புத்தரும் நானும்

புத்தரும் நானும்
அனுபவப்புனைவு

சிறுகதைத்தொகுப்பு

சிறுகதைத்தொகுப்பு
திறனாய்வு

கள்ளி

கள்ளி
கதை

கவிதை

கவிதை
ஆங்கிலம்

மதிப்பீடுகளின் வீழ்ச்சி

Monday, January 22, 2018

ண்பரொருவரின் (அனோஜன்) முகநூல் பக்கத்தினூடு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது (2017) உரையைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. ஜெயமோகன் இயல்பாய் இல்லாததுபோல அவரது உடல்மொழி பேச்சில் இருந்தது. எனக்குத் தெரிந்த ஜெமோ வழமையாக இப்படி அவ்வளவு நாடகீயத்தனத்தோடு உரையாற்றுபவரில்லை. சிலவேளை சினிமாப் பிசாசு அவரை இன்றைய காலங்களில் விழுங்கிக்கொண்டு இருக்கின்றதோ தெரியாது. இலங்கைப் பாஷை பேசுகின்றேன் என்று எங்கள் தமிழை இப்படிக் கொன்றிருக்கவும் தேவையில்லை. விருது விழாவிற்கு வந்தவர்கள் ஜெயமோகனின் நடிப்பைப் பார்க்கவா வந்தார்கள்? பேச்சைத்தானே கேட்க வந்திருப்பார்கள். ஒழுங்காய் இயல்பாய் பேசியிருக்கலாம்.
சரி, நான் சொல்ல வந்த விடயம் வேறு. ஜெயமோகன், 'காலம்' செல்வத்தின் 'எழுதித்தீராப் பக்கங்களில்' இருந்து சில பகுதிகளை அங்கே பகிர்ந்திருக்கின்றார். அந்த மகிழ்ச்சியைப் பகிரத்தான் இது. நிறைய எழுதவேண்டும், எப்போதும் எழுதிக்கொண்டிருக்க வேண்டும் வகையைச் சேர்ந்தவர் ஜெமோ. அதற்கு மாறான ஒரு எழுத்து முறையைத்தான் நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றவன். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதினால் போதும். அதுதான் எங்கள் ஈழ எழுத்து எங்களுக்கு கற்றுத்தந்திருக்கின்றது என பல இடங்களில் எழுதியிருக்கின்றேன். செல்வமும் குறைவாகவே எழுதுகின்றவர். ஆனால் அதை நேர்த்தியாக எழுதி இருப்பதால்தான் 'எழுதித் தீராப் பக்கங்கள்' முக்கியமான ஒரு படைப்பாக நம்மிடையே இருக்கின்றது. ஜெமோ அவர் விரும்பியோ அல்லது விரும்பாமலோ செல்வத்தை நினைவுபடுத்தியதற்கு -அவருக்கு மலேசியாவில் 2006ல் அடிவிழாததற்கு ஏதோ நல்லூழ் என்றமாதிரி- இது எங்களின் நல்லூழ் என நினைக்கின்றேன்.
இல்லாவிட்டால் கனடா என்றவுடன் நிறைய எழுதிய/எப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அ.முத்துலிங்கம் அல்லவா ஜெமோவிற்கு நினைவிற்கு வந்திருக்கவேண்டும். ஆனால் செல்வம் ஜெமோவிற்கு நினைவிற்கு வருவதற்கு எது காரணம் என்றால் குறைவாக எழுதினாலும் எவரும் அசட்டை செய்து கடக்கமுடியாது செல்வமும், அவரின் 'எழுதித் தீராப் பக்கங்களும்' இருக்கின்றது என்பதால்தான்.
மற்றது ஜெமோ, சுந்தர ராமசாமி 2000களின் தொடக்கத்தில் ரொறொண்டோ வந்து இனித் தமிழ் கனடாவில் இருக்காது என்பதை 'கலைஞனின் தூர நோக்காய்' கண்டடைந்ததைச் சொல்லி வியப்படைகின்றார். தமிழ் அடுத்த தலைமுறைக்குச் செல்லாது என்பதற்கு கலைஞனாக இருக்கவே தேவையில்லை. ஒரு சாதாரண மனிதராகவே எவராலும் புறச்சுழலை வைத்து எளிதாக எதிர்வுகூறமுடியும். ஆனால் இன்றும் தமிழ் ஏதோ ஒருவகையில் எங்களில் ஊடாடிக்கொண்டு தானிருக்கின்றது. 
ன்று புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து பலநூற்றுக்கணக்கான பத்திரிகைகள்/சஞ்சிகைகள் வந்தது என்பது உண்மை. ஆனால் எத்தனை பத்திரிகைகள் இலக்கியம் பேசியது என்பதும் முக்கியமான கேள்வி. இன்றும் கனடாவில் ஏறக்குறைய 10 தமிழ்ப் பத்திரிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. எதிலுமே இலக்கியம் இல்லை. உரையாடுவதற்கான வெளிகள் இல்லை. மற்றும்படி வெளிவரும் சிறுபத்திரிகைகளின் அளவு குறைந்திருக்கின்றன என்பதென்னவோ உண்மைதான். அன்றைக்கு அரசியலிலும், இலக்கியத்திலும் துடிப்பாய் இருந்த ஒரு பரம்பரை இன்று ஒதுங்கிவிட்டது.
அதுசரி தமிழகத்தில் கூட எத்தனை சஞ்சிகைகள் தீவிர இலக்கியம் பேசிக்கொண்டு இப்போது வெளிவருகின்றன. சிறுபத்திரிகை என்பதே ஏதோ ஒருகட்டத்தில் அதன் ஆயுளை முடித்துக்கொண்டு உறங்குநிலைக்குப் போவதுதானே. ஆனால் இலக்கியம் என்பது அன்று சிறுகுழுவாலே பேசப்பட்டதுபோல இன்றும் ஏதோ ஒருவகையில் - இணையத்தில்- என்றாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பேசப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றது.
ஏற்கனவே கூறியதுபோல, நாங்கள் குறைய எழுதிக்கொண்டிருப்பவர்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் நமது சுவடுகளையும் இங்கே பதித்துக்கொண்டுதானிருக்கின்றோம். அது தமிழில் மட்டுமில்லாது அந்தந்த நாடுகளில் பேசும் மொழியில் கூட நமது 'தமிழ்க்கதை'களைப் பலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இன்றைக்கு மான் 'புக்கர் பரிசு' வென்ற அரவிந்த் அடிகாவின் புதிய நாவலோடு போட்டியிட்டு, தனது முதல் நாவலாயினும் அதை நேர்த்தியாக எழுதி அனுக் அருட்பிரகாசம் தென்னாசியா நாவல் வகையில் பரிசு வென்றிருக்கின்றார். அதை நாம் கொண்டாட அல்லவா வேண்டும்?
2015 ஆவணி கோடைகாலத்தில் நள்ளிரவு தாண்டினாலும் அதன் அருமையான கதைசொல்லலில் கிறங்கி ஒரே அமர்வில் வாசித்து முடித்த ஷோபாசக்தியின் 'Box கதைப் புத்தகம்' நாவலைத் தாண்டி, (ஏறக்குறைய இரண்டரை வருடங்களான பின்னும்) தமிழகத்தில் இருந்து எந்த ஒரு நாவலும் வரவில்லை என்பதை என் வாசிப்பின் மீதிருக்கும் நம்பிக்கையில் வைத்துச் சொல்வேன். அதைத்தாண்டியே இன்னும் போகமுடியாது, பேசுவது என்னவோ தாங்கள் மட்டுமே இலக்கியம் வளர்க்கின்றோம் என்றால் என்னைப் போன்றவர்களுக்கு விசர் வராதா என்ன?
'Box கதைப் புத்தகத்திற்கு அடுத்த நிலையில் என் வாசிப்பில் வைத்திருக்கும் குணா கவியழகனின் 'அப்பால் ஒரு நிலத்திற்கோ' அல்லது ஜெமோவும் ஒரு முக்கிய நாவலாகச் சொன்ன சயந்தனின் 'ஆதிரை'க்குக் கூட நிகராக, தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் எந்த நாவல் வந்திருக்கின்றது எனச் சொன்னால் நானும் மகிழ்ச்சியடைவேன். இன்றைக்கும் ஜெமோ தனது தளத்தினூடாகவும், தன் விஷ்ணுபுர வாசகர் வட்டத்தினாலும் எவ்வளவு கஷ்டப்பட்டு முயன்றுகொண்டிருந்தாலும் அவரின் வளையத்திற்குள் இருந்து வந்த எந்தப் படைப்பாளி இதுவரை சாதித்திருக்கின்றார்?இலக்கியம் என்பது அடித்து கனியவைப்பதல்ல, அது தானாய் அவரவர்களிடத்தே கனிவதுதான் என்று ஜெமோவிற்குத் தெரியாது இருக்குமா என்ன?

(Dec 21, 2017)

Youth

Sunday, January 21, 2018

சுவிஸின் அல்ப்ஸ் மலையினருகில்  ஆடம்பர வசதிகளுடம் இருக்கும் ஹொட்டலில் இத்திரைப்படத்தின் கதை முழுதும் நிகழ்கிறது. ஒருகாலத்தில் பிரசித்தி பெற்றிருந்த இசையமைப்பாளர்,  இப்போது இசையிலிருந்து முற்றாக ஓய்வெடுத்துவிட்டு இருக்கின்றார். அவரை ஒரு நிகழ்வில், அவரது பிரசித்தி பெற்ற பாடலை  இசைக்கவேண்டுமென இங்கிலாந்து மகாராணி வேண்டிக் கேட்டும் மறுத்துவிடுகின்றார். எனினும் இசை நிகழ்விற்கான இசைவை வேண்டி தொடர்ந்து  இராணியின் தொடர்பாளர்கள் வந்து அவரைத் தொந்தரவுபடுத்தியபடி இருக்கின்றனர்.

இந்த இசையமைப்பாளரின் நண்பரும் இதே ஹொட்டலில் தங்கி இருக்கின்றார். அவர், தனது அடுத்த படத்திற்கான கதையை தனது குழுவோடு உருவாக்கிக்கொண்டிருக்கின்றார். இந்த இருவரும் வாழ்வின் அந்திக்காலத்தில் இருக்கின்றனர். அடிக்கடி வராத சிறுநீரை ஒருபொழுது கழித்துவிட்டாலே, அது பெரும் பேசுபொருளாக இருக்குமளவிற்கு இருவர்க்கும் முதுமை நெருக்கினாலும், வாழ்வின் மீது இன்னும் இழந்துவிடாத நம்பிக்கையோடு இருக்கின்றார்கள்.

இவர்களோடு இந்த இசைக்கோர்ப்பாளரின் மகளும் தங்கிநிற்கின்றார். அந்தப் பெண் திருமணம் செய்திருப்பது, இந்த இயக்குநரின் மகனை. எனினும் இந்தப் பெண்ணின் கணவன், எனக்கு வேறொரு பெண்ணோடு காதல் இருக்கின்றதென ஒரு பாப்- பாடகியோடு போய்விடுகின்றான். மகளுக்கு இந்தச் சிக்கலோடு, தனது தந்தை இசை மீதான பித்தால் தன் சிறுவயதில் தன்னையும் தனது தாயையும் ஒழுங்காய்க் கவனிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றார்.

யக்குநர் தனது திரைப்படத்துக்கான கதையை ஒருவாறாக முடித்துவிட்டு, அவருக்குப் பிடித்தமான ஒரு நடிகையை நடிக்க அழைக்கின்றார். அவரோ 'நீ ஒருகாலத்தில் அருமையான படங்களை எடுத்தவன், ஆனால் அண்மையில் எடுத்த திரைப்படங்கள் எல்லாம் குப்பைப் படங்கள். உனக்கு இருக்கும் நல்லபெயரைக் காப்பாற்றவேண்டுமென்றால் இனி திரைப்படங்களை எடுப்பதை நிறுத்து' என ஒரு நண்பருக்குச்  அறிவுரை சொல்வது போலக் கூறிவிட்டுச் சென்றுவிடுகின்றார்.
இதற்கிடையில் இன்னொரு நடிகன், தனது அடுத்த பாத்திரத்திற்கு தன்னை மாற்றுவதற்காய் இந்த ஹொட்டலில் வந்து நிற்கின்றான். அவன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், ஒரு ரோபோட்டுக்கு பின்னணிக் குரல் கொடுத்ததை மட்டும் நினைவுபடுத்தி, காணும் எல்லோரும் பாராட்ட அவனுக்கு எல்லோர்மீதும் வெறுப்பு வருகின்றது. அவனது அடுத்த படத்தில் அவனுக்குரிய கதாபாத்திரம் ஹிட்லருடையது.

அதேபோன்று மிஸ்.யூனிவேர்ஸ் பட்டம் வென்ற அழகி ஒருத்தியும் இங்கே வருகின்றார். அழகிகள் ஒன்றும் அவ்வளவு அறிவில்லாதவர்கள் என்கின்ற இந்த ஆண்களின் வாதத்தை அவர் உடைத்தெறிகிறார். அந்த அழகி பற்றிக் குறைவாக மதிப்பிடும் இந்த இசையமைப்பாளரும், நெறியாளரும், அவள் நிர்வாணமாகக் குளிக்கும்போது பார்த்து இரசிக்கையில், யாரோ அவர்களைப் பார்க்க ஹொட்டலுக்கு வந்திருப்பதாய்ச் செய்தி வருகின்றது. அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய இவர்கள், நாங்கள் முதுமையில் நின்று, நமது வாழ்க்கையில் இறுதி அழகிய துளியை ருசித்துக்கொண்டிருக்கின்றோம் என்கின்றார்கள்.  அது தெரியாமல், ஏன் எங்களைக் குழப்புகின்றீர்கள் எனவும் கோபிக்கின்றார்கள்.

இசைப்பதை நிறுத்திவிட்டாலும், இசையமைப்பாளரால் காற்றில், பசுவின் மணியில், சொக்கிலேட் பேப்பர் கசக்கலில் எனத் தன் இசையை விடமுடியாதவராக இசை அவரைத் தொடர்ந்தபடி இருக்கின்றது. மகள், குற்றப்பத்திரிகை வாசித்த தந்தையை ஒருவகையில் பின்னர் விளங்கிக்கொள்கின்றார். நடிகர், தன் ஹிட்லர் பாத்திரமுள்ள படத்தை கைவிட்டு சாதாரணமனிதர்களை கதைகளைச் சொல்லும் படங்களில் இனி நடிக்கப்போகின்றேன் என்கின்றார்.

இதில் சித்தரிக்கப்படும், ஒருகாலத்தில் உதைபந்தாட்டத்தில் உலகின் கவனத்தை திருப்பி, இப்போது உடல் பருமன் கூடி நடக்கவே சிரமப்படும் மரடோனா, எந்த வார்த்தையும் பேசாது இறுதியில் அந்தரத்தில் மிதக்கும் திபெத்திய புத்தபிக்கு போன்றோர் நமக்கு வாழ்க்கையில் சிலவற்றை மறைமுகமாகச் சொல்ல முயல்கின்றனர். தனது திரைப்படத்துக்கான கதையை முடித்துவிட்டேனென மகிழும் நெறியாளர், தன் நண்பரின் அறையின் பல்கணியினூடாகத் தற்கொலை செய்கின்றார்.

சையமைப்பாளர், எவரினதோ பராமரிப்பிலிருக்கும் தனது நோயுற்ற மனைவியைத் தேடி வெனிஸிற்குப் போகின்றார்.
ஹொட்டலில் இவர்கள் அனைவரும் சந்தித்தாலும், இவர்கள் எல்லோரினதும் வாழ்க்கைப் பாதையும் ஹொட்டலில் தங்கிநிற்கும்போது வேறொரு திசையில் மாறுகின்றது. எதைச் சாதித்தாலும், மனித மனம் வெறுமையை நோக்கித்தான் நகர்கின்றதா? அல்லது வெறுமைதான் வாழ்க்கையின் சாரமாக இருக்கின்றதா? அனைத்துமே கிடைத்ததுபோல வெளிப்பார்வைக்கும் தோற்றமளிக்கும் எல்லோருமே எதையோ இழந்துவிட்டதைத் தேடுவதுபோலத்தான் தமக்குள் தேடிக்கொண்டிருக்கின்றார்களா? நாம் காணும் எந்தக் காட்சி உண்மையானது அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் எந்தப் பாதை நமக்கு ஆசுவாசத்தைத் தரக்கூடியதாக இருக்கும்? இப்படி எண்ணற்ற கேள்விகளை இப்படம் முடிந்தபின்னும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.

நிறைய வருத்தங்கள் தனக்கு இருக்கிறது என நினைத்துக்கொள்ளும் இசையமைப்பாளரைப் பரிசோதிக்கும் ஒரு வைத்தியர், இதுவரை நீங்கள் எண்ணிய எந்த நோயும் உங்களுக்கு இல்லையென இறுதியில் கூறுகின்றார். இதுவரை நோயை ஒரு துணையாக வைத்திருக்கும் அவருக்கு இப்போது என்ன செய்வதென்று திகைப்பாக இருக்கின்றது. இனியான நாட்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனக் கேட்க, வைத்தியர் சொல்கிறார், 'உங்களுக்கு (மீண்டும்) இளமை தரப்பட்டிருக்கின்றது, எதுவுமே நீங்கள் விரும்பியபடி செய்யலாம்' என்று.

நாமும் ஒருவகையில் இந்த இசையமைப்பாளரைப் போன்றவர்கள்தான். நாம் செய்யவிரும்பியதைச் செய்ய விரும்பாது ஏதேதோ காரணங்களைச் சாட்டாகச் சொல்லிக்கொண்டிருப்போம். நாம் நமக்கு இடைஞ்சல்கள் என நினைத்தவை இல்லாமற்போனபின்னும் நமக்குப் பிடித்தவற்றைச் செய்வோமா என நம்மிடம் கேட்டால் சந்தேகமாகத்தான் அதற்கான பதிலைச் சொல்பவர்களாக இருப்போமாக்கும்.

இறுதியில் இசையமைப்பாளர் மீண்டும் இசையைக் கோர்க்கச் செய்கின்றார். வாத்தியங்களினூடு இசை புகுந்து அசைவதைப் போல வாழ்க்கை தன் இயல்பில் நகர்கிறது.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

Cézanne and I

Wednesday, January 17, 2018

பாரிஸில் Musée d'Orsay சென்றபோது அதன் முன்றலில் பால் ஸிஸானின் 'Boy in the Red Vest' வரவேற்றுக்கொண்டிருந்தது. உள்ளே ஸிஸான் வரைந்த மனித உருவங்களின் கண்காட்சி போய்க்கொண்டிருந்தது. பிக்காஸோவினால், ஓவியம் வரைவதில் 'எங்களுக்கெல்லாம் தந்தையைப் போன்றவர்' என்றும், 'எனது ஒரேயொரு குரு அவரே' என்றும் ஸிஸான் மனதாரப் புகழாராம் சூட்டப்பட்டவருமாவார்.

ஸிஸான் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்தபோதும், அவரது காலத்தில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு ஓவியராகவே இருந்திருக்கின்றார். பாரிஸின் மதிப்பு வாய்ந்த ஓவியக்கண்காட்சிக் கூடத்தில் அவரது ஓவியங்கள் ஒவ்வொருமுறையும் தகுதி வாய்ந்தவில்லையென  நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இன்று அவர் பிரான்ஸின் ஓவியக்கலையின் முன்னோடிகளில் ஒருவராக மாறி, கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

'Cézanne and I' என்கின்ற திரைப்படமானது ஓவியரான ஸிஸானுக்கும், எழுத்தாளரான எமிலி ஸோலாவிற்கும் இடையிலான நட்பைப் பற்றிப் பேசுகின்றது. இவர்கள் இருவரும் பாடசாலை நண்பர்கள். எமிலி மிக வறுமையான குடும்பத்திலும், ஸிஸான் செழிப்பான குடும்பத்திலும் பிறந்தவர்கள். இவர்கள் இருவரும் ஓவியம்/எழுத்து மீதிருந்த பித்தின் காரணமாக, பின்னர் பாரிஸிற்கு குடிபெயர்ந்து செல்கின்றார்கள். காலம் ஸிஸாணை ஒரு தோற்ற ஓவியனாகவும்,ஸோலாவை பிரபல்யம் வாய்ந்த எழுத்தாளனாகவும் மாற்றிவிடுகின்றது. இப்போது வறுமையும் செழிப்பும் மாறி இருவருக்கிடையில் நுழைந்துவிடுகின்றது.

ஸோலாவின் ஆடம்பர வீட்டில் நிகழும் இரவு விருந்துகளில், அன்றைய கால பிரபல ஓவியர்கள் கலந்துகொள்கின்றார்கள். ஸிஸான் மட்டும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியவராக, பிறரோடு எப்போதும் சச்சரவுகளில் ஈடுபடுகின்றவராக, எவராலும் நேசிக்க முடியாத ஒருவராக மாறிவிடுகின்றார். ஆனால் எமிலி மட்டும் அவரை அரவணைத்துக்கொள்கின்றார். ஸிஸான் ஒரு சிறந்த ஓவியன், அதியற்புத ஓவியங்களை ஒருநாள் வரைவான் என அவர் நம்புகின்றார்.

Emile Zola and Paul Cezanne
ஓவியர்களையும், தனது வீட்டில் நடக்கும் விருந்துகளையும் முன்வைத்து ஸோலா 'மாஸ்டர் பீஸ்' என்கின்ற நாவலை எழுதுகின்றார். அதிலும் கூட 'என்னைப் பற்றி தவறாகவே எழுதியிருக்கின்றாய்' என ஸோலாவிடம் ஸிஸான் சண்டைபிடிக்கின்றார். இவ்வாறாக அவ்வப்போது சர்ச்சை செய்வதும், 'நீயென்னைப் புரிந்து கொள்ளவில்லை' என விலத்திப் போகின்றதுமாகவும் இவர்களுக்கிடையிலான உறவு இருக்கின்றது.
இறுதிக்காலங்களில், ஒருவர் மற்றவரைச் சந்திக்க விரும்பாத, ஒரு பெரும் இடைவெளியுள்ள உறவாக அது மாறிவிடுகின்றது. பழைய காலங்களுக்கு இருவரும் போக விரும்பினாலும் அவர்கள் அதற்குள் நுழைய முடியாத் துயரத்தோடு அவர்களுக்கான காலம் முடிந்துவிடுகின்றது. ஸோலா ஒரு நாள் நித்திரையின்போது காபன்மொனொக்சைட் வாயுவின் காரணமாக இறந்துபோகின்றார். அது இயல்பாய் நடந்ததா அல்லது திட்டமிட்ட ஒரு கொலையா என்ற சந்தேகம் இன்றுவரை எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.

யதார்த்தவாதக் கதைகளை ஸோலா எழுதியபோதும் அதிகமான பொழுதுகளில் அதிகாரத்திற்கு எதிராகக் குரலை எழுப்பியபடி இருந்தபடியால் அவருக்கு நிறைய எதிரிகளும் அன்றைய காலத்தில் இருந்திருக்கின்றனர். குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு தீவொன்று அனுப்பப்பட்ட ஒருவருக்காய், அது தவறென்று ஒரு பத்திரிகையில் குரல் கொடுத்த காரணத்தால், ஸோலாவிற்கு வழங்கப்பட்ட அதியுயர் விருதை அன்றையகால பிரான்சு அரசு திருப்பி வாங்கியுமிருக்கின்றது. ஏழ்மையிலிருந்து வந்த ஸோலா பின்னர் வசதியான வாழ்வு வாழ்ந்தபோதும் அவர் விளிம்புநிலையில் இருந்த மனிதர்களின் பக்கமே நிற்க விரும்பியிருக்கின்றார் என்பது இந்நிகழ்வின் மூலம் நமக்குப் புலப்படுகின்றது.

 Musée d'Orsay, Paris
ஸிஸானுக்கும், ஸோலாவிற்கும் இடையிலான நட்பைப் பற்றியது இத்திரைப்படமாயினும், அன்றையகால ஓவியர்களான Edouard Manet போன்ற பலர் வருகின்றனர். எந்த ஓவியரை முதன்மைப்படுத்தி ஒரு திரைப்படம் வருகின்றதோ அதில் வரும் மற்ற ஓவியர்கள் இரண்டாந்தர பாத்திரங்களாகி விடுவதும், அவ்வாறு அவர்கள் ஆகிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதும் கூட ஒருவகையில் சுவாரசியமானது. இவ்வாறு 'பீட்' காலகட்டத்தை முன்வைத்து, வெளிவந்த திரைப்படங்களான On the Road(ஜாக் கீராவக்), Kill Your Darlings (வில்லியம் பாரோஸ் & அலன் கின்ஸ்பேர்க்), Owl (அலன் கின்ஸ்பேர்க்) போன்றவற்றை ஒருகாலகட்டத்தில் சேர்த்துப் பார்த்திருக்கின்றேன். ஒரு திரைப்படத்தில் எவர் முக்கிய பாத்திரமாக இருக்கின்றாரோ அவர் தனக்கான அதிக நியாயங்களைக் கொண்டிருப்பதையும், மற்றவர்கள் சற்று எதிரிடையாக மாறுவதைப் பார்ப்பதும், இன்னொரு திரைப்படத்தில் அந்தப் பாத்திரம் முக்கியமற்றுப் போவதையும் அவதானிப்பதும் ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருந்தது.
இப்படி 'Cézanne and I' திரைப்படத்தைப் போல அதே காலகட்டத்துப் பிற படைப்பாளிகள் பற்றி வந்த நூல்களையோ அல்லது திரைப்படங்களைப் பார்ப்பது கூட வித்தியாசமான இருக்குமென நினைத்துக்கொண்டேன்.

எல்லாப் படைப்பாளிகளும் தமது சமகாலக் கலைஞர்களோடு நட்புப் பேணவும், தமக்கிடையில் விவாதிக்கவும், அன்பைப் பகிர்ந்துகொள்ளவுமே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் காலமும் சூழலும் அவர்களுக்கிடையில் விரிசலை ஏதோ ஒருவகையில் கொண்டுவருகின்றது. பின்னர் அவர்கள் அந்த இனிமையான காலங்களை தமக்கான தனிமையில் இருந்து ஸோலாவும், ஸிஸானும் போல நனவிடைதோய்ந்தபடி பெரும்பாலும் வாழ்ந்தும் முடித்துவிடுகின்றனர் என்பதுதான் சோகமானது.

(நன்றி: 'அம்ருதா' - தை, 2018)

இலங்கைக் குறிப்புகள் - 03

Monday, January 15, 2018

1.
நானும், ஹஸீனும் அக்கரைப்பற்றிலிருந்து எஸ்.எல்.எம். ஹனீபாவைப் பார்ப்பதற்கு பஸ்ஸில் ஏறினோம். இடையில் விபுலானந்தர் அழகியல் கல்லூரியில் ஜெய்சங்கரைச் சந்திப்பதென்றும் தீர்மானித்திருந்தோம். எனினும் இன்னொரு நண்பரைச் சுகம் விசாரித்துவிட்டு பஸ் ஏறவேண்டியதால், ஜெய்சங்கரோடு சந்திப்பதற்கான நேரத்தைத் தவறவிட்டிருந்தோம். இடையில் காத்தான்குடியில் இறங்கி மதியவுணவைச் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் எங்களை ஆசுவாசப்படுத்திவிட்டு ஓட்டமாவடியிற்குப் புறப்பட்டோம்.

ஹனீபா என்கின்ற இளமை ததும்பும் அருமை நண்பர் எமக்காய் முக்கிய சந்தியொன்றில் காத்திருந்தார். முதன்முதலில் சந்திக்கும் மகிழ்ச்சியில் அவரை ஆரத்தழுவினேன். அன்று மாலையே ஓட்டமாவடி அறபாத்தின் 'வாடிவீட்டு'க்குப்போய் நமது பிரம்மச்சாரிய வாழ்வை மீண்டும் வாழ்ந்து பார்ப்பது என்பது ஹனீபாவின் ஏற்பாடு. அறபாத் தன் காரில் வந்து எங்களை அழைத்துப் போகும்வரை, நாங்கள் ஒரு கடைக்குள் கடிக்க/கொறிக்கப் போயிருந்தோம்.

அங்கே வருகின்றவர்கள், போகின்றவர்கள் எல்லாம் ஹனீபாவிடம் சுகம் விசாரித்தபடி இருந்தனர். அந்தளவிற்கு படைப்பாளியாக மட்டுமில்லாது அந்த மக்களோடும் ஒரு நெருங்கிய நபராக ஹனீபா இருந்தார். இது நமது தமிழ் இலக்கியவாதிகள் பலருக்குக் கிடைக்காத ஒரு நல்லூழ் எனத்தான் சொல்லவேண்டும். கடையை வைத்துக்கொண்டிருப்பவரே, 'மாமா(?) எங்கள் வீட்டில் ஒரு புதுமரம் காய் காய்க்கின்றது என்னவென்று தெரியவில்லை. எப்படிக் கண்டுபிடிக்கிறது' எனக்கேட்டுக்கொண்டிருந்தார். இரண்டு பேரும் அந்த மர்மத்தை அவிழ்ப்பதில் போட்டிபோட்டுத் தோற்று அடுத்த நாள் அந்த மரத்தின் கிளையை நேரே கொண்டுவருவது, பிறகு கண்டுபிடிக்கலாம் என்ற முடிவுக்கு இறுதியில் வந்திருந்தனர். அவ்வாறு ஹனீபாவிற்கு ஊரிலிருக்கும் மனிதர்களை மட்டுமில்லை, உலகிலிருக்கும் மரங்கள் பற்றியும் நல்ல அறிமுகம் இருந்தது.

ஹனீபா தொடர்ந்தும் கடைக்குள் இருந்தால், தெருவால் கடந்து போகின்ற மதினிமார்களுக்கும் ஏதாவது உதவிகள் செய்யப்போய் எங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்த நேரத்தில், நல்லவேளையாக அறபாத் வந்து எங்களைக் காப்பாற்றினார். வாடிவீடு எங்களுக்காய்க் காத்திருந்தது. அங்கும் ஹனீபா அறபாத் நட்டு வைத்திருந்த மாங்கன்றுகளுக்கும், கொய்யாக்களுக்கும் எப்படி அதை ஆரோக்கியமாய் வளர்ப்பதென்று ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார்.

ப்படியே நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கையில் மலர்ச்செல்வன், சஃரி போன்ற நண்பர்களும் வந்து இணைந்தனர். பஸ்சில் நீண்ட நேரம் வந்த களைப்பிற்கு அங்கேயிருந்த கிணற்றில் தண்ணீரள்ளிக் குளிக்க, சொர்க்கமாய் இருந்தது. மலர்ச்செல்வன் போன்ற நண்பர்கள் பிறகு விடைபெற்றுச் செல்ல, அறபாத்தும் எங்களுக்கான இரவுணவை வாங்கிவரப் போக, நானும் ஹஸீனும், ஹனீபாவும் இருந்து இலக்கியம், இன்னபிற என கதைத்துக்கொண்டிருந்தோம்.

எல்லாவற்றையும் விட, இலக்கியம் தரும் முக்கிய ஓர் அனுகூலம் என்னவென்றால், நாம் அவரவர்களுடைய வயதைக் கடந்து, சமவயது ஒத்தவர்களாக நினைத்துக் கதைக்கலாம், விவாதிக்கலாம் என்பது. அதுவும் ஹனீபா போன்று எங்களைவிட இளமையான எண்ணங்களுடன் இருப்பவர்களுடன் கதைப்பது என்றால் இன்னும் சுவாரசியமாகும். கி.ராவும், களனியூரானும் தொகுத்த 'மறைவாய்ச் சொன்ன கதைகள்' போல ஹனீபா அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்த கதைகளுக்கு நானொரு 'தாசனாகி'ப் போய்க்கொண்டிருந்தேன். அதுமட்டுமில்லை ஹனீபாவிற்கு இருக்கும் அரசியல், இலக்கிய அனுபவங்கள் என்பவை நெடும் வரலாறு கொண்டவை என்றபடியால் இன்னும் சுவாரசியமாக அவர் பேசுவைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

இரவுணவையும் சாப்பிட்டுவிட்டு, ஹனீபா சாய்மணைக் கட்டிலில் இருந்தபடி அவர் எழுத விரும்பும் புனைவைச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் புனைவில் யானைகள் ஒரு முக்கிய பாத்திரம் என்பதாலோ அல்லது என்னவோ, சாய்மணைக் கதிரையில் இருந்த ஹனீபாவை நான் வைக்கம் முகமது பஷீர் போல கற்பனை செய்துகொன்டிருந்தேன். எப்படியெனினும் அவரது இந்தக்கதையை எழுத வைத்துவிடவேண்டும் என்ற துடிப்புடன் ஹஸீன் அதற்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். நான் அதை எனது தொலைபேசியினூடு காணொளியாக பதிவாக்கிக் கொண்டிருந்தேன். இரவு இன்னும் இளமையாக எங்களுக்கிடையில் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தது.

2.
னீபாவின் பிரசித்திபெற்ற 'மக்கத்துச் சால்வை' கதையை அநேகமானவர்கள் வாசித்திருப்போம். அவரின் முதலாவது தொகுப்பும் அதன் பெயரிலேயே 1992ல் வெளியானது. ஹனீபாவின் கதைகளை உதிரிகளாக வாசித்திருந்தாலும், அவரின் முழுக் கதைகளையும் 'அவளும் ஒரு பாற்கடல்' என்ற புதிய தொகுப்பிலேயே வாசித்திருந்தேன். 'மக்கத்துச் சால்வை'யில் இருக்கும் 15 கதைகளோடு, மேலும் 10 புதிய கதைகளை இணைத்து இத்தொகுப்பு வெளிவந்திருந்தது.

தான் எழுதிய கதைகளில் எல்லோரும் 'மக்கத்துச் சால்வை' பிடிக்கும் என்கின்றபோது தனக்கு 'மருமக்கள் தாயம் பிடிக்கும்' என்றார் ஹனீபா. மருமக்கள் தாயத்தில் ஒரு முஸ்லிம் பெண்மணி, தமிழ் இயக்கமொன்றுக்கு அடைக்கலமும் தேநீரும் கொடுத்து பராமரிப்பவர். அவர் ஊரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, உடல்நலமின்றி இடம்பெயரும்போது எல்லோரும் கைவிட்டபோதும் இயக்கப்பொடியள் வந்து தனக்கு உதவுவார்கள் என நினைக்கின்றார். அவர்களும் அவரைக் கவனிக்காது சாதாரணமாய் ஜீப்பில் கடந்துபோகின்றதோடு கதை முடிகையில் தமிழ் - முஸ்லிம்களுக்கான பிளவின் முதல் சமிக்ஞை காட்டப்படுகின்றது, மருமக்கள் தாயத்தில்.

நான் ஹனீபாவின் முதல் கதையை என்னுடைய 16 வயதில் வாசித்திருக்கின்றேன், அது 'வெள்ளைக் காகம்' என்ற தலைப்பில் சரிநிகரில் வந்த கதை. சந்திரிக்காவின் ஆட்சிக்காலமும், அவர் சமாதானத்துக்காய் கொண்டுவந்திருந்த இயக்கத்தின் பெயர் வெண்புறா இயக்கம் என்பதாலும், வெள்ளைக்காகத்தை வெண்புறாவோடு தொடர்புபடுத்தி (என் அன்றைய வாசிப்பு அறிவுக்கேற்ப) சமாதானத்தைக் கிண்டலடித்த கதையாக தொடர்புபடுத்தி என் தமிழாசிரியரான இதுபற்றிக் கதைத்தபோது, அவர் இதுவொரு முஸ்லிம் தலைவரை எள்ளல் செய்யும் கதையெனத் திருத்தியது நினைவு இருக்கிறது. அன்று சரிநிகரில் அது ஹனீபா என்ற பெயரிலா அல்லது வேறு புனைபெயரிலா வந்தது என்பது ஞாபகமில்லை. அவ்வாறு விருப்புடன் வாசித்த ஒருவரை மீண்டும் நெடுங்காலத்தின் பின் அவரைத் தேடிச்சென்று அதைச் சிலாகிப்பது என்பதுதான் எத்தனை அழகானது.

லக்கியத்தால் என்ன பிரயோசம் என்றுதான் பலர் கேட்பார்கள். அதில் முக்கியமானது இப்படி வயது வித்தியாசமில்லாது ஆளுமையும் அனுபவமும் உள்ளவர்கள், எங்களை ஈர்ப்பார்கள் என்பதும் ஒன்று. இலக்கியம் எங்கள் எல்லோரையும் ஒரே தளத்தில் வைக்கும். இதை வேறு எதுவும் எங்களுக்கு அவ்வளவு இலகுவில் தராது. வாசிப்பு என்பதே வயதை, இடத்தை கடந்து ஹனீபா போன்றோர்களுடன் எங்களை நட்புப் பேணவும், அவரைத் தேடிப்போய்ப் பார்க்கவும் வைக்கின்றது.

இன்னும் ஒன்று உள்ளது. இன்றைய காலத்தில் தமிழ்- முஸ்லிம் உறவானது மிகவும் இறுக்கமான கட்டத்தில் இருக்கின்றது. அரசியலினூடாக செல்வதை விட, கலை- இலக்கியத்தினூடாக இந்த உறவின் இறுக்கத்தைத் தளர்த்த முடியும் என்று நம்புகின்றவன் நான். ஈழத்தில் வாழ்ந்த காலங்களில் எனக்கு எந்த முஸ்லிம் நண்பர்களும் இருந்ததில்லை. 13 அல்லது 14 வயதில் புலிகள் எங்கள் பாடசாலையில் ஒரு பிரச்சாரக் கூட்டம் வைத்த பேசியபொழுதில், 'முஸ்லிம்களை ஏன் வெளியேற்றினீர்கள்?' என துண்டெழுதிக் கேட்டதைத் தவிர வேறு எதுவும் முஸ்லிம் சமூகம் சார்ந்து எனக்கு எதுவும் நினைவினில்லை. பிற எந்த தனிப்பட்ட அனுபவங்களுமில்லை.

அவ்வாறான ஒருவனுக்கு, இன்று முஸ்லிம்களிலும் நண்பர்கள் இருப்பதும், அவர்களும் என்னை 'மற்றதாக' உணரவைக்காமல் பழகுவதும் என்பது இந்த வாசிப்பினூடாகவே எனக்குச் சாத்தியமாயிற்று. இன்று மிகப்பெரும் பிளவு தமிழ்-முஸ்லிம் சமூகத்திற்குள் வந்துவிட்டாலும், ஹனீபா, ஹஸீன் போன்றவர்கள் எவ்வளவு உண்மையான அக்கறையோடு தமிழ் மக்கள் மீதும் இருக்கின்றார்கள் என்பதை நேரே பார்த்திருக்கின்றேன். அதேபோல அவர்கள் ஒருபோதும் முஸ்லிம்கள் தமிழ்மக்களுக்குச் செய்த சில பாதிப்புக்களையும் மறைத்ததுமில்லை. ஹஸீனோடு அக்கரைப்பற்றில் அலைந்த திரிந்தபொழுதுகளிலெல்லாம், முன்னர் இருந்த தமிழ் மக்களின் இடங்கள் இப்போது இல்லையென வரலாற்றை உள்ளபடி எனக்குக் காட்டிக்கொண்டிருந்தார். கைவிடப் பட்ட ஒரு இந்துக்கோயிலின் சிதைபாடுகள் உட்பட.

3.
னீபா இரவு நேரத்திற்கான தொழுகையைச் செய்யப்போகின்றேன் என்றார். பிறகு தொழுகை முடிந்து, வெக்கை அதிகமாய் இருந்ததால் நாம் எல்லோரும் வெளி விறாந்தையில் பாயைப் போட்டு கதைத்தபடி தூங்கத்தொடங்கியிருந்தோம். காலையில் அருகிலிருந்த பள்ளிவாசலில் பாங்கொலி கேட்டு நான் விழித்தபோது ஹனீபா ஏற்கனவே எழும்பி தொழுகையைச் செய்துகொண்டிருந்தார். பள்ளியில் தொழுகையொலி முடிக்கின்றபோது ஏதோ ஒரு கோயிலில் இருந்து அம்மன் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கியது. நாம் மனிதர்களை, மதங்களைத் தாண்டி புரிந்துகொள்ள இந்தக் காலையைவிட ஒரு அருமையான சந்தர்ப்பம் இருக்காது போல எனக்குள் தோன்றியது.

அக்கரைப்பற்றில் மூன்று நாள்கள் தங்கி நின்ற நான், அடுத்த நாள் கொழும்பு போவதாகத் தீர்மானித்திருந்தேன். ஹனீபாவும் ஹஸீனும் என்னை இலங்கைப் போக்குவரத்து பஸ்ஸில் ஒன்றில் ஏற்றிவிட என்னோடு வந்து பெருந்தெருவில் காத்து நின்றனர். பஸ் வர ஏறியமர்ந்தேன். அவர்கள் இருவரும் புள்ளிகளாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத்தொடங்கினார்கள். அருமையான மனிதர்களையும், அனுபவங்களையும் எனக்குள் சேகரமாகிவிட்ட கதகதப்புடன், நான் அவர்கள் தந்த நூல்களில் ஒன்றை எடுத்து விரித்து வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.

(Dec 25, 2017)

Gold - திரைப்படம்

Tuesday, December 26, 2017

ங்கத்தோடு மட்டுமில்லை, தங்கச் சுரங்கங்களோடும் மனிதர்கள் காலங்காலமாய் பகடையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஐரோப்பாக் கணடத்திலிருந்து தங்கம் மீதான பேராசையுடன் கொடுங்குளிரையும் பாராது, ஒரு பெரும் மக்கள் திரள் வட அமெரிக்காவிற்கு வந்திருந்தது கடந்தகால வரலாறு. Gold என்கின்ற இத்திரைப்படத்திலும் கனிமச்சுரங்களைக் கண்டுபிடிக்கும் ஒருவன் சொல்வான்: கொலம்பஸ் தன் நாட்டு இராணிக்கெழுதிய கடிதங்களில் கடவுள் என்று குறிப்பிட்டதை விட தங்கம் என்று குறிப்பிட்டதே அதிகமானது என்று. அந்தளவிற்கு ஆதிகாலத்திலிருந்தே தங்கத்தின் மீது பித்துப் பிடித்துத் திரிந்திருக்கின்றார்கள்.


இத்திரைப்படம் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றதெனினும் நடந்தவை சற்று மாற்றப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றது. பரம்பரை பரம்பரையாக தங்கச் சுரங்கங்களைத் தேடும் ஒரு குடும்பத்தில் பிறந்த கென்னி, சரியான தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் திணறிக்கொண்டிருக்கின்றார். எல்லாவற்றையும் இழந்துகொண்டிருக்கும் அவர் இந்தோனேசியாவில் கனிமச் சுரங்கங்களைக் கண்டுபிடிக்கும் மைக் மீது நம்பிக்கை வைக்கின்றார். தங்கம் இந்த மலையில் கிடைக்கலாம் என்ற மைக்கின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து, நிறையப் பணத்தை பல்வேறு இடங்களிலிருந்து கடன்வாங்கி, இதில் முதலீடு செய்து சூதாட்டம் ஆடுகின்றார். அதிஷ்டவசமாக அங்கே செய்யும் அகழ்வின் நிறைய தங்கம் மண்ணோடு கலந்திருக்கின்றது என்பது கண்டுபிடிக்கப்படுகின்றது. இப்போது கென்னி மில்லியன்கணக்கில் பணம் கொட்டும் தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டார் என்று அமெரிக்காவில் அவரது 'ஸ்டாக்குகள்' சட்டென்று விலையேறுகின்றது.

சில ஆண்டுகளிலேயே கென்னியின் நிறுவனம் பில்லியன் மதிப்புள்ளதாய் வர்த்தக சந்தையில் ஆகிவிடுகின்றது. இந்த அசுரவளர்ச்சியினால் பல நிறுவனங்கள் கென்னியின் நிறுவனத்தை வாங்க விரும்புகின்றது. ஆனால் கென்னி மறுக்க, இந்த பெருநிதி நிறுவனங்கள் பொறாமையால் இந்தோனேசிய மன்னரைத் தூண்டி விட, அவரின் இராணுவம் இந்தச் சுரங்கத்தைச் சுற்றிவளைக்கின்றது. இப்போது கென்னிக்கு மீண்டும் வீழ்ச்சி. எனினும் கென்னி அசராது, மீண்டும் சூதாடுகின்றார். இந்தோனேசிய மன்னரின் மகனோடு நட்பாகி அவரையும் தம் நிறுவனத்தில் பங்குதாரர் ஆக்கி, மீண்டும் தங்கத்தைத் தோண்டத் தொடங்குகின்றனர்.


வ்வாறு மீண்டும் கென்னி எழுந்தபோதும், ஒரு பெரும் உண்மை அறிந்து உலகு அதிர்கின்றது.கென்னியும், மைக்கும் கண்டுபிடித்தது உண்மையான தங்கமல்ல, அதை அவர்கள் பிரித்தெடுக்கும்போது மிகநுட்பமாக உப்பைக் கலந்து எவருக்கும் சந்தேகம் வராது அசல் தங்கம் போல ஆக்கிவிட்டார்கள் என்ற உண்மை வெளியே வருகின்றது. கென்னியின் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உயர்ந்த வேகத்திலேயே வீழ்கின்றது. வர்த்தக சந்தையிலிருந்து இவர்களது ஸ்டாக்குகள் முற்றாக அகற்றப்படுகின்றது. இந்த பங்குகளில் முதலீடு செய்த பலரும் பெரும் பணத்தை இழக்கின்றனர்.

மைக் தப்பியோடுகின்றார். கென்னி எஃபிஐயினரால் விசாரிக்கப்படுகின்றார். கென்னி இந்த உண்மை தனக்குத் தெரியாது, மைக்கே இதில் புகுந்து விளையாடியிருக்கின்றார் எனத் தொடர்ந்து மறுத்தபடி இருக்கின்றார். மைக் இந்தோனேசியாவிற்குத் தப்பியோடும்போது, அவர் அங்குள்ள இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு, வானூர்தியில் கொண்டுசெல்லப்பட்டு தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார் என்று சொல்லப்படுகின்றது. கென்னி விசாரணைகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றார். எனினும் தனது மதிநுட்பமான நண்பன் மைக் இப்படி எளிதில் இறந்துவிட்டார் என்பதை கென்னி நம்ப மறுக்கின்றார்.

சில மாதங்களின் பின் அவருக்கு ஒரு கடிதம் வருகின்றது. அதில் கென்னியும் மைக்கும் இந்த தங்கச்சுரங்கத்தைக் கண்டுபிடித்தபோது, வரும் லாபத்தில் இருவருக்கும் 50/50 என்று எழுதிய ஒப்பந்தம் வருகின்றது. அத்தோடு கென்னிக்கு உரியதென இங்கிலாந்திலிருக்கு வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருக்கும் 82 மில்லியன் பணத்திற்கான செக் ஒன்றும் (மைக்கால்) அனுப்பப்படுகின்றது. கென்னி ஒரு மர்மப்புன்னகை செய்வதுடன் படம் முடிகின்றது.

னி அசலாய் நடந்த கதை.

உண்மையில் இத்திரைப்படத்தில் வந்ததுமாதிரி இது அமெரிக்காவில் நடந்த கதையல்ல. இந்தச் சம்பவம் கனடாவில் 90களின் நடுப்பகுதியில் நடந்தது. அல்பேர்ட்டாவில் இருந்த டேவிட் என்பவர், ஒரு அகழ்வாராய்ச்சியாளரின் துணையுடன் இந்தோனேசியாவில் தங்கச்சுரங்கம் கண்டுபிடித்துவிட்டோம் என்று கனடாவிற்கு அறிவித்து, ரொறொண்டோ பங்குச் சந்தையில் மட்டுமில்லை, அமெரிக்க நாஸ்டக்கிலும் தனது நிறுவனத்தின் பங்குகளை பெரும் ஆரவாரத்துடன் கொண்டுவந்தவர். கிட்டத்தட்ட பென்னி ஸ்டாக் வகையான மிக மதிப்புக்குறைந்த, டேவிட்டின் பங்குகள் 250 டொலர்வரை அந்தக் காலத்தில் சென்றிருக்கின்றது. பின்னர் தங்கத்தில் உப்பு கலக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டபின், முதலிட்ட பலர் மில்லியன் கணக்கில் பணத்தை இழந்திருக்கின்றனர்.

இந்த டேவிட், பஹாமாஸிற்குத் தப்பி வாழ்ந்திருக்கின்றார். திரைப்படத்தில் வந்தமாதிரி டேவிட்டின் நண்பரான அகழ்வாராய்ச்சியாளர் கொல்லப்படவில்லை. ஆனால் இன்னொரு இந்தோனேசியா அகழ்வாராய்ச்சியாளர் இராணுவத்தின் வானூர்தியில் தூக்கியெறியப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். செய்த பாவத்தாலோ என்னவோ டேவிட் இந்தச் சம்பவம் நடந்த சில வருடங்களின் பின், நரம்பில் ஏற்பட்ட வெடிப்புக் காரணத்தால் இறந்தும் விட்டார்.

ந்த பெரும் சூதாட்டத்தில் யார் பெரும் பணத்தை இழந்தவர்கள் என்றால், அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவர்கள். எனெனில் இந்த நிறுவனத்திலேயே ஒன்ராறியோ/கியூபெக் அரசுகள், தமது ஊழியர்களுக்கான பல மில்லியன் ஓய்வூதியப்பணத்தை முதலீடு செய்திருந்தது. தங்கச் சுரங்க வரலாற்றில், உலகில் நடந்த மிகப்பெரும் பித்தலாட்டம் இதுவே என சொல்லப்படுகின்றது. டேவிட் இறந்துவிட்டபின்னும் இந்தச் சூதாட்டத்தின் பொருட்டு, எவரும் பிறகு பெரிதும் கைதுசெய்யப்படவில்லை. 98களிலேயே இந்த வழக்கு மூடப்பட்டும் விட்டது.

ஆனால் யாரோ ஒருவரினதோ அல்லது சிலரினதோ ஆட்டத்திற்காய் எத்தனை சாதாரண அப்பாவி மக்கள் தமது சேமிப்பை இழக்கவேண்டியிருந்தது என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இன்று பெரும் செல்வம், உலகச் சனத்தொகையில் 1%மான பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டும்விட்டது. அந்த 1% தமது சுயநலத்திற்காய், மிகுதி 99% ஐ எப்படியாயினும் சூது வைத்து விளையாடவும் தயாராக இருப்பதைத்தான் டேவிட் போன்றவர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்லி நிற்கின்றது.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

இலங்கைக் குறிப்புகள் - 02

Saturday, December 23, 2017

ட்டநாதனைச் சந்திப்பதென்று நாங்கள் முடிவெடுத்தது, நல்லூரிலிருந்த லிங்கம் கூல்பாரில் ஸ்பெஷல் ஐஸ்கிறீமையும், ரோல்ஸையும் சுவைத்துக்கொண்டிருந்த பொழுதில் என்றுதான் நினைக்கின்றேன். கூடவே கனடாவில் இருந்து வந்திருந்த நண்பர்கள் ரவிக்கும், போலுக்கும் சட்டநாதன் கல்வி கற்பித்த ஒரு ஆசிரியருமாவார். அந்த நேரத்தில் சட்டநாதனின் தொலைபேசி இலக்கம் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை. நேரே போய் அவரின் வீட்டைத் தட்டுவோம் என நினைத்து நடக்கத் தொடங்கினோம்.
லிங்கத்திலிருந்து, நல்லூர் வீதியில் இடதுபக்கம் திரும்பினால் இலகுவாகப் போயிருக்கக்கூடிய சட்டநாதனின் வீட்டை, மறுபுறத்தில் 30-40 நிமிடங்களுக்கு மேலாய் நடந்து சட்டநாதர் கோயில், முத்திரைச் சந்தி(?) என எல்லாம் கடந்து சென்றடைந்திருந்தோம். எல்லாம் எங்கள் ரவியை முற்றுமுழுதாக நம்பியதால் வந்த வினை. அவர் சார்ந்திருந்த இயக்கம் காரைநகர் கடற்படையிற்கு நடத்திய 'அட்டாக்' பற்றிய கதையை, போல் மீண்டும் நினைவூட்டியதால், இப்படி நெடுந்தூரம் நடந்தபோதும் கோபப்படாது ரவியை மன்னித்துவிட்டோம். சட்டநாதனின் வீட்டுக் கேற்றடியில் நின்று இவர்கள் இருவரும் 'சேர், சேர்' என்று கூப்பிட, பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் எட்டிப்பார்த்தனரே தவிர, சட்டநாதனைக் காணவில்லை. பாவம் அவர், அன்று இவர்களைப் படிப்பித்தே உருப்படியாக வரவில்லை, இப்போது இவர்களைச் சந்தித்து என்ன பிரயோசனம் என்று உறங்கிக்கொண்டிருந்திருக்கலாம். சட்டநாதன் வீட்டில் இல்லையோ என்ற சந்தேகத்தை அவரின் வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த சைக்கிள், அவர் உள்ளே தான் நிற்கின்றார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தது.
ஒருமாதிரி சட்டநாதன் வந்து கேற்றைத் திறந்தார். அறைக்குள்ளே இருந்ததால் நீங்கள் கூப்பிட்டது கேட்கவில்லையெனச் சொன்னார். சட்டநாதனை நான் நேரில் முதன்முறையாக இப்போதுதான் சந்திக்கின்றேன் என்கின்றபோதும், அவருடைய கதைகளையும், அவரைப் பற்றியும் நெடுங்காலத்துக்கு முன்னரே அறிந்திருக்கின்றேன். என்னோடு பல்கலைக்கழகத்தில் படித்த தோழியொருவர் சட்டநாதனின் வீட்டுக்கருகில்தான் வசித்திருந்தார். சட்டநாதன் பற்றியும், அவரது சைக்கிள் பற்றியும் நிறையக் கதைகள் சொல்லியபடி இருப்பார். யாழில் தானிருந்த காலங்களில், இப்படி சைக்கிளில் போகும் சிறியமனிதரா இவ்வாறு அருமையான கதைகள் எழுதியிருந்தாரா என அவர் வியப்பார்.

ருவர் தன் பெயரிலேயே இருக்கும், ஒரு தெருவில் வசிப்பது என்பது அதிசயமல்லவா? சட்டநாதர் கோயில் இருப்பதாலேயே அது சட்டநாதர் வீதியாக இருக்க, சட்டநாதனும் அந்தத் தெருவில் வசித்துக்கொண்டிருப்பது ஒருவகை வியப்புத்தான்.
கூட வந்திருந்த நண்பர்கள் அவரிடம் கற்ற நாட்களை நனவிடைதோய்ந்தபடி இருந்தனர். சட்டநாதனும், தான் எழுதிய சில கதைகளின் பின்னணியைச் சுவாரசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஜெயமோகனின் கதைகள் அவருக்குப் பிடித்ததென நினைக்கின்றேன். ஆனால் ஏன் ஜெயமோகன் இப்படி தேவையில்லாத கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளில் சிக்குகின்றார் எனவும் அவர் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். சட்டநாதனைச் சந்திக்கமுன்னரே, வெளிவந்த அவரது இறுதித்தொகுப்பான பொழிவை வாசித்திருந்தேன். அவரது 'உலா', 'சட்டநாதன் கதைகள்' மற்றும் 'புதியவர்கள்' போன்றவற்றோடு ஒப்பிடும்போது இப்புதிய தொகுப்பில் வந்த கதைகள் சற்று பின் தங்கிவிட்டனவோ போல என் வாசிப்பில் தோன்றியது.
க.சட்டநாதன், அ.யேசுராசா போன்றவர்களையெல்லாம் நேரில் சந்திக்காவரை, அவர்கள் சற்று இறுக்கமானவர்கள் என்றொரு விம்பத்தை - எப்படியெனத் தெரியவில்லை- வாசிப்பினூடாக எனக்குள் உருவாக்கி வைத்திருந்தேன். சட்டநாதன் மிக நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார் என்பதோடு நன்றாகச் சிரித்தபடி கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
வெளியே விடைபெற வந்தபோது அவரது 'பிரபல்யமான' சைக்கிள் எங்களை ஈர்த்துக்கொண்டிருந்தது. அதைப் பற்றியும் ஒரு கதை எழுதியதாகச் சொன்னார். நாற்பது வருடங்களுக்கும் மேலாய் அதொரு நல்லதொரு துணையாக தன்னோடு இருப்பதாகச் சிலாகித்தார்.
வீட்டு வாசலடியில், சைக்கிளடியில், கேற்றடியில் போகின்றோம் போகின்றோம் என விடைபெற்றபடி, அவரை விட்டு விலக விரும்பாது கதைத்தபடி இருந்தோம். வெளியே மாலை மங்கி இருளத்தொடங்கியிருந்தது.

(Oct 19, 2017)

பயணக்குறிப்புகள் - 18 (பெரு)

Sunday, December 17, 2017


Moray and Maras
Cusco நகரிலிருந்து 50கிலோமீற்றர் தொலைவிலிருக்கின்றது Moray. இந்த வளையங்களான நிலப்பரப்பிற்கான காரணம் சரியாகத் தெரியாவிட்டாலும், சிலவேளைகளில் இன்காவினர் தங்களது பரிசோதனைப் பயிர்ச் செய்கைகளுக்காய்ப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதிலிருக்கும் இயற்கையின் விந்தையென்னவென்றால் மேலே இருந்து கீழே செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்துபோவது. கிட்டத்தட்ட 15-20 டிகிரி செல்சியஸ் வித்தியாசப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குளிர்ச்சியாக இருந்ததையும் கீழே போகப் போக அதிக வெக்கையை நம்மாலும் உணரமுடிகின்றது.
இது எல்லாவற்றையும்விட மூன்று பெரிய வட்ட வடிவில் அமைக்கப்பட்ட வளையங்கள். இவ்வளவு நுட்பமாக வட்டங்களை அமைக்க எந்தவகையான தொழில்நுட்பத்தைப் புராதன காலத்தில் பயன்படுத்தியிருப்பார்கள் என்பது வியப்பாக இருந்தது. ஒரு வளையத்தில் இறந்த உடல்களைப் புதைப்பதற்காய்ப் பயன்படுத்தியிருப்பதாய்ச் சொல்லப்ப்படுகின்றது. இப்போதும் ஆங்காங்கே கற்களால் மூடப்பட்டிருக்கும் சில இடங்களைத் தொலைவிலிருந்து பார்க்கமுடிகின்றது.
Moray அருகிலிருப்பது Maras நகர். இங்கிருக்கும் உப்பளம் பிரபலயம் வாய்ந்தது. இன்காவினரின் காலத்திற்கு முன்னரே இது இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. முதன்முதலில் இவ்வளவு உயரத்தில் மலைகளுக்கிடையில் ஓர் உப்பளத்தைப் பார்த்தது வித்தியாசமான அனுபவம். 
அதைவிட இந்த உப்பளம் இயங்கும் முறை ஆச்சர்யமானது. இன்னமும் இன்கா வழிவந்த ஒரு சமூகத்திடம் இது இருக்கின்றது. இங்கு யாரும் தமக்குரிய உப்பளத்தைத் தொடங்கலாம். ஆனால் அந்தச் சமூகத்தோடு சேர்ந்து இருக்கவேண்டும். குடும்பம், பிள்ளைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து உப்பளப் பகுதி பிரித்துக்கொடுக்கப்படும். ஒருவித கொம்யூன் போன்று அவரவர் அங்கே வேலை செய்யவேண்டும் என்பது ஒரு விதி. இயற்கையான ஊற்றுக்களால் நீர் வந்து அதைத் தேக்கி வைத்து,வெவ்வேறு நிலைகளில் பிரித்து சாப்பாட்டிலிருந்து உடல் நோவு வரை பல்வேறு தேவைகளுக்காய் இங்கு விளையும் உப்பைப் பாவிக்கின்றார்கள்.

(Nov 21, 2015)

ஹேஸேயின் சித்தார்த்தாவை மேபிள் மரத்தடியில் சந்தித்தல்..

Saturday, December 16, 2017

(பயணக்குறிப்புகள் - 17)

கோடையின் வெயில் மிதமாக இருந்தபொழுதில் நான் ஹேஸேயைத் தேடிப் போய்க்கொண்டிருந்தேன். பாதையோ ஏறியிறங்கியும் வளைந்தும் நதியொன்றை நோக்கி நீண்டபடியிருந்தது. கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னர் ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டுவிட்ட 'சித்தார்த்தா'வை, என்றோ ஒருநாள் வாசித்துவிட்டு இப்போது ஹேஸேயைத் தேடிப்போகும் மனதின் விந்தையை நினைந்து வியந்துகொண்டிருந்தேன்.

ஹேஸே ஒருவகையில் விசித்திரமான மனிதருங்கூட. ஒரு காலத்தில் நிறையப் பயணங்களைச் செய்துவிட்டு எல்லாப் பயணங்களையும் முற்றாக நிறுத்திவிட்டு இந்த ஊரில் ஒதுங்கிக்கொண்டவர். அவரின் பிரபல்யமான 'சித்தார்த்தா'வை இந்த வீட்டில் வசிக்கும்போதே எழுதி முடித்திருந்தார். பதின்மத்தில் உளவியல் சிக்கலுக்குள்ளாகி, பின்னர் குடும்ப வாழ்க்கையில் நுழைந்தபோது அது மேலும் தீவிரமாகி, மனைவி குழந்தைகளை விட்டு விலகி ஒதுங்கி வாழவேண்டிய நிலை ஹேஸேயிற்கு நிகழ்ந்திருக்கின்றது. இறுக்கமான கிறிஸ்தவமதப் பெற்றோருக்குப் பிறந்து, பெளத்த மதத்திற்குள்ளும், அதன் பாதிப்பில் இன்னொருகிளையாகி விரிந்து பரவிய தாவோயிசத்திற்குள்ளும் ஆழமாக நுழைந்து தனக்கான நிம்மதியைத் தேடியவர் அவர்.

நிறைய நாவல்கள், கட்டுரைகள் எழுதியதுபோல, இறுதிக்காலம் வரை, பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்க்கையில் தமது தேடல்கள் குறித்து சந்தேகங்களைக் கேட்டபோது, சலிக்காது பதில் கடிதங்களை எழுதிக்கொண்டிருந்த ஹேஸே சிறந்ததொரு ஓவியருமாவார். எப்போதும் தனிமையை விரும்பிய ஹேஸே ஒருகாலத்தில் ஓவியங்களை வரைவதிலும் நிறையப் பொழுதுகளைக் கழித்துமிருக்கின்றார்.

ஜேர்மனியில் பிறந்திருந்தாலும், அவரின் வாழ்வின் அதிக காலங்களை சுவிற்சிலாந்திலேயே வாழ்ந்திருக்கின்றார். ஹிட்லரின் கொடுங்காலத்தில் நாஸிகளால் சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்காய் சிறைச்சாலைக் கடிதங்களை எழுதியதோடல்லாது, அன்றைய நாஸிகளின் கொடுங்காலத்தில் இருந்து தப்பிவந்த தோமஸ் மான் போன்ற எழுத்தாளர்களுக்கும், அவரது இந்த இல்லத்தில் அடைக்கலமும் கொடுத்திருக்கின்றார்.

ஹேஸே வாழ்ந்த இந்த வீடு மூன்றடுக்குகளால் ஆனதெனினும், ஒவ்வொரு அடுக்கும் அகலத்தில் மிகச்
சிறியவை. மேல் அடுக்குகள் இரண்டிலும் சற்றுப் பெரிய கட்டிலைப் போட்டுவிட்டால் இடம் முழுதும் நிரப்பிவிடும் போன்றிருந்தது. இரண்டாம் அடுக்கில் ஹேஸே அன்றையகாலங்களில் பாவித்த அவரது தட்டெழுத்து இயந்திரம், பேனா, குடை, குளிரங்கி, தொப்பி, கண்ணாடி என நிறையப் பொருட்களை வைத்திருந்தனர். அதே அறையில் அவர் வரைந்த ஓவியங்களையும், அவற்றுக்காக அவர் பயன்படுத்திய வர்ணக்குப்பிகள் சிலவற்றையும் காட்சிப்படுத்தியிருந்தது அழகு. மேலும் ஹேஸேயின் நூல்களின், ஜேர்மனில் வந்த அன்றைய கால அட்டைகளையும், பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் முகப்போவியங்களையும் சட்டமிட்டு கொழுவியிருந்தனர்.

நான் யன்னலுக்கருகில் வைத்திருந்த ஹேஸேயின் தட்டெழுத்து இயந்திரத்தில் கைவைத்தபடி, அதற்கப்பால் கிளைகள் விரித்துச் சடைத்திருந்த மேப்பிள் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன், இந்த வாழ்க்கை என்றால் என்னவென கேள்விகள் வந்து என்னைப் பதற்றமடையவைக்கும் ஒவ்வொருபொழுதிலும் ஏதோ ஒருவகையில் வெளிப்பட்டுவிடும் 'சித்தார்த்தா'வை, ஹேஸே இப்படித்தானே ஏதோ ஓரிடத்தில் இருந்து எழுதிக்கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கவே மிகக் கதகதப்பாக இருந்தது. எழுத்துக்கள் ஊர்ந்துகொண்டிருப்பது போலவும், தன் தியானம் தோல்வியடைந்து, கெளதம புத்தரிடமும் நிம்மதி காணாது, திரும்பி வந்துகொண்டிருந்த சித்தார்த்தா அதன் வழியே நடந்துகொண்டிருப்பதாகவும் தோன்றியது.

மேலும், அவர் காதலென்றால் என்னவென அறிய 'தேவதாசி' கமலாவிடம் போவதும், கையில் ஒன்றுமேயில்லாது வருபவர்க்கு எதையும் கற்றுக்கொடுப்பதில்லையென கமலா மறுதலிப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கமலாவிடம் நேசத்தைக் கற்றுவிட்டு, அவரையும் விலத்தி, தன்னைத் தேடிக்கொண்டிருந்த சித்தார்த்தாவிற்கு நதிக்கரையில் வாசுதேவா வாழ்க்கை எதுவெனக் கற்றுக்கொடுக்கின்றார். நிம்மதி வந்துவிட்டதென கொஞ்சம் பெருமூச்சை விடும்போது, கமலாவிற்கு தன்னால் ஒரு குழந்தை பிறந்திருப்பதையும், கமலாவின் மரணத்தின்பின் அவனை வளர்க்கவேண்டிய விருப்பும் ஏற்படுகின்றது. அவனும் ஒருநாள் தந்தையிடம் சொல்லாமல் ஓடிவிடுபவனாகவும், அவனைத் தேடி மீண்டும் சோகத்துடன் அலையும் சித்தார்த்தா ஹேஸேயின் விரல்களினூடாக எனக்குள் விரிந்துகொண்டிருந்தார்.

நீயொருநாள் உனது தந்தையைக் கைவிட்டு வாழ்க்கை எதுவென வீடு நீங்கித் தேடப்போனதுபோலத்தான், உன் மகனும் சென்றிருக்கின்றான், உன்னால் ஏன் இதைப் புரிந்துகொள்ளவில்லை என ஒரு குரல் கேட்க சித்தார்த்தா விழித்துக்கொள்கின்றார். சிறகு வளர்ந்த குஞ்சுகள் கூடு நீங்கி அகன்ற வானம் நோக்கிப் பறத்தல் அன்றோ இயல்பு? சித்தார்த்தா தனது நிர்வாணத்தை அடைய எத்தகைய நீண்ட பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருக்கின்றது. புத்தருக்கு ஒரு போதிமரம் என்றால், ஹேஸேயின் சித்தார்த்தாவிற்கு நதியெல்லோ கற்றுக்கொடுத்த குரு?

சித்தார்த்தாவுடன், இளவயதில் ஞானத்தைத் தேடக் கூடவே புறப்பட்ட கோவிந்தா இறுதியில் சித்தார்த்தாவைச் சந்திக்கின்றார். கோவிந்தா உரையாடும் ஒவ்வொரு விடயத்திற்கும் எதிர்நிலையில் நின்று சித்தார்த்தா உரையாடுவது தாவோயிசத்தின் யின்-யாங் என்று நான் விளங்கிக்கொண்டபோது, கோவிந்தனைத் தன் தலையில் கையை வைத்துப் பார்க்கும்படி சித்தார்த்தா கேட்கின்றார். உள்ளே உருளும் நூற்றுக்கணக்கான உலகை, கோவிந்தா நொடிப்பொழுதில் கண்டுகொள்கின்றார். ஆம், சித்தார்த்தா தன் நிர்வாணத்தை எப்போதோ அடைந்துவிட்டார். எனினும் சாதாரண மனிதர் போல நதியின் கரையின் வாழ்ந்துகொண்டிருந்தார்.

பிரிய ஹேஸே நீங்கள் சித்தார்த்தாவை எழுதியபோது நிச்சயம் நீங்கள் சித்தார்த்தாவின் உடலிற்குள் சுழன்றபடியிருந்த ஏதோ ஒரு விநோத உலகிற்குள்தான் இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், இப்படி வாசிக்கும் எவரையும் ஒரு தீப்பிளம்பிற்குள் தள்ளிவிடும் எழுத்துமொழி எளிதாய் எவருக்குமே வாய்த்திருக்கச் சாத்தியமில்லை.

சித்தார்த்தா, 1922ல் ஜேர்மனில் எழுதப்பட்டுவிட்டாலும், சித்தார்த்தா அதன் பெறுமதியை இந்த உலகில் உடனடியாகப் பெற்றதில்லை. 50களில் ஒரு அலையென எல்லாவற்றையும் புரட்டிவிட்டுப் போன ஹிப்பிகளே 'சித்தார்த்தா'வைக் மீளக் கண்டெடுத்தார்கள். அதன் பின்னர் உலகெங்குமுள்ள பல்வேறு மொழிகளில் ஹெஸே மொழிபெயர்க்கப்பட்டும் விட்டார். அவருக்குக் கிடைத்த இலக்கியத்திற்கான நோபல் பரிசைவிட, அவர் எழுதிய சித்தார்த்தாவினால்தான் இன்றும் ஹேஸே மறக்கப்படமுடியாதவராக இருக்கின்றார்.

ஹெஸே தன் வாழ்வின் தேடியதை, இறுதியில் கண்டடைந்தாரா தெரியவில்லை. எண்பது வயதிற்கு மேலாய் வாழ்ந்த ஹேஸே, தன் தனிமையை எப்போதும் கைவிடாதவராகவே இருந்திருக்கின்றார். இயற்கையின் மீதிருந்த அளவற்ற காதலால், நதியும் மலையும் சேர்ந்த ஓரிடத்தின் அருகில் தனது இருப்பிடத்தையும் தேர்ந்தெடுத்தும் கொண்டார். ஒரு குறுகிய காலம் புத்தகக் கடையொன்றில் வேலை செய்தததைத் தவிர, மிகுதிக் காலம் முழுதும் வேறெந்த வேலையும் செய்யாது, ஒரு எழுத்தாளராகவே வாழ்ந்துமிருக்கின்றார்.

நான் இப்போது ஹேஸேயிடமிருந்து விடைபெறுகின்றேன். மரங்கள் சூழ்ந்த அந்த வீட்டின் வெளியே இதமான காற்று வீசுகின்றது. சித்தார்த்தா ஞானம் பெற்றபோது அவர் நுகர்ந்த முதல் வாசம் எதுவாக இருக்குமென யோசித்துப் பார்க்கின்றேன். முகம் மிக மலர்ந்த, மென் நீலநிற ஆடையணிந்த பெண்ணொருத்தி தன் குழந்தையுடன் கடந்துபோகின்றாள். இதுவரை பார்த்திராத ஒரு புதிய வர்ணத்தை அவள் எனக்காய் விட்டுச்செல்கின்றாள். அதுதான் சித்தார்த்தா வாழ்வு எதுவெனத் தேடி அலைந்து திரிந்தபோது, கூடவே அவரோடு துணையாகச் சென்றுகொண்டிருந்த வண்ணமாக இருந்திருக்கக்கூடுமோ?
-------------------------
(சுவிற்சிலாந்திலுள்ள Montagnola என்ற இடத்தில் ஹெர்மன் ஹேஸே வாழ்ந்த வீட்டைத் தரிசித்த அனுபவங்களின் குறிப்பு இது)

(நன்றி: 'அம்ருதா', மார்கழி-2017)

Pedro Almodovarவின் Julieta

Thursday, December 14, 2017

வராலும் எதையும் எழுதிவிடமுடியும் அல்லது காட்சிகளாய்த் திரைப்படமாக்கி விடமுடியும். ஆனால் பேசுவது எந்த விடயமாயினும் அதைக் கலையாக்கத் தெரிந்தவர்கள் மிக அரிதானவர்களே. கலை என்பதைத் தெளிவாக வரையறுப்பது கடினமென்றாலும், ஒருவகையில் பெரும் அமைதியையும், அதேவேளை மனதின் ஆழம்வரை சென்று தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடி இருப்பதாகவும் அமைவதென ஒரு எளிமைக்காய்ச் சொல்லிக்கொள்கின்றேன்.

பெண்களின் அகவுலகிற்கு ஆணாக இருந்தபடி இந்தளவிற்கு உள்நுழைய முடியாமென பெத்ரோ அல்மதோவர் தன் ஒவ்வொரு படங்களிலும் வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருப்பவர். இந்தப் படமும் விதிவிலக்கல்ல. அலீஸ் மன்றோவின் சில சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுத்த இத்திரைப்படத்தில் வரும் பெண்கள் தமக்கான் நாளாந்தத் துயரங்களோடு, உறவுகளோடான தத்தளிப்புக்களுடன் வாழ்வை வாழ்பவர்கள். யதார்த்தம் அவர்களை விரக்தியின் விளிம்பிற்கு ஒவ்வொருமுறையும் விசிறியெறியும்போதும், மிகுந்த பொறுமையுடன் - அடிவானத்திற்கு அப்பால் மினுங்கும் ஏதோ ஒரு நம்பிக்கையிற்காய்- காத்துக்கொண்டிருப்பவர்கள்.
எல்லாச் சந்தோசங்களும் ஒரு எல்லையில் முடிந்துபோவதும், எல்லாத் துயரங்களும் ஏதோ ஒரு புள்ளியில் களைந்துபோவதும் இயல்புதானென்றாலும் நாம் எதற்காய் இந்த வாழ்வில் காத்துக்கொண்டிருக்கின்றோம்? எதுவுமேயில்லாத ஏதோ ஒன்றுக்காய் விழியெறிந்து தசாப்தகாலமாய் காத்துக்கொண்டிருக்கும் ஜூலியட்டா இறுதியில் சிரிக்கும் அந்த ஒருகணத்தில், நமக்குள் பரவும் நிம்மதி சொல்லிமாளாதது.
ஜூலியட்டா என்னும் இத்திரைப்படத்தோடு, அல்மதோவர்இதுவரை எடுத்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருபது. தமது கலைப்பயணத்தில் அவ்வப்போது சறுக்கினாலும், மீள் எழத்தெரிந்தவர்களே மகத்தான கலைஞர்களாக மிளிர்வார்கள். கடந்த வருடங்களில் வெளிவந்த The skin I live in மற்றும் I'm so excited போன்றவற்றில் சற்று தொய்வடைந்து போயிருந்தாலும், ஜூலியட்டாவில் மனித மனங்களின் சிடுக்குகளுக்குள் புகுந்து -மீண்டும் தொடங்கும் மிடுக்காய் - வந்திருக்கின்றார்.
கலை என்பது நம்மைத் தொந்தரவுபடுத்துவது மட்டுமின்றி, நமது நாளாந்தங்களின் அலுப்புக்களின் சுமைகளையும் கரைத்து நிம்மதியை ஏதோ ஒருவகையில் பரவச்செய்வதாக இருத்தலெனவும் எடுத்துக்கொள்ளலாம். இருபது படங்களுக்குப் பிறகும் அடுத்த என்ன படைப்பைத் தருவார் என ஒருவரை நோக்கி எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றோம் என்றால், அவர் ஒரு அற்புதமான படைப்பாளியாக இருந்தாலின்றிச் சாத்தியமில்லை.. பெத்ரோ அல்மதோவரும் அப்படிப்பட்ட ஒருவர்தான்.

(Nov 10,2017)

வாசித்தலின் பேரின்பம்

Monday, December 11, 2017

1.
நண்பர் இரவு தூக்கம் வரவில்லை, கதை எதையாவது வாசித்துக் காட்டு என்றபோது பிரேம்-ரமேஷின் மகாமுனியை விரித்து 'கனவில் பெய்த மழையைப் பற்றிய குறிப்புகள்' கதையை அவருக்காக வாசிக்கத் தொடங்கினேன். இன்னும் திருத்தமாகச் சொல்லவேண்டுமானால் கதையின் தலைப்பு 'ஜூலை 14, 1789 அன்று கனவில் பெய்த மழையைப் பற்றிய குறிப்புகள்'. நீண்ட இந்தக் கதையின் தலையங்கத்திலிருக்கும் நாளிலேயே பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றிருக்கின்றது. ழீல் என்பவனுக்கும், அவனில் பேரன்பு கொண்ட மதாம் பெர்னாதெத்திற்கும், ழீலிற்கு உளவியல் சிகிச்சை கொடுக்கும் தொனேதேனுக்கும் இடையில் நிகழும் கதைதான் இது. இசை பற்றிய கதையாகத் தொடங்கி மிக விரிவாக வரலாற்றைப் பல்வேறு திசைகளிலிருந்து விசாரிக்கும் அற்புதமான கதை.
அடுத்தநாளும் கதையொன்றை வாசியென நண்பர் கேட்டபோது ஷோபாவின் 'எம்.ஜி.ஆர். கொலைவழக்கு' தொகுப்பிலிருந்து 'வெள்ளிக்கிழமை'யை வாசித்துக் காட்டத் தொடங்கினேன். இதை இப்போது மூன்றாவது தடவைக்கு மேலாய் வாசிக்கின்றேன் என நினைக்கின்றேன். சென்றவருடம் பிரான்ஸ் சென்றபின் பாரிஸின் லா சப்பல் மிகப் பரிட்சயமான பிறகு, இதை வாசித்துப் பார்ப்பது இன்னும் சுவாரசியமாக இருந்தது. வெள்ளிக்கிழமை எனப் பெயரிட்டவர் ஷாலினி அங்காடியில் குத்துவிளக்கு வாங்குவதற்கான முயற்சிகளைச் சுவாரசியமாகச் ஷோபா வர்ணித்திருப்பார். கதை சாதாரணமாகத்தான் போவதுபோலத் தோன்றும், இறுதியில் முடியும்போது கதை இன்னொரு திசையில் நுழைந்து வாசிப்பவருக்கு அஃதொரு முடிவுறாத கதையென உணர்த்தும்போதுதான் அசாதாரணக் கதையாகிவிடுகின்றது. 
கதைசொல்லி அன்னா கரீனீனாவின் நாடகம் பார்க்க ஆயத்தமாவதிலிருந்து கதை தொடங்குவது, மெத்ரோவிற்குள் வயலின் இசைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு அன்னா, மெத்ரோவிற்குள் பாய்ந்து தற்கொலைத்த வெள்ளிக்கிழமை மீண்டு வருதல் என்பவற்றை இணைத்து பார்க்கும்போது இந்தக்கதையின் முடிச்சுக்கள் அவிழக்கூடும்.அந்த முடிச்சவிழ்ப்பின் சுவாரசியம், எஞ்சியிருப்பதால்தான் இந்தக் கதை மறக்கமுடியாததாகின்றது.
2015 சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்குப் போனபோது நிறைய சிறுகதைத் தொகுப்புக்களை வாங்கி வந்திருந்தேன். அவற்றை ஒவ்வொன்றாய் வாசித்து முடித்துவிட்டு , அவை பற்றிக் குறிப்புகள் எழுத நினைவூட்டிப் பார்த்தபோது, ஒவ்வொருகதையும் ஒவ்வொன்றின் சாயல்களில் இருப்பது போலத்தோன்றியது. எனக்கு முதலிரு தொகுப்புக்களில் பிடித்த ஜே.பி.சாணக்யா கூட பின் தங்கி நின்றார். இந்தத் தொகுப்புக்களின் முக்கிய குறைபாடாக இருந்தது அவை எவ்வித பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்க்கவில்லை என்பதுதான். இத்தனைக்கும் அனேக படைப்பாளிகளின் மூன்றாம்/நான்காம் தொகுப்புக்களாய் அவை இருந்துமிருந்தன. ரமேஷ்-பிரேமின் 'மகா முனி'யையோ அல்லது எம்.டி.முத்துக்குமாரசுவாமியின் 'மைத்ரேயி மற்றும் பல கதைகளை' யோ வாசிக்கும்போது அவர்கள் செய்யும் பரிசோதனை முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கும். அதுமட்டுமின்றி பரிசோதனை என்ற பெயரில் வாசிப்பவர்களைச் சோதிக்காமல் சுவாரசியமாக இவற்றில் பலகதைகள் எழுதப்பட்டுமிருக்கும்.
இவ்வாறான புதிய கதைசொல்லலை நான் பார்த்து மிக வியந்தது சிலி எழுத்தாளரான Alejandro Zambraவில். அவரின் Bonsai, The private lives of Tress, Ways of going home என எல்லா நாவல்களையும் தேடித் தேடி வாசித்திருக்கின்றேன். 150-200 பக்கங்களுக்குள் இவ்வளவு விரிவாகவும், சிக்கலாகவும் சிலியினதும், அங்கிருக்கும் மக்களினதும் வாழ்க்கையைச் சொல்ல முடியுமாவென வியந்திருக்கின்றேன். அவ்வாறு பல்வேறு தளங்களை ஊடறுத்துச் செல்லும், பல்வகை கதைசொல்லல் முறைகளை முயற்சித்துப் பார்த்த நாவலாக அருந்ததி ரோயின் The ministry of ultimate happiness ஐயும் சொல்லலாம். காஷ்மீரின் கதையை வாசிக்கும்போது, இந்தியா இராணுவம் ஈழத்தில் இருந்தபோது நடந்த கதையைத்தானோ சொல்கின்றாரோ என 'வாசிப்பு மயக்கம்' தருமளவிற்கு எழுதிச் சென்றிருப்பார்.
இனி நமக்கு - ஈழம்/புலம்பெயர்ந்து இருப்பவர்க்கு- complex ஆகவும், layers ஆகவும் கதைகளைச் சொல்வதுதான் நமக்கு முன்னாலிருக்கும் பெரும் சவாலாகும். முக்கியமாய் போர் பற்றிய கதைகளைச் சொல்வதற்கு, இனி நாம் நேர்கோட்டு/ யதார்த்தப்பாணி கதை சொல்லல் முறையை மட்டும் நம்பியிருக்கமுடியாது. போருக்குப் பின்பான ரஷ்ய இலக்கியங்களையும், எப்போது எது வெடிக்கும் என்ற கொதிநிலையில் அரசியலைக் கொண்டிருக்கும் இலத்தீன் அமெரிக்கப் படைப்புக்களிலிருந்துமே நாம் கற்றுக்கொண்டு நமக்கான புதிய கதை சொல்லல் முறையைக் கண்டறிந்தாகவேண்டும். இலத்தீன் அமெரிக்கக் கதைகள் என்றவுடன் மாய யதார்த்தக் கதைகளுக்கு பாய்ந்துபோகவோ அல்லது பயப்பிடவோ தேவையில்லை. ரொபர்டோ பாலனோவோ அல்லது அலெஜாந்திரோ ஸாம்பராவோ மாயயதார்த்தத்திற்குள் மட்டும் நின்று கதைகளைச் சொல்கின்றவர்களுமில்லை.

2.
பாலியல் கதைகளும் நம்மிடையே நிறைய அண்மைக்காலங்களில் எழுதப்படுகின்றன. அது குறித்து எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் பாவனை செய்கின்ற பாசாங்கைக் கைவிட்டு எழுத முன்வரவேண்டும். எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பில் 9 வது கதையை (இந்தத் தொகுப்பில் எந்தக் கதையிற்கும் தலைப்பிடப்படவில்லை) ஒருமுறை வாசித்துப் பாருங்கள். பதின்ம பையனுக்குப் பூரணமக்கா பாலியலைக் கற்றுக்கொடுக்க அவனது 'ஆண்மை' விழிப்பதுதான் கதை. ஆனால் எவ்வளவு அழகாக எழுதிச் சென்றுவிடுகின்றார். பூரணமக்கா மழையின் நடந்த பதின்மனைத் துவாயால் துவட்டும்போது, அவனைக் குழப்பும் அவரின் மார்புகள்...என்ரை காளியாச்சியைத் தடவிப் பாரும்....உம்முடைய சாமிதான் சிவலிங்கம்.. என வர்ணனைகள். பிறகு இந்தக் காட்சி சட்டென்று முடிகின்றது. ஆனால் எந்த இடத்திலும் பூரணமக்காவின் பாத்திரம் தாழ்ந்துபோவதேயில்லை. அதுதான் எஸ்.பொ. இப்போது பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவாகிய கதைசொல்லி முன்பு நடந்ததை நினைத்து நனவிடைதோய்வதோடு கதை முடிகின்றது.
'ஆண்மை' தொகுப்பை 2000த்தின் கோடையில் நான் வாசித்துவிட்டு இருக்க, எஸ்.பொ 'புலம்பெயர் இலக்கியத்தை முன்னகர்த்துவோம்' என்ற கோசத்தோடு -தமிழ்நாட்டில் காலச்சுவடு தமிழினி-2000ஐ நடத்தும்போது- செப்ரெம்பரில் கனடாவில் வந்து இறங்குகின்றார். அப்போதுதான் நான் பாலகுமாரனின் பாதிப்பிலிருந்து வெளிவந்த பருவம். பெருசிடம், இப்படி ஒரு முரண் உறவிலுள்ள கதையைப் பொதுவில் எழுதலாமா எனக் கேட்கின்றேன். டேய் தம்பி அது எனக்கு நிகழ்ந்த கதையென வைத்துக்கொள்ளேன். நடந்ததை அப்படித்தானே எழுதவேண்டும், ஏன் மறைக்கவேண்டும். எஸ்.பொவிற்கு அது நிகழ்ந்ததா அல்லது இல்லையா என்பதல்ல நமக்கு முக்கியம். எஸ்.பொ மறைந்துவிட்டபின்னும், கிட்டத்தட்ட அதை வாசித்து 17 வருடங்கள் ஆனபின்னும், இப்போதும் வாசிக்கப்போகின்றபோதும் பூரணமக்கா விகசித்துக் கொண்டிருக்கின்றார். அந்தப் பதின்மப் பையனில், எங்களில் யாரேனும் ஒருவர் தன்னைப் பார்த்துக்கொள்ளவும் முடியலாம்.
அது போல அந்தத் தொகுப்பிலே நிறைய பாலியல் சம்பந்தமான கதைகளை எஸ்.பொ எவ்வளவு கவனமாக எழுதியிருப்பாரென்பதையே கவனப்படுத்த விரும்புகின்றேன். அன்றைய காலத்தில் பாலியல் சம்பந்தமாக சாரு நிவேதிதாவின் கதைகளை முன்வைத்து மைக்கேலோடு உரையாடிக்கொண்டிருந்தபோது ஜானகிராமன் தான் காலந்தாண்டியும் நிற்பார், சாருவின் பாத்திரங்களாக இருக்காது என்றார். இப்போதும் ஜானகிராமனின் நாவல்களைப் பற்றிப் பலர் விரிவாகக் கதைத்துக்கொண்டிருக்க, சாரு எங்கேயோ பின் தங்கிவிட்டார் என்பதைத்தான் காலமும் நிரூபித்திருக்கின்றது. அலை எழுகின்றது என்பதற்காய் அவ்வளவு அவசரப்படத்தேவையில்லை. அது துணைகளுடான பாலியலுக்கும் பொருந்தும், எழுதப்படுகின்ற பாலியல் கதைகளுக்கும் பொருந்தும்.
இறுதியில் சுந்தர ராமசாமி கூறியதை நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.
“இளம் படைப்பாளி புதிய தளத்திற்குப் போக வேண்டுமென்றால் அவன் புதிய ஆழம்கொண்ட விமர்சகனாக மலர வேண்டும். வாழ்க்கையை மயக்கங்களின்றி எதிர்கொள்வதன் மூலமே புதிய ஆழத்தை அவன் பெறமுடியும். இன்று வரையிலும் உருவாக்கப்பட்டிருக்கும் சகல கற்பனைச் சுவர்களையும் தாண்டி மனிதன் அடிப்படையில் சமமானவன் என்ற பேருண்மைதான் படைப்பாளிக்கு முடிவற்ற பயணத்தைச் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது.”
-------------------------
உதவியவை:
மகாமுனி - ரமேஷ்-பிரேம்
எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு - ஷோபாசக்தி
ஆண்மை - எஸ்.பொ
துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம் - சு.வேணுகோபால்

(Oct 08)