கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பனாமா

Sunday, February 05, 2017

பயணக்குறிப்புகள் - 14

El Valle எனப்படும் இந்த இடம் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எரிமலையாக இருந்திருக்கின்றது. இப்போது அப்படியான கொந்தளிக்கும் எந்த தடயங்களுமில்லை. மழைக்காடுகளுக்குரிய மரங்களும் ஆங்காங்கே வீடுகளும் உள்ள இடமாய் மாறிவிட்டது. நானும் நண்பரும் ஒரு காரை வாடகைக்கு எடுத்து இந்த இடத்துக்குப் போயிருந்தோம். பனாமா தங்கநிறத் தவளைகளுக்குப் பிரசித்தமானது. முக்கியமாய் இந்த பள்ளத்தாக்கில் அவை நிறைய இருக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது என்கின்றபோதும் எங்களுக்கு அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒருகாலத்தில் இங்கிருந்த பூர்வீகமக்கள் வேட்டையாடுவதற்கு மிகவும் விசம் வாய்ந்த இந்தத் தவளைகளின் தோலை தமது அம்புகளில் பாவித்திருக்கின்றனர்.
இந்த பள்ளத்தாக்கில் பகலிலேயே காரையோட்டுவது மிகவும் கஷ்டமாயிருந்தது. அந்தளவிற்கு நிறைய வளைவுகள். அப்படியே தொடர்ந்து பள்ளத்தாக்கிற்குப் போனபோது அதை ஓரிடத்தில் நிதானமாய்ப் பார்ப்பதற்கு இடமொன்று அமைத்திருந்தனர். மற்ற இடங்களில் ஒரு காரை வீதியிலிருந்து ஓரமாய் நிறுத்துவதற்கே இடமில்லாது மிக குறுக்கலான பாதைகளாக இருந்தன. எங்களுக்கு முன்னர் ஒரு ஸ்பானிய குடும்பம் ஒன்று நின்று பள்ளத்தாக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அநேகமாய் எந்த இலத்தீன் அமெரிக்கா நாட்டுக்குச் சென்றாலும் என் போன்றவர்களின் தோல் நிறத்தைக் கண்டு ஸ்பானிசிலேயே கதைக்கத்தொடங்கிவிடுவார்கள். பனாமா போனபோதும் தொடக்க நாட்களிலேயே இந்த அனுபவங்களே ஏற்பட்டிருந்தன. அவர்கள் எதைச் சொல்லத்தொடங்க முன்னரே 'நோ அவளோ எஸ்பஞோல்' எனச் சொல்லிவிடுவதைப் பார்த்து நண்பர் அப்படி உடனே சொல்லவேண்டாம், அவர்களைக் கொஞ்சம் கதைக்கவிட்டால்தான் நாங்களும் எஸ்பஞோலைக் சற்றேனும் கற்கலாமெனச் சொல்லியிருந்தார். அந்த ஞாபகத்தில் பள்ளத்தாக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஆண் அதை எங்களுக்கு சுட்டிக்காட்டி கதை சொல்லத்தொடங்கியபோது குறுக்கிடாது முதலில் அமைதியாக கேட்டேன். அவர் நிறையத் தொடர்ந்து கதைக்கத்தொடங்கியபோது எங்களுக்கு மொழி தெரியாச் சிக்கலைச் சொன்னபோது சில ஆங்கிலவார்த்தைகள் பேசத்தெரிந்த மகளை அருகில் அழைத்துவந்தார். ஆனால் பேசும்மொழிகளை விட சைகை மொழி பெரிதல்லவா? அவர் சொல்லச் சொல்ல நான் இது குறித்து வாசித்த விடயம் நினைவுக்கு வரத்தொடங்கியது.
ந்த மலைகளை உற்றுப் பார்த்தால் அதில் ஒரு பெண் படுத்திருப்பதுபோன்று தெரியும். அதை அவர்கள் Sleeping Indian Girl என அழைக்கின்றார்கள். இதன் பின்னணியில் ஒரு கதையும் இருக்கிறது. ஒரு பூர்வீகப் பெண்ணை இன்னொரு பழங்குடியில் இருக்கும் இளைஞன் நேசிக்கின்றான். பெண்ணின் தந்தை இந்தக் காதலை அங்கீகரிக்கவில்லை. எனவே அவள் தன் பழங்குடியின் கெளரவத்திற்காய் அந்த இளைஞனின் காதலை மறுக்கின்றாள். அதன் நிமித்தம் அவள் கண்முன்னாலே அந்தக் காதலன் தற்கொலை செய்கின்றான். அந்தத் துயரம் தாங்காது இந்த மலைகளுக்குள் தொலைந்து இறந்துபோகின்றாள் அந்தப் பெண். அவளின் நினைவுகளைச் சுமந்தவாறு இந்த மலைத்தொடர் நிற்கின்றது. அவளாலேயே இந்த மலைகளில் மரங்களும் பூக்களும் தளிர்க்கவும் பூக்கவும் செய்கின்றது என இன்னமும் இம்மக்கள் நம்புகின்றனர்.
தொடர்ச்சியாக காரில் பயணம் செய்து, El Chorro Macho என்கின்ற நீர்வீழ்ச்சியைப் பார்க்கப்போனோம். அதைப் பார்ப்பதற்காய் ஒரு சிறு மழைக்காட்டினூடாக நடந்து போகவேண்டியிருந்தது. இப்போது பனாமாவில் கடும்கோடைக்காலம் என்பதால் நீர் அவ்வளவாக அருவியினூடாகப் பாயவில்லை. ஆனால் அந்த அருவி ஓடிப்போகின்ற ஓரிடத்தை இயற்கையாக குளிக்கும் இடமாக மாற்றியிருந்தனர். நாங்கள் போயிருந்த நேரம் மழை வருவதைப் போல விளையாட்டுக் காட்டிக்வ்கொண்டியிருந்தது. அவ்வளவு ஆட்களிருக்கவில்லை. ஒரு சிறுபையனுடன் வந்திருந்த குடும்பமும்,வேறொரு இளைஞனும் மட்டுமே அந்தச் சிறு குளத்தினருகில் இருந்தார்கள்.
நண்பர் என்னோடு எதையும் பேசாமல் கொஞ்ச நேரம் விடு தியானத்திற்குள் இருக்கப்போகின்றேன் என்றார். நான் நண்பரையும் தனித்திருந்த அந்த இளைஞரையும் மாறிமாறி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். தனிமையை எப்படி இரசிக்கவேண்டும் என்பதை அந்த இளைஞரிடம் கற்றுக்கொள்ளலாம் போலிருந்தது. நாங்கள் போனபோது அவர் நீந்திக்கரையேறிக்கொண்டிருந்தார். பிறகு ஈரம் காய்ந்தபடி, ஒரு பிளாஸ்கிலிருந்து நீரையோ/தேநீரையோ நிதானமாக அருந்தினார். பின்னர் கூடவே கொண்டுவந்திருந்த இரண்டு மூன்று மாம்பழங்களைச் சாப்பிடத்தொடங்கினார். சரி இனி ஆடைகளின் ஈரம் காய்ந்திருக்குமே வெளிக்கிடப்போகிறார் என்று பார்த்தால், ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வானத்தை பார்த்தபடி பெஞ்சில் மல்லாந்து படுத்து வாசிக்கத் தொடங்கினார். கற்றவர்க்கு சென்றமிடமெல்லாம் சிறப்பு என்றமாதிரி, தனிமையை இரசிக்கத் தெரிந்தவர்க்கு எந்த இடமாயினும் இனிமைதான் போல என எண்ணிக்கொண்டேன்.
ண்பர் நீருக்குள் இறங்கப்போவதில்லை என்றார். கொஞ்சம் குளிர்ந்தாலும் நான் ஆசை தீரக் குளித்தேன். பின்னர் இக்காட்டினுள் இருந்து வெளியே வந்து காரில் புறப்பட்டபோது எங்களைப் போன்ற மூன்றுபேர் அவ்வளவு வாகனங்கள் இல்லாத வீதியில் நடந்து போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து, உங்களுக்கு ride வேண்டுமா எனக் கேட்டோம். இரண்டு பெண்களும், ஒரு ஆணும் மகிழ்ச்சியுடன் ஏறிக்கொண்டனர். அவர்கள் ஹொலண்டிலிருந்து El Valle வந்திருக்கின்றனர். ஒன்றரை மாதங்கள் இங்கே தங்கப் போகின்றனர் எனச் சொன்னார்கள். ஒரு மார்க்கெட்டிற்கு அருகில் இறங்கிக்கொண்டார்கள். நான் அந்தச் சந்தையில் மாம்பழங்களைக் கண்ட சந்தோசத்தில் அவற்றை வாங்கினேன். கத்தியில்லாவிட்டாலும் ஊரில் பற்களைக் கத்தியாக்கிய வித்தை தெரியுமென்பதால் நடந்துபோகின்றவர்கள் விநோதமாய்ப் பார்த்தாலும் அதை ருசித்து சாறு ஒழுக ஒழுகச் சாப்பிட்டேன்.
அருகில் இயற்கையான வெந்நீர்க்குளியல் இடமிருக்கிறதென ஏற்கனவே வாசித்து வைத்திருந்தேன். எங்களோடு காருக்குள் ஏறியவர்கள் ஏற்கனவே அங்கு போயிருந்தார்கள். நான் அதை கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் போல எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவர்களைக் கூறியதைக் கேட்டபோது அது எங்களை அவ்வளவாய்க் கவர்ந்திழுக்கவில்லை. அதுபோலவே அருகிலிருந்த மிருகக் காட்சிசாலைக்கும் போக விரும்பவில்லை. அதையதை அதன் அதன் இடங்களில் விடவேண்டும் என்பதே இயற்கையானது என்ற எண்ணம் கூடிக்கொண்டிருப்பதால் மிருகக்காட்சிச் சாலைகள் மீதும் ஒருவித இடைவெளி இப்போது வந்துவிட்டது போலும்.
தங்கத் தவளையைக் கண்டால் பிடித்துக்கொண்டு போகலாம் என நண்பர் பிரியப்பட்டார். எனக்கும் தங்கநிறத்தில் மினுங்கிக்கொண்டிருந்த உள்ளூர் ஸ்பானிய பெண்களை இன்னும் கொஞ்சநேரம் இருந்து இரசிக்கட்டுமோ எனக் கேட்க விருப்பமாயிருந்தது. ஆனால் வாய்திறந்து கேட்கவில்லை.

0 comments: