கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Mariano Azuela வின் 'வீழ்த்தப்பட்டவர்கள்'

Friday, February 24, 2017

(தமிழில் அசதா)


19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த மெக்ஸிக்கோப் புரட்சி, 30 வருடங்களாய் ஆட்சியில் இருந்த டயாஸ் மொறியை பிரான்ஸிற்குத் தப்பியோட வைத்தது. அதன் பிறகு புரட்சிப்படையினருக்குத் தலைமை வகித்த மடேரோ ஜனநாயக முறையில் நிகழ்ந்த தேர்தலில் வெற்றி பெறுகின்றார். எனினும் வலதுசாரிகளால் இவரொரு மிகுந்த தாராளவாதியெனவும், புரட்சியை நடத்திய படையினரால் இவரொரு அதிதீவிர வலதுசாரியெனவும் விமர்சிக்கப்பட்டு ஆட்சியேறிய சில வருடங்களில் கொல்லப்படுகின்றார். 1910ல் புரட்சியை நடத்தி, ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திய மெக்ஸிக்கோ அடுத்த 10 வருடங்களில் மிகப்பெரும் உள்நாட்டுப் போரில் சிக்கித் திணறியுமிருக்கின்றது. வழமை போல அந்நிய சக்தியான அமெரிக்காவின் ஆதிக்கம் இந்த உள்நாட்டுக்குழப்பங்களில் இருந்ததும், கிட்டத்தட்ட மில்லியனுக்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டதும் கடந்தகால வரலாறு.

இந்த மெக்ஸிக்கோப் புரட்சி பற்றி உள்ளிலிருந்து எழுந்த ஒரு குரலாக Mariano Azuela எழுதிய 'The Underdogs' 1915ல் வெளிவந்திருக்கின்றது. அசதா 'வீழ்த்தப்பட்டவர்கள்' என்ற தலைப்பில் இந்த நாவலைத் தமிழாக்கியிருக்கின்றார். மரியானோ, நிஜ வாழ்க்கையில் ஒரு மருத்துவராக இருந்ததோடன்றி புரட்சிப்படையோடு ஒரு மருத்துவராகப் பல்வேறு பகுதிகளில் பயணித்துமிருக்கின்றார் என்பதையும் நினைவூட்டிப் பார்த்தால், இந்த நாவலில் அசலும் கற்பனையும் நாம் பிரித்துப் பார்க்காது இடைவெட்டிக்கொண்டு போவதும் இயல்பானது எனத்தான் கொள்ளவேண்டும்.

நாவலில் சாதாரண தோட்டக்காரனான டிமிட்ரியோ, நகரமொன்றுக்குப் போகும்போது அங்குள்ள நகரத்தலைவனோடு ஒரு சச்சரவில் ஈடுபடுகின்றான். நகரத்தலைவனோ அன்றைய ஆட்சியிலிருக்கும் பெடரல்களை இவன் மீது ஏவிவிடுகின்றான். இதனால்  தன் குடும்பத்தைப் பிரிந்து மலையில் தலைமறைவாக வாழும் அவனோடு, இப்படி பல்வேறு நிலைகளில் பெடரல்களின் மீது கோபங்கொண்ட ஏழைக்குடியானவர்கள் ஒரு இருபது பேர்கள் வந்து சேர்கின்றார்கள். இவர்களைத் தேடி வரும் பெடரல்களின் பெரும்படையை துப்பாக்கிச் சண்டையில் அடித்துத் துரத்துகின்றார்கள். இந்தச் சண்டையில் காயப்படும் டிமிட்ரியோவைத் தூக்கிக்கொண்டு தப்பும் இந்தப்படையினர் மிகவும் வறுமையான குடியானவர்களின் குடியிருப்புக்களில் தலைமறைவாகின்றனர்.

அங்கே இவர்களோடு மருத்துவம் படித்த, பத்திரிகையிலும் எழுதும் செர்வாண்டிஸ் வந்து சேர்கின்றான். முதலில் செர்வாண்டிஸை, பெடரல்களின் அனுப்பு ஒரு உளவுக்காரனென நினைத்து பயங்கரமான தண்டனை கொடுக்கும் டிமிட்டியோவின் படையினர் இறுதியில் அவன் உண்மையிலே அன்று பல்வேறு பகுதியில் பெடரருக்கு எதிராக நடக்கும் மெக்ஸிக்கோ புரட்சியில் பங்குபெறத்தான் வந்திருக்கின்றான் என்ற உண்மையை அறிந்துகொள்கின்றனர்.

புரட்சி மீது மிகப்பெரும் விருப்பும், புரட்சிக்காரர்கள் பற்றி பல்வேறு கதைகளையும் கேள்விப்பட்டு புரட்சிப்படையில் சேர வந்த செர்வெண்டிஸுக்கு, டிமிட்ரியோவின் படையினரைப் பார்க்க மிகுந்த ஏமாற்றமாய் இருக்கின்றது. அற்புத குதிரைகளுடனும், நேர்த்தியான ஆடைகளுடனும், திடமான ஆண்களுமாய் புரட்சிக்காரர்கள் இருப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிற்கு எதிர்மாறாய் அவர்கள் இருக்கின்றார்கள்.

டிமிட்ரியோவின் காயம் ஆற, அவனது படை பெடரல்களின் அருகிலிருந்த நகரங்களில் தாக்கப் புறப்படுகின்றது. எவ்வித பயமுமின்றி பாய்ந்து போரிடும் அவர்களின் போர்த்திறமையைக் கண்டு பலர் டிமிட்ரியோவோடு வந்து இணைகின்றார்கள். அதுவரை பெடரல்களின் அடக்குமுறையில் இருந்த சாதாரண மக்களும் இவர்களை ஒவ்வொரு நகரிலும் ஆதரிக்கின்றார்கள். பெடரல்கள் பற்றிய தகவல்களை இவர்களுக்கு வழங்குகின்றார்கள். இன்னொரு திசையில் தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் புரட்சிப்படையின் கேணலால் கூட வெற்றி கொள்ள முடியாத பெடரல்களின் உறுதிமிக்க நகரொன்றை பின்புறத்தால் நுழைந்து, நுட்பமாய் டிமிட்ரியோவின் படையினர் வெற்றிகொள்ள இவனின் புகழ் எங்கும் பெறுகின்றது. புதியவர்கள் எல்லாத்திசையிலிருந்தும் இவர்களோடு சேர்ந்துகொள்கின்றார்கள்.

பெடரல்களின் இறுதிக்கோட்டையையும் டிமிட்ரியோவின் படைகள் ஏனைய புரட்சிப்படைகளோடு சேர்ந்து வெற்றிகொள்ள பெடரல்களின் அட்டகாசம் அடங்குகின்றது. புதிய ஆட்சிமாற்றம் நிகழ்கின்றது. டிமிட்ரியோ ஜெனரலாக பதவியுயர்வு பெறுகின்றான். அவனோடு கூடவே இருந்த செர்வாண்டிஸ் மேஜர் தரத்திற்கு வருகின்றான். இப்போது பெரும்படையோடு இருக்கும் டிமிட்ரியோடு பிளாண்டியும், இன்னொரு பெண்ணும் சேர்ந்தும் கொள்ள, டிமிட்ரியின் படைகள் நகரங்களில் புகுந்து சூறையாடத்தொடங்குகின்றார்கள். மதுவும், மாதுவும் வேண்டிய கொண்டாட்டத்தில் குடியானவர்களின் சொத்துக்களை அபகரித்து, எதிர்ப்பவர்களைச் சுட்டுந்தள்ளுகின்றார்கள். யாருக்காய் போராடப்போனார்களோ அவர்களே வெறுக்கின்ற படைகளாக டிமிட்ரியோவின் ஆட்கள் ஆகிவிடுகின்றனர்.

டிமிட்ரியோ தான் இப்படி மாறிவிட்டான் என்றால், புரட்சி மீது நம்பிக்கைகொண்ட மருத்துவனாய் இருக்கின்ற செர்வாண்டிஸ் எல்லோரையும் விட பணத்தாசை பிடித்தவனாக மாறுகின்றான். அவனைக் காதலித்த இரு பெண்களையும், சொத்துச் சேகரிக்கும் பேராசையில், பிறருக்கு அவர்களை அடகு வைக்கின்றான. அவன் மீதான காதல் பித்தத்தில் இருக்கும் கமீலாவின் காதலை மறுக்க அவனுக்கு தன் பிறப்பால் வந்த அந்தஸ்துதான் ஒரு காரணமென்றாலும், அவளை நம்பவைத்து டிமிட்ரியோவின் இச்சையிற்கு அடிபணியவைப்பது அதிகார இச்சையின் இன்னொரு பக்கம். படித்தவர்கள் விரும்பினால் சமூகத்தை எந்த இழிநிலைக்கும் கொண்டு செல்லத்தக்கவர்கள் என்பதற்கு செர்வாண்டிஸ் மிகச்சிறந்த உதாரணம்.

புரட்சி வென்றபின், இப்போது புரட்சிப்படைகள் தங்களுக்குள் அடிபடத்தொடங்குகின்றார்கள். 'டிமிட்ரியோ நீ எந்தப் பக்கம்?' என ஒரு ஜெனரல் கேட்கின்றபோது, 'எனக்கு புரட்சிபற்றி எதுவும் தெரியாது, போராட மட்டுமே தெரியும்' என்று சொல்லி, ஜெனரல் கூறும் ஒரு பக்கம் நின்று மீண்டும் சண்டை பிடிக்கச் செய்கின்றான். இம்முறை முன்போல மக்களின் ஆதரவு இவர்களுக்கு இல்லை. மேலும் இவர்களின் படையில் இருந்தவர்களுக்கு எதிராகவே இவர்கள் போராடுவதும் கடுமையாக இருக்கின்றது.
மீண்டும் தன் சொந்த ஊரான மலைகளின் தேசத்திற்குப் போய் தான் பழைய தோட்டக்காரனாக ஆகிவிடுவேன் என டிமிட்டிரியோ அடிக்கடி கனவு காண்கின்றான்.

ருகட்டத்தில் அவன் பெடரல்கள் தன்னைக் கடந்தகாலத்தில் துரத்தும்போது தப்பியோடச் சொன்ன தன் மனைவியையும், பிள்ளையும் காண்கின்றான். மனைவி எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னோடு வந்து சாதாரண வாழ்வு வாழச் சொல்கின்றாள். ஆனால் டிமிட்ரியோவின் காலம் கடந்துவிட்டது. இயல்பான வாழ்க்கையிற்கு இனி என்றென்றைக்குமாய்த் திரும்பிடமுடியாத ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத்துவிட்டான்.

செர்வாண்டிஸ் தப்பி வேறிடத்திற்குப் போய், மக்களிடமிருந்து அபகரித்த சொத்தைவைத்து, தன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டான். இப்போது டிமிட்ரியோவின் படையில் முக்கிய கேணலாய் இருக்கும் தன் நண்பனை, எல்லாவற்றையும் கைவிட்டு பணத்தை அபகரித்துக்கொண்டு மெக்ஸிக்கோ சிட்டிக்கு வரச்சொல்கின்றான். தானும், அவனுமாய்ச் சேர்ந்து ஒரு புதிய உணவகத்தைத் தொடங்கி நிறையச் சம்பாதிக்கலாமென ஆசை காட்டி கடிதம் எழுதுகின்றான்.

டிமிட்ரியோவின் படைகள் மலைக்கிராமத்தில் இருந்தாலும், ஒரு காலத்தில் அவனின் நண்பர்களாய் இருந்து இப்போது எதிர்ப்படைகளாய் இருந்தவர்கள் இவனைச் சுற்றி வளைக்கின்றார்கள். இவனின் மிகத்திறமை வாய்ந்த தளபதிகள் எல்லாம் இவன் கண்முன்னே கொல்லப்படுகின்றார்கள். இவர்களின் படையை விட எண்ணிக்கையில் அதிகமான எதிரிப்படைகள் சூழ்வதை அசட்டை செய்து எதிரிகளைக் குறி பார்க்க துப்பாக்கியை உயர்த்துவததோடு இந்நாவல் முடிகின்றது.

மெக்ஸிக்கோ புரட்சி ஒரு வரலாற்று நிகழ்வு. ஆனால் அதற்காய் மிகப்பெரும் விலையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு எதிரியை வீழ்த்தத் தொடங்கிய புரட்சி அது எதிர்பார்த்திருக்கவே முடியாத பல திசைகளில் மாறி மாறி இன்னுமின்னும் அழிவையும் கொடுத்திருக்கின்றது. ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் எப்போதும் புரட்சியை இருகரங்கொண்டே ஆதரிக்கின்றார்கள். புரட்சியும், புரட்சிக்காரர்களுந்தான் பலவேளைகளில் தடம் புரண்டுவிடுகின்றார்கள். 30 வருடங்களாய் மேலாய் இருந்த ஒரு சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தத் தொடங்கிய மெக்ஸிக்கோப் புரட்சியில், புரட்சியில் பங்குபெற்றியவர்களே தங்களுக்குள் அடிபடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டு விடுகின்றது.. எப்போதுபோல மக்களே Underdogsயாய் முன்பும் இருந்தார்கள், பிறகு புரட்சி நடந்தபின்னும் அதேநிலையில்தான் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது என்பதைத்தான் இந்த நாவல் மறைமுகமாய்ச் சொல்கின்றதோ?

(நன்றி: 'பிரதிபிம்பம்')

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – பதின்ம வயதின் அற அலைச்சல்

Wednesday, February 22, 2017

-அனோஜன் பாலகிருஷ்ணன்
Post-war காலப் பகுதியில் வெளியாகிய பல்வேறு கதைகள் பெரும்பாலும் ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க இயலும். பெரும்பாலான கதைகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் நாயகன் முன்னாள் போராளி ஒருவரைத் திருமணம் செய்ய இலங்கைக்கு வருவார்; ஆனால், அவ்வீட்டுக்கு அருகிலிருக்கும் உள்ளூர்வாசியொருவர் பொறாமையில் அம்முன்னாள் போராளியைப்பற்றித் தவறாகச் சொல்ல நாயகன் அதனை நம்பி விட்டுவிட்டு மீண்டும் தான் வாழும் நாட்டுக்குச் செல்வார். (புலம்பெயர்ந்த நாம் உதவிசெய்ய வந்தாலும் உள்ளூர் வாசிகள் விடுவதில்லை என்ற தொனி அதிலிருக்கும்) இல்லையெனில் முன்னாள் போராளிகள் வெவ்வேறு விதமாகச் சமூகத்தினால் புறக்கணிக்கப்படுவதை மீண்டும்….மீண்டும் தேய்வழக்குடன் கற்பனைவளமின்றி எழுதியதாகவிருக்கும். இல்லையெனில் இலங்கையில் வாழ்ந்த நிகழ்வுகளில் எஞ்சியதை வைத்து ஏதோவொரு கதையை எழுத முயல்வதாக இருக்கும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன? அங்கிருக்கும் வாழ்க்கையை, புலம்பெயர்ந்து அந்நாட்டுப் பண்பாட்டுச்சூழலில் புகும்போது ஏற்படும் முரண் இயக்கங்களை வைத்துக்கொண்டு நுண்மைகளோடு எழுதப்படும் கதைகளைத்தான். ஆனால் அவ்வாறு எழுதப்படும் கதைகள் ஒப்பீட்டு அளவில் மிகக்குறைவானவை என்பதே உண்மை.
பத்திகளைச் சலிப்பில்லாமல் எழுதுவதற்குப் பெயர்போன இளங்கோ [டி.சே.தமிழன்] அபூர்வமாக எழுதிய புனைவுகளில் சிலவற்றை ஏற்கனவே முன்னம் வாசித்திருக்கின்றேன். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இயல்பாக எழும் சிக்கல்களை வைத்து, பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த ஒருவனின் பார்வையில் நகரும் கதைகளாக அவையிருந்தன. இளங்கோவின் சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் புத்தகம் கைக்குக் கிடைத்தபோது ஆர்வமாகத் தட்டிப்பார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு கதைகள்.
‘கோபிகா ஏன் அப்படிச்செய்தாள்’ சிறுகதை நீண்ட நாட்களுக்குப் பின் நாட்டுக்கு வரும் ஒருவரின் பார்வையில் நகரும் கதை. நீண்ட நாட்களுக்குப்பின் தாய்நாடு வரும்போது ஒருவித மிதப்பான பார்வையில் புறச்சூழலை அவதானிக்கிறார் கதைசொல்லி. மச்சாள்காரி விழுந்து விழுந்து கவனிக்கின்றாள். அவளின் கணவர் சிவா இயக்கத்தில் இருந்துவிட்டு இடைவிலகி வந்தவர். அதற்குக் காரணமாகவிருக்கும் சம்பவம் சுவாரசியமானது. கோபிகாவைக் காதலித்த கபிலன் இயக்கத்துடன் தொடுப்பில் இருந்தவர். தனிப்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவத்தினால் ஏற்கனவே இயக்கம் மீது கடும் சினத்திலிருக்கும் கோபிகாவின் தகப்பன் வேறொருவருக்குக் கோபிகாவை திருமணம் செய்துவைக்க முயல்கிறார். கோபத்தில் கிளர்ந்தெழுந்த கபிலன் தகப்பன் இல்லாத நேரம் கோபிகாவின் வீட்டில் புகுந்து கோபிகாவின் காலில் வெட்டி விடுகிறான். ஒரு காலில் மூன்று விரல்கள் செயலிழந்து விடுகின்றன. தடுக்க வந்த தாய்க்கும் வெட்டு. பிற்பாடு அவன் வன்னிக்குச் சென்று முற்றுமுழுதாக இயக்கத்துடன் இணைந்துவிடுகிறான். அங்குதான் கபிலனுக்குச் சிவா அறிமுகமாகிறான். சிவாவுடன் நண்பனாக இருந்த கபிலன் சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் இயக்கத்தைச் சுழித்துவிட்டுப் படகேறி இந்தியா சென்றுவிடுகிறான். அந்தச் சம்பவத்தால் சிவா பங்கருக்குச் செல்ல நேர்கின்றது. அப்படியே இடைவிலகி இயக்கத்தைவிட்டு வந்தவர்தான் சிவா. இந்தியா சென்ற கபிலன் ஒரு பெண்ணோடு காதல்வயப்பட்டு அப்பெண்ணைக் கடத்த முயன்று மாட்டுப்பட்டுச் சிறைவாசம் சென்று இறுதியில் பம்பாய்ச் சென்றுவிடுகிறான். இந்தக் கதைகளைக் கேள்விப்படும் கதை சொல்லிக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அதைவிடப் பெரும் அதிர்ச்சிதரும் விடயத்தைக் கேள்விப்படுகிறான், அது கோபிகா ஒருநாள் கடிதம் எழுதிவிட்டுக் கபிலனை தேடிப்போய்விட்டாள் என்பதே. அதை மட்டும் கதை சொல்லியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கதைக்குள் எங்கையோ ஒர் ஒருமை புதைந்திருக்கின்றது. அதைக் கண்டறியவே அவனால் முடியவில்லை. அந்தத் திகைப்புப் புதிதாக வாங்கிக்கு அடித்த வார்னிஷ் நிறப்பூச்சில் ஒட்டிய தூசு போலத் துடைத்தெறிய முடியாமல் இருக்கின்றது. கோபிகா ஏன் அப்படிச்செய்தாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறும்போது மக்களும் இயக்கத்தை அவ்வாறு நேசித்திருப்பார்களோ என்று அவனுக்குத் தோன்றுகின்றது. நேசித்த இயக்கம் என்னதான் நேசித்தவர்களுக்கே துன்பம் தந்தாலும் இயக்கத்தை அவர்கள் வெறுக்கவே இயலவில்லை. அதுவே தவிர்க்க இயலாத பொது மனநிலையாக இருக்கின்றது. வெறும் கதை சொல்லலால் நகரும் இக்கதை புறச்சூழல் வழியே கேள்விப்படும் கதைகளை அடுக்கி ஒரு புனைவாக எழுகிறது. கணவாய் கறியும் புட்டும் மாம்பழமும் சாப்பிட்டு ருசி காணும் சில நுண்மையான அவதானங்களோடு நகர்கின்றது.
‘பனி’ என்கின்ற கதை இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகளில் ஆகச்சிறப்பானது. கனடாவுக்குப் பதின்மவயதில் விசா இல்லாமல் குடியேறவரும் ஒருவனைப்பற்றிய கதை. சடகோபன் விசா இல்லாமல் கனடாவிற்கு வந்து நாட்டில் கடுமையான யுத்தம் என்று இமிகிரேஷன் அதிகாரிகளுக்கு முன் கையைத் தூக்குகிறார். அங்கிருந்து கனடா வாழ்க்கை அவருக்கு ஆரம்பமாகிறது. வீட்டில் இரண்டு தங்கைச்சிகள், அவர்களை மறந்திடவேண்டாம் என்று அம்மா தினமும் நச்சரிப்பு. பாடசாலைக்குச் செல்வதும் பகுதிநேர வேலைகளுக்குச் செல்வதுமாக அவனது பொழுதுகள் நீளுகின்றன. எப்போதும் வேலையும் படிப்புமாக இருக்கும் அவனுக்குப் பிலிப்பைன்ஸ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் தோழியாக அறிமுகமாகிறாள். அவளுடனான ஊடல்கள் அவனுக்கு மகிழ்ச்சியையும் விடுதலையையும் தருகின்றன. எந்த நாட்டுப் பெட்டைகளுடனும் திரி; ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரி மட்டும் வேண்டாம் அவர்கள் நச்சரித்து உன்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் கறந்துவிட்டுக் கழற்றி விடுவார்கள் என்று வழமையான தமிழ் மனநிலையில் உபதேசம் செய்கிறார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடன் இனிமையாக நாட்களைக் கழிக்கிறான். வாரத்தில் ஆறு நாட்களைக் குடும்பத்துக்கு உழைப்பதற்கும் மிகுதி ஒரு நாளை அவளுக்காகவும் ஒதுக்கி வைத்திருந்தான். இளமையின் தனிமைகளை வெற்றிடங்களை நிரப்பிக்கொள்ளப் பெண்வாசம் தேவையாக இருக்கின்றது. நிராகரிக்க முடியாத அடிப்படை மனித இயல்பாக அது இருக்கின்றது. இறுதியில் அவளின் உறவை இவனே வெட்டிவிட வேண்டியதாகின்றது. காலம் செல்லச்செல்ல பொருளாதாரம் விரிய தங்கச்சிமாருக்குத் திருமணம் செய்து தன் மீது சுமத்தப்படப் பொறுப்புகளைக் களைகிறான். இலங்கையில் இருந்து வரும் சுகந்தி என்ற பெண்ணோடு அவனுக்கும் திருமணம் நிகழ்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவனது வாழ்க்கை ஒரு நிலையான நிலைக்கு வரும் என்று எதிர்வு கூறியபோதும், அது முற்றிலும் சிதைகின்றது. சுகந்திக்கு இலங்கையில் இறுக்கமான காதல் இருந்தது, அதிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எறியப்பட்ட தாபங்கள் இன்னும் ஓயாமல் இருக்கின்றது. உடலுறவில் இருந்து அனைத்துச் செயற்பாடுகளிலும் அவளது வெறுப்புக் கசிகிறது. ஒரு கட்டத்தில் அவள் இவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்று இலங்கைக்கே சென்று விடுகிறாள். வேகமாகச் சிதையும் அவனது உளவியல் மனப்பிறழ்வுக்குக் கொண்டு செல்கின்றது.
இக்கதை ஆழமாக, புலம்பெயர் தேசத்தில் வாழ முனையும் தமிழ் மனநிலையைப் பேசுகின்றது. ஒவ்வாத தேசத்தில் கிடைக்கும் இன்பங்கள் பல இடங்களில் தேவையாக இருந்தாலும் அதை மறுக்கும், வெட்டும் இடங்கள் தமிழ் மனநிலை புனிதப்படுத்தும் இடங்கள். பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரியின் உடலும் முத்தமும் சுட்டெரிக்கும் காமத்தை ஈடுசெய்யத் தேவையாக இருக்கின்றது, அதே நேரம் அவளை மணமுடிக்கத் தமிழ்மனம் தடையாக இருக்கின்றது. திருமண உறவின் மூலமாகத் தமிழ்ப் பெண்ணின் யோனியே தமிழ் ஆணின் விறைத்த குறிக்குத் தேவையாக இருக்கின்றது. தன் தாய் நாட்டில் இருக்கும் ஒரு பெண்ணைத் தேடி அவன் மனம் அலைகின்றது. அங்கிருக்கும் பெண்களே உகந்தவர்கள், தமிழ்ப் பண்பாட்டில் ஊறியவர்கள், குடும்பம் என்று வந்தால் அவர்களிடம் தஞ்சம் அடைவதே வசதியானது என்று ஆண் மனம் அல்லலுறுகின்றது. சுற்றித் திரிய வேற்று நாட்டுப் பெண்கள் தேவையாக இருக்கின்றது, குடும்ப உறவுக்குத் தமிழ்ப் பெண் தேவையாக இருக்கின்றது. இவ் முரண்புள்ளிகளைப் ‘பனி’ சிறுகதை தொட்டுச் செல்கின்றது.
சுகந்தி விவாகரத்துக் கேட்கும்போது தன் காதல்கதையைச் சொல்கிறாள். “அப்படியெனில் ஏன் என்னை விருப்பம் இல்லாமல் கலியாணம் செய்தனீர்?” என்று திரும்பிக் கேட்கும்போது, எல்லாம் மறந்திடலாம் என்று நினைச்சன். ஆனால், முடியவில்லை என்ற இலகுவான ஒரு பதிலைச் சொல்கிறாள். அப்ப இதற்கெல்லாம் நானா பலியாடு என்று சடகோபன் கத்துகிறான். சக மனிதன் பற்றி அக்கறை கொள்ளாத ஆதிப் பண்பான மனித இயல்பு வெளிப்படும் தருணம் அது. அந்த நேரத்தில் அவனுக்கு “என்னைக் கலியாணம் செய்யும்போது சுகந்தி வெர்ஜின் இல்லையா?” என்ற கேள்வி எழுகிறது. தமிழ் மனநிலையை ஒளிபாய்ச்சிக் காட்டும் இடங்களவை.
‘கொட்டியா’ என்ற சிறுகதை கொழும்பில் வெளிநாடு செல்வதற்காகத் தங்கி நிற்கின்ற பொடியனைப் பற்றிய கதை. யுத்தம் வடபகுதியில் தீயாக எரிகிறது. கொழும்பிலும் தாறுமாறாகக் குண்டுகள் வெடிக்கின்றன. தமிழர்கள் தங்கியிருக்கும் இடங்களெல்லாம் ராணுவம் திடீர்…திடீர் பரிசோதனைகளைச் செய்கின்றது. அச்சமயம் அறையொன்றில் தங்கியிருக்கும் பதின்ம வயது பொடியனின் அனுபவங்கள்தான் கதை. ஒரு முறை சோதனைக்கு வரும் இராணுவச் சிப்பாய் நித்திரையில் இருந்த இவனை எழுப்பும்போது இவனின் குறியைப் பிடித்துவிடுகின்றான். எப்படி அவன் இதைப் பிடிக்கலாம்? என்ற திடுக்கிடல் அரியண்டமாக அவனைக் கொல்கின்றது. கதை வளர்ந்து செல்லும்போது அதிலிருந்து விலகிப் பெண்களின் மனதைப் பேசும் ஒரு கதையாக முடிவில் எஞ்சுகின்றது.
தமிழர்கள் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் உளவுபார்க்காமல் உயிர்வாழ மாட்டார்கள் என்று குறிப்பிடப்படும் இடங்கள் கூர்மையான நகைச்சுவையை உணர்விக்கும் இடங்கள். புறநிலைத் தகவல்களில் குறிக்கப்பட்டிருக்கும் அரசியல் கிண்டல்கள், தமிழர்களின் பாரம்பரியங்களைக் கிண்டல் செய்யும் இடங்கள் அனைத்தும் கதையைச் சுவாரஸ்யம் குன்றாமல் வாசிக்க வைக்கின்றது. இக்கதையின் கூறு முறையில் இருக்கும் சிக்கல் கதையின் போக்கைச் சாதாரண டெம்பிளேட் கதையாக மாற்றிவிடுகின்றது. கதையின் ஆரம்பத்தில் இராணுவ வீரன் அவனது குறியைத் தடவியதும், அவனது சிங்களக் காதலி அவனுடைய குறியைத் தடவிக் கசப்பான அனுபவத்தை இன்பமாக மாற்றுவதோடு அச்சித்திரிப்புக்கள் ஓய்ந்துவிடுகின்றன. கதையின் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்த்திச்செல்ல அச்சித்தரிப்பு உதவவில்லை. அதே இறுதிவரையான கதையின் போக்கைத் தீர்மானிக்கும் குவிவு மையமாக இருந்திருந்தால் இக்கதை சிறப்பான கதையாகியிருக்கும்.
‘மூன்றுதீவுகள்’ கதையும் சாதாரண டெம்பிளேட் வகையில் சிக்கி வெற்று வார்த்தைகளாக இறுதியில் எஞ்சும் கதையாக மாறிவிடுகின்றது. ஒரு புதுவித நிலப்பரப்பில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் இரகசியத்தை ஒரு புள்ளியில் விளங்கிக்கொள்ளுதல், பின் வலிந்த முடிவு என்று நகருகின்றது.
பொதுவான இளங்கோவின் கதைகள் அதிகம் நுண்தகவல்களைக் கதைகளோடு சொல்கிறது. புறவயமான சித்திரிப்புகள் தமிழ் மனநிலையைப் பகிடி செய்துகொண்டு முன்னே நகருகின்றது. அகவயமான சித்திரிப்புகள் கதைகளில் இல்லை. அவற்றை ஆழமாகப் பேச எந்தக்கதைகளும் அதிகம் மினக்கெடவில்லை. விதிவிலக்காக ‘கள்ளி’ கதை. வழக்கமாக இலங்கை எழுத்தாளர்கள் எழுதும் குடும்பச் சித்திரத்தை, அல்லது வெற்று அரசியல் கோஷத்தை நோக்கிச் செல்லாமல் கனடிய/ அந்நிய புலம்பெயர் தேச வாழ்க்கைச் சூழலை நோக்கிச் சென்றிருப்பது ஒரு முக்கியமான இலக்கியக்கூறு. அ.முத்துலிங்கம் எழுதிக்காட்டிய புலம்பெயர் மக்களின் வாழ்க்கை அதிகம் பிளாஸ்டிக்தனம் கொண்டது. அங்கு இயல்பான இலங்கையர் ஒருவரைக் காண இயலாது. படித்த மேட்டிமைத்தனம் வாய்த்த மனித உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத ஒருவரையே நோக்க இயலும். இளங்கோவின் கதையில் உள்ள இலங்கையர்கள் யாழ்ப்பாணத் தமிழ் மனநிலையில் இருந்து கொண்டு அங்கு எழும் காமம்,குரோதம் அதில் மறைந்து எங்கோ ஓர் இடத்தில் மேலெழும் அறத்தின் வெளிப்பாட்டில் தத்தளிப்பவர்கள்.
ஒரு சம்பவத்தை உண்மையாக நிகழ்ந்ததை அச்சொட்டாக அப்படியே எழுதுபவர் புனைவு எழுத்தாளரே அல்ல. அது அவரது வேலையும் அல்ல. அவர் முழுக்கமுழுக்கக் கற்பனையால் ஓர் உலகத்தைப்படைத்து மெய்நிகர் வாழ்க்கையைக் காட்டும்போதுதான் அது நிகழும். அத்தகைய கற்பனைத் திறன் இக்கதைகளில் இருக்கின்றன என்பதும் உண்மை.
சிக்கல் இல்லாமல் இயல்பான மொழி நடையுடன், அயர்ச்சியைத் தூண்டாது எழுதப்பட்டுள்ளன இக்கதைகள். ஆனால்,உத்திகளில் இருக்கும் வெற்றிடம் பழைமையானது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் சித்திரித்து அவர்களுக்கு இடையில் எழும் பிணக்குகளைத் தொடர்வுபடுத்தும் முறையிலிருந்து இளங்கோ வெளிவரலாம். ஆயினும், நிகழ்வுகளிலிருந்து நினைவுகளுக்குச் சென்று அதன் உட்குறிப்புகளை உணர்த்திவிட்டு மீண்டும் வருதல் என்னும் சில உத்திகள் சிறப்பாக இக்கதைகளில் அமைந்துள்ளன. நம்பகமான ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை அளிப்பது இக்கதைகளில் நிகழ்ந்துள்ளது. அதனாலேயே இலங்கைச் சிறுகதைகள் என்ற அளவில் இக்கதைகள் நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
நன்றி  : ஆக்காட்டி இதழ்-13
(http://www.annogenonline.com/2017/02/13/sampal-vaanathil-maraiyum-varairavar/)

ஒரு நாவல் மற்றும் ஒரு திரைப்படம்

Saturday, February 18, 2017

மனாமியங்கள்

சல்மாவின் `மனாமியங்களில்` மெஹரும், பர்வீனும் துயரங்களின் கடலில் தத்தளித்தபடி இருக்கின்றார்கள். எப்போதெனினும் நம்பிக்கையின் ஒரு இறகு அலைகளில் மிதந்து வந்து கரையேற்றாத எனத் தங்களுக்குள் கரைந்தபடி கனவுகள் காண்கின்றார்கள். ஒருவகையில் மனாமியங்கள் மூன்று தலைமுறைப் பெண்களின் கதைகளைச் சொல்ல விழைகிறது. மூத்ததலைமுறை எல்லாவற்றையும் தன்னியல்பிலே ஏற்றுக்கொள்கின்றது. பர்வீன்/மெஹர் போன்ற அடுத்த தலைமுறை தனக்கான தவறுகளிலிருந்து பலவற்றைக் கற்றாலும், மீளத் திரும்ப முடியாக் காலங்களிற்குள் சிறைப்படுகின்றார்கள். அடுத்த தலைமுறையாக வரும் சாஜிதாவிற்கு முன்னிருந்த தலைமுறைகளைவிட நடந்துசெல்வதற்கான எல்லைகள் நீண்டபடி இருக்கின்றன. எனினும் எங்கோ அது அடைபட்டுவிடும் என்கின்ற பதற்றங்களும் பயங்களும் கூட ஒரு நிழலைப்போலப் பின்தொடர்ந்தபடி இருக்கின்றன.

சாதாரண பெண்களுக்கு இருக்கின்ற குறுகிய பரப்பிற்குள் நின்றே கதையைச் சொல்லவேண்டிய நிர்ப்ப்பந்தம் இருக்கின்றபோதும், கிட்டத்தட்ட 300 பக்கங்கள் நீளும் நாவலில் அவ்வப்போது ஒன்றையே திரும்பத்திரும்ப வாசிக்கின்றோமோ என்ற சலிப்பு வருகின்றது. இதுதான் இயல்பு அல்லது யதார்த்தம் எனச் சொன்னாலும், ஏன் சல்மா `நடக்காத விடயங்களை` நோக்கி நகரவில்லை என்ற கேள்வி வந்துகொண்டேயிருந்தது. கணவன் இரண்டாந்திருமணம் செய்தபின், தனக்கான இன்னொரு திருமணத்தைச் செய்கின்ற மெஹருக்கு குழந்தைகள் பிரிக்கப்படுகின்ற துயரம் இருந்தாலும், ஆகக்குறைந்தது அபியோடு கொஞ்சக்காலம் எனினும் மகிழ்ச்சியாக இருந்திருக்கூடாதாவென யோசித்துப் பார்த்தேன். அவ்வாறே பர்வீனுக்கு கணவனின் தள்ளிவைப்பிற்கு பின் அரிதாகக் கிடைக்கும் நட்பான மூர்த்தியோடு தொலைபேசி உரையாடல்களுக்கு அப்பால் இன்னும் சற்று நகரமுடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..

அலுக்க அலுக்க துயரத்தையும், அழுகையையும் (அதுதான் நம் பெரும்பாலானர்க்கு வாழ்க்கையில் இயல்பு என்றாலும்) நாவல் முழுதும் சொல்லிக்கொண்டிருக்காது வேறு பல சாத்தியங்களையும் மனாமியங்கள் பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். இன்னும் புதிய பல வெளிச்சங்களை அது இந்த நாவலுக்குக் கொடுத்திருக்கவும் கூடும். என்றபோதும் முஸ்லிம் பெண்பாத்திரங்களை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலினூடு இன்னும் நெருக்கமாக முஸ்லிம் கலாசாரத்தையும், அது பெண்களுக்கு நெகிழ்வாகத் திறக்கும் யன்னல்களையும், அவ்வப்போது நெரித்து மூடும் கதவுகளையும் அறிந்துகொள்ளலாம்.


Papa 
(Hemingway in Cuba)

எர்னெஸ்ட் ஹெமிங்வே கியூபாவில் இருந்தபோது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஹெமிங்வேயிற்கும், மியாமியில் இருக்கும் ஓர் இளைய பத்திரிகையாளருக்கும் முகிழும் நட்பு பற்றியும், அவரினூடாக ஹெமிங்வேயின் இறுதிக்கால வாழ்வின் சிக்கல்கள் சித்தரிக்கப்படுகின்றன. கியூபாவில் பாட்டீஸ்டா ஆட்சிக்காலத்தில் ஃபிடலின், இராணுவத்தலைமையகத்தைக் கைப்பற்றும் முயற்சி தோற்கடிக்கும்போது ஹெமிங்வே சாட்சியாக நிற்கின்றார். ஏற்கனவே ஸ்பானிய உள்நாட்டுப்போரில் கிளர்ச்சியாளர்களின் பக்கம் நின்று போராடிய ஹெமிங்வே, கியூபாவிலும் புரட்சியாளர் பக்கம் நிற்கக்கூடுமென்ற சந்தேகத்தில் அமெரிக்க உளவுத்துறையும், கியூப அரசும் அவரை நெருக்கடிக்குள்ளாக்கும்போது, ஹெமிங்வே அங்கிருந்து தப்பி அமெரிக்காவிற்கு சென்ற 18 மாதங்களின் பின் தற்கொலை செய்துகொள்கிறார்.


எழுத்தின் மீது பித்துப் பிடித்தலைந்த ஹெமிங்வேயிற்கு இறுதிக்காலங்களில் எழுதுவது கைநழுவிப்போவது பிரச்சினையைக் கொடுக்கின்றது. அதுபோலவே அவருக்கும் அவரது மனைவிற்குமான பிணக்குகள், ஹெமிங்வேயிற்கு இயல்பாகவே அவரின் குடும்ப மரபணுக்களால் கடத்தப்பட்டிருக்கும் உளவியல் சிக்கல்கள் என நாம் இந்தத் திரைப்படத்தில் வேறொருவிதமான ஹெமிங்வேயைப் பார்க்கின்றோம். இவ்வளவு அற்புதமாய் எழுதிய, நோபல் பரிசு போன்ற புகழ் வெளிச்சத்தில் மினுங்கிய ஹெமிங்வே அகமும் புறமுமான நெருக்கடிகளால் இறுதியில் அடம்பிடிக்கும் ஒரு குழந்தையைப் போல ஆகிவிடுகின்றார். ஆனால் அதைத் துயரமாக அல்ல, இவ்வாறு ஆகுதலும் மனித வாழ்வில் இயல்புதானென ஹெமிங்வே மீது பித்துப்பிடித்தலைபவர்கள் (என்னைப் போன்றவர்கள்) அவரை வெறுக்காது, இன்னமும் நெருக்கான ஒருவராய் தமக்குள் ஆக்கியும் கொள்ளவே செய்வார்கள்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

ஒரு குறுகிய திருமணத்தின் கதை

Tuesday, February 14, 2017

(The Story of a Brief Marriage By Anuk Arudpragasam)

1.
நெடும் வருடங்கள் நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு நாளைப் பிரித்தெடுத்து நிதானமாய்ப் பார்த்தால் என்னவாகும்? உயிர் தப்பியதே அதிசயமாய் ஒரு புறமிருக்க, அந்த நாளொன்றில் இந்தளவு சம்பங்கள்  நிகழ்ந்ததா என ஒருவகையில் திகைக்க வைக்கக்கூடும். அனுக் அருட்பிரகாசம் எழுதிய The Story of a Brief Marriage,  எறிகணைத்தாக்குதலில் காயமடையும் ஆறுவயதுச் சிறுவனை, இந்நாவலின் முக்கிய பாத்திரமான தினேஷ் வைத்தியசாலைக்குள் தூங்கிக்கொண்டு வருவதோடு தொடங்குகின்றது. அதேபோல நாவல் முடிவதும் மிகக்கொடூரமான எறிகணைத்தாக்குதலோடுதான். ஆனால் ஒரு பகலிலிருந்து அடுத்த நாள் விடிவதற்குள்  நாவல் முழுவதும் நகர்ந்தும் முடிந்து விடுகின்றது.

நம் வாழ்வில் ஒருநாளில் நிகழ்வதை, மிக மெதுவாகச் சுழற்றிப் பார்த்தால் எப்படியிருக்குமோ, அப்படியே இந்த நாவல் கொடும் யுத்தச் சூழலின் ஒரு நாளை மிக மிக மெதுவாக நகரவிட்டு பின் தொடர்ந்தபடி இருக்கின்றது. இங்கே இராணுவம் பற்றியோ, அதை நடத்திக்கொண்டிருக்கும் அரசு பற்றியோ எதையும் நேரடியாகச் சொல்லாமல் யுத்தத்தின் பயங்கரத்தை எழுத்துக்களால் அனுக் கொண்டுவருகின்றார். புலிகளைக் கூட இயக்கம் (movement) என அடையாளப்படுத்துகின்றாரே தவிர, அவர்களைப் பற்றி எந்த விரிவான சித்திரங்களும் இல்லை. இன்னுஞ் சொல்லப்போனால் எறிகணைகள் விழுந்து வெடிக்கின்றதான சித்தரிப்புக்களில்லை. ஆனால் எறிகணைகள் ஏவப்பட்டதுடன் ஆரம்பிக்கும் உத்தரிப்புக்களும், எறிகணைகள் வெடித்தபின் மாறும் கொடும் சூழல் பற்றியும் விரிவான காட்சிகள் இதில் இருக்கின்றன. `வன்னி யுத்தம்` நூலில் , மரணத்தை விட மரணம் எப்போதும் நெருங்கும்/நிகழும் என்கின்ற அச்சமே தனக்கு யுத்தகாலத்தில் மிகப்பெரும் மனப்பாரத்தைத் தந்தது என எழுதியவர் கூறுவதைப்போல, இங்கே யுத்த காலத்தில் வாழ நேர்ந்தவர்களின் அவதிகளும்/ அச்சங்களும் எழுத்தில் முன்வைக்கப்படுகின்றன.

தூக்கி வந்த சிறுவனின் காயத்தின் நிமித்தம் இனி கையை வெட்டியகற்றியவுடன்  தப்பிவிடுவான் என கதைசொல்லி நினைக்கையிலே, யுத்தம் என்பது உடல் உறுப்புக்களை இழப்பதையெண்ணிக் கவலைப்படும் காலத்தைத் தாண்டி, உயிரோடு எஞ்சுதலே பெருங்காரியம் என்கின்ற சூழ்நிலைக்கு மனிதர்களைக் கொண்டுவந்துவிட்டதை உணர்கின்றோம். தினேஷ், பின்னர் தற்காலிக மருத்துவமனையாய் அமைக்கப்பட்ட கொட்டகையைச் சூழ இருந்த பிணங்களைத் தோண்டிப் புதைக்கின்றார்.

அந்தப் பொழுதிலே தினேஷைப் பற்றி அறிந்த வைத்தியர் சோமசுந்தரம் தனது மகளை மணக்கமுடியுமா என்பதைக் கேட்கின்றார். வைத்தியர் சோமசுந்தரம், தனது மகனையும் மனைவியையும் யுத்தத்தின் நிமித்தம் இழந்தவர். உயிரோடு எஞ்சியிருக்கும் தன் 18வயதிற்குட்ட மகளையும் இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பில் இழந்துவிடுவேனோ என்ற பயத்தில் திருமணம் ஒன்றை செய்துவைக்க முயல்கின்றார். நேரங்கிடைக்கும்போதெல்லாம் வைத்தியசாலைப் பகுதியில் வந்து தேவையான உதவிகளைச் செய்யும் தினேஷும் காட்டையண்டிய பகுதியில், இயக்கத்தின் கண்களில் அகப்படாது மறைந்தபடி வாழ்கின்றார்.

தினேஷூம், தாயும் சில மாதங்களாய் யுத்தத்தின் நெருக்குவாரத்தில் ஒவ்வொரு இடங்களாய் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஓரிடத்தில் இன்னொரு குடும்பத்தோடு தங்கி நிற்கின்றனர். அந்தக் குடும்பத்து மகனை இயக்கம் யுத்தகளத்திற்குக் கொண்டு சேர்த்திடும் என்ற பயத்தில், அந்தக் குடும்பம் எண்ணெய் பரலுக்குள் நிலத்தில் புதைத்து மகனை மறைத்து வைக்கின்றது. இப்படி ஒளிந்துகிடப்பதன் அவஸ்தையில் ஒருநாள் வீட்டிற்கே சொல்லாமலே அந்த இளைஞன் இயக்கத்தில் சேர்ந்துவிடுகின்றான். பிறகு அவன் களத்தில் மரணமானபோதும், அந்தத் தாய் தன் மகன் இறக்கவில்லை என தொடர்ந்து தன் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்கின்றார். எனது மகன் பிறக்கமுன்னர் எப்படி எனது கருவாக என் உடலில் தங்கியிருந்தானோ அப்படியே இப்போதும் உருவமின்றி இருக்கின்றான் எனச் சொல்கின்றார். அப்போது இந்த 'நினைவுகளின் குழப்பத்தை' வித்தியாசமாக நினைக்கும் தினேஷ், பின்னர் தன் தாய் கண்முன்னே துப்பாக்கிகளின் சன்னத்தில் சரிவதைப் பார்க்கும்போது, தன் தாயையும் இப்படியே நினைவுகொள்கின்றார்.

சோமசுந்தரம் திருமண சம்பந்தத்தைச் சொல்லும்போது, காயப்பட்ட ஒரு ஐயரை வைத்து திருமணத்தைச் செய்யலாம் என்கின்றார். பிற்பகலில் தினேஷ் வைத்தியரின் தரப்பாள் குடிலைத்தேடிப் போகும்போது, வைத்தியரின் மகள் கங்கா நிற்கின்றார். இருவரும் வைத்தியரைத்தேடிப் போகும்போது, காயப்பட்ட ஐயர் வைத்தியரின் உதவியில்லாது மரணிப்பதைக் காண்கின்றனர். கங்கா, தினேஷ் இருவருக்கும் இதில் முழுச்சம்மதமா என்று என யோசிக்க அவகாசம் கொடுக்காது வைத்தியர் தன் முன்னிலையில் திருமணத்தை அவர்களுக்குச் செய்துவிடுகின்றார். இறந்துபோன கங்காவின் தாயாரின் தாலியை தினேஷ் அணிந்துவிட, அவர்களைத் தனியேவிட்டு சோமசுந்தரம் வைத்தியசாலைக்குப் போகின்றார். யுத்த நேரத்தில் அவ்வப்போது சந்தித்ததைத் தவிர, வேறெந்த தொடர்புமில்லாத இருவர் இப்போது கணவன் -மனைவி ஆகிவிட்டனர்.

2.
யுத்தகாலத்தின் நெருக்கடிகளை மிக விரிவான சித்திரிப்புக்களை அனுக் தரும்போது நமக்கும் அதற்குள் நிற்பதுபோலத் தோன்றுகின்றது. மலசலம் கழிக்கக் கஷ்டப்படுவதிலிருந்து, எத்தனையோ நாட்கள் குளிக்காமல் இருந்து முதல் தடவை குளிப்பது, நகங்களை எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு வெட்டுவது என எல்லாவற்றையும் தினேஷூடாக சித்தரிக்கும்போது, மானுட விழுமியங்கள் எல்லாமே எப்படி யுத்தக்காலத்தில் அர்த்தமிழந்து போகின்றதென்பதை நாம் அறிகின்றோம்.

திருமணம் ஆகிவிட்ட கங்காவைப் பார்த்து, 'உனக்கு இது மகிழ்ச்சியா?' எனக் கேட்கும்போது, 'மகிழ்ச்சியோ துக்கமோ தங்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என அறியக்கூடியவர்களுக்கு மட்டும், எங்களுக்கு அப்படி எந்தத் தெரிவுமே இல்லையே ' என அந்தக் கேள்வியைத் தட்டிக்கழிக்கும் போது அவர்களின் வாழ்க்கையை அவர்கள் தீர்மானிக்கமுடியாத கட்டத்திற்கு யுத்தம் அவர்களைக் கொண்டுவந்துவிட்டதையும் அறிகின்றோம்.

அனுக்கின் இந்த நாவலில் எனக்கு மிகப்பிடித்த விடயங்களில் ஒன்று என்னவென்றால், அவர் சாதாரண மக்களின் நிலையை, அவர்களுக்கிருந்த தெரிவுகள் எவை அன்று இருந்தனவோ, அதற்குள் நின்று இந்த நாவலை எழுதியிருப்பது. அதற்கு அப்பால் போய் அரசையோ, புலிகளையோ, இடங்கிடைக்கின்றதேயென விளாசவுமில்லை. இப்படியான நிலையில்தான் மக்கள் அன்று வாழவேண்டியது என்று போருக்கு வெளியில் இருந்தவர்க்கு ஒரு கதையை அனுக் சொல்கின்றார். போர் என்பது நீங்கள் கற்பனையே செய்யாத தளங்களில் மனித வாழ்வை எப்படிக் கீழ்நிலைக்குக் கொண்டு போகின்றதெனவும் -ஒருநாளைச் சித்தரிப்பதன் மூலம்- காட்டுகின்றார்.

