈழநாதன், டிசே அது என்னவென வியாக்கியானம் கேட்டு எழுதியதும், அந்த நாட்கள் நகைச்சுவையாகக் கழிந்ததும் இனிய நனவிடைதோய்தல். இன்றிருக்கும் 'நூலகம்' தொடங்குவதற்கு உந்துசக்தியாக ஈழநாதன் இருந்ததுபோல, அ.யேசுராசா நண்பர்களுடன் திரையிடல்கள் செய்தபோது அவர்களுக்கென சொந்தமாக வாங்கிய புரஜெக்டருக்கும் ஈழநாதன் உதவிபுரிந்ததாகவும் நினைவு இருக்கின்றது.

னடாவில் நண்பர்களுடன் சேர்ந்து இலக்கியம் சார்ந்து உரையாடுவதற்காய் 'சுடருள் இருள்' என்ற நிகழ்வை நாங்கள் தொடங்கியபோது, நிகழ்வில் அ.யேசுராசாவின் 'குறிப்பேட்டிலிருந்து' தொகுப்பை எடுத்துப் பேச நாங்கள் விரும்பினோம். அரசியல் தளத்தில் செயற்பட்டு சலிப்புற்று எல்லாவற்றிலுமிருந்து ஒதுங்கியிருந்த மீராபாரதியைக் கொண்டு அந்த அறிமுகத்தை நிகழ்த்தியுமிருந்தோம். பின்னர் இலங்கையிற்கு 2012ல் சென்றபோது, அ.யேசுராசாவைச் சந்திக்க விரும்பியபோதும், எனக்குத் தரப்பட்ட தொலைபேசி இலக்கத்திலிருந்து அவரைத் தொடர்புகொள்ள முடியாதிருந்தது. இறுதியில் யேசுராசா கனடா வந்துதான், நான் அவரைச் சந்திக்கவேண்டும் என்று விதியிருந்திருக்கின்றது போலும். ஒரு நிகழ்வின் பொருட்டு கனடா வந்திருந்த யேசுராசாவை, நண்பர்கள் நாங்கள் ஒருநாள் 'கடத்திக்கொண்டு' போய் பூங்காவில் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பின்னர் சென்றவருடம் இலங்கை சென்றபோது, எப்போதும் அவரது நூல்களில் வாசித்து என்னை ஈர்த்துக்கொண்டிருந்த அந்த அழகான பெயரான '1ம் இலக்க ஓடைக்கரை வீதி' வீட்டிற்குப் போயிருந்தேன். கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்களுக்கு மேலாய் உரையாடிக்கொண்டிருந்திருப்போம். பிற விடயங்கள் எதிலும் பூச்சியம் என்றாலும், ஓரளவு வாசிப்பவன், திரைப்படங்களைப் பார்ப்பவன் என்பதால் அவை பற்றி யாரோடும் கதைக்க முடியும் என்று நம்புகின்றவன் நான். அந்த நினைப்பும், அ.யேசுராசா தான் பார்த்த திரைப்படங்களையும், வாசித்த புத்தகங்களையும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியபோது கரைந்துபோகத்தொடங்கியது. 
இவ்வளவு நிறையத் தெரிந்தவர் முன் நிகராய்ப் பேசுவதற்கு எனக்கு எதுவுமே தெரியாதென்ற வெட்கமே என்னைச் சூழ்ந்துகொண்டது. தான் அனுபவித்ததைப் பகிர்ந்ததோடல்லாது கொழும்பில் எங்கு இந்தத் திரைப்படங்களை, புத்தகங்களை வாங்கலாமென்றும் திசைகளைக் காட்டிக்கொண்டிருந்தார். அன்றைய மாலை, எவரோ ஒருவரினது குறும்படம் பார்க்க வரச்சொல்லியிருந்ததாய் அவர் தன்னைத் தயார்ப்படுத்த, நான் புறப்படத் தொடங்கினேன்.

சந்திப்பு 03
இம்முறை யாழ்ப்பாணத்தில் எனது நூல் வெளியீட்டைச் செய்ய விரும்பியபோது, நூல் பற்றியல்லாது ஒரு பொதுவான உரையை எங்கள் முன்னோடிகளிலிருந்து கேட்கவேண்டுமென எனக்கு விருப்பமிருந்தது. அப்படி செய்வதற்குப் பொருத்தமானவர் யாரென்று யோசித்தபோது, உடனே நினைவுக்கு வந்தவர் அ.யேசுராசா. ஏதாவது ஒரு தலைப்பில் உங்களுக்குப் பிடித்தமான வகையில் உரையாற்றுங்கள் என கேட்டபோது, அவர் தற்போது இவ்வாறான நிகழ்வுகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகியிருக்கின்றேன் எனத் தெரிவித்தார். அவரது தெரிவை மதிக்கின்றேன் எனக்கூறிவிட்டு இயன்றால் நிகழ்விற்கு வந்தால் மகிழ்ச்சியெனச் சொன்னேன்.
யாழிற்கு வந்தபோது நாங்கள் தங்கியிருந்த விடுதியும் குருநகரிலேயே இருந்தது. வாழ்ந்த ஊர், (பாழடைந்த) வீடு இருக்கின்றபோதும் ஓர் அந்நிய இடமாகவே யாழ்ப்பாணம் இப்போது வந்துவிட்டது என்பது சோகமான விடயந்தான். அப்படி குருநகரில் தங்கிநின்றபோது அ.யேசுராசாவின் ஊரும் அதே என்பதால், எங்கேயாவது பேசப்போவோம் என அவர் தனது மோட்டார்சைக்கிளில் வந்தார். அவரின் வண்டியில் பின்னால் நானிருக்க, நாங்கள் பண்ணைக் கரைக்குப் போனோம். சென்ற வழியில் எப்படி முன்னர் இவையெல்லாம் இருந்தன், இப்போது இந்த இடங்களெல்லாம் எப்படி மாறிவிட்டதெனச் சொல்லிக்கொண்டு வந்தார். ஏ.ஜே, எம்.ஏ.நுஃமான் போன்ற நண்பர்களுடன் தான் பேசிக்கொண்டிருந்த பண்ணைக் கடற்கரையின் நினைவுகளென நனவிடைதோய்தலில் அவர் போய்க்கொண்டிருந்தார். எம்.ஏ.நுஃமானின் 'நேற்றைய மாலையும் இன்றைய காலையும்' எழுதப்பட்ட சூழலை, தேநீர் அருந்திக்கொண்டு அந்த நண்பர்களோடு நடது பேசித்திரிந்த காலங்களென யேசுராசா என்னோடு பகிர்ந்தவை இனிமையான நினைவுகள். இருட்டாகியபோது பண்ணைக் கடற்கரையிலிருந்து வெளிக்கிட்டு நான் நின்ற விடுதியில் இருந்தும் பேசினோம். கிட்டத்தட்ட நான்கைந்து மணித்தியாலங்களுக்கு மேலாய்ப் பேசியிருப்போம் என நினைக்கின்றேன்.
எனது நூல் வெளியீட்டு நிகழ்விற்கு வருவாரா இல்லையா எனத் தெரியாதபோது, அந்தக் காலையில் அங்கே அவர் வந்திருந்தது எதிர்பாராதது. அந்த மகிழ்ச்சியை, அவரைக் கொண்டு எனது நூலை வெளியிட்டு கொண்டாடிக் கொண்டேன்.
ஒரு கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, பத்தியெழுத்தாளராக யேசுராசாவின் பயணம் நீண்டது. அதுமட்டுமின்றி 'அலை', 'திசை' போன்றவற்றிலும், 'மரணத்துள் வாழ்வோம்', 'பதினொரு ஈழத்து கவிஞர்கள்' போன்ற நூல்களைத் தொகுத்தவர்களில் ஒருவராகவும், அவரது பங்களிப்பு மறக்கமுடியாதது. அவ்வப்போது உறங்குநிலைக்குப் போனாலும், தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்துக்கொண்டு இயங்கிக்கொண்டேயிருப்பவர். அண்மையில் அவரது 'நினைவுக் குறிப்புகள்' தொகுப்பு வெளிவந்தும் இருக்கின்றது.
சில விடயங்களில் கறாரானவர் என்றும், நெருங்குவதற்கு அவ்வளவு எளிதானவர் அல்ல என்றும் யேசுராசா பற்றி வெளியில் ஒரு பொதுவான அபிப்பிராயம் இருந்தாலும், அவரோடு பேசும் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம், அவ்வாறில்லை எளிதாய் நெருங்கி அவரோடு உரையாடலாம் என்ற எண்ணமே எனக்குள் வந்தது. தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிரவேண்டும் என்ற பெருவிருப்பமே அவரிடமே மேலோங்கியிருந்ததை ஒவ்வொருபொழுதிலும் நான் அவதானித்திருக்கின்றேன்.
எனதும், எனக்குப் பின்னும் இருக்கின்ற தலைமுறைகள், நிறையக் கற்பதற்கும், எப்படி சோர்வின்றி கலை/இலக்கியம் சார்ந்து செயற்படுவது என்பதற்கும் அவரிடம் நிறைய விடயங்கள் இருக்கின்றன. யேசுராசாவும், எங்களைப் போன்ற தலைமுறைகளிடம் அவ்வப்போது வெளிப்படும் பொறுமையின்மையை, மூத்தவர் என்றவகையில் சகித்துக்கொண்டு திரைகளை விலக்கி, எங்களை நோக்கி இன்னும் நெருங்கி வரவேண்டுமெனவும் பிரியப்படுகின்றேன்.
இறுதியாக எனக்கு பிடித்த அவரது கவிதைகளில் ஒன்று:

பிறகு...
பிறகென்ன, எல்லாம்முடிந்ததுதான்,
'எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி'
சிலுவையி லெழுந்த ஏசுவின்குரலாய்
அவளின் முன்னால்,
அவனின் முன்னால்
நினைவினி லெழுந்த குரலொலியெல்லாம்
இற்று இற்றே மறைவதும்காணாய்.
நீண்டுவிரிகிற பாலை வெளியில்
எந்தப்பசுந்தரை தேடியலைவாய்?
ஒதுங்கிக்கிடக்கிற தனித்த தீவில்
எந்தப்படகைக் காத்தும் இருக்கிறாய்?
'எல்லாம் எப்போ முடிந்த காரியம்.'
14.1.1975
(நன்றி: 'அறியப்படாதவர்கள் நினைவாக' தொகுப்பு)
----------------------

Oct 14, 2017.
(ஓவியம்: றஷ்மி)

’பேயாய் உழலும் சிறுமனமே’ நூலில் தெரியும் இளங்கோவின் மனம்!

Saturday, November 11, 2017

-எஸ்.கே.விக்னேஸ்வரன்

2007 இல், சரிநிகர் பத்திரிகையை மீண்டும் சஞ்சிகை வடிவில் கொண்டுவரத் தொடங்கியபோது, தமது வலைத்தளங்களில் எழுதிவரும் கவனத்துக்குரிய ஒருசில படைப்பாளிகளின் படைப்புக்களை சந்தர்ப்பம் கருதி சரிநிகரில் மறுபிரசுரம் செய்வதம் மூலம் சரிநிகர் வாசகப் பரப்புக்கும் அவர்களை அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணத்துடன் ஒருசில படைப்புக்களை வெளியிடத்தொடங்கியிருந்தோம். இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புக்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு அப்போதுதான் வெளிவந்திருந்தது, கவிதை மட்டுமன்றி, கதைகளும், டிசே தமிழன் என்ற பெயரில் கட்டுரைகளும் தனது வலைத்தளத்தில் எழுதிவருவதன் மூலம் அவர் ஒரு கவனத்துக்குரிய இளந்தலைமுறைப் படைப்பாளியாக அப்போது இனங்காணப்பட்டிருந்தார். அசோக கந்தகமவின் ‘இவ்வழியால் வாருங்கள்’ என்ற திரைப்படம் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை ஒன்று சரிநிகரில் வெளியிடுவதற்காக நண்பர் சிவகுமாரால் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

இந்தக் கட்டுரை ஏற்கனவே அவரது வலைதளத்தில் வெளியாகிவிட்டிருந்ததா அல்லது சரிநிகருக்காக அவரால் அனுப்பப்பட்டதா என்பது தற்போது ஞாபகத்தில் இல்லை. ஆனால் அந்தக் கட்டுரை வெளிவந்த போது தான் அவர் எனக்குத் தெரிந்த நட்பு வட்டத்தை சேர்ந்த ஒருவர்தான் என்பதை அறிந்து கொண்டேன். (அந்தக் கட்டுரை இந்தத் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது). ஆயினும், அவரைச் சந்திக்கவோ, பேசிக்கொள்ளவோ அப்போது சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பம் 7 வருடங்கள் கழித்து, கனடாவில் தான் கிடைத்தது.

000

இளங்கோ தனக்கென தனித்துவமான புனைவு மொழியில் கவிதைகளையும், கதைகளையும் எழுதிவருபவர். ஏற்கனவே அவரது கவித்தொகுப்பு ஒன்றும், சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளன. அளவில் சிறியவை என்றாலும் அதற்கு நேரெதிரான விதத்தில் பரவான கவனிப்பை பெற்றவை அவை. தனது படைப்புக்களாலும் பத்தி எழுத்துக்களாலும் பரவலான கவனத்தையீர்த்துள்ள படைப்பாளியான அவரது இந்த நூல், முழுக்க முழுக்க புனைவுசாராத, அரசியல்,இலக்கியம், இசை, சினிமா மற்றும் பயணங்கள் சார்ந்த அவரது எழுத்துக்களில் அவரே தேர்ந்தெடுத்த சிலவற்றின் தொகுப்பாகும். 2002 முதல் 2013 வரையான கிட்டத்தட்ட பத்தாண்டு காலப்பகுதியில் அவர் எழுதியிருக்கக் கூடிய கட்டுரைகள் அல்லது பத்தி எழுத்துக்களில் 31 ஆக்கங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு என்ற தலைப்புக்களின் கீழ் அவர் எழுதியுள்ள இவ்வாக்கங்களில், அவை பேசும்பொருள் சார்ந்த அவரது கருத்துக்கள், சந்தேகங்கள் மற்றும் எண்ணப் போக்குகளை ஒரு வாசகர் தெரிந்துகொள்ளப் போதுமான அளவுக்கு பேசப்பட்டுள்ளன. அந்த வகையில் இது ஒரு எழுத்தாளரின் பன்முகப் பரிமாணத்தையும் பத்தாண்டு காலத்துள் அவரில் ஏற்பட்டுள்ள பரிணாமத்தையும் அடையாளம் காட்டும் தொகுப்பாக இது அமைந்துள்ளது கவனத்துக்குரியது.

000

அவர் மேற்குறிப்பிட்டுள்ள  ' அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு' என்ற தலைப்புக்களில் தொகுக்கப்பட்ட ஆக்கங்களும் வெவ்வேறு காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளன.இந்தக் கட்டுரைகளை வசிக்கும் ஒருவர், ஈழத்தில் எண்பதுகளின் ஆரம்பத்துக்குச் சற்று முன் பின்னாக பிறந்த சந்ததியினரின் சிந்தனைப் போக்கின் விசேட தன்மைக்குரிய அடையாளங்களைக் காணமுடியும், எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய பரம்பரை உருவாகிறது என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன,  ஒரு பிரதேசத்தில் ஏற்படும் அரசியல் சமூக மற்றும் உற்பத்தி மாற்றங்களுக்கமைய இது வேறுபடலாம்.  ஈழத்தில் எமது நிலமைகளைப் பொறுத்தவரை கடந்த  1980 முதல் 2010 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற பாரிய மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை ஒரு தனித்துவமான  பரம்பரை உருவாகியிருப்பதாக பொதுமைப்படுத்தி எடுத்துக் கொள்ள முடியும் என்று கருதுகிறேன். 1980இன்  ஆரம்பங்களில் பிறந்த குழந்தைகளும், 1990 ஆரம்பங்களில் பிறந்த குழந்தைகளும், 2000 ஆரம்பத்தில் பிறந்த குழந்தைகளும் மூன்று வேறுவேறான வாழ்க்கை அனுபவங்களினூடாக உருவாகி வளர்ந்திருக்கிறார்கள்.

இவர்களை, மூன்று பரம்பரையை சேர்ந்த குழந்தைகள் என்று எடுத்துக்கொண்டால், இவர்கள் தமது குழந்தைப்பராயங்களில் மூன்றுவிதமான சமூக நெருக்கடிகளையும், வாழ்வியல் மாற்றங்களையும், எதிர்கொண்டவர்களாக வளர்ந்துள்ளனர். முதற் தொகுதியினர், இனக்கலவரம், போராளிகளின் உருவாக்கம், யுத்தம், விமானக் குண்டுவீச்சு, தரைப்படை நகர்வு என்று விரிவுபெற்றதும், வகை தொகையற்ற கைதுகள், துப்பக்கிச் சூடுகள், இடப்பெயர்வு, பதுங்குகுழி வாழ்க்கை, இலங்கை இராணுவம், இந்தியப்படை இரண்டினதும் நெருக்கடிகள், போராளிகளின் வளர்ச்சி, அவர்களிடையேயான தாக்குதல்கள் என்பவற்றை, தமக்கு முன்னைய பரம்பரையினருடன் சேர்ந்து நேருக்கு நேராக முதன்முறையாகக் கண்டவர்கள். இந்த யுத்தகாலம், முழு சமூகத்திடமிருந்து, இப் புதிய பரம்பரை தன் வாழ்க்கை தொடர்பான விழுமியங்கள், பண்பாட்டு நடவடிக்கைகள், மற்றும் கல்வியும் அனுபவமும் சார்ந்த, காலதிகாலமாக வளர்ந்துவந்த தொகுக்கப்பட்ட அறிவாற்றல் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் அவகாசம் அற்றதாக, உயிர் பிழைப்பதற்கான நாளாந்த நெருக்கடிக்குள்ளிருந்து தப்புவதற்கான ஓட்டத்தோடு வளர்ந்த பரம்பரை. இந்தப் பரம்பரை தமது வளரிளம் பருவத்தை அண்மிக்கையில், அதற்கு அதன் பட்டறிவு மற்றும் தாம் தேடிப் பெற்ற அறிவு மட்டுமே வழிகாட்டும் அறிவாக அமைகிறது. சமூகத்தில் நிலவிய பல்வேறு கருத்து மற்றும் சிந்தனைப் போக்குகள் பற்றிய அறிமுகமோ,அலசலோ செய்வதற்கு அவகாசமற்ற வேகத்துடன் ஓடவேண்டிய நெருக்கடியை அவர்கள் எதிர்கொண்டனர்.

இதற்கடுத்த  90களில் பிறந்தவர்கள் இலங்கை அரசின் முழு அளவிலான யுத்த நெருக்கடி மற்றும் சமாதான முயற்சிகள், நம்பிக்கையும் ஏமாற்றமும் மலிந்த காலகட்டத்தை தமது சிறு பராயத்தில் கடந்தவர்கள், விடுதலைப் போராட்டம் முழுக்க முழுக்க ஒரே தலைமையின்கீழ் ஒரே அரசியற் கோட்பாட்டின் மூலம் தான் சாத்தியம், மற்றெல்லாம் எதிரிக் கருத்துக்கள் என்ற அடிப்படையில், வளர்ந்து வந்த பரம்பரை. மாற்றுக் கருத்துக்களை உள்வாங்குவதோ, அவைபற்றி சிந்திப்பதோ கூட, விடுதலைக்கு எதிரானதோ என்று நினைத்துச் செயற்படவேண்டிய சூழலில் அவர்கள் வளர்ந்தனர். அரசின் தொடர்ச்சியான யுத்தத்தை எதிர்த்து போராடுதல் என்பது, ஜனநாயக விரோத, மனிதாபிமானமற்ற செய்கைகளைக் கூட நியாயப்படுத்துமளவுக்கு முக்கியமான ஒன்று என்ற நம்பிக்கையுடன் இந்த சந்ததி வளர்ந்தது.

2000 த்தின் பின்னான பரம்பரை முழுச் சமூகமுமே யுத்தம் புரியும் சமூகமாக மாறிவிட்டஒரு நிலையினை எதிர் கொண்டு வளர்ந்த பரம்பரை. யுத்தத்தை நடாத்துவதற்காக முழுச் சமூகமுமே களத்தில் இறங்க வேண்டிய, கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையை எதிர்கொண்டு வளர்ந்த  பரம்பரை இது. இந்தப்பரம்பரைக்கு, யுத்தத்திற்கான காரணம், அதற்கான வரலாற்றுப் பின்னணி என்பவைகள் எவையுமே தெரிந்திருக்க வேண்டியிருக்கவில்லை. வாழ்வா சாவா என்ற நிலையில், கண்முன்னே உலவித்திரியும் ஆயுதமேந்திய எதிரியிடமிருந்து மண்ணை மீட்பதற்காக யுத்தமிடுதல் ஒன்றே அவர்களது குறிக்கோளாக இருந்தது.

இந்த மூன்று பரம்பரைகளும், தமது சமூகத்தின் அரசியல்,கலை பண்பாடு மற்றும் வாழ்வியல் விழுமியங்கள் பற்றிய திரட்டப்பட்ட அனுபவத்தையோ, அவைபற்றிய அறிவையோ, தமக்கு முந்தைய பரம்பரையிடமிருந்து அதன் இயல்பான கைமாற்றலூடாகப் பெற்றுக் கொள்ளவில்லை. ஆக இந்த பரம்பரையினர் மத்தியில் இருந்து எழுந்துவந்த படைப்பாளிகள், அவர்களின் படைப்புக்களில் இவர்களுக்கு முன்னான படைப்பாளிகளின் அறிவு அனுபவச் செழுமை ,பேசும் மொழி என்பவற்றினைப் பெற்று இயல்பான வளர்ச்சியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அற்றவர்களாகவே வளர்ந்தனர். மாறாக, அச்சம், நிச்சயமின்மை, தொடர்ச்சியான இடப்பெயர்வு, கல்விக்கூடங்களின் சிதைவும் கல்வியின் வீழ்ச்சியும் என்று அவர்கள் அவர்கள் எதிர்கொண்ட சவால்களின் செல்வாக்கினூடாகவே அவர்களது உலகப்பார்வையும், சிந்தனையும் வளர்ச்சி பெறுகின்றன.

குறிப்பாக முதலாவது அணியை சேர்ந்த பரம்பரையினருக்கு, அவர்கள் தமது பதின்ம வயதுக்கு வருகையில், அதாவது தொண்ணூறுகளில், இரண்டே தெரிவுகள் தான் இருந்தன. போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் இணைவது, அல்லது போராட்டக் களத்திலிருந்து வெளியேறிவிடுவது. இந்த இரண்டையும் தவிர்ந்த இன்னொரு பாதை இருக்கவில்லை. போராட்டக் களமோ, அனைத்து மக்களது நலன்களின் குரலை ஒலிக்கும் களமாக, மாற்றுச் சிந்தனைகளுக்கும் இடமளித்து ஜனநாயக வழிப்பட்ட நடைமுறையைக் கொண்டு மக்களை அணிதிரட்டும் சக்தியாக அமைந்திருக்கவும் இல்லை. போராட்டம்  எவ்வளவுக்கு எவ்வளவு தவிர்க்கமுடியாத அவசியமான ஒரு வரலாற்றுத் தேவையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது முழுமக்களதும் பங்களிப்பையும் உள்வாங்கி ஜனநாயக பூர்வமாக அணிதிரட்டிச் செல்லும் சக்திவாய்ந்த்தாக இருப்பதும், அதன் வெற்றிக்கு மிகவும் அவசியமாகும். ஆயினும், அங்கு நிலவிய யதார்த்தம் இந்தத் தன்மைகளைக் கொண்டதாக இருக்கவில்லை.

போராட்டத்தில் நிலவிய இந்தப் பலவீனம், சந்தேகங்களையும், நம்பிக்கை வரட்சியையும், மன நெருக்கடிகளை கொண்டதுமான  ஒரு பக்கத்தையும் போராட்ட வளர்ச்சியுடன் சேர்த்தே வளர்த்து வந்ததென்பதை மறுக்க முடியாது. இது போராட்டக் களத்தில் வளமான பங்கினை ஆற்றக்கூடிய கணிசமான மக்கட் தொகுதியை களத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத்தள்ளியது. முதலில் இடப்பெயர்வாகவும் பின்னர் புலம்பெயர்வாகவும் இது வளர்ச்சி பெற்றது. இந்தவரலாற்று நிகழ்வு, ஈழத்தின் படைப்புச் செயற்பாட்டில் ஒரு தனித்துவமான, இதுவரைகாலமும்  ஈழத்தில் நிலவிய இலக்கிய படைப்பு முயற்சிகளிலிருந்தும் வேறுபட்ட, புதிய உருவம், புதிய உள்ளடக்கம், புதிய பார்வை,புதிய சிந்தனை என்று முற்றிலும் தனித்துவமான ஒரு போக்கை அல்லது போக்குகளை உருவாக்கிவிட்டுள்ளது என்று சொல்ல்லாம். இவ்வாறு வெளியேறியவர்களில், 60பது 70பது களின் ஆரம்ப காலப்பகுதிகளில் பிறந்தவர்களும் கூட வெளியேறி இருப்பினும், இந்தக் காலகட்டத்தவர்களது படைப்புகளிலிருந்து, 80 களில் பிறந்த சந்ததியினரின் எழுத்துக்களை தெளிவாக வேறுபிரித்துக் காணமுடியும்.

000

இளங்கோ இந்த 80களின் பரம்பரையினைச் சேர்ந்தவர். போராட்டக் களத்தை விட்டு இடம்பெயர்ந்த இந்தப் பரம்பரையினர் தமது வாசிப்புக்களை வளர்த்துக் கொண்ட காலத்தில், அதாவது 90களில், ஏற்கனவே  தவிர்க்க முடியாமல் புலம்பெயர்ந்த மாற்று கருத்துக் கொண்டோர்களின் ஆக்கங்களைத் தாங்கிய 25 க்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் புலம்பெயர் தேசங்களிலிருந்து வெளிவரத் தொடங்கியிருந்தன. அவற்றில் வெளிவந்த விமர்சனங்கள் மற்றும் அரசியற் கருத்துக்கள் இந்தப் பரம்பரையின் முக்கிய கவனத்துக்குரிய வாசிப்புக்கான விடயங்களாக இருந்தன. இவை தவிர, அப்போது தமிழ் நாட்டிலிருந்து வெளியிடப்பட்ட பின்னவீனத்துவ சிந்தனைகள் தொடர்பான நூல்கள் மற்றும் தலித்திய சிந்தனைகள் தொடர்பான கருத்துக்கள் என்பவை இந்தப் பரம்பரையினரின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தும் தன்மையைக் கொண்டிருந்தன எனலாம். இந்த வாசிப்புப் பின்னணிகளும், தமது இளமைக்கால அனுபவங்களும் இணைந்து உருவான ஆளுமைகளில் ஒருவராக இளங்கோவை அடையாளம் காணலாம். அவரது கனடிய கல்விச் சூழலும்,வாழ்க்கை சூழலும் இந்த ஆளுமை விருத்தியை மேலும் வளர்த்தெடுத்திருப்பதை அவரது எழுத்துக்களில் அடையாளம் காணமுடியும்.

இந்தப் பரம்பரையினருக்குக் கிடைத்தவை இதற்கு முன்பிருந்த பரம்பரையினரை விட வேறான அனுபவங்கள். எமது வரலாற்றின் புதிய அனுபவங்கள். முந்திய பரம்பரைக்கு போராட்டம் ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாக இருந்தது. ஆனால் இவர்களுக்கு அது இவர்களது பிள்ளைப்பருவத்தை அச்சத்திலும் இடப்பெயர்விலும் கழியவைத்தது. தம்மைச் சுற்றி நடப்பவைகளால் அவர்களின் மனது தமது குழந்தைப்பராயக் கற்றுக்கொள்ளல்களை வேறுவிதமாகவே பெற்றுக் கொண்டார்கள்..ஆனால் இவர்களுக்கு அடுத்த பரம்பரைக்கு இல்லாத இன்னொரு வாய்ப்பு இருந்தது. இவர்கள் தமது வளர்ச்சியினூடே, ஏன் போராட்டம் அவசியம் என்றதற்கான வரலாற்றியும் ஓரளவுக்காவது அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது. இதற்கு அடுத்த சந்த்திக்கு அதுவும் இருக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், கண்முன்னே நிலைகொண்டிருக்கும் எதிரியுடன் யுத்தம் செய்யாமல் வாழமுடியாது என்பது மட்டுமே!

000

இந்தப் பின்னணியில் இளங்கோவின்  ’பேயாய் உழலும் சிறுமனமே’ என்ற நூற் தலைப்பைக் கண்டபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள், பேய் என்ற சொல் எம்மால் 'மிக அதிகமாக' என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படும் ஒன்றுதான். பேய் வெயில். பேய் மழை, என்று பேசுவது கிராமவழக்கு. பேயாய் உழலும் மனம் இல்லாமல் ஒருவர் நல்ல படைப்பாளியாக இருக்க முடியாது என்பது இதற்கு ஒரு காரணம்.

இரண்டாவது இது பாரதியின் வரி என்பது. அறுபதுகளில்  வெளிவந்த பாரதியார் கவிதைகள் தொகுப்பொன்றிற்கு பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் ஒரு அணிந்துரை வழங்கியிருந்தார். அந்த அணிந்துரையில், பாரதியின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற பாடல் இன்னுமொரு கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு பாடப் பெற்றால் அதை அனுபவிக்க முடியாது என்றும், ஆனால் அவரது தோத்திரப் பாடல்கள்,வேதாந்தப் பாடல்கள்,கண்ணன் பாடல்கள், குயில் பாடல்கள், பாஞ்சாலி சபதம் என்பவை என்றும் நிலைபெற்று வாழும் என்றும் எழுதியிருந்தார். இத்தனை காலம் கடந்தும் பாரதியின் வேதாந்தப் பாடல்  பேராசிரியர் சொன்னதுபோல நிலைத்து நிற்கிறது என்பதற்கு இளங்கோவின் இந்தத் தலைப்பு ஒரு சான்று என்றும். அதனால் தான் இது எனக்கு ஆச்சரியமூட்டவில்லை என்றும் நான் இங்கு சொல்ல வரவில்லை. பேராசிரியரின் அந்தக் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடும் இல்லை. எனக்கு இது ஆச்சரியமளிக்காததற்குக் காரணம், இதுதான் இளங்கோவின் இயல்பு, சிந்தனை, எழுத்து அனைத்துக்கும் அடிநாதமாக இருந்து வெளித்தெரியும், தன்னை குறித்தான அவரது உணர்வு நிலை என்பதுதான்.

இந்த நூலுக்கு பாரதியின் வரி ஒன்றைத்தான் தலைப்பாக வைக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், அதற்கு பொருத்தமான பல வரிகளை அவரால் கண்டுபிடித்திருக்க முடியும். நூலில் உள்ள கட்டுரைகளுக்குப் பொருத்தமான வரியை. ஆனால், அவர் இந்த வரியை பாவிக்க வேண்டும் என்று விரும்பியபடியால் தான், இந்தக் கட்டுரைகளுக்கல்ல, கட்டுரை ஆசிரியனுக்கே பொருந்துகின்ற அல்லது அவர் தன்னை வெளிக்காட்ட்ட விரும்புகின்ற வரியான அதை தெரிவு செய்துள்ளார் என்று எனக்குத் தோன்றியது. அது பொருத்தமானதும் கூட என்று எனக்கும் தோன்றியதால், நான் ஆச்சரியப்படவில்லை. பாரதி தனது மனதுக்குக் கட்டளையிடுவதாக அமைந்த இந்தப் பாடலில், 'நான் சொல்வதை செய், நினது தலைவன் நானே காண்’ என்று அவர் தனது மனதுக்கு அறிவுறுத்துகிறார். இளங்கோ அந்தப் பேயாய் உழலும் தனது மனதின் எண்ணங்களை அனுபவங்களை, உணர்வுகளை இந்தத் தொகுப்பில் தொகுத்துத் தந்திருக்கிறார்.

அவரது நூல் முழுவதிலும் அவர் தான் நேரடியாகப் பேசுவதை விட தனது மனதுநினைப்பது எது என்ற விதத்தில் தான் அவரது  எழுத்துக்கள் உரையாடல்கள் அமைந்திருப்பதை காணலாம். அதாவது அவரது எழுத்துக்களில், அவர் தனது கருத்துக்களுக்கு அழுத்தம் தருவதை விட தமது மன உணர்வுகளுக்கு அழுத்தம் தருவதே அதிகமாயிருக்கும். அல்லது இன்னொரு வகையில் சொல்வதானால், அவர் தனது கருத்துக்களைக்கூட தமது மன உணர்தலின் வழியாகவே வெளிப்படுத்துகிறார். கவிதைகளிலும், கதைகளிலும்  அவர் கையாளும் புனைவு மொழியிலும் மட்டுமல்ல, கட்டுரைகளிலும் கூட அதையே அவர் கையாளுகிறார். இதுவே இளங்கோவின் தனித்துவமான மொழிக்கும், அவரது ஆளுமையின் வெளிப்பாட்டுக்கும் அடிப்படைகளாக அமைகின்றன,
பாருங்கள், எனக்கான தெருக்கள் என்ற பதிவில் இப்படி எழுதுகிறார்:

"புத்தனுக்கு பின்னால் ஒளிரும் வட்டத்தைப் போல, நிலவு மிகப்பிரமாண்டமாய் இந்நெடுங்கட்டடத்தின் பின்னால் விகசித்தெழுகின்றது. தெருவில் விழும் இக்கீற்றுக்களை உங்களுக்கு பிடித்தமான உருவங்களாய் நீங்கள் கற்பனை செய்து கொள்ளவும் கூடும். இயற்கையின் ஆலிங்கனத்தால் சிலிர்த்து சிவப்பும் செம்மஞ்சளுமாய் வெட்கிக்கின்ற மரங்களின் இலைகளினூடாக நீளும் நிலவின் கீற்றுக்கள் எனக்குள் சீன எழுத்துக்களாய் / கிறுக்கல்களாய் உருமாற்றம் பெறுகின்றன. சிறுவயதில் மிகவும் பாதித்த சீன ஓவியங்களும், அவற்றில் அதிகம் தோன்றும் மூங்கில்களும் பண்டாக்கரடிகளும் இப்போதும் நினைவில் தேயாமல் கைகோர்த்து வருகின்றன போலும்.” 

'வாளின் நுனியில் சிதறும் வாழ்வில்' இப்படி எழுதுகிறார்:
"என்றேனும் ஒருநாள் நான் படுத்திருக்கும் அறையின் துருப்பிடித்த யன்னல் கம்பிகளுக்குள்ளால் துப்பாக்கி நீட்டியபடி ஒரு இராணுவத்தினன் நிற்பான் என்ற பயத்தில்தான் பல இரவுகளில் தூங்கியிருக்கின்றேன். அந்தப் பீதி அதிகரித்து அதிகரித்து மரங்கள் காற்றில் அசையும் நிழலைக்கூடக் கண்டு பயந்து அம்மாவின் முதுகின் பின்னால் சிறுவயதில் முடங்கிப் படுத்துமிருக்கின்றேன்."

இந்த இரண்டு கட்டுரைகளும், அவரது ஆரம்பகாலக் கட்டுரைகள். தவிரவும் அவை அவரது சொந்த அனுபவங்கள். பின்னால் வந்த கட்டுரைகளில் இந்தச் சொல்லும் முறைகளில், குறிப்பாக,அலசல், வாசிப்பு,திரை என்ற பிரிப்புக்குள் வரும் கட்டுரைகளில் இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆயினும், அவரது மனதின் உழலலோடு சம்பந்தப்பட்ட முத்திரைத் தன்மை முற்றாக இல்லாமல் போகவில்லை. இவை இரண்டிலும் கட்டுரையாளர் தான் சொல்லவரும் விடயத்தை முழுக்க முழுக்க தன்னுடைய சொந்த அனுபவத்தோடு சம்பந்தப்பட்ட மன உணர்வுகளை அடிப்படையாக வைத்து வெளிப்படுத்துவதைக் காணலாம். இராணுவத்தினின் பிரசன்னம் அச்சத்தை ஏற்படுத்துவதும்,அதிலிருந்து விடுபடுவதற்கான துணையைத் தேடுவதுமான வாழ்வு ஏற்படுத்தும் யுத்தசூழல் தொடர்பான பார்வை, எப்படி தன்னை தற்காத்துக்கொள்ளும் கையறு நிலையில் தன்னை வைத்திருக்கிறது என்ற விசனத்துடன் கலந்ததாக அந்தச் சிந்தனை வளர்கிறது. இது ஒரு வளர்ந்த படைப்பாளியாகிவிட்ட பின்னாளில், அவரது சிந்தனையில் எப்படி ஒரு தயக்கத்துடன் கூடிய மொழியில் தனது கருத்தை முன்வைக்கக் காரணமாக அமைகிறது என்பதை நாம் காணலாம். உதாரணமாக வன்னியுத்தம் என்ற நூல் பற்றிய குறிப்பில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:

”இந்நூலை வாசித்து முடித்த போது, இரண்டு விடயங்கள் தாண்டிப் போகமுடியாத கேள்விகளாய் முன்னே விழுந்தன. இனியெந்தக் காலத்திலும் ஆயுதம் கொண்டு தொடங்கப்படும் எந்தப் போராட்டத்திலும் மனமுவந்து ஆதரவுகொடுக்க முடியுமா என்பது. இரண்டாவது இவ்வளவு கோரமான அழிவுகளைக் கொடுத்த ஒரு அரசோடு மக்களால் இணைந்து வாழ முடியுமா என்பது. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது அந்த மக்களே. அவர்களே எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இனி தம் வாழ்வை எப்படிக் கொண்டு போவது என்பதை தீர்மானிக்க வேண்டியவர்களும் அவர்களேயன்றி நாமல்ல. ஏனென்றால் இவ்வளவு அழிவுகளும் நிகழ்ந்தகாலத்தில் நாம் கையறு நிலையில் தான் இருந்தோம் என்ற குற்ற உணர்விலிருந்து அவ்வளவு எளிதாக எம்மால் தப்பிப் போய் எதைதான் பேசிவிட முடியும்.”

ஆம். தாம் இருந்த கையறு நிலை காரணமாக, இந்தக் கேள்விகளுக்கான பதில் என்ன என்பதை எம்ம்மால் முன்வைக்க முடியுமா? என்று கேட்டு முடியாது என்ற முடிவை நோக்கி அவர் செல்கிறார். அவர் தேடிக்கொண்ட வரலாற்றறிவு, அதன் காரணமான அரசியல் ரீதியான யதார்த்தம் பற்றிய அவரது கணிப்பீடு என்பவை அவரை நியாயமான கேள்விகளை எழுப்ப வைக்கின்றன, ஆயினும் அவற்றுக்கான விடை தேடலில், அவர் தனது முடிவு என்ன என்பதை தெரியாமலோ சொல்ல விரும்பாமலோ, அதை சொல்லாமல் விடவில்லை. ஏனென்றால், அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அங்கு வாழும் மக்களே என்பதை மிகத் தெளிவாக முன்வைக்கின்றார். ஆனால்  மாறாக அதை சொல்ல நாமெல்லாம் யார். என்ற கேள்வியையும் பதிலாக அவர் தருகிறார். இதற்கு நாமிருந்த கையறு நிலையையும்
இவ்வாறு பல இடங்களில் நாம் இதை அவதானிக்கலாம்.

இது அவரது மொழியினதும் சிந்தனையினதும் முத்திரை. ஆனால் இந்த வகையான எழுத்து அவரை சமூக அரசியல் நியாயங்களின் போது, நியாயத்தின் பக்கம் நிற்பதை தடுத்துவிடவில்லை. தனது ஆதரவு நிலைப்பாட்டை அவர் தனக்கேயுரிய மொழியில் வெளிப்படுத்தத் தவறவில்லை தனது மாறுபாடான கருத்துக்களையும், விமர்சனம் சார்ந்த கேள்விகளையும் அவர் தமக்கேயுரிய மொழியில் முன்வைக்காமலும் இல்லை. சி.புஷ்பராஜா எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் 'பற்றிய நூல் தொடர்பான விமர்சனத்தில், அவர் சொல்லாது விட்ட விடயங்களின் பின்னால் இருக்கக்கூடிய அரசியலையிட்டு கேள்வி எழுப்புகிறார். புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக கனடாவில் நடந்த யுத்த ஆதரவு, மற்றும் பெண்களின் தாம் அணியும் ஆடைமீதான கருத்து போன்றவற்றை விமர்சிப்பதிலும், மக்களினதும்,பெண்களதும் உரிமை தொடர்பான நியாயமான பக்கத்தை சார்ந்து நின்று அவர் தனது கருத்தை முன்வைக்கிறார்.

000

இந்த நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையையும், இவை தொடர்பாக அல்லது இவை போன்ற விடயம் தொடர்பாக இவருக்கு முந்திய சந்ததியினர் எழுதியிருக்கக் கூடிய கட்டுரைகளை ஒப்பிட்டு வாசிப்பது ஒரு சுவாரசியமான, இரண்டு சந்த்தியினரதும் பார்வை,மொழி, சிந்தனை என்பவற்றின் தெளிவான வேறுபாட்டை அடையாளம் காட்டும் அனுபவத்தைக் காணலாம். இவற்றில் எது சிறந்ததென்று கூறுவதல்ல எனது நோக்கம், இந்த இரண்டு வேறுபாடுகளுக்கும் காரணமாக அமைந்த சமுக நிலவரம் பற்றி வலியுறுத்தவே இதை முன்வைக்கிறேன். இதன் முக்கிய வேறுபாடு, இவர்கள் எதையும் கண்மூடித்தனமாக நம்பத் தயராக இல்லை.

முன்னைய பரம்பரை,தமக்கு மிகத் தெளிவாக தெரிந்ததெனக் கூறும் எந்த விடயத்தையும் இவர்கள் கேள்வியின்றி நம்பத் தயராக இல்லை. தமது எந்தக் கருத்தையும் மாற்றுக் கருத்துக்கு இடம்வைத்து சொல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இதனால் இவர்கள் தமது கருத்திலேயே நம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதாக தோன்றும். ஆயினும் அவர்கள் அப்படிப் பேசுவதையே தெரிவு செய்கிறார்கள்.
இந்த நூலிலுள்ள எனக்குப் மிகப் பிடித்த கட்டுரையாக’வரலாற்றின் தடங்களில் நடத்தல்’ என்ற கட்டுரையைச் சொல்வேன்.

கிறிஸ்தோப்பர் ஒண்டாச்சியின் ’வூல்ப் இன் சிலோன்’ என்ற நூல் பற்றிய ஒரு முக்கியமான,  விபரமான அறிமுகமாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆங்கில நூல்களை இவ்வாறு தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது ஒரு வகையில் மிக முக்கியமான ஒரு பணி. இளங்கோ, தனது பயணங்கள், வாசிப்புகள், திரைப்படங்கள் பற்றிய குறிப்புக்கள் என்பவற்றினூடாக இத்தகைய ஒரு பணியைத் தொடர்ந்து செய்துவருகிறார். அவரது அத்தகைய எழுத்துக்களிலும் கூட, இளங்கோவின் இந்த மேற்சொன்ன முத்திரையைக் காணமுடியும். உதாரணமாக ஒண்டாச்சியின் நூல் பற்றிய இந்தக் கட்டுரையை முடிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்.

” காலனியாதிக்கம் நமக்கு நல்லதல்லாதவற்றை மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் நல்லதையும் நமக்குத் தந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளமுடிகின்றது. ஆங்கிலம் ஆரம்பத்தில் உயர்சாதி மேல்வர்க்கங்களால் கற்கப்பட்டாலும், பின்னாட்களில் காலனியாதிக்கவாதிகளால் பரப்பப்பட்ட கிறிஸ்தவ மதம், மிஸனரிகள் மூலம் அது ஒரளவேனும் தாழ்த்தப்பட்ட மக்களையும் போய்ச் சேர்ந்து பரவலான கல்வியறிவை அவர்கள் பெற உதவிசெய்திருக்கின்றது. இதன்மூலம் தங்களுக்கு மட்டுமே சொந்தமென உயர்சாதிகள் (முக்கியமாய் யாழ்ச்சமூகத்தில்) கொண்டாடிய அறிவு/கல்வி அனைத்துச் சமூகங்களுக்கும் பகிரப்பட்டிருப்பது நல்லதொரு விடயமே. ஆனால் அதேசமயம் ஆங்கிலத்தைக் கற்பதாலும், ஆங்கில இலக்கிய/தத்துவ உரையாடல்களை அப்படி இறக்குமதி செய்வதாலும் மட்டுமே அறிவிஜீவிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நமது தமிழ்ச்சமூகம் குறித்தும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டியிருக்கின்றது. காலனியாதிக்கத்தின் அரசியலை எப்படிப் புரிந்துகொள்வது என்ற உரையாடல்களை வளர்த்தெடுக்கும்போது, நாம் காலனியாதிக்கத்தின் தேவையற்ற எச்சங்களை உதிர்த்துவிட்டு தேவையான மிச்சங்களோடு நகரக்கூடிய ஒரு சுமுகமான சூழல் சிலவேளைகளில் அமையவும்கூடும்."

மேலே நான் காட்டியுள்ள விடயங்களில் வெளித்தெரியும் இளங்கோவின் முத்திரையான இந்த ஐயம் தோய்ந்த கருத்து வெளிப்பாட்டு நடைதான் அவரிடம் இருக்கும் தனித்துவம். கேள்விகளில் உள்ள வேகமும் உறுதியும், முடிவுகளில்  அல்லது தீர்வுகளில் வெளிப்படாமல் இருத்தல் என்பது இந்தப் பரம்பரையினரிடையே ஆங்காங்கு நான் அவதானித்திருக்கிறேன். அவற்றை விவரிக்கும் இடம் இதுவல்ல ஆயினும் அது இயல்பானதும் நியாயமானதும் கூட. ஐயம் இன்றேல் தெளிவு இல்லை அல்லவா?
தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் நான் ஏற்கனவே படித்தவை சில புதியவை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முக்கியமான சில இலக்கிய,அரசியல் மற்றும் சமூக நிலமைகள் பற்றிய எதிர்வினைகளை இந்த நூல் பேசுகிறது. இந்தக் கட்டுரைகள் முன்வைக்கும் கருத்துக்கள் உணர்வுகள் அவதானிப்புக்களுடன் உடன்படமுடியாத, மாற்று அபிப்பிராயங்களைக் கொண்டவர்களுக்கும் கூட ஒன்றிப்போன வாசிப்பனுபவத்தை தரக்கூடிய நூல் இது.

நூலில், மனதில் உறுத்திய ஒரே மாதிரியான தவறுகள் ஒருசில இடங்களில் வந்துள்ளன. எழுவாயும் பயனிலையும் ஒருமை பன்மைத் தவறைக் கொண்ட வசனங்கள் சிலவற்றையும் பார்த்தேன். இப்போதெல்லாம் இது ஒன்றும் பெரிய தவறல்ல என்று கருதும் போக்கு வளர்ந்து வருகிறது. ஆனால் இளங்கோ அந்தக் கருத்துடன் உடன்பாடுள்ளவரல்ல.என்பது எனக்குத் தெரியும் என்பதால் சொல்கிறேன் மற்றப்படி இந்த நூல் தீவிர வாசகர்களுக்கு மட்டுமல்லாது, ஒரு ஆரம்ப வாசகருக்குக் கூட பல முக்கியமான நூல்கள், படைப்பாளிகள், திரைப்படங்கள் போன்ற பல விடயங்களை அறிமுகப்படுத்தவும் செய்கிறது. அந்தவகையிலும் இது ஒரு முக்கியமான நூல் என்றே நினைக்கிறேன். ஆக, இளங்கோவின் தலைமையில் அவரது பேயாய் உழலும் மனம், அள்ளிவந்த விடயங்களிற்காக அதற்கு நன்றி சொல்வோம்.
--------------------------------------------------

('அம்ருதா' - கார்த்திகை, 2017)

அங்கமலி டயரிகள்

Monday, November 06, 2017


ருவருடைய வாழ்வை அவரது தெரிவுகளே தீர்மானிக்கின்றன. தெரிவுகள் எங்கிருந்து வருகின்றன எனப் பார்த்தால் ஒருவகையில் அவர்களுக்கு காட்சிப்படுத்தப்படும் உலகினுள் இருந்து வருகின்றன என எடுத்துக்கொள்ளலாம். சிறுவர்களாகவும்/பதின்மர்களாகவும் இருக்கும் பலர் தமக்கான முன்மாதிரிகளை, தமக்கு முன்னிருக்கும் தலைமுறையில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். அவர்கள் தெரிவுசெய்யும் நபர்கள் அல்லது விடயங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதிலிருந்தும், ஒருவருக்கான எதிர்கால வாழ்க்கை பிறகு தீர்மானிக்கப்பட்டும் விடுகின்றது.

அங்கமாலியில் வளரும் பதின்மர்கள், ஊரில் 'பிரபல்யம்' வாய்ந்த சண்டைக்காரர்களாகவும், விளையாட்டுக்காரர்களாவும் இருப்பவர்களின் சுவடுகளைப் பின் தொடர்கின்றார்கள். இந்தப் பதின்மர்கள் சற்றுப் படிப்பில் மூழ்கினாலும், பிறகு 'ரெளடி'களாக மாறி விடுகின்றார்கள். பணம் கொழிக்கும் பன்றி இறைச்சி வியாபாரம் செய்கின்றார்கள். அவர்களுக்குள் கொலைகள் நிகழ்கின்றன. பல்வேறு காதல்கள் வருகின்றன. ஓரு சாதாரண ஊர் எப்படி இருக்குமோ அப்படியாகவும், அதன் இயல்பும், கசப்பும்,மகிழ்வும் குலையாத மனிதர்களையும் 'அங்கமாலி டயரிகளில்' நாங்கள் பார்க்கலாம்.

ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட ஒரு கதைதான் அங்கமலி டயரிகளில் ஓடுகின்றது. ஆனால் அதைச் சொல்லிய விதத்தால் நாம் கதையினுள்ளே போய்விடுகின்றோம். இந்தத் திரைப்படத்தில் காட்டப்படுகின்ற உணவுக்காட்சிகளை வாயூறிப்பார்க்காமல் எளிதில் கடந்துவிடமுடியாது. மது அருந்துவாய் இருந்தாலென்ன, தேநீர் குடிப்பதாய் இருந்தாலென்ன, அதையும் அவ்வளவு அழகியலோடு காட்சிப்படுத்துகின்றார்கள். அதேபோல் பின்னணி ஒலி செய்கின்ற சாகசங்களையும் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.

த்து நிமிடங்களுக்கு மேலாய் long shotயாய் எடுக்கப்பட்ட இறுதிக்காட்சியையோ அல்லது 80பேருக்கு மேலே புதுமுகங்களைக் கொண்டது இத்திரைப்படம் என வியப்பதை விட, வேட்டியை மடித்துக்கட்டியபடி அம்மாவின்/தங்கையின் பாசத்திற்குள் இருந்தபடியும் பல்வேறு காதல்/காதலிகளைக் கொண்ட அந்த முக்கியபாத்திரம் அவ்வளவு கவர்கின்றது. திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, ஒலியமைப்பென எல்லாம் அற்புதமாய் இயைந்து வந்திருக்கின்ற ஒரு படம், இந்த ஆண்டில் மலையாளச்சினிமாவில் அதிக வசூல் குவித்த ஒரு படமாய் இருப்பதும் கேரள சினிமா உலகில் மட்டுமே நிகழக்கூடிய ஒருவிடயம் போலத்தான்படுகிறது.

இத்திரைப்படத்தில் வழமையான இவ்வாறான கதைகளுக்கு இறுதியில் வரும் ஒரு துயரமான முடிவை வைக்காதது பிடித்திருந்ததெனினும், முடிவை நெருங்கும்கட்டத்தில் வழமையான எங்கிருந்தோ வரும் ஒரு வில்லனை கொண்டுவராது தவிர்ந்திருக்கலாம் போலவும் தோன்றியது. இந்தப் படத்தின் ஒரு குறைப்பாடாய்த் தெரிந்தது, இதில் ஒன்றுக்கு மேற்பட்ட கொலைகள் நிகழ்கின்றன, ஆனால் ஒரு கொலை மட்டுமே அனைவரையும் பாதிக்கின்றதாய் இருக்கின்றது என்பதுதான். இந்தளவிற்கு கொலைகளை எளிதாய்க் கடந்துபோய்விட முடியுமா என்பது ஒருபுறமிருக்க, மலையாளப் பொலிஸ் அநியாயத்திற்கு இவ்வளவு நல்லவர்களாய் இருப்பார்கள் என்று வியக்கும்படியாக வருகின்றனர்.

இந்த சுவாரசியமான 'அங்கமலி ரெளடிகள்' வழமையாக மற்றக் கோஷ்டிகளோடு/ஊர்ச்சனங்களோடு அடிபடும் ரெளடிகளாக மட்டும் இருந்து, படத்தில் கொலைகளைச் செய்யும் சந்தர்ப்பங்களை தவிர்த்திருந்தால், இன்னும் அதிகம் அவர்களை நேசிக்கும்படியாக இருந்திருக்குமோ என்றொரு எண்ணம் வராமலுமில்லை. 'கம்மட்டிப்பாடம்' படம் அற்புதமாக விரிந்து பின்னர் ஒரு பழிவாங்கலாய் மட்டும் சுருங்கும்போது சட்டென்று ஒருவிலகல்  அப்படத்தின் மீது வந்ததோ ('மெட்ராஸ்' படத்திலும் அப்படியே, அன்பு பாத்திரம் கொலையாகின்றதுவரை) இந்தப் படத்திலும் எதிராளியின் மனைவியின் தம்பியை, ஒரு வில்லனாக முன்னிலைப்படுத்தும்போது படத்துடனான ஒரு இடைவெளி வந்திருந்தது என்பதையும் குறிப்பிட்டாக வந்தது. இருப்பினும், நம் எல்லோருக்கும் யாரோ ஒரு 'அங்கமாலி ரெளடி' உறைந்துபோய் இருக்கின்றான், வெளியில் வரும் அளவில் தான் கூடக் குறைந்து இருக்கின்றான் என்றவளவிற்கு எங்களையும் உணரச்செய்வதற்காய் நாமிந்தப் படத்தை எடுத்த விதத்திற்காய் வரவேற்றாகவேண்டும்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

தாழம்பூ குறிப்புகள்

Monday, October 30, 2017

The Kindness Diaries

வசதியான வாழ்க்கை வாழும் ஒருவன், பணியின் அழுத்தம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றான். ஒருநாள் தனது பழைய (1978) மஞ்சள் மோட்டார் சைக்கிளுடன் எல்லாவற்றையும் துறந்து பயணிக்கத்தொடங்குகின்றான்.

அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா ஆசியா என நிலப்பரப்புகள் விரிந்தபடியே இருக்கின்றன. இதில் என்ன வியப்பியிருக்கின்றது, மனிதர்கள் இப்படிப் பயணித்தல் இயல்புதானே என நீங்கள் நினைக்கலாம். இந்த மனிதன் பொருட்களாலும்/பணத்தாலும் மட்டுமே நிரம்பியது இவ்வுலகு என்பதை மறுதலித்து, பணமில்லாது பயணிக்கத் தொடங்குகின்றான்.

தெரியாத மனிதர்களிடம் உணவு வாங்கித்தரச் சொல்லி, அந்நியமான நிலப்பரப்புகளில் யாரோ ஒருவரின் உதவியுடன் பெற்றோல் நிரப்பி, இரவுகளிலும் யாரோ தெரியாத ஒருவரின் வீட்டில் தங்கவும் செய்கின்றான். அதாவது இந்த உலகில் மனிதர்களின் அடிமனப்பண்பு என்பது பிறருக்கு உதவிசெய்தலும், உணவளித்தலும் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்கின்றான்.  எப்போதும் போல மிக அடிப்படை வசதிகளுடன் வாழும் எளிய மனிதர்களே மிகப்பெரும் இதயத்துடன் அவனை ஒவ்வொரு நிலப்பரப்புக்களிலும் வரவேற்கின்றனர். அந்த மனிதர்கள் பகிர்ந்து கொள்ளும் கதைகள் நமது நெஞ்சை ஆழமாய்த்தீண்டுகின்றன. எவரென்று தெரியாது தனக்கு உணவும், இரவு உறங்குவதற்கும் இடமுமளிக்கும் மனிதர்களுக்கு அவன் ஒவ்வொரு நாடுகளிலும் ஏதோ ஒருவகையில் உதவி செய்தபடி போய்க்கொண்டே இருக்கின்றான்.

மனதை நெருட வைக்கும், சகமானிடர் மீது அளப்பரிய நேசம் வைக்கும் இந்தப் பயணம் ஆவணமாக்கவும் செய்யப்பட்டிருக்கின்றது. Leon Logothetis என்கின்ற இந்த மனிதனின் 'kindness one' எனப் பெயரிட்ட மஞ்சள்நிற மோட்டார்சைக்கிள் பயணத்திற்கு சே குவேராவின் 'மோட்டார் சைக்கிள் டயரிகளே' முதன்மைக் காரணமாய் இருந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Feb 25, 2017)


War Machine

ஆப்கானிஸ்தானில் புதிய இராணுவத்தளபதியாகப் போகும் ஒருவரின் நிலைப்பாட்டிலிருந்து இந்தப் படம் பேசுகிறது. Brat Pitt  வழமை போலின்றி, அவர் இதில் மாற்றியிருக்கின்ற பேச்சு மற்றும் உடல் மொழி வித்தியாசத்தால் உடனே இதற்குள் நுழைவது கடினமென்றாலும், பிறகு சுவாரசியமாகப் பார்க்க முடிகிறது. முக்கியமாய் ஒரு நாட்டிற்குள் அத்துமீறி நுழையும் எந்தப் படையும் அங்குள்ள மக்களின் மனங்களை வெல்லமுடியாது எனவும், இவை எதுவுமே வெல்லப்படமுடியாத போர்கள் என்பதையும் இப்படம் சொல்ல விழைவதால் முடியும்வரை பார்க்கமுடிகின்றது.

அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு, 'ஒரு பத்து கிளர்ச்சியாளர்கள் இருந்து அதில் எட்டுப் பேரைக்கொன்றால், உங்கள் கணக்கின்படி இருவரே மிஞ்சியிருப்பார்களென நினைப்பீர்கள்; ஆனால் உண்மையான போர்க்களத்தில் அவ்வாறில்லை 20 பேர்கள் புதிதாய் தோன்றுவார்கள். எனெனில் கொல்லபப்டும் ஒவ்வொருவரினதும் உறவினர்கள்/நண்பர்கள் தமது வெஞ்சினத்தைக் காட்ட ஆயுதம் ஏந்துவார்கள் என்பதே யதார்த்தம்' என்பார் ஓரிடத்தில் Brat Pitt . தலிபான்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒரு நகரைக் கைப்பற்றும் நோக்குடன் பெரும் படையுடன் அமெரிக்கா இறங்கும்போது, மக்களும் கொல்லப்படுகின்றார்கள். ஒரு இராணுவத்தளபதியாக அதற்குப் பொறுபேற்று அந்த மக்களிடம் சென்று மன்னிப்புக் கேட்கும்போது அந்த மக்கள் இறுதியில் சொல்வது: நீங்கள் இங்கிருந்து போய்விடுங்கள் என்பதே.

சொகுசாக வாழும் யாரோ சிலரின் விருப்பிற்காய், வெல்லமுடியாப் போரில் சிக்கித்தவிர்க்கும் ஓர் அமெரிக்க இராணுவத்தை இதில் பார்க்கின்றோம். ஜோர்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தில் வெல்லமுடியாப் போரில் 2 நாடுகளில் போய் இறங்கினோம், ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இப்போது ஏழு நாடுகளாக கூடிவிட்டன என ஒரு பாத்திரம் சொல்வதும் கவனிக்கவேண்டியது.

(Jun 06,2017)


மாவீரன் கிட்டு

'மாவீரன் கிட்டு' அண்மைக்காலத்தில் வெளிவந்த படங்களில் முக்கியமானது. சாதியக் கொடுமைகளைத் தெளிவாகப் பேசியதோடல்லாது, வெளிப்படையாகவே தலித்துக்களின் பக்கம் சார்பெடுத்து காட்சிகளை தனக்குள் வரைந்தும் கொண்டிருக்கிறது. சசிக்குமார் போன்றோரின், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமிதங்களை அலுக்கவும்/எரிச்சலும் வரச்செய்யும் திரைப்படங்களை மானுடவியலின் மூலம் நியாயப்படுத்தும் ஆய்வாளர்கள்/ஆதரவாளர்கள் இந்தத் திரைப்படத்தை தலையில் வைத்தல்லவா கொண்டாடியிருக்கவேண்டும். நமக்குள் இப்படியொரு திரைப்படம் வந்திருக்கின்றதே என்று 'உனக்குள் ஓடுவது தமிழன் இரத்தம் என்றால்' என சமூகவலைத்தளங்களில் எதையெதையோ எல்லாம் பகிர்பவர்கள் இதையல்லவா அதிகம் பகிர்ந்து விவாதித்திருக்கவேண்டும்?

Sairat, Kismath போன்ற படங்களில் காட்சிகளால் நம்மை நெகிழவைத்ததுபோல காட்சிகளின் அழகியலுக்கு அதிக முக்கியம் கொடுக்காது, எல்லாவற்றையும் உரையாடல்கள் மூலம் கொண்டுவரும் எத்தனிப்புக்கள் போன்ற குறைகள் இப்படத்தில் இருந்தாலும் பேசுபொருளை எவ்வித சமரசமுமின்றி, நம் சமூகத்தின் கொடுமைகளை அப்படியே காட்டியிருப்பதால் இத்திரைப்படத்தை எடுத்த சுசீந்திரனை நாம் மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்.

(Jan 28,2017)

Let Her Cry

Monday, October 16, 2017


ஷோக ஹந்தகமவின் 'Let Her Cry' ஒரு பேராசிரியருக்கும் அவரிடம் கல்வி கற்கும் மாணவியிற்கும் வரும் நெருக்கத்தையும் விலகலையும் பற்றிய படமிது. இவ்வாறான ‘முரண்’ உறவுகள் பல்வேறு படங்களில் காண்பிக்கப்பட்டுவிட்டாலும், இந்தப்படத்தில் வரும் மாணவி தனது காதல் மிக உண்மையானது, அதுவின்றி தன்னால் வாழமுடியாது எனவும் பேராசிரியரைப் பின் தொடர்ந்தபடி இருப்பார்.

ஒருகட்டத்தில் தங்களது உறவை, தாங்கள் எங்கெங்கெல்லாம் செல்கின்றோம் என்பதைப் பேராசிரியரின் மனைவிற்குக் கூறிவிட்டே இந்த மாணவி பேராசிரியரோடு அலைந்தபடியிருப்பார். குடும்ப உறவும், கெளரவமும் பாதிக்கப்படப்போகின்றது என்ற அச்சத்தில் பேராசிரியரின் மனைவி அந்தப்பெண்ணை தங்கள் வீட்டுக்குள் கொண்டுவந்தே இருக்க வைத்துவிடுவார். இன்னொருவகையில் தெரிந்தோ தெரியாமலோ அந்தப் பேராசிரியருக்கு, அவரது மனைவி கொடுக்கும் ‘பெருந்தண்டனை’யாகக் கூட இது இருக்கக்கூடும். பேராசிரியர் மீதும் அந்த மாணவி மீதும் வெறுப்பிலிருக்கும் பேராசிரியரின் மனைவி அந்த மாணவியை அவரின் பலவீனங்களுடன் புரிந்துகொள்ளச் செய்கின்றார். அந்த மாணவியின் காதலைத் தொடர்ச்சியாக மறுத்தபடியிருக்கும் பேராசிரியருக்கு, ஒருகட்டத்தில் அந்த மாணவி மீது காதல் வரத்தொடங்குகின்றது. ஆனால் அதேசமயம் அந்த மாணவிக்கு வேறொரு காதல் வந்துவிடுகின்றது (அல்லது அந்தப் பேராசிரியரை நம்ப வைக்கின்றார்).

சிலவேளைகளில் எல்லாமே (வாழ்க்கையே) ஒரு நகைச்சுவையாகிப் போய்விடுகிறது என்கிறார் பேராசிரியர். அவரின் மனைவியோ இதைக் கேட்டுச் சிரிக்கத்தொடங்குகின்றார். இது என்ன மாதிரியான சிரிப்பு, sarcasmமா என்கிறார். சிரிப்பு ஒருகட்டத்தில் அழுகையாக மாறுகின்றது. பேராசிரியரின் மகள் ஏன் அழுகின்றார் எனத் தாயிடம் கேட்கின்றார். அந்த மாணவியோ, 'அழுவதற்கு எப்போதும் ஒரு காரணம் இருக்கவேண்டுமா' என்கின்றார். மனைவி அழுவதைப் பார்க்கும்,  அழுகையின் பின்னிருக்கும் எல்லாக் காரணங்களையும் அறிந்த பேராசிரியர் கூறுகின்றார், 'Let her cry'.

தற்செயலாய், வெவ்வேறு திசைகளில் மனங்கள் சிதறிப்போன எல்லோரும் பன்சலையில் இறுதியில் சந்திக்கின்றனர். அங்கே நிகழும் ஒரு சம்பவம், இவர்கள் எல்லோருக்கும் ஏதோ ஒன்றை நினைவுபடுத்துவதாய், அவரவர் செய்த குற்றங்களுக்கான மன்னிப்பையும், அந்தப் புத்தவிகாரையில் பொழியும் மழை வழங்கிவிடுவதாய் முடிந்துவிடுகின்றது.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

தேநீர்

Sunday, October 15, 2017


தேநீர் அருந்துதல் என்பது அதன் எளிமையினால் பூரணத்துவமாகிவிட்ட ஒரு செயல்.
நான் தேநீர் அருந்துகையில், நானும் தேநீரும் மட்டுமே இருக்கின்றோம்.
மற்ற உலகு அனைத்தும் கரைந்துபோகின்றது.
எதிர்காலம் குறித்த எந்தக் கவலைகளும் இல்லை.
கடந்தகாலத் தவறுகள் குறித்த எத்தகைய எண்ணங்களுமில்லை.
தேநீர் என்பது எளிமை: தேயிலைத் தூள், சூடான தூய நீர், ஒரு கோப்பை.
தேயிலையின் சிறிய அழகான துகள்கள் கோப்பையின் மேலே மிதக்க, நான் அதன் வாசத்தை உள்ளிழுக்கின்றேன்.
தேநீரை நான் அருந்தும்போது, தேயிலையின் சாரம் என்னில் ஒரு பகுதியாக மாறுகின்றது.
நான் மாற்றமடைந்துவிட்டேன் என்று தேநீரால் அறிவிக்கப்படுகின்றேன்,
இதுவே வாழ்க்கையின் செயல், ஒரு பூரணமான தருணத்தில், இது போன்ற (தேநீர் அருந்தும்) செயலில், உலகு பற்றிய உண்மை வெளிப்பட்டுவிடுகின்றது:
மனத்திலுள்ள எல்லாவிதமான சிக்கல்கள், வலிகள், வாழ்க்கை பற்றிய நாடகங்கள் அனைத்துமே எந்த ஒரு நல்ல நோக்கத்திற்காகவும் இல்லை என்ற புரிதல் வந்துவிடுகின்றது.
நானும், இந்தத் தேநீரும் மட்டுமே இப்போது சந்திக்கின்றோம்.

- Thich Nhat Hanh
தமிழில்: டிசே தமிழன்

(நன்றி:Thich Nhat Hanh Gems)

பேயாய் உழலும் சிறுமனமே

Sunday, October 01, 2017

வெளியீட்டு விழா
யாழ்ப்பாணம் 
(சித்திரை 18, 2017)விரியும் மலரைப் போல ஒரு பொழுதைப் பழக்குதல்

Thursday, September 28, 2017

ங்களுக்காய் ஒரு நாள் இனிதாய் விடிகிறது. மென்வெயிலும் முற்றத்த்தில் சிறகடிக்கும் பறக்கும் சாம்பல்நிற flycatcher களும், செம்மஞ்சள்நிற ரொபின்களும் விடியலுக்கு வேறொரு வனப்பைத் தந்துவிடுகின்றன. என்றோ ஒருநாள் குதூகலத்தின் எல்லையில் நீங்கள் ஏவிவிட்ட வெடியொன்று பக்கத்து வீட்டுக் கூரையை உரசியதால் உங்களோடு முரண்பட்டு, முகத்தை இறுக்கமாய் வைத்திருப்பவர் கூட, புற்களைப் பராமரித்தபடி வழமைக்கு மாறாய் காலை வணக்கம் கூறுகின்றார். மேலும் இன்று நீங்கள் உங்களுக்கு மிகப்பிடித்தமான ஆடையையும் அணிந்திருக்கின்றீர்கள் என்பதால் உங்கள் பெருமிதம் உங்கள் உயரத்தை ஓரங்குலம் உயர்த்தியும் விட்டிருக்கின்றது.

காதுகளில் ஹெட்போனை மாட்டியபடி நடக்கத் தொடங்குகின்றீர்கள். உங்களுக்குப் பிடித்த Katy Perryயின் "You don't have to feel like a wasted space/ You're original, cannot be replaced/If you only knew what the future holds/ After a hurricane comes a rainbow" குரல் இழைய இழைய நீங்கள் வானத்தில் பறக்கத் தொடங்கியும் விடுகின்றீர்கள். ஏறும் பஸ்சில் நெரிசல்தானென்றாலும் உங்களுக்குப் பிடித்த அடிக்கடி சந்திக்கின்ற இரண்டு பெண்களும் ஏறிவிடுவதால் அது அலுப்பான பயணமாகவும் தெரியவில்லை. பஸ்சிலிருந்து இறங்கி சப்வே இரெயின் எடுக்கப்போகும்போது -மூன்றாவதான -மீண்டுமொருமுறை திருப்பிப் பார்க்கவைக்கும் பெண்ணைச் சந்திக்கின்றீர்கள்.

இரசிக்க விருப்பமிருப்பினும் பார்வையை எப்படியோ சுழித்து நெளித்து ஒரு பரவளைவாடியைப் போல - அந்தப் பெண் உங்கள் முன்னே நடந்துபோனாலும்- ஒருமாதிரியாக திசையை மாற்றிவிடுகிறீர்கள். யவனத்தை இரசிப்பதற்கும், யதார்த்தத்தில் வாழ்வதற்கும் காலங்காலமாய் நடக்கும் சமர் போலும். எனினும் நேற்றிரவு வாசித்த ஒரு பெண்ணின் நேர்காணலில் 'உங்களுக்குப் பிடிக்காத விடயம் என்ன'வெனக் கேட்கப்பட்டபோது, 'ஒரு ஆண் கொஞ்ச விநாடிகள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாலே வெறுப்பு வந்துவிடும்' என்ற சொல்லப்பட்ட பதிலில் இதற்கு ஒரு மேலதிகமான காரணமாய்க் கூட இருக்கலாம். ஆக நீங்கள் இரசிக்க விரும்பும் உங்கள் மனதை சமரசம் செய்துவிட்டு சப்வே இரெயின் பெட்டிக்குள் இப்போது நுழைகின்றீர்கள்.

ன்று வாசிக்க பத்திரிகையை எடுத்து வராததில், நேற்றுக் கனவில் கொண்டு வந்த பெண்ணை மீண்டும் நினைவில்கொண்டு விழிகளை மூடுவதும் திறப்பதுமாய் இருக்கின்றீர்கள். ஒரு கர்ப்பிணிப் பெண் ஏறுகின்றார். உங்களுக்கு எல்லாவற்றிலும் சந்தேகமும் குழப்பமும் இருப்பதை அறிவோம். ஆனால் உங்களுக்கு ஒருவர் கர்ப்பிணியா அல்லது உடலின் பருமனா என்று தெளிவாய்க் கண்டுபிடிக்கும் வித்தையும் இதுவரை கைவந்ததில்லை. எப்போதும் குழப்பமுற்றபடியே இருக்கையைக் கொடுப்பதா வேண்டாமா என அடிக்கடி யோசித்துக்கொண்டிருப்பீர்கள். அதுபோலவே வயதுமுதிர்ந்தவர்களில் எவருக்கு இருக்கையைக் கொடுப்பது என்பது பற்றியும் உங்களின் குழப்பங்களை நாங்கள் அறிவோம்.

உடல் பருமனா ஒருவருக்கு இருக்கையை எழும்பிக் கொடுத்தால், அது அவரின் எடையை அவமதிப்பாய்ப் போய்விடும், அதுபோலவே வயது முதிர்ந்த எல்லோரும் அப்படி இருக்கை கொடுப்பதை 'பெருந்தன்மை'யாக நினைப்பதுமில்லை. மேலும் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்துப் பேசுவதையே எந்தப் பெண்ணும் விரும்புவார் என்பதையும் நன்கறிவீர்கள். ஆனால் வயிற்றையும் இதற்காகக் கவனிக்கவேண்டும் என்பது கஷ்டமான ஒருவிடயம். வயிற்றைப் பார்த்து எதுவெனச் சரியாகத் தெரியாது ஒருவரின் முகத்தைப் பார்த்து இடம் தரவா வேண்டாமா என யோசிப்பதற்குள், அவர் இருக்கை தேவையில்லாத ஒருவராக இருப்பின் இவனென்னை ஏன் இப்படி உற்றுப் பார்க்கிறான் என அவர் நினைத்தால் பிறகு இன்னும் சிக்கலாகிவிடும். இதற்காகவே எப்போதென்றாலும் ஒரு மூலை இருக்கையை தேர்ந்தெடுக்கும் ஒருவராக நீங்கள் இருக்கவும் கூடும்.

இன்று முழங்கால் தொடும் ஒற்றைக் கறுப்பாடையை அணிந்தவரைக் கண்டவுடன், அவரின் வயிறு தெளிவாகக் காட்டிக் கொடுத்துவிட, முடிவைச் சரியாக வந்தடைந்த சந்தோசத்தில் உங்கள் இருக்கையை கொடுத்துவிடுகின்றீர்கள். அவரின் மென்குரலில் ஒலித்த நன்றி உங்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது.

உங்கள் வேலைத்தளத்தில், அவ்வளவு எளிதில் மனம் விட்டு எதையும் பாராட்டாத நீங்கள் உங்கள் நெடுநாள் தோழி மென்நீல ஆடை அணிந்து வந்திருப்பதைக் கண்டு, 'இன்று நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றீர்களென' கஷ்டப்பட்டு வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்கின்றீர்கள். அவருக்கு அது மிகவும் சந்தோசம் கொடுக்கின்றது. 'நான் வித்தியாசமாய் அழகு செய்து வரவில்லை, சாதாரணமாய்த்தான் இன்று வந்தேன்' என்கின்றார். 'இயல்பாய் இருப்பதுதான் மிகுந்த அழகானது அல்லவா' என நீங்கள் கூறுகின்றீர்கள்.

அவர் உங்களுக்கு வாரவிறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தி நினைவு வருகின்றது.' நீ இப்போது மொன்றியலிலா இல்லை நியூயோர்க்கிலா நிற்கின்றாயா?' என்று. ஒரு நீண்ட வாரவிறுதி வந்தபோது இரண்டிலொன்றுக்குப் போவதென அவருட்பட்ட நண்பர்களுடன் திட்டமிட்டதும் அது பிறகு நடக்காமல் போனதையும் நினைவுபடுத்தி உங்களை வெறுப்பேற்றுவதற்கு அல்லவெனவே நீங்கள் நம்பவிரும்புகின்றீர்கள். 'நான் நீங்கள் நினைத்த இரண்டு இடத்திலுமல்ல, நன்றாக தூங்கிக்கொண்டு வீட்டில் இருக்கின்றேன்' எனப் பதிலளித்துவிட்டு மீண்டும் நித்திரைக்குப் போகின்றீர்கள். பிறகு அவர் வழமையாக எல்லாப் பெண்களையும் துரத்தும் துர்க்கனவான- 'நான் இப்போது நிறையச் சாப்பிட்டு மிகுந்த எடை கூடிவிட்டேன்' என்கின்றார். 'இந்த வயதில் நீங்கள் சாப்பிடாது எப்போது விரும்பியதைச் சாப்பிடுவது? வேண்டுமென்றால் அடுத்தவாரவிறுதியில் hiking போகலாம் கவலைப்படவேண்டாம்' எனப் பதிலையும் இடையில் அனுப்பியும் விடுகின்றீர்கள்.

அவருக்கிருக்கும் காதலர் எடை கூடுதல்/குறைதல் பற்றி என்ன நினைக்கின்றாரோ தெரியாது ஆனால் சில மாதங்களுக்கு முன்கூட நீங்கள் 'பெண்கள் உடல் பருமன் கூடுதல் பற்றி நினைத்து வருந்துவதைப் போல பெரும்பாலான ஆண்கள் நாங்கள் கவலைப்படுவதில்லை. எந்த எடையும் எங்களுக்குப் பிடித்ததே' எனச் சொல்லியதும் உங்களுக்கு ஞாபகம் வரலாம். மேலும் உங்களில் சிலருக்கு, டிசே போன்றவர்களுக்கு ஈர்ப்பிருக்கும் chubbyயான பெண்களைத்தான் கூடப் பிடிக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்.

இவ்வாறாக உங்கள் தோழி இன்று காலைச் சாப்பாட்டுக்கு தன்னோடு வரும்படி அழைக்கின்றார். நீங்கள் ஒவ்வொருநாளும் காலையுணவிற்கென ஒரேவகையான bagelஐ கொண்டு வந்து நன்னிக்கொண்டு திரிவதையும் அவர் நன்கு அறிவார். 'நானொரு மினிமலிஸ்ட். உங்களோடு காலையுணவில் கலந்துகொள்கின்றேன். ஆனால் நான் கொண்டுவந்ததையே நன்னுவேன்...மன்னிக்க தின்னுவேன்' என்கின்றீர்கள். இப்போது தோழியோடு உணவகம் தேடிச் செல்லும்போது அவரது அழகும் குதியுயர்ந்த காலணிகளும், கடந்து போகின்றவர்களை ஈர்ப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆண்கள் மட்டுமில்லை பெண்களும் திரும்பிப் பார்ப்பதையும், அந்த விழியெறிதல்களை உங்கள் தோழியைச் சந்திக்கமுன்னர் நீங்கள் இடைமறித்து இடையில் அந்தப் பெண்களை நோக்கி ஒரு புன்னகையை தவழவிட்டுவிட்டீர்களென்றால் இந்த நாள் உங்களுக்கு  மேலும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக மாறிவிடுகின்றது.

ஆனால் இதையும் நீங்கள் நினைவுகொள்ளவேண்டும். இந்த நாள் உங்களையறியாமலே இவ்வளவு அழகாக மலர்ந்ததற்கு நீங்கள் எந்த பிரயத்தனங்களைச் செய்யவில்லை என்பதையும். அது தன்னியல்பிலே மலர்ந்து விரியும் மலரைப் போன்றது.  முகிழ்கின்ற மலர்களுக்கு உதிர்கின்ற பருவங்களும் உண்டு. ஆகவே ஒருநாள் என்பது நாம் எதிர்பார்க்காத எதனையுமே தன்னகத்தே வைத்திருக்கலாம்.

ரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. எல்லாவற்றையும் கடந்துவிட்டோம் என்ற நினைத்த உங்களை கடந்தகாலத்திற்கு ஒவ்வொரு கற்களாக உதிரவைத்து அது அழைத்துப் போகவும், நீங்கள் கலங்கிக்கொள்கின்றீர்கள். உங்களின் இனிய நாள் இப்பொழுது இறுக்கமான ஒரு பொழுதாக மாறுகின்றது. மதியவுணவு அவ்வளவு எளிதில் இறங்க மறுக்கிறது. எண்ணங்கள் அலைபுரண்டோடுகின்றன, anxiety மெல்ல மெல்ல தேவையில்லா ஒரு செடியைப் போல உங்களில் படரத்தொடங்குகின்றது.தப்பமுடியாது, ஆனால் உற்றுப் பார்த்துக் கைகுலுக்கி எவரும் காயப்படாமல் நகரவேண்டும்.

ஒரு உலாத்தல் உங்களுக்குப் போதுமானது. ஆனால் இப்போது உங்களுக்கான இன்னொரு தோழி இருப்பது நினைவுக்கு வருகின்றது. சொற்களெல்லாம் குழைந்து மனதைக் குதறும் எண்ணங்களை அனுப்பிவிடுகின்றீர்கள். வரும் பதிலின் ஒருபகுதி இப்படியாக இருக்கவும் கூடும்.

"ஏனெனத் தெரியாது வாழ்வெம்மை தண்டிக்கிறது.
பின்னும் அதுவே தோள் மீது கை கோர்த்து இன்பங்களை அறிவிக்கிறது. பிரிதல் நோயாகி ரணங்களை தோற்றுவிக்கிறது. நாம் நேசிக்கும் தனிமை கூட சமயங்களில் நம்மை குடித்து காலி செய்கிறது. வாழ்தல் எனும் பெரும் சுமை இதயம் நசங்க எனை கூன் விழச்செய்கிறது.

இந்த சுவர்களே விரல்களாகி எனை தழுவுங்களேன் என கேவத்தோன்றுகிறது. ஆனாலும் என் ப்ரிய சிநேகிதா நேசித்தல் எனும் அற்புதம் ஒன்றே போதுமாயிருக்கிறது இதை கடப்பதற்கு.
ஆதனால் நேசம் கொள்வோம் எப்படியேனும் எதன் மீதேனும்."

சில வார்த்தைகள். மெல்லியதான அன்பு. சிலரேனும் உங்களை ஆற்றுப்படுத்த இருக்கின்றார்கள் என்பது மீண்டும் உங்களை வீழ்ச்சியிலிருந்து எழவைக்கின்றது. விடியலோடு உங்களுக்கு கையளிக்கப்பட்ட அழகிய நாள் ஒரு சூரியகாந்திப்பூவைப் போல திரும்பவும் தலைதூக்குகின்றது.

ஆகவே ஒருநாளில் எல்லாமும் நடக்கும்.கொல்லக்கூடிய வார்த்தைகளுக்கே ஆரத்தழுவிக்கொள்ளவும் தெரிகிறது. நீங்களும் இரண்டிலும் கலக்காது இரண்டையும் எதிர்க்காது இயல்பாய் இருப்பது எப்படியென்பதைக் கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

இப்போது கோடையின் மென் வெம்மையுடனும், விரிந்திருக்கும் நீல வானத்துடனும், பூத்திருக்கும் ஊதாப்பூக்களுடனும், உங்களில் ததும்பும் பிரியங்களை எல்லோருக்குமாய் அனுப்பி வைக்கத் தொடங்குகின்றீர்கள்.

(நன்றி: 'அகநாழிகை', 2017)