முக்கியமாய் ஒரு அத்தியாயத்தில், திருமணம் முடிந்தபின் கூடாரத்தில் தினேஷூம், கங்காவும் தனித்திருக்கும் நேரத்தில் யுத்தத்தின் மத்தியில், இந்த யுத்தம் எப்படி உடல்களின் மீதான இயல்பான வேட்கையையும் இல்லாமற் செய்துவிடுவதை அவர் விபரித்திருக்கும் முறை கவனிக்கத்தக்கவை. பலநாட்களாய் தூக்கமே இல்லாதிருக்கும் தினேஷ் (அவருக்கு எவ்வளவு முயன்றாலும் நித்திரையே வருவதில்லை) கங்காவிற்கு ஒரு அதிசயமான பிறவியாக இருக்கின்றார். இடையில் ஏதோ காட்டின் கரையிலிருந்து ஒலிவர, இயக்கந்தான் ஆட்களைச் சேர்க்க வந்துவிட்டார்களோ என  இருவரும் அஞ்சுகின்றனர்.

தினேஷ்,  வெளியில் போய்ப் பார்க்கின்றேன் எனப் புறப்படும்போது, காயம்பட்ட காகத்தைப் பார்க்கின்றார். அந்தக் காகத்திலிருந்து வேறொரு கதை முகிழ்கின்றது. எத்தனை மாதக்கணக்காய் காகம், குயில் இன்னபிற பறவைகளைக் காணவில்லையென அவர் நினைக்கத்தொடங்குகின்றார். காயம்பட்ட காகம் ஒரு பாதுகாப்பான இடத்திற்குப் போகும்வரை நிதானமாய் இருந்து பார்த்துவிட்டு வரும் தினேஷிடம், கங்கா 'பறக்க முடியாத பறவைகள் நீண்டகாலம் வாழ முடியாதல்லவா?' எனச் சொல்லும்போது அதற்கு வேறொரு அர்த்தம் வருகின்றது.

கங்காவின் தோளில் தன்  தாயின் இழப்பிலிருந்து எல்லாவற்றையும் அடக்கிவைத்த தினேஷ் அழுகின்றார். அதுவரை நீண்டகாலமாய் தொலைந்து போயிருந்த தன் நித்திரையைக் கண்டுகொள்கின்றார். விடிகாலையில்  துயிலெழும்போது கங்கா காணாமற் போய்விடுகின்றார். கங்கா தன்னோடு எப்போதும் காவியபடி இருக்கும் ஒரு பையையும் கூடவே கொண்டு சென்றுவிடுகின்றார். ஒவ்வொரு பொழுதும் அதற்குள் என்ன இருக்கிறதெனத் தேடவிரும்பும் தினேஷின் ஊடாக வாசிப்பவர்களுக்கும் அந்த மர்மம் எழுந்தபடி இருக்கின்றது. இறுதி முடிவும் நாவல் தொடங்குவதைப் போல துயரமானதுமிகக் குறுகிய திருமணம் ஒருநாளில் முடிந்தும் போகின்றது. ஆக அந்த ஒருநாள் என்றென்றைக்குமாய் மறக்கமுடியாத ஒருநாளாய் தினேஷின் வாழ்வில் ஆகிப்போகின்றது.

3.
அனுக் அருட்பிரகாசம் கொழும்பில் வசிக்கின்றவர். இப்போது தத்துவவியலில் கலாநிலைப் பட்டத்தை கொலம்பியா பல்கலையில் படித்துக்கொண்டிருக்கின்றார். யாழ்ப்பாணப் பெற்றோருக்குப் பிறந்தவர். தமிழ் தன் வீட்டு மொழியென்றாலும், முதலாம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தில் கற்றவர். தமிழிலும் எழுதுகின்றவர்/எழுத விரும்புகின்றவர். கொழும்பு அறிவுஜீவிகளைக் கூட்டம் மீது எரிச்சல்வந்தே தான் நிறையப் புத்தகங்களை வாசித்து தன்னைத் தனிமைப்படுத்தியதாய்க் கூறுகின்றார். ஆங்கிலம் ஒரு காலனித்துவமொழி என்கின்ற புரிதல் இருப்பதாய் கூறும் அவர், தமிழிலும் எழுத விருப்பம் என்கின்றார். போர் பற்றி நேரடிச் சாட்சிகளின்  கதைகளை கேட்டு பதிவு செய்யப்போன தான், அதை பின்னர் இவ்வாறான நாவலாக மாற்றியதாய் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். போர் பற்றி தான் வாசித்தவற்றையும், தொலைக்காட்சிகளில் பார்த்த திரைப்படிமங்களும் தன்னைப் பாதித்து இதை எழுத வந்ததாகவும் கூறுகின்றார். தனது கலாநிதிப் பட்டத்தை முடித்துவிட்டு இன்னும் சில வருடங்களில் இலங்கை போய்விடுவேன் எனவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார்.


ஈழத்தில் நடந்த யுத்தத்தோடு சம்பந்தப்பட்டு வரும் புனைவு மற்றும் புனைவுகளில்லாதவற்றை ஓரளவு வாசித்த அளவில், அநேகமானவர்கள் தமிழில் வாசிக்காதவர்கள்/தமிழை வாசிக்கத் தெரியாதவர்கள் எழுதியதன் பலவீனம் அவர்களின் சித்தரிப்புக்களில் எப்படியேனும் தெரியும். அந்தப் பலவீனத்தை அனுக் தாண்டியிருப்பதற்கு அவருக்குத் தமிழ் பரிட்சயமாக இருப்பது முக்கிய காரணம் என நினைக்கின்றேன். அத்துடன் அடிக்கடி பல இடங்களில்  ஏலவே குறிப்பிட்டதைப் போல, மிகச்சிறிய நாவல்களையும்  நுட்பமான சித்தரிப்புக்களுடன் எழுதவேண்டுமென்பதற்கிணங்க இந்த நாவல் 200 பக்கங்களில் அடக்கப்பட்டு இருப்பது பிடித்திருந்தது.  நாவலில் கூறப்பட்ட சம்பவங்களும், அனுபவங்களும் தமிழில் நாம் ஏற்கனவே வாசித்திருக்கக்கூடிய/ அறிந்திருக்கக்கூடியதுதான். ஆனால் இந்த நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால் அதன் சித்தரிப்புக்கள், ஆங்கிலச் சூழலிற்கு அவ்வளவு பரிட்சயமில்லாதது. முக்கியமாய் அரசு X புலிகள் என எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் மேற்குலகிற்கு, அவர்களும் பங்காளிகளான ஈழயுத்ததின் கோரத்தை அவர்களின் மொழியிலே முன்வைத்து, இந்தச் சாதாரண மக்களுக்கான நியாயம் என்னவாக இருக்குமெனக் கேட்க விழைவதாகும்.

(நன்றி: 'அம்ருதா' - மாசி/2017